தாராவி தாதா காலா அப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வம். ஆனால், அதை நிறுவுவதற்கான ஒரு காட்சிகூட படத்தில் இல்லை. ஆள் பலம் இல்லை, பண பலம் இல்லை. அவர் சொல்வதை செய்து முடிக்கும் ஒரே அம்பு அவருடைய மகன்களில் ஒருவர் மட்டுமே. தமிழில் இப்படி வந்திருக்கும் ஒரே தாதா படம் இதுவாகத்தான் இருக்கமுடியும்.
தாதா காலா தெருப் பிள்ளைகளோடு கிரிக்கெட் விளையாடுவதுதான் அவருக்கு ஓப்பனிங் சீன். இளவட்டங்கள் எல்லாம் அவரைக் கலாய்ப்பதைப் பார்க்கும்போது இது தாதா படமா தாத்தா படமா என்று சந்தேகம் வந்துவிடுகிறது. படம் முழுக்க ரஜினி “ஊர் பெரியவர்” என்ற பாத்திரமாகவே நடித்திருப்பது தாத்தா படம்தான் என்பதை உறுதி செய்துவிடுகிறது.
தாத்தா காலாவிற்கு 60 வயதில் முன்னாள் காதலியுடன் “மெல்லிய ரொமான்ஸ்”. ஒரு தவிப்பு, ஒரு படபடப்பு, ஒரு ஃப்ளாஷ் பேக் (அதுவும் நேர்த்தியே இல்லாத ஒரு ஸ்டோரி போர்ட் சித்தரிப்பு மூலம்). முன்னாள் காதலியின் காதோர லோலாக்கை க்ளோஸ் அப் ஷாட்டில் ரசிக்கும் ஒரு டேட்டிங்க் சந்திப்பும்கூட. இடைவேளைக்கு சற்றுமுன் வரை படத்தை ஆக்கிரமித்திருப்பது இந்தக் காதல் சரசம்தான். அப்படியே கதையை நகர்த்திக்கொண்டு போயிருந்தால், “முதல் மரியாதை” போல ஒரு முதிர் பருவக் காதல் ‘காவியத்தை’ முழுமையாகப் படைத்திருக்கலாம்.
ஆனால், இந்த முதிர் பருவக் காதலுக்குக் குறுக்கே அரசியல் புகுந்து, தாத்தா படம் தாதா படமாக உருமாற முயற்சி செய்கிறது. காலா தாத்தாவாக இருப்பதால் தாதாவாக உருமாறுவதிலும் தொய்வு ஏற்படுகிறது. முன்னாள் காதலிக்கு அடிபட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டு, அவரைப் பார்த்துவிட்டுத் திரும்பும் தாத்தாவைக் கொல்ல வில்லனின் அடியாள் முயற்சிக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனை வருகிறது.
அப்போது, தனியாக நிற்கும் காலா, வேட்டியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, “வேங்கையின் மகன் ஒத்தையில நிக்கிறேன். தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே, சண்ட செய்வோம்,” என்று சவால் விடுகிறார். அடிக்கவரும் ஆட்களை அடித்துப் பறக்கவிடுவார் என்று எதிர்பார்த்து ரஜினி ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு நகரும் தருணம் அது. பொசுக்கென்று தாத்தாவின் மகன் குறுக்கே புகுந்து அடியாட்களை அடித்துத் துரத்திவிடுகிறார்.
வெடிக்க வேண்டிய பட்டாசு, தாராவியில் பொழிந்த மழையில் நமத்து புஸ் என்று அணைந்துவிடுகிறது. வடை போச்சே என்ற ஆதங்கத்தில் காலா ஜீப் கதவில் கையால் அடித்து “சே!” என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார். படத்திற்காக வெளியிடப்பட்ட ட்ரெய்லரில் இக்காட்சியைப் பார்த்து, பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த 2,89, 99,376 சொச்ச ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய வடை போயிருக்கும் என்பதை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. தாதாவாக மாறவேண்டியவர் தாத்தாவாகவே தொடர்கிறார்.
அடுத்த சில காட்சிகளுக்குள்ளாகவே, காலா தாத்தா இல்லை தாதாதான் என்று காட்டுவதற்காக, மேம்பாலத்திற்கு நடுவே வில்லனின் அடியாளை மறித்து மழையில் குடைபிடித்து சண்டையிட்டு கொல்லும் காட்சியைக் காட்டுகிறார்கள்.
தன் அடியாளைக் கொன்ற தாதாவைப் பார்க்க, வில்லன் அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்கே போய் பார்த்தால், நாயைத் தடவிக் கொடுத்துக்கொண்டு நாற்காலியில் தனியாக அமர்ந்திருக்கும் தாதா, மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் சகிதமாக தாத்தாவாகவும் காட்சியளிக்கிறார். திரும்பிச் செல்லும் வில்லனை, “என் அனுமதி இல்லாமல் உள்ளே வந்திருக்கிறாய், ஆனால், என் அனுமதியில்லாமல் வெளியே போகமுடியாது,” என்று எச்சரிக்கிறார். அதை பொருட்படுத்தாமல் வில்லன் வெளியே செல்ல முயற்சி செய்து முடியாமல் திரும்ப காலாவிடமே வருகிறார்.
தாத்தா இல்லை தாதாதான் என்பதை வலுவாக நிறுவவேண்டிய காட்சி. போ போ என்று பொசுக்கென்று சொல்லி இடைவேளையிலும் அந்த வாய்ப்பை நழுவவிடுகிறார்.
இரண்டாம் பாதியில் அறுபதாம் கல்யாணம். மீண்டும் தாத்தாவாகிவிடுகிறார். தாராவியை விட்டு வெளியே செல்ல விருப்பம் தெரிவிக்கும் மகன்கள் மருமகள்களை அதட்டி அடங்கச் செய்து, தன் குடும்பத் தலைவன் ஸ்தானத்தை – தாத்தா தகுதியை நிறுவுகிறார். அடுத்த காட்சியிலேயே போலீசார் அவரை தாதாவாக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும் தாதா, அங்கு திடீரென்று காமெடியனாக மாறிவிடுகிறார் (அது நல்லதொரு நகைச்சுவை காட்சி). போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பும்போது, தாதாவின் மனைவியும் அம்பாக செயல்பட்ட மகனும் கொல்லப்படுகிறார்கள். ஒரு சில நொடிகளில் மீண்டும் தாதா தகுதி காலி.
சில காட்சிகளுக்குப் பிறகு, வில்லன் வீட்டிற்குத் தனியாகச் சென்று சவால் விட்டு மீண்டும் தாதாவாகிறார். வீடு திரும்பினால், கரண்ட் கட்டாகி, பேரப் பிள்ளைகளோடு தாத்தாவாகிவிடுகிறார். “இந்தச் சண்டையெல்லாம் என்னோடு முடியட்டும்” என்று கண்கலங்குகிறார்.
அடுத்த சில நொடிகளில், அவரது வீடும் ஊரும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. தாத்தா இப்பொழுதாவது தாதாவாக மாறுவார் என்று பார்த்தால், சற்றும் எதிர்பாராமல் போராட்டத் தலைவராகிறார். ஊரே அவர் பின்னால் திரண்டு போராடுகிறது. தாராவியில் நடக்கும் போராட்டக் காட்சிகள் சடாரென்று, மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுபடுத்துபவையாக மாறுகின்றன.
மெரினாவில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேசி, தன் வேலையைத் துறந்த ஒரு போலீஸ்காரரைப் போலவே படத்திலும் ஒரு போலீஸ்காரர் பேசுகிறார். தன் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிறார். போராட்டத் தலைவராக மாறிவிட்டிருக்கும் காலா, சிவாஜிராவ் கெய்க்வாட்டை உற்றுப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறார் (ரஜினியின் அரசியலை நுட்பமாக காட்டுகிறார்களாம்). இடையில், ஊடகத்தின் கேள்விக்கு பதில் சொல்லும் ஒரு நடிகை(?) “போராடுபவர்களில் 60 சதவீதம் பேர் கிரிமினல்களாக இருக்கக்கூடும்,” என்கிறார் (தூத்துக்குடியில் கலவரம் விளைவித்தவர்கள் ‘சமூகவிரோதிகள்’ என்ற ரஜினியின் பஞ்ட் டயலாக், படம் பார்ப்பவர்களுக்கு சட்டென்று நினைவிற்கு வந்தால் யார் பொறுப்பு?).
இறுதியாக, போராட்டத்திற்கு அரசு பணிகிறது. வில்லன், தன் தோல்விக்கு காரணமான காலாவைத் தீர்த்துக்கட்ட அடியாள் படையை ஏவி விடுகிறான். அடியாள் படை தாராவிக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபடும்போது, போராட்டத் தலைவராக இருந்த காலா பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் காவலாக – அதாவது மீண்டும் தாத்தாவாக மாறிவிட, இளைஞர் பட்டாளம் அடியாட்களை எதிர்கொள்கிறது. அவர்களை வீழ்த்திவிட்டு அடியாள் கும்பல் காலாவை நெருங்குகிறது.
இப்போது மீண்டும் தாத்தா காலா, தாதா காலாவாக மாறுகிறார். அடியாட்களை அடித்து நொறுக்குகிறார். ஆனால், அடியாட்களில் ஒருவன் காலாவைச் சுட்டுவிடுகிறான். அவர்கள் சண்டையிட்ட கட்டிடமே வெடித்துச் சிதறுகிறது.
காலா கொல்லப்பட்டுவிட்டதாக வில்லன் நம்புகிறான். ஆனால், காலா உயிருடன் இருக்கிறார் என்று மக்கள் நம்புவதாக ஊடகம் தெரிவிக்கிறது. அதாவது, படம் பார்ப்பவர்களுக்கு சொல்லப்படுகிறது – கவனிக்க காட்டப்படவில்லை, சொல்லப்படுகிறது. ஆகையால், படம் பார்ப்பவர்களும் அப்படித்தான் நம்பவேண்டியிருக்கிறது.
காலா இறந்துவிட்டான் என்ற நம்பிக்கையில், வில்லன் மீண்டும் தாராவியில் தன் திட்டத்தை நிறைவேற்ற வருகிறான். மக்கள் கூடியிருக்கிறார்கள். அவர்கள் நடுவே காலா தோன்றுகிறான். மக்கள் ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடுகிறார்கள். முதலில் கறுப்பு வண்ணப் பொடியையும் அடுத்து சிகப்பு வண்ணப் பொடியையும் தூவி, அதற்கடுத்து நீல வண்ணப் பொடியையும் வில்லன் மீது தூவி பிறகு பல வண்ணப் பொடிகளையும் தூவுகிறார்கள், ஆடுகிறார்கள். காமிரா மேலெழுந்து ஜூம் ஆகி திரை கறுப்பாகிக் கரைகிறது.
என்ன நடந்தது என்று படம் பார்ப்பவர்களுக்குப் புரியுமோ புரியாதோ என்ற சந்தேகத்தில், தாராவியில் சுற்றிக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிருபர், சடாரென்று தாவி, சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எதிராக இருக்கும் பாலத்தின் மேல் நடந்து கொண்டு செய்தி வாசிக்க ஆரம்பித்துவிடுகிறார். தாராவியில் நடந்த மக்கள் கிளர்ச்சியில் வில்லன் கொலை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கிறார். அவருக்கு இடப்பக்கம் பாலத்திற்கு கீழே அமைந்திருக்கும் இந்திரா நகர் மக்கள் போராட்டத்தோடு படம் முடிகிறது.
திரையரங்கத்திற்கு வெளியே வந்தும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையை அசைபோட முடிந்தது. திரைப்படத்தில் அளவுக்கதிகமாக கையாளப்பட்டிருக்கும் “ஸ்லோ மோஷன்” உத்தியால், உலகமே “ஸ்லோ மோஷனில்”தான் இயங்குகிறதோ என்று பிரம்மை ஏற்படுகிறது. ஆற்றலைக் காட்டப் பயன்படுத்தப்படும் “ஸ்லோமோஷன்” உத்தியை, காலத்தைக் கடத்த (இல்லாத கதையை ஜவ்வ்வ்வாக இழுக்க) தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் பயன்படுத்துவதைப் போல காலாவிலும் கையாண்டிருக்கிறார்கள் என்ற உணர்வே மிஞ்சுகிறது.
படம் முடிந்து வெளியே வந்ததும் நண்பர் ஒருவர், க்ளைமாக்ஸில் வண்ணப் பொடி தூவி நடனமாடுகிறார்களே அதற்கு குறியீட்டு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்.
படம் முழுக்க ரஜினி தாதாவாக நடித்திருக்கிறாரா அல்லது தாத்தாவாக நடித்திருக்கிறாரா என்று ஏற்கனவே குழம்பிப் போயிருந்த எனக்கு இந்தக் கேள்வி மேலும் குழப்பத்தை விளைவித்தது.
என்றாலும் சுதாரித்துக்கொண்டு நண்பருக்கு சொன்னேன், “படத்தின் க்ளாமாக்ஸில் தூவப்பட்ட வண்ணப் பொடிகளுக்கு சில குறியீட்டு விமர்சன விற்பன்னர்கள், கறுப்பு – திராவிடம், சிகப்பு – கம்யூனிசம், நீலம் – அம்பேத்கரிசம் என்று குறியீட்டு விளக்கங்கள் அளிக்கக்கூடும். ஆனால், விஷயம் அது இல்லை. க்ளைமாக்ஸில் வழக்கமான தாதா படங்களைப் போல, வில்லனை ஹீரோ கொல்வதாக காட்டாமல், புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக அப்படி காட்டியிருக்கிறார்கள். மக்கள் வண்ணப் பொடிகளை வீச வீச வில்லன் திணறித் திணறி அங்கும் இங்கும் அலைகிறான். மக்கள் எழுச்சியின் முன் அவனைப் போன்ற மக்கள் எதிரிகள் பொசுங்கிப் போவார்கள் என்பதை காட்டுகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நடுநாயகமாக நிற்கும் ரஜினி மாபெரும் தலைவர் என்றும் காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.”
நண்பர் நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து, “இதுக்கு நான் கேள்விய கேட்காமலே இருந்திருக்கலாம் போ,” என்றார். மேலும் ஒரு கேள்வி கேட்டால் என் தலை வெடித்து சுக்குநூறாகிவிடும் என்ற பயத்தில் நானும் ஒதுங்கி வந்துவிட்டேன்.
இளம் தலைமுறை இயக்குனர்களுள் ஒருவராகப் பரிணமித்திருக்கும் பா. இரஞ்சித் முதல் படத்திலேயே தன் முத்திரையைப் பதித்தவர். தமிழ் திரையில், தலித் மக்களின் வாழ்க்கை, தலித் பண்பாடு – அரசியல் சார்ந்த குறியீடுகள், அரசியல் முழக்கங்களை (காலாவில்தான் முதன்முதலாக தமிழ் திரையில் ஜெய் பீம் என்ற முழக்கம் ஒலிக்கிறது) பரவ விட்டிருக்கிறார். இரண்டாம் படத்திலும் சில சமரசங்களுடன் தனது முத்திரையைத் தொடர்ந்தார். மூன்றாவது, வழமையான ஒரு ரஜினி படமாக இருந்தது. ஆனால், காலாவில், ரஜினியின் படமாகவும் இல்லாமல், தனது வழமையான முத்திரை பதிக்கும் படமாகவும் இல்லாமல், ரஜினிக்கு ஒவ்வாத தலித் அரசியலை, ரஜினிக்கு சாதகமாகத் திணிக்கும் பொருட்டு தானும் குழம்பி, படம் பார்ப்பவர்களையும் குழப்பி, அதிருப்தியையும் கொடுத்திருக்கிறார். விளைவு “வாதாபி ஜீரணோபவ”வாகவே இருக்கும்.
ரஜினிக்கு என்று ஒரு பாணி உருவாக்கப்பட்டு நிலையாக நின்றுவிட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும், ரஜினி அரசியல் பேசும் பாணியே தனி.
“நெருப்புடா”, “சிங்கம் சிங்கிளா வரும்” போன்ற வீர வசனங்கள், “நான் ஒருமுறை சொன்னா நூறு முறை சொன்ன மாதிரி”, “ஆண்டவன் சொல்றான், அருணாசலம் முடிக்குறான்”, “பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதில்ல” போன்ற பஞ்ச் டயலாக்குகள் (இதை நான் சொன்னா சிரிச்சிடுவாங்கப்பா என்று சூரி சொல்வார்) மூலம்தான் ரஜினி அரசியல் பேசுவார். அப்படிப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் மூலமாகத்தான் ரஜினி ரசிகர்கள் தமக்கு வேண்டிய அரசியல் “மெசேஜுகளை” பெற்றிருக்கிறார்கள், பழக்கப்பட்டிருக்கிறார்கள்.
“லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்” போன்ற அதிரடி வசனங்களால் “வரும், ஆனா வராது” என்று நீண்டகாலமாக இழுத்துக் கொண்டிருந்த அரசியல் பிரவேசத்திற்கு, “கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போகிறேன்” என்ற அறிவிப்பை வெளியிட்டு ரஜினி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அவருடைய அரசியல் பிரவேசம் உறுதியான பிறகு வெளியாகப்போகும் படம் என்பதால் காலா மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. “தலைவரின்” அரசியல் “மெசேஜை” அவரது தீவிர ரசிகர்கள் தவமிருந்து எதிர்பார்த்திருந்தார்கள். சாதாரண ரசிகர்களும் பொதுமக்களும்கூட காலாவில் ரஜினியின் அரசியல் “மெசேஜ்” என்னவாக இருக்கும் என்று ஆவலாக காத்திருந்தார்கள்.
ஆனால், ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் பழக்கப்பட்டிருந்த ரஜினியின் பாணிக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத முறையில் அரசியலை பேசியதால் காலா படு தோல்வியைச் சந்தித்திருக்கிறது. ரஜினியின் கதாபாத்திரத்தை தாதாவாக தெளிவாகச் சித்தரித்து, நாலு பஞ்ச் டயலாக்குகளை வீசியிருந்தால், படம் அமோகமாக வெற்றி பெற்றிருக்கும். அதற்கான வாய்ப்புகள், காட்சிகள் பல இருந்தபோதும் படத்தில் அது கோட்டை விடப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவற்றை மேலே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
சினிமாவில் மட்டுமில்லை, நேரடி அரசியலில் ஈடுபட்டாலும் தனக்கு பஞ்ச் டயலாக் அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதையும் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தவுடன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டிவிட்டார் ரஜினி.
அப்படிப்பட்டவரை வைத்து, மக்களைத் திரட்டி போராட்டம் செய்பவராகச் சித்தரித்து படம் எடுத்தால் யாரால் ஜீரணித்துக்கொள்ளமுடியும்?
பாஜக-வின் அரசியலை பேசுபவரை வைத்து பாஜக-விற்கு எதிரான அரசியலை பேசினால் யாரால் ஜீரணித்துக்கொள்ளமுடியும்?
ஆன்மீக அரசியல் பேசுபவரை வைத்து, நாத்திகக் குறியீடாக கறுப்பைக் காட்டினால், சபரி மலைக்கு மாலை போட்டிருக்கிறார் (படம் முழுக்க ரஜினி கறுப்பு சட்டைக்குள் ருத்திராட்ச மாலை போட்டிருக்கிறார்) “தலைவர்” என்றுதானே அவரது ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள்?
இது கணவன் உடலில் அண்ணனின் தலையையும், அண்ணன் உடலில் கணவனின் தலையையும் ஒட்ட வைத்த மதனசுந்தரியின் கதையாகத்தானே முடியும்.
அப்படித்தான் முடிந்திருக்கிறது.
“உன் அந்திமக் காலத்தில் தனியனாக சுற்றக் கடவது” என்று காலா வேங்கையின் மைந்தனைச் சபித்திருக்கிறது. சென்னை மாநகரின் வற்றா ஜீவநதியாம் கூவத்தின் ஓரத்தில் அமைந்திருக்கும் குடிசைப் பகுதி ஒன்றில் ஏழு கல்பகாலம் ஜீவனோபாயம் செய்வதே வேங்கையின் மைந்தனுக்கு சாபவிமோசனமாம்.
நன்றி: தமிழ் இந்து
பிற்சேர்க்கையாக:
காலா பா. இரஞ்சித்தின் முத்திரை பதித்திருக்கும் படம், தலித் வாழ்க்கையைச் சித்தரித்திருக்கும் படம் என்பதாகச் சிலர் நம்புகின்றனர். அதற்கு மறுப்பாக யோசிக்கச் சில புள்ளிகளாக இப்பிற்சேர்க்கை எழுதப்பட்டது.
காலாவில் முக்கிய துணைக் கதாபாத்திரமாக வரும் சமுத்திரக்கனியின் பாத்திரம் படத்தில் ஒரு தலித் பாத்திரமாக வருகிறது. ஒரு தலித் பாத்திரம் எந்நேரமும் குடித்துக் கொண்டிருப்பதாக காட்டுவது தலித் வாழ்க்கை பற்றிய சரியான சித்தரிப்புதானா என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்கலாம். இவ்வாறான ஒரு கதாபாத்திரத்தை தலித் அல்லாத ஒரு இயக்குனர் உருவாக்கியிருந்தால் எவ்வகையான விமர்சனம் எழுந்திருக்கும் என்ற துணைக் கேள்வியையும் எழுப்பிப் பார்க்கலாம்.
படத்தைப் பார்த்த பெரும்பாலானோருக்கு, சமுத்திரக்கனியின் பாத்திரம் எதற்காக உலவிடப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லை என்று அறிந்துகொள்ள முடிந்தது. சமுத்திரக்கனியின் பாத்திரம் ஒன்றும் யாருக்கும் விளங்காத புதிரான பாத்திரமல்ல. இயக்குனர் தனது கருத்துக்களை சொல்லவும், கதையில் இடையிடையில் வரும் இடைவெளிகளை சுருக்கமான செய்திகளாகச் சொல்லி இட்டு நிரப்பவும் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரம்.
கிட்டத்தட்ட நமது கூத்து மரபில் வரும் கட்டியங்காரன் பாத்திரம் என்று வைத்துக்கொள்ளலாம். அதனால்தான் அது படம் முழுக்க சதா சலம்பிக் கொண்டே இருக்கிறது. கருத்து கந்தசாமியாக உலவிக் கொண்டிருக்கிறது. அது ஒரு “ஹேங்க் ஓவர்” கதாபாத்திரம். கதைக்கு அவசியமே இல்லாமல் துருத்திக்கொண்டு நிற்கும் பாத்திரம்.
படத்தின் மற்றொரு மிகப்பெரிய அபத்தம், தாராவி வாழ் மக்களின் போராட்டத்தை ‘நில உரிமைக்கான’ போராட்டமாக சித்தரித்திருப்பது. நில உரிமைக்கான போராட்டம் எனப்படுவதாவது, “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கமாகத்தான் இதுவரை புரிந்துகொள்ளப்பட்டு வந்திருக்கிறது. காலாவில் பேசப்பட்டிருப்பதோ குடியிருக்கும் இடத்திற்கான உரிமை. அதாகப்பட்டது, “இருப்பிடத்திற்கான உரிமை”. அதை நிலத்திற்கான உரிமையாக பேசியிருப்பது, உலக வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்றிராத சாதனை என்று மெச்சிக் கொள்ளலாம்.
இத்தகைய வரலாற்றுச் சாதனைகளைத் தவிர்த்துவிட்டு, எனது கேள்விகளை ஒரு முக்கிய புள்ளியை நோக்கியே வைக்க விழைந்திருக்கிறேன்.
ரஜினியின் அரசியல் நுழைவின் முக்கிய தருணத்தில், அதன் பொருட்டு எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படமே காலா. படம் குறித்த ரஜினியின் வெளிப்படையான ஸ்டேட்மெண்டுகளிலும் இரஞ்சித்தின் கருத்துக்களில் இருந்துமே இது வெளிப்படை. மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், காலா படம் வெளிவந்த பிறகு “ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதரவு நமது கட்சிக்கு கிடைக்கும்” என்ற பொருள்பட ரஜினி பேசியிருப்பதைக் கவனிக்க. ஆக, இது மிகத் தெளிவாக ரஜினிக்காக, அவரது அரசியல் நுழைவின் பொருட்டு எடுக்கப்பட்ட பிரச்சாரப் படம்.
அதாவது, இது மிக மிகத் தெளிவாக, ரஜினி படம். இரஞ்சித்தின் படம் அல்ல.ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஒட்டி, ரஜினிக்காக இரஞ்சித் எடுத்துக் கொடுத்திருக்கும் அப்பட்டமான பிரச்சாரப் படம்.
இந்த நிதர்சனமான யதார்த்தத்தை – தரவை (fact), அதன் சூழலில் (context) வைத்து, படத்தை (text) பார்க்கச் சிலர் வலுக்கட்டாயமாக மறுப்பது பரிதாபத்திற்குரியது.
இரண்டிலும் இருந்தும் பிரித்து வெறும் படத்தை (text) பார்த்தாலே கூட, படம் தான் எடுத்துக்கொண்ட விடயத்தை தெளிவாகவோ நேர்த்தியாகவோ சொல்லவில்லை. கபாலியை திருப்பிப் போட்டு, ஆங்காங்கே டிங்கரிங் செய்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றும் கூறலாம். கபாலியின் இடைவேளைக்குப் பிறகான கதையை காலாவில் இடைவேளைக்கு முன்பாக வைத்திருக்கிறார்கள். கபாலியில் மனைவியைத் தேடும் நாயகன், இதில் நாயகனைத் தேடி வரும் முன்னால் காதலி. மற்றபடி, கபாலியைப் போல இதுவும் ஒரு தாதா படம். கபாலியைப் போல ஒரு தெளிவான தாதா படமாகக்கூட வெளிப்படவில்லை.
ஆனால், இந்த மூன்றையும் பொருட்படுத்தாமல், படத்தில் ஆங்காங்கே வரும் சிறு சிறு காட்சியமைப்புகளில் (sub text) பேசப்படும் விஷயங்களின் மீதே இதை தலித் படமாக நோக்குபவர்கள் தமது கவனத்தைக் குவித்திருக்கிறார்கள்.
இக்காரணத்தின் பொருட்டு spoiler card politics என்பதற்குள் தலித் அரசியல் சிக்கிக் கொள்வது சரியான தேர்வுதானா என்ற கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது.
இவ்வாறான spoiler card politics-ஐ தலித் அரசியலில் தீவிரமாக இருப்போரில் சிலர் முன்னரும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். பெரியார் மீதான தாக்குதலில் இருந்து தொடங்கியது அது.
இதன் மோசமான தருணங்களாக மேலும் வெளிப்பட்டவை, ஈழப் போர் முடிந்த தறுவாயில், ஈழத் தமிழரின் போராட்டத்திற்கு எதிராக, “நாங்கள் தமிழர்கள் இல்லை, பௌத்தர்கள்” என்று நிலைப்பாடு எடுத்து ராஜபக்சேவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டிய பிரிவினரையும், சிங்கள அரசின் கைக்கூலியாகத் திரிந்த கருணாவை தலித் என்று தலையில் சுமந்து திரிந்த பிரிவினரையும் குறிப்பிடலாம்.
ரஜினிக்கு தலித் சாயம் பூசி எடுக்கப்பட்டிருக்கும் படத்தை, “நான் அந்த அம்சத்தை பொருட்படுத்த மாட்டேன்; பா. இரஞ்சித் என்ற தலித் எடுத்திருப்பதால், அதை தலித் படமாக பார்ப்பேன்; தலித் வாழ்க்கை பற்றிய சித்தரிப்புப் படமாக பார்ப்பேன்,” என்று வாதிடுவது மேலே குறிப்பிட்ட அதே spoiler card politics தான் என்பதே எனது தாழ்மையான கருத்தாம்.