நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவும் ஒரு நாட்டில், ஜனநாயக நெறிமுறைகள் பாதுகாக்கப்படுவதற்கு அரசின் தூண்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வுகள் (separation of powers) மீறப்படாமல் இயங்குவது அடிப்படையான நிபந்தனையாகும். அதாவது, சட்டம் இயற்றும் நாடாளுமன்றம்/சட்டசபை, சட்டத்திற்கும் அதற்கு ஆதாரமான அரசியல் சட்டத்திற்கும் பொருள்கோடல் தந்து நீதியை நிலைநாட்டும் பணியை மேற்கொண்டிருக்கும் நீதிமன்றங்கள், இவற்றை சட்டத்தின் வழி நின்று செயல்படுத்தும் நிர்வாகத் துறை ஆகிய மூன்று தூண்களும் தமது அதிகார வரம்புகளை மீறாமல் ஒன்றுடன் ஒன்று இயைந்து செயல்பட வேண்டும். நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இம்மூன்று தூண்களின் செயல்பாடுகளைப் பற்றிய விமர்சனங்கள் வாயிலாக அவற்றைச் செழுமைப்படுத்தும் பணியை மேற்கொள்ளும்.
சட்டம் இயற்றும் மன்றங்கள், காலத்தின் தேவைக்கேற்ப சட்டங்கள் இயற்றுவது, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை தீர்மானிப்பது ஆகியவற்றோடு, அவற்றைச் செயல்படுத்தும் பணியையும் மேற்கொள்கின்றன. செயல்படுத்தும் நிர்வாக அலகுகளை (அதிகார வர்க்கத்தை) மேற்பார்வையும் செய்கின்றன. அரசின் கொள்கைகளை அதிகார வர்க்கம் எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதைக் கண்காணிக்க மதிப்பீட்டுக் குழு (Estimates Committee), பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee) எனப் பல குழுக்களை, எதிர்கட்சி எம் எல் ஏக்களை உள்ளடக்கி அமைத்துச் செயல்பட நமது நாடாளுமன்றம்/சட்டசபைகளுக்கு அதிகாரம் உண்டு. நமது நாடாளுமன்றம்/சட்டசபைகளின் செயல்பாடுகள் வரைமுறைகளை மீறிச் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவே கணக்குத் தணிக்கையாளர் அமைப்பும் (Comptroller and Auditor General of India) உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம்/சட்டசபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு கட்சியின் கட்டுப்பாட்டிற்குள், இச்சபையால் மேற்பார்வை செய்யப்படும் அதிகார வர்க்கம் வீழ்ந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்யப்படும் பொருட்டே, அதிகார வர்க்கத்தை – ஐ ஏ எஸ், ஐ பி எஸ், இன்னபிற – தேர்வு செய்வதற்கான தனித்த தேர்வு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளுக்கான நெறிமுறைகளும் பயிற்சிகளும் தொடர்புடைய, தனித்தியங்கும் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
நாடளுமன்றமும் சட்டமன்றங்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நியதிகளை மீறும் சட்டங்களை இயற்றாமல் இருப்பதைக் கண்காணித்து, கட்டுக்குள் வைக்கும் பணியை நீதிமன்றங்கள் செய்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், சட்டங்களுக்குப் பொருள் கூறுகின்றன. அதோடு, அதிகார வர்க்கத்தின் அதிகாரங்களை சட்டத்திற்கு உட்பட்டு வரையறுத்து, கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றன. தனது ஆணைகளைக்கூட செயல்படுத்தும் அதிகாரம் அற்றதாக வரையறுக்கப்பட்டிருப்பதன் மூலம் நீதிமன்றத்தின் அதிகாரமும் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.
நடைமுறையில் இவற்றில் ஏற்ற இறக்கங்கள் நேரும்போதெல்லாம் இந்த வரையறையுடன் உரசிப் பார்த்து விமர்சனங்கள் எழுவது வாடிக்கை. ஆனால், இத்தூண்களில் ஒன்று பிறவற்றின் அதிகார வரம்புகளை அதீதமாக மீறுவது அசாதாரண சூழல்களைத் தோற்றுவிக்கும்.
குறிப்பாக, சட்டம் இயற்றும் மன்றங்களின் அதிகாரங்களை ஒரு கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ படிப்படியாகத் தம்மை நோக்கிக் குவிக்கும்போது, பிற தூண்களின் அதிகார வரம்புகளுக்குள் தலையிட்டு, மட்டுப்படுத்தி செயலற்றதாக்கிவிடுவது நிகழ்கிறது. ஒரு கட்சி அதைச் செய்யும்போது, அதை ஒரு கட்சி ஆட்சிமுறையாக – சர்வ-அதிகார* ஆட்சிமுறை (Totalitarianism) – ஹிட்லரின் நாசிசம், முசோலினியின் பாசிசம், ஸ்டாலினின் கம்யூனிசம் – உருவெடுக்கிறது. ஒரு தனி நபர் அதைச் செய்யும்போது, எதேச்சதிகாரம் எழுகிறது.
இந்திய ஜனநாயகமும் தமிழகமும் இவ்விரு பேராபத்துகளின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
மோடி அரசு பதவிப் பொறுப்பு ஏற்றவுடன் கொண்டுவர முயற்சி செய்த தேசிய நீதிமன்ற நியமன ஆணையச் சட்டம் (2014), இந்திய அளவில் இதற்கான முதல் அறிகுறியாக அமைந்தது. இச்சட்டத்தின் மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகார வரம்புகளை நாடாளுமன்றத்தின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு முயற்சி செய்தது. நல்ல காலமாக, உச்சநீதிமன்றம் அதை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி நிராகரித்தது (தற்போதைய கொலீஜிய முறையின் குறைகள் தனித்துப் பேசவேண்டியவை).
தற்போது, ஆட்சிக்காலம் நிறைவுற இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், மீண்டும் மோடி அரசு, அதிகார வர்க்கம் தேர்வு செய்யப்படும் முறையில் மாற்றம் செய்ய முனைந்திருக்கிறது. இப்புதிய விதிகள் ஒப்புக்கொள்ளப்பட்டால், அதிகாரத்தில் உள்ள கட்சியின் கருத்தியல், அல்லது செல்வாக்கிற்கு உட்பட்டவர்களேஅதிகார வர்க்கத்தினராக தேர்வு செய்யப்படும் ஆபத்து இருப்பதைப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது, தற்போது அதிகார வர்க்கத்தினரின் தேர்வில் நிலவி வரும் அரசியல் சார்பற்ற தன்மைக்கு முடிவு கட்டி, ஒரு கட்சியின் சர்வ-அதிகார ஆட்சிமுறைக்கு வழிவகுக்கும்.
இந்திய அளவிலான நகர்வுகள் இவ்வாறு சர்வ-அதிகார ஆட்சியை நோக்கிய ஆபத்துகளாக இருக்கையில், தமிழகம் வேறுவகையான சரிவில் ஏற்கனவே வீழ்ந்துவிட்டிருக்கிறது எனலாம்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் முதல் குற்றவாளி என்று குறிப்பிடப்பட்டவரான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் இது சத்தமில்லாமல் நடந்தேறியது. சரியாகச் சொல்வதென்றால் இரண்டு விஷயங்கள் நடந்தேறின.
முதலாவது, சட்டமன்றத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மந்திரிசபை செயலற்றதாக ஆக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களையும் ஜெயலலிதா நேரடியாகத், தன்னிடமே குவித்துக்கொண்டார். அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் ஜெயலலிதாவின் ஆணைக்கு உட்பட்டு மட்டுமே இயங்குவதாக திருகப்பட்டன. மந்திரிசபை பெயரளவிற்கு மட்டுமே இருந்தது.
இதன் விளைவாக, அரசின் பல துறைகளின் கொள்கை முடிவுகளும், செயல் நடவடிக்கைகளும் பெருத்த தேக்கத்திற்கு உள்ளாயின. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கடந்த மூன்று அறிக்கைகளை மேலோட்டமாக நோட்டம் விட்டாலே, அவ்வறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏராளமான முறைகேடுகளுக்கும் கேள்விகளுக்கும் ஜெயலலிதா அரசால் முறையான பதில்கள் அளிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதைக் காணமுடியும்.
எவருக்கும் பதில் சொல்லும் கடமையோ பொறுப்போ அற்ற, சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வினோதமானதொரு தனி நபர் எதேச்சதிகார ஆட்சியாகவே ஜெயலலிதாவின் ஆட்சி இருந்தது.
அதாவது, சட்டம் இயற்றும் பொறுப்புடைய சட்டசபையும், அதிகார வர்க்கத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்புடைய மந்திரிசபையும் ஒரு தனி நபரின் வரம்பற்ற அதிகாரத்தால் செயலற்றவையாக மாற்றப்பட்டிருந்தன.
இரண்டாவதாக, 2010 – 16 காலகட்டத்தில், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு ஜெயலலிதாவால் நியமன ஐ ஏ எஸ் ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்கள் ஆட்சியர்களாக பொறுப்பளிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் ஜெயலலிதாவிற்கு முளைப்பாரி எடுக்காத குறையாக புகழ்ந்து பாராட்டியது சிலருக்காவது நினைவில் இருக்கக்கூடும்.
அதாவது, ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருப்பவர்கள் ஆட்சியர்களாக்கப்பட்டது அதிகார வர்க்கத்தின் தேர்வில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்ற ஜனநாயக ஆட்சிமுறைக்கான அடிப்படை நிபந்தனையையும் அழித்தது. அதிகார வர்க்கத்தையும் ஒரு தனிநபரின் விசுவாசத்திற்குரிய குழுவாக மாற்றியது.
ஜெயலலிதாவின் தலையீட்டில் இருந்து தப்பியவை, நீதிமன்றத்தின் அதிகார வரம்பும் தேர்தல் நடைமுறையும் வாக்களிக்கும் உரிமையும் மட்டுமே.
ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ரோமப் பேரரசின் அரியாசணத்தை அரசனின் பிரத்யேக மெய்பாதுகாப்பாளர்களிடமிருந்து (Praetorian Guards) ஏலத்தில் எடுத்து டிடியஸ் ஜூலியானஸ் (Didius Julianus) முடிசூட்டிக்கொண்டதைப் போன்றதொரு சூழல் தற்போது நிலவுகிறது.
சட்டசபை/மந்திரிசபையின் மேற்பார்வையின் கீழ் கட்டுப்பட்டு நிர்வாகம் செய்யவேண்டிய அதிகார வர்க்கம், கேட்பாரின்றி அதிகாரத் துஷ்பிரயோகத்தில் திளைத்திருக்கிறது. ஜூலை 2017 இல் வெளியிடப்பட்டுள்ள தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் (அறிக்கை 3, பொது மற்றும் சமூக நலத்துறை) இதுவரை நடைபெற்றிராத முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.
மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கலில் ஒரே மாணவரின் வங்கிக் கணக்கில் பல மாணவர்களுக்கான உதவித் தொகைகள் வைப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரே மாணவருக்கு பலமுறை உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சாதிச் சான்றுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இம்முறைகேடுகள் ஆயிரக்கணக்கில் நடைபெற்றுள்ளதாக கணக்குத் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில்கூட இத்தகைய முறைகேடுகள் நடைபெறவில்லை என்பது குறித்துக்கொள்ள வேண்டியது.
ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு விசுவாசமானவர்களாகக் கருதப்பட்ட, நியமன ஐ ஏ எஸ் அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்றவர்களில் எவரெவர் இப்போது எவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பது எவருக்கும் புரியாத புதிர். எது எப்படியாக இருந்தாலும், அதிகார வர்க்கத்தின் வரம்புகளும் சட்டமன்ற/மந்திரிசபை வரம்புகளும் மீறப்பட்ட சூழல் தொடரும் நிலையில், மந்திரிசபையின் மேற்பார்வைக்குக் கட்டுப்படாமல் ஒரு அதிகார வர்க்கம் தன்னிச்சையாக செயல்படுவது மிகுந்த ஆபத்தானது.
அத்தகையதொரு பேராபத்தைத்தான் தூத்துக்குடியில் நடந்தேறியுள்ள துப்பாக்கிச் சூடு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
99 நாட்கள் அமைதியான முறையில் போராடிய பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை அறிந்துகொள்ள, பேச்சுவார்த்தை நடத்த, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் மந்திரிசபையுமே முன்வராத நிலையில், அதிகார வர்க்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது அதிகார வரம்பெல்லையை மீறி கொடூரமாக நடந்துகொண்டிருக்கிறது.
இக்கொடூரம் அரங்கேறிய பின்னரும், சாதாரண மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்ற அடிப்படை உண்மைகூட எவருக்கும் தெரியவில்லை என்ற சூழலே நிலவுகிறது. ஒரு ஜனநாயக ஆட்சிமுறையில் சட்டசபைக்கும் மந்திரிசபைக்கும் பொறுப்புகூறும் கடமை (accountability) அதிகார வர்க்கத்திற்கு இருக்கிறது. அத்தகைய பொறுப்புகூறும் பொறுப்பற்ற ஒரு அதிகாரவர்க்கம் ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, எந்தவொரு ஆட்சிமுறைக்குமே பெருங்கேடு விளைவிக்கும் ஒரு அங்கமாக உருவெடுத்துவிடும் பேரபாயமே தற்சமயம் நம் முன் நிற்கும் பெரும் சவால்.
—————–
* சர்வ – அதிகாரம் அல்லது சர்வாதிகாரம் – ஆங்கிலத்தில் Totalitarianism என்று குறிப்பிடப்படும் இவ்வரசியல் கருத்தமைவையும், அத்தகைய ஆட்சியமைப்பின் கட்டமைப்பையும் Totalitarianism and its Origins என்ற நூலில், Hannah Arendt என்ற புகழ்பெற்ற அரசியல் தத்துவவியலாளர் விரிவாக விளக்கியிருப்பார்.
இத்தகைய ஆட்சியமைப்பு ஹிட்லரின் நாசி ஜெர்மனியிலும் ஸ்டாலினின் சோவியத் ரசியாவிலும் தோன்றி, பின்னர் சோவியத் ரசியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்டு நாடுகளால் தழுவிக்கொள்ளப்பட்டது. சீனாவின் கம்யூனிஸ்டுகளும் உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்டு கட்சியினரும் இத்தகைய ஆட்சியமைப்பையே கம்யூனிச ஆட்சியமைப்பாக வலியுறுத்தி வருகின்றனர்.
இத்தகைய ஆட்சியமைப்பில் இரு கட்சி தேர்தல் அமைப்புமுறைகூட தடைசெய்யப்பட்ட ஒன்று.
வெங்காயத்தின் கட்டமைப்பை உருவகமாகக் கொண்டு, இந்த ஆட்சியமைப்பை ஹான்னா ஹாரண்ட் விளக்கியிருப்பார். வெங்காயத்தின் அடுக்குகளைப் போல, அதிகாரம் ஒரு மையத்தைச் சுற்றிப் பல அடுக்குகளாகக் கவிந்திருக்கும். ஆனால், அதன் மையத்தில் சூன்யமே இருக்கும்.
அதாவது, இத்தகைய ஆட்சியமைப்பை இயக்குபவராக ஒரு “மாபெரும் தலைவர்“ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
இந்த விளக்கம், ஒரு தனிநபரின் கைகளில் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிந்திருக்கும் ஆட்சியமைப்பிலிருந்து (எதேச்சதிகாரம் -Dictatorship) சர்வ – அதிகாரத்தை (Totalitarianism) – எங்கும் பரவியிருக்கும் அதிகாரத்தை, வித்தியாசப்படுத்திப் புரிந்துகொள்ள உதவியாக அமைகிறது.
பொதுவில், அரசியல் கருத்தாடல்களில் இந்த வித்தியாசம் புரிந்துகொள்ளப்படாமல், ஒரு நபரின் கைகளில் அனைத்து அதிகாரமும் குவிந்திருக்கையில் அவரை சர்வாதிகாரி என்று அழைப்பது வழமையாகிவிட்டது. அத்தகையோரை எதேச்சதிகாரி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். மாற்றாக, கொடுங்கோலர் என்ற பழந்தமிழ் சொல்லை கையாள்வது நன்று.
நன்றி: தமிழ் இந்து
பின் குறிப்பு:
ஒரு தகவல் பிழையை நீக்கி, சர்வ-அதிகாரம் குறித்த விளக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து வெளியாகும் ஹலோ மதுரை என்ற இதழிலும் இக்கட்டுரை மறுபிரசும் செய்யப்பட்டது.