பரமார்த்த குரு

குறிப்பு: எழுதத் துவங்கியிருக்கும் ஒரு நாவல் முயற்சியிலிருந்து இப்பகுதி. 1980களின் இறுதி தொடங்கி, ஒரு இருபது வருடங்கள் தமிழ் “இலக்கியச் சீமை”யில் நிலவிய சில போக்குகள் பற்றிய சித்தரிப்பாக எழுத உத்தேசம்.

அவன் சொல்ல ஆரம்பித்தான்.

அப்போ பதினொன்னாவது படிச்சிட்டு இருந்தேன். ராமகிருஷ்ணா மிஷன்ல இருந்து ஒரு கட்டுரை போட்டி அறிவிச்சாங்க. சென்னையில இருந்த எல்லா பள்ளிக்கூட மாணவர்களுக்குமான போட்டி. பதினோராவது படிக்கிற மாணவர்களுக்கு மட்டும். ராமகிருஷ்ண பரமஹம்சருடைய வாழ்க்கையைப் பத்தி ஒரு கட்டுரை எழுதணும்னு. அரை வருடப் பரீட்சை முடியுற நேரத்துல சொன்னாங்க.

எனக்கு ஏதாவது போட்டியில கலந்து ஜெயிக்கணும்னு ஆசை. பேச்சு போட்டியில பேசிப் பார்த்தேன். இப்பவும் போல அப்பவும் எனக்கு மேடைப் பேச்சு வரல்ல. ஒரு ரெண்டு நிமிஷத்துலயே விக்கித்து அப்படியே நின்னுடுவேன். பேச்சுப் போட்டியெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னு புரிஞ்சிடுச்சு. சரி கட்டுரையாவது எழுதிப் பார்ப்போம்னு அந்த போட்டியில கலந்துக்க பேர குடுத்துட்டேன்.

பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துல இருந்த வட்டார நூலகத்துல ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே உறுப்பினரா இருந்தேன். அங்க இருந்து ராமகிருஷ்ண பரமஹம்சருடைய வாழ்க்கை வரலாறு, ஆன்மீக உரைகள்னு ஒரு மூனு புஸ்தகத்தை எடுத்துக்கிட்டேன்.

ஒரு நாலஞ்சு நாள் உட்கார்ந்து ஏதோ எனக்கு வந்தத எழுதி அனுப்பி வச்சேன். ஒரு வாரம் வீட்டுல ஒரே பரமஹம்சர் புராணம். ஒருநாள் சாயந்தரம், விளையாட்டு முடிஞ்சு டிவியை பார்த்துட்டே சாப்பிட ஆரம்பிச்சேன். சாப்பிட்டு முடிச்சு கைய கழுவிட்டு டிவி முன்னால திரும்பவும் உக்காந்தா… திரும்பவும் பசிக்கிற மாதிரி இருந்துச்சு. டிவி சுவாரசியத்துல சட்டை செய்யாம பார்த்துட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துல வயிறு திகு திகுன்னு எறிய ஆரம்பிச்சிடுச்சு. பசி.

“அம்மா, சோத்த போடு,”ன்னு தட்ட எடுத்து வச்சு உட்காந்துட்டேன். அம்மா ஆச்சரியத்தோட சோத்த போடுறாங்க. “என்னடா, என்னைக்கும் இல்லாத திருநாளா, இன்னைக்கு இவ்ளோ சாப்பிடுற?”-ன்னு சொல்லிட்டே, சாப்பாட்டை போடுறாங்க. போட்ட சோத்த வழிச்சு சாப்டுட்டேன். திரும்பவும் பசி. “அம்மா, பசிக்குது,” என்று பார்த்தேன். “என்னடா ஆச்சு உனக்கு?” என்று சொல்லிட்டே அம்மா இருந்த சோத்த வழிச்சு வச்சாங்க. அதையும் வாரி அடிச்சு முழுங்கிட்டேன்.

திரும்பவும் பசி. “அம்மா, வயிறு எரியுது. பசிக்குது,” என்று முழித்தேன்.

அம்மாவுக்கு பதட்டமாயிடுச்சு. “இருடா,”ன்னு படக்குன்னு உலையை  வச்சு பத்து நிமிஷத்துல சோத்த வடிச்சிட்டாங்க. குழம்பு, ரசம் ,பதார்த்தம் எதுவும் இல்ல. மோரை ஊத்தி பிசைஞ்சு ஊட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

கொஞ்ச நேரத்துல நெஞ்சுக் குழி வரை சோறு முட்டிடுச்சு. ஆனா பசி அடங்கல. அதுக்கு மேல சாப்பிடவும் முடியல. அப்படியே வயித்தப் பிடிச்சிட்டு செவுத்துல சாஞ்சுட்டேன்.

அம்மா இப்ப இன்னும் பதட்டமாயிட்டாங்க. பக்கத்து வீட்டுக்காரங்க கூடிட்டாங்க. “என்னம்மா இது அதிசயமா இருக்கு,” என்று வாயைப் பிளந்துகொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.

அப்பா இன்னும் வீடு வந்து சேரல. வீட்டு ஓனர் “இன்னா கூட்டம்,” என்றபடி ஆட்களை விலக்கிக்கொண்டு முன்னே வந்தார். “மஹாப்பா,”ன்னு குரலை உயர்த்தி அம்மா பதற்றத்தோடு நடந்ததை சொன்னாள். “சரி, ஏன் வேடிக்கை பார்த்துட்டு நிக்கறீங்க. டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க,”ன்னு அதட்டினார் வீட்டு ஓனர்.

பரபரவென்று கிளம்பினாள் அம்மா. வயிற்றைப் பிசைந்துகொண்டு சுவற்றில் சாய்ந்திருந்த என்னைக் கிளப்பினார்கள். “நடந்துடுவியா?” – வீட்டு ஓனர். தெரு முனைதான் க்ளினிக். ‘பக பக’வென்று விழித்தேன். அலாக்காக தூக்கி வாசலில் நிறுத்தி வைத்திருந்த டிவிஎஸ் 50 யில் என்னை உட்கார வைத்தார். “நீங்க பின்னால வாங்க,”ன்னு அம்மாவிடம் சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினார்.

வேர்க்க விறுவிறுக்க க்ளினிக்குக்குள் நுழைந்தாள் அம்மா. ஒரு நாலு பேர்தான் உட்கார்ந்திருந்தார்கள். வீட்டு ஓனர் வாசலில் யாரோடோ பேசிக் கொண்டிருந்தார். “எம்மா, எம் பையனுக்கு என்னமோ ஆயிடுச்சும்மா, கொஞ்சம் அவசரமா காமிக்கணும்மா,” என்று உட்கார்ந்திருந்தவர்களிடம் கெஞ்சினாள். வயிற்றில் கை வைத்து அழுத்திக்கொண்டு, கண்கள் சொருக உட்கார்ந்திருந்த என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். “சரி, கூட்டிட்டு போங்கம்மா,” என்றார் ஒரு முதியவர்.

உள்ளே இருந்து ஆள் வந்ததும், கைத்தாங்கலாக என்னை அணைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அம்மா. அட்டெண்டர் கைக்கு என்னை மாற்றி உட்கார வைத்தார்கள். “டாக்டர், திடீர்னு பசி பசிங்குறான் டாக்டர். சமைச்சு வச்சது எல்லாத்தையும் சாப்டுட்டான். திரும்பவும் பசிக்குதுன்னான், சோறு வடிச்சு குடுத்தேன். திரும்பவும் சாப்பிட்டுட்டே இருந்தான். அப்புறம் சாப்பிட முடியாம, பசிக்குதுங்குறான்,” அழாதகுறையாக சொன்னாள் அம்மா.

டாக்டர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. “ஒன்னுமில்ல. பயப்படாதீங்க,” என்றபடி அட்டெண்டரைப் பார்த்துக் கண் அசைத்தார். அவர் சட்டென்று ஊசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்.

டாக்டர் என் கையைப் பிடித்து நாடியைப் பார்த்துவிட்டு, “என்ன ஆச்சு? சாயந்தரம் என்ன செஞ்சீங்க?”

“விளையாடிட்டு இருந்தேன் டாக்டர்.”

“அப்புறம்?”

“பசிச்சுது, டிவி பார்த்துட்டே சாப்பிட ஆரம்பிச்சேன்.”

“அப்புறம்?”

“ரொம்ப பசிக்க ஆரம்பிச்சிடுச்சு.”

“வேற என்ன செய்வான் பையன்?” அம்மாவை பார்த்து கேட்டார்.

அம்மா என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.

“விளையாடுவான் டாக்டர். படிப்பான். நல்லா படிப்பான்”

“என்னவெல்லாம் படிப்பான்?”

“கண்டதை படிச்சிட்டிருப்பான் டாக்டர். கடையில மடிச்சு தர்ற பொட்டல பேப்பர கூட விடமாட்டான்.”

“இப்ப என்ன படிச்சிட்டிருந்தான்?

“பரமஹம்சர் பரமஹம்சர்னு எதையோ படிச்சிட்டு அதப் பத்தியே பேசிட்டிருந்தான் டாக்டர்.”

டாக்டரின் கண்கள் என்னை நோக்கிக் குவிந்தன.

“பரமஹம்சரைப் பத்தி என்ன படிச்ச சொல்லு.”

“அவரு காளி கிட்ட வரம் வாங்கினதப் பத்தி படிச்சேன் டாக்டர்.”

“ம்ம்ம், எப்படி வரம் வாங்குனார்?”

“விரதம் இருந்து வாங்கினார்.”

“என்ன விரதம்?”

“பத்து நாள் தூங்காம இருந்தார், பத்து நாள் சாப்பிடாம இருந்தார், பத்து நாள் தூங்கிட்டே இருந்தார், பத்து நாள் சாப்டுட்டே இருந்தார்.”

“ம்ம்ம்… காளி வரம் குடுத்துச்சா?”

“அவருக்கு சித்தி கிடைச்சுது டாக்டர்.”

“ம்ம்ம்….”

தயாராகியிருந்த ஊசியை நீட்டினார் அட்டெண்டர். நீட்டிய ஊசியை வாங்கி கையில் சொருகினார் டாக்டர்.

“ஒன்னுமில்ல, சரியாயிடும். கொஞ்ச நேரம் வெளியில உட்காருங்க,” என்றார்.

தலையாட்டி என்னை கைத்தாங்கலாக கூட்டி வந்து உட்கார வைத்தார்கள். ஒரு பத்து நிமிடங்கள் போயிருக்கும். மெல்ல பசி உணர்வு தணிய ஆரம்பித்தது.

“என்னடா, எப்படியிருக்கு?” அம்மா கேட்டாள்.

“ஒன்னும் தெரியலம்மா, பசிக்கல.”

“அம்மா, கருமாரியம்மா,” என்று மேலே பார்த்து கும்பிட்டாள்.

இரண்டு பேர் உள்ளே போய் வந்திருந்தார்கள்.

அட்டெண்டர் வெளியே வந்து எங்களை கூப்பிட்டார்.

“எப்படியிருக்கு?” கேட்டார் டாக்டர்.

“இப்ப பசி எடுக்கல டாக்டர்,” நான்.

“ம்ம்ம்… ஒன்னுமில்ல, பய எதையோ படிச்சிட்டு அதே நினைப்பா இருந்திருக்கான். தூங்கி எந்திரிச்சா சரியாயிடும்.”

என்னை வெளியே உட்கார வைத்துவிட்டு டாக்டருக்கு ஃபீஸை கொடுக்க உள்ளே போனார் அம்மா. வீட்டுக்கு நடக்க தெம்பு இருந்தது. வந்து படுத்ததுதான் தெரியும்.

மறுநள் காலை, பத்து மணிக்கு மேல் எழுந்து பல் தேய்க்க வெளியே வந்தால், வீட்டு ஓனர் என்னைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார். “இன்னா பாபு! உன்ன வச்சிட்டு உங்க அம்மா அப்பா இன்னா பாடு படப் போறாங்களோ!” சொல்லிவிட்டு டிவிஎஸ் 50 ஐ உதைத்து கிளம்பிவிட்டார். ஒன்றும் புரியாமல், குழாயடியில் பல்லை தேய்த்துவிட்டு, வீட்டுக்குள் நுழைந்துவுடனேயே அம்மாவின் பிலாக்கணம் ஆரம்பித்துவிட்டது.

“கண்டதப் படிக்காதடா படிக்காதடான்னு எவ்ளோ தடவ சொல்றது. படிக்குற பய ஸ்கூல் புக்க மட்டும் படிக்காம, வேற எதையெல்லாமோ படிக்குறது! அந்த மூனு பொஸ்தகத்தையும் தீய வச்சு கொளுத்துங்க. அந்த டாக்டரு, தண்ணிய ஊசியா போட்டுட்டு, அம்பது ரூபாவ புடிங்கிட்டான். இதுக்கு ஒன்னுமில்ல, மனப் பிராந்தியாம்.”

உரத்தச் சிரிப்பு சொல்லிக் கொண்டிருந்ததைக் கலைத்தது.

பெட்டி தூக்கியும் ஞானசூன்யமும் கெக்கலித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“அந்த வயசிலயே பிராந்தியெல்லாம் குடிச்சிட்டியாடா மதி!” ஞானசூன்யம்.

“சின்ன வயசிலயே அவரு தீவிரமான வாசிப்பாளராம். அதச் சொல்றாரு,” பெட்டி தூக்கி.

“ப்செ,” என்று கையசைப்பில் இருவரையும் உதாசீனம் செய்தான் மதி.

ஞானசூன்யம் பீரை எடுத்து சாய்த்தான். உதட்டோரத்தில் வழிந்ததைத் துடைத்தான். பெட்டி தூக்கியின் சிங்கப் பல் கோரப்பல்லாக வெளியே துருத்த ஆரம்பித்திருந்தது. ஏளனம் எரிச்சலாக கருவிக்கொண்டிருந்தது.

பேராசிரியர் பரமார்த்த குரு, மூக்கின் நுனியில் சரிந்து நின்றிருந்த கண்ணாடிக்கு மேலாக மதியை உற்றுப் பார்த்தார்.  

“நான் கேட்ட கேள்விக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?”

“நான் சொன்னது கதை இல்ல. வாழ்க்கை அனுபவம்.”

“உன் அனுபவத்தை ஒரு கதை மாதிரி தானே சொன்னே. எல்லா சொல்லாடல்களும் கதையாடல்கள்தாங்கிறது உனக்குத் தெரியாதா?”

“‘கதையாடல்களும் கற்பிதங்களும்’ புத்தகத்துல அதுக்கு நீங்க குடுத்த விளக்கம் இருக்கே சார்… ஒரு பய கிட்ட நெருங்க முடியாது.” பெட்டி தூக்கி.

“அது மிகை எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம்,” இடைமறித்த பெட்டி தூக்கியை வெட்டி, கூர்மையான குரலில் அறைந்தான் மதி.

மதியின் சற்றே உயர்ந்த குரல், நிலவிய அமைதியில் கூர்வாளாய் பாய்ந்து விறைத்து நின்றது.

பரமார்த்த குருவின் முகத்தில் கருமை படரத் தொடங்கியது. ஈஸி சேரில் சாய்ந்திருந்த நிலையில் இருந்து வெருட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து, மூக்கு நுனியில் நழுவி கீழே விழுந்துவிடுவது போலிருந்த கண்ணாடியை வெடுக்கென்று எடுத்து, வேகமாக மடித்து அருகில் இருந்த மேசையில் வைத்தார்.

“சாதாரண வாசகனும் எளிமையா புரிஞ்சுக்கணுங்கிறதுதான் என்னோட நோக்கம். மெத்தப் படித்த படிப்பாளிங்களுக்காக நான் எழுதல,” கோபத்தை அடக்கிக்கொண்டு செருமினார் பரமார்த்த குரு.

“புத்தகங்கள் வாசகர்கள் மனதில் கேள்விகளை எழுப்பணும். கேள்விகளுக்கு விடை தேட மேலும் பல புத்தகங்களை தேடி வாசிக்கத் தூண்டணும். வாசகர்கள் நடமாடும் புத்தகங்களாகணும். புத்தகங்கள் புத்தகங்களோடு பேசவேண்டும்.” தலையைக் குனிந்து தரையை வெறித்தபடி பேசிய மதியின் குரல் தாழ்ந்து தணிந்திருந்தது.

“நான் எழுதுறது புத்தகங்களோடு பேசறதுக்காக இல்ல. வாசகர்களோட பேசுறதுக்காக.” பரமார்த்த குருவின் குரலில் படபடப்பு தொற்றியிருந்தது.

“நீங்க ஆரம்பத்துல எழுதுனது, கேள்விகளோட அலைஞ்சுட்டு இருந்த என்னை மாதிரியான ஆட்களுக்கு நிறைய தூண்டுதல் குடுத்துச்சு. நீங்க எழுதுனதுல பதில்கள் இல்லைன்னாலும் நாங்க மேற்கொண்டு தேடிப் படிச்சோம். ஆனா, இப்ப நீங்க எழுதறது எல்லாம் திருப்தி தர்ற பதில்களாவே இருக்கு. இப்போ நீங்க எழுதுறத வாசிக்கிறவங்க, புத்தகங்களை எடைக்கு போட்டுடறாங்க. ஆறு மாசத்துக்கு முன்ன நீங்க எழுதுன புத்தகம் ஒன்னு, பழைய புத்தகக் கடையில குப்பையோடு குப்பையா கிடந்தது.” கட்டை விரல் நகத்தால் தரையைச் சுரண்டிக்கொண்டு, குனிந்த தலையை நிமிர்த்தாமல் அதே தணிந்த குரலில் பேசினான் மதி.

“நான் எழுதுறது குப்பைங்கிறயா?” மேசையிலிருந்த புத்தகங்களை அள்ளி வீசி எறிந்தார் பரமார்த்த குரு. ஆவேசத்தில் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. பெட்டி தூக்கி மெதுவாக எழுந்து, அவரை ஆசுவாசப்படுத்த தோள்களைப் பிடித்தான். அவனை உதறித் தள்ளிவிட்டு விடுவிடுவென்று அறையிலிருந்து வெளியேறினார் பரமார்த்த குரு. 

பெட்டி தூக்கி மதியை முறைத்துப் பார்த்துவிட்டு அவரைப் பின் தொடர்ந்து மெதுவாக வெளியே சென்றான்.

“ஏன்டா இப்படி முகத்துல அடிச்ச மாதிரி பேசுற?” இன்னொரு மடக்கு பீரை விழுங்கிவிட்டு முகத்தில் வேதனையைப் படரவிட்டான் ஞான சூன்யம்.

ஓரமாக ஒதுக்கி வைத்திருந்த பீர் பாட்டிலை எட்டி எடுத்து, கடகடவென்று விழுங்கினான் மதி.

“ஓத்தா, உன் திமிரு தாங்க முடியலடா. சார கூட்டிட்டு வர்றேன். கொஞ்ச நேரம் மூடிட்டு இரு.” படாரென்று அறைக் கதவை சாத்திவிட்டு அவனும் வெளியேறினான்.

மதி, சுவரில் சரிந்து சாய்ந்தான். எதிரில் இருந்த சுவர் அவனை நோக்கி மெல்ல நகர்ந்து வந்து அழுத்தி அமிழ்த்த தொடங்கியது. இமைகளை மூடிய மதியின் விழிகளில் இருள் கவிந்தது.

ஞானசூன்யம் விறுவிறுவென்று படிகளில் இறங்கி வாசல் கதவைத் திறந்து தெருவின் இரு பக்கமும் பார்வையை வீசினான். “கோவமா கீழ போனாரு,” என்று குருவின் மனைவி சொன்னதைக் கேட்டு பதட்டமடைந்துவிட்டான். தெரு வெறிச்சோடியிருந்தது. மணி பன்னிரெண்டு இருக்கும். “எங்க போய் தொலைஞ்சாரு?” யோசித்துக்கொண்டே வண்டியில் ஏறி உட்கார்ந்து சாவியைச் சொருகினான். சிரிப்புச் சத்தம் கேட்டது. பெட்டி தூக்கியின் சிரிப்பு போல இருந்தது. காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்டான். அவன் சிரிப்புதான். எகத்தாளச் சிரிப்பு. பக்கத்துச் சந்திலிருந்து சிரிப்பு சிதறிக்கொண்டிருந்தது.

இறங்கி விறுவிறுவென்று நடந்தான். சந்து முக்கில் பரமார்த்த குரு தெருவில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் தெரு நாய் ஒன்று அவரை உரசி உட்கார்ந்திருந்தது. அதன் தலையை தடவிக் கொண்டிருந்தார் பரமார்த்த குரு. ஞானசூன்யம் சந்துக்குள் நுழைந்தவுடனே நாய் எழுந்து குலைக்க ஆரம்பித்தது. குரு அதன் தலையை வருடிக்கொடுத்து, “நம்ம பையன்,” என்று கொஞ்சினார். நாய் குரைப்பதை நிறுத்தி, நாக்கை தொங்கப் போட்டு மூச்சை இறைத்தது. பெட்டி தூக்கி சற்று தள்ளி நின்று முகத்தில் பரவசத்தைப் படரவிட்டு ரசித்துக் கொண்டிருந்தான். பரமார்த்த குரு நாய்களைப் பழக்குவதில் வல்லவர்.

“சார், என்ன சார்?” ஞானசூன்யம் திணறினான்.

“நாய் நன்றியுள்ள ஜென்மம்,” என்றார் குரு.

“ஆமா சார், அதுக்கு என்ன இப்ப?” என்று விழித்தான் ஞானசூன்யம்.

“ஒரு மயிரும் இல்ல,” சொல்லிவிட்டு பரமார்த்த குரு நாயை அருகில் இழுத்து வாஞ்சையோடு தடவ ஆரம்பித்தார்.

“சார், அந்த சில்லறைப் பயலை எல்லாம் பொருட்டா எடுக்காதீங்க சார். அவனுக்கு இன்னா தெரியும்? பெரிய மயிரு மாதிரி பேசுறான். பிள்ளக்காயப் பய. ஒதுக்கி விடுங்க சார். நாய்க்கு தேங்காய் கிடச்சா உருட்டிட்டே இருக்கும். அது மாதிரி சார் அவன்.” சொல்லி பெரிதாகச் சிரித்தான் பெட்டி தூக்கி.

“ஏய், உனக்கு அவனப் பத்தி இன்னா தெரியும்? மூடு,” என்று பெட்டி தூக்கியை பார்த்து முறைத்தான் ஞானசூன்யம்.

“நீ இன்னாத்துக்கு அவன தாங்குற? அவனுக்கு ஜால்ராவா நீ!” பெட்டி தூக்கி பெரிதாகச் சிர்த்தான்.

“ஜால்ராவும் இல்ல, மயிரும் இல்ல. நீ மூடு. சும்மா உசுப்பேத்திட்டு இருக்காத,” என்று அதட்டி பேராசிரியரை நோக்கி குனிந்தான் ஞானசூன்யம்.

“சார், எந்திரிங்க சார்,” என்றபடி அவர் தோள்களுக்குள் கையைக் கொடுத்து தூக்க முயற்சித்தான்.

உலுக்கிக்கொண்டு அவன் பிடியை உதறினார் பரமார்த்த குரு. நாய் பின்னே சென்று ஞானசூன்யத்தை பார்த்து உறுமி குரைக்க ஆரம்பித்தது. குரு இரண்டடி தவழ்ந்து நகர்ந்து சென்று நாயை நெருங்கி, அதன் தலையை வருடினார்.

“வா, இங்க வா,” என்று அழைத்து இழுத்து தூக்கி மடியில் கிடத்திக் கொண்டார். நாய் ஈனக்குரலில் முனகிக் கொஞ்சியது. அதன் மூக்கோடு தன் மூக்கை உரசினார் பரமார்த்த குரு. நெற்றியில் முத்தம் இட்டார். நாய் தலையைத் தூக்கி அவர் கன்னத்தை ஏகத்துக்கும் நக்கியது.

“நாய் மட்டும்தான் நன்றியுள்ளது.” பரவசத்தோடு நாயைக் கட்டி அணைத்துக் கொண்டார் பரமர்த்த குரு. மூச்சுத் திணறியது போலத் திமிறி, விலகிச் சென்று நின்று, சாதுவாகக் குரைத்தது நாய். நெருங்கி வந்து அவர் முதுகை உரசியபடி வாலாட்டியது.

பெட்டி தூக்கி தன் வழக்கமான எகத்தாளச் சிரிப்பை பெரிதாக்கி கொக்கரித்தான்.

ஞானசூன்யம், முகத்தைச் சுழித்துக் கொண்டு “ஷிட் ஷிட்,” என்று உரக்கச் சொல்லி, கைகளை விரித்து உதறி வானத்தை அன்னாந்து பார்த்துவிட்டு, தலையைக் கவிழ்த்துக்கொண்டான். இயலாமையில் அவனது வழக்கமான அனிச்சை செயல் அது.

“சார், அவனப் பத்தி உங்களுக்கு தெரியாதா?” குருவைப் பார்த்து தழுதழுத்தான் ஞானசூன்யம்.

“மண்டக் கனம் பிடிச்ச முட்டாப் பயல்.” உதட்டோரம் துருத்திக் கொண்டிருந்த கோரப் பல் இளிக்கச் சொன்னான் பெட்டி தூக்கி.

“முரட்டு நேர்மையோட முட்டுகிற பயல்.” பரமார்த்த குரு பெருமூச்சோடு சலித்து முனகினார்.

“சார், எந்திரிங்க சார். எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்,” ஞானசூன்யம்.

பரமார்த்த குரு தரையில் கையை ஊன்றி எழ முயற்சித்து முடியாமல் திணறினார். ஞான சூன்யம் அருகில் சென்று கை கொடுத்து தூக்கினான். ஒட்டியிருந்த மண்ணை உதற பிட்டத்தைத் தட்டிக்கொண்டார் குரு. அவரை அணைத்துக்கொண்டு நடந்தான் ஞானசூன்யம். முறுவலித்தபடி பின் தொடர்ந்தான் பெட்டி தூக்கி. ஈனக்குரலில் கொஞ்சியபடி பின்னே வந்த நாய் வீட்டிற்குச் சற்று தொலைவில் நின்று குரைத்துவிட்டு சந்துக்குள் ஓடி மறைந்தது.

கதவைத் திறந்து கொண்டு மூவரும் உள்ளே நுழைந்ததும் மதி கவிந்திருந்த சுவரைத் உதறித் தள்ளிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“இன்னொரு அனுபவத்த சொல்லட்டுமா?” என்றான்.

குரு முறைத்துப் பார்த்தார்.

“டேய், நீ சும்மா இருக்க மாட்டியா?” ஞானசூன்யம் கடிந்துகொண்டான்.

குரு அமைதியாகச் சென்று ஈஸி சேரில் சரிந்தார்.

“பரவாயில்ல, சொல்லட்டும்,” என்று அமைதியான குரலில் சொன்னார்.

பெட்டி தூக்கி மதியை சட்டை செய்யாமல் அவருக்கு அருகில் சென்று தரையில் உட்கார்ந்தான். ஞானசூன்யம் மதிக்கு அருகில் சென்று உட்கார்ந்து, அயர்ச்சியை முகத்தில் படரவிட்டு அவனை வெறித்துப் பார்த்தான்.

மதி சொல்ல ஆரம்பித்தான்.

“நாலாம் வகுப்பு படிச்சிட்டிருந்தப்ப நடந்தது. மூனாவது படிக்குற வரைக்கும் படிப்பு பெரிய சுமையா இல்ல. நாலாவதுல வீட்டுப் பாடங்கள் அதிகமாயிடுச்சு. விரல் ஒடியற மாதிரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு எப்பவுமே விளையாட்டுப் புத்தி. எந்த நேரமும் விளையாட்டே கதியா இருப்பேன். அதிலும் கோலி விளையாடுறதுன்னா சாப்பாட்ட கூட மறந்துடுவேன். வீட்டுப் பாடங்கள் அதிகமானதுனால விளையாடுற நேரம் குறைஞ்சுட்டே வந்தது. படிப்பு பெரும் சுமையா போச்சு. வீட்டுப் பாடங்களை செய்யாம தட்டிக் கழிக்க ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடத்துல அடி விழ ஆரம்பிச்சிடுச்சு. அடிக்குப் பயந்து, வயிற்று வலின்னு சொல்லி அடிக்கடி மட்டம் போட ஆரம்பிச்சேன்.

ஒரு நாள், அப்படிச் சொல்லி, பள்ளிக்கூடத்துக்கு போகாம படுத்துட்டேன்.  பயன் பாவம் என்றுஅம்மாவும் விட்டுவிட்டாள். தன் பாட்டுக்கு வேலையை செய்துகொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில அக்கம் பக்கத்து பெண்கள் எதற்கோ கூப்பிட வெளியே சென்றுவிட்டாள். படிப்பு மீதான வெறுப்பு முற்றிப் படுத்துக் கொண்டிருந்த எனக்கு, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் என்று வேகம் வந்துவிட்டது. எழுந்து நோட்டு புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைக் கிழித்து எழுத ஆரம்பித்தேன்.   

“அம்மா, எனக்குப் படிக்கப் பிடிக்கவில்லை. நான் வாழைக்காய் வண்டி இழுத்தாவது தங்கையை காப்பாற்றுவேன். என்னைக் கட்டாயப்படுத்தி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாதீங்க,” என்று ஒரு கடிதத்தை எழுதினேன். அதை எப்படி அம்மாவிடம் கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, தெருப் பையன்கள் கோலி விளையாட்டில் போடும் சத்தம் கேட்டது. பேப்பரை அப்படியே மடித்து வைத்துவிட்டு, சிட்டாகப் பறந்துவிட்டேன்.

எவ்வளவு நேரம் விளையாடியிருப்பேனோ தெரியாது. திடீரென்று அம்மாவின் உரத்த குரல் கேட்டது. என்னைத் தேடிக்கொண்டு தெருவுக்கு வந்துவிட்டாள். “வாடா இங்க,” என்று என்னை கூப்பிட்டு, தலை மயிரைக் கொத்தாகப் பிடித்து இழுத்துச் சென்றாள். வீட்டை பெருக்கும்போது நான் எழுதி வைத்திருந்த காகிதத்துண்டு அவள் கண்ணில் பட்டிருக்கிறது. என்னமோ என்று பிரித்துப் படித்துவிட்டிருக்கிறாள். பாதி பெருக்கிய வீடு அப்படியே கிடந்தது. துடப்பத்தை எடுத்து விளாசத் துவங்கிவிட்டாள்.

“ஏன்டா, படிப்பு வேணாமா உனக்கு. வாழக்கா வண்டி இழுப்பியா?” என்று பெருங்குரலில் திட்டிக்கொண்டே துடப்பம் பிய்ந்துபோகும்வரை அடித்தாள். சரசரவென்று குளித்துவிட்டு, எனக்கும் ஆடை மாற்றிவிட்டு, பள்ளிக்கூடத்திற்கு இழுத்துப்போனாள்.

நேராக வகுப்பு ஆசிரியையிடம் கொண்டுபோய் நிறுத்தி நடந்ததைச் சொல்லி நான் எழுதிய காகிதத்தைக் காட்டினாள். ஆசிரியை மூக்கில் விரலை வைத்தாள். “இந்த வயசுல இதுக்கு இந்தப் புத்தியா?” என்று வியந்தாள். தலைமை ஆசிரியரிடம் இழுத்துப் போனார்கள். அவர் நாலு விளாசு விளாசினார். அவர் அறையில் முட்டி போட வைத்தார்கள். அம்மா நிம்மதிப் பெருமூச்சு விட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக முட்டிக்கால் போட்டுக் கிடந்தவனைக் கிளப்பி, “படிக்கப் பிடிக்காத பையன்” என்று ஒரு அட்டையிலும், “பொய் சொல்லும் பையன்” என்று இன்னொரு அட்டையிலும் எழுதி, கயிற்றில் கோர்த்து, ஒரு அட்டை முதுகுப் பக்கமும் இன்னொன்று நெஞ்சிலும் தொங்க, ஒவ்வொரு வகுப்பாக இழுத்துக் கொண்டுபோய் காட்டினார்கள். பள்ளிக்கூடமே சிரித்தது.

அம்மா இன்னும் அந்தக் கிறுக்கல் கடிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள்.”

முடித்தான் மதி.

குரு புன்முறுவலித்தார். அவர் முகத்தில் பரமதிருப்தி.

மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு ஒரு தனி ஆனந்தம். அதிலும் தானே கீழிறங்கி தாள் பணிந்து மண்டியிட்டுவிட்டால் அவருக்குப் பரமானந்தம். தெருநாயைப் பார்த்த அதே வாஞ்சையோடு மதியை பார்த்தார். “இங்க வா,” என்று அழைத்தார். மதி அசையவில்லை. எழுந்து அவனருகே சென்று தரையில் அமர்ந்தார். “நீ என் செல்லக் குட்டிடா,” என்று அவன் தலையை வருடத் தொடங்கினார். மதியிடமிருந்து ஒரு சிறு முனகல்கூட வெளிப்படவில்லை.

ஞானசூன்யம் ஆசுவாசப் பெருமூச்சு விட்டான்.

“சார், கதையெல்லாம் இத்தோட போதும். நான் பாடப்போறேன்,” என்று முகம் மலர்ந்து சிரித்தான்.

பரமார்த்த குரு அவனையும் இழுத்து தலையை கோதினார். “நீயும் என் செல்லக் குட்டிடா,” என்று பொங்கினார்.

அன்றைய இரவின் மிச்சம் பரமார்த்த குருவின் நேயர் விருப்பமாகக் கழிந்தது.

%d bloggers like this: