பார்வையாளர்கள் விளையாடலாமா?

குறிப்பு: கடந்த 2002 – ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரின்போது மேற்கிந்தியத் தீவு அணியைச் சேர்ந்த சில வீரர்கள் மீது பார்வையாளர்கள் தொடுத்த வன்முறையைத் தொடர்ந்து கவனித்ததன் பிரதிபலிப்பாக உடனடியாக எழுதப்பட்ட கட்டுரை.

சமீபமாக ஆஸ்திரேலிய அணியுடனான போட்டித் தொடரின்போது ஆஸ்திரேலிய வீரர் சிமோண்ட்ஸ் மீது மீண்டும் அதே விதமான வன்முறை வெளிப்பட்டதை கவனித்தபோது உடனே இதை இங்கு பதிவிலிடத் தோன்றியது. பல்வேறு காரணங்களால், இணையப் பக்கமே வரமுடியாத நிலையிலிருந்ததால் இயலாமல் போனது. இப்போது வாய்த்திருப்பதால் பதிவிலிடுகிறேன்.

இந்தியப் பார்வையாளர்களிடையே அப்போது வெளிப்பட்ட வன்முறையில் தொனித்த இனவெறிப் போக்கை எவரும் கவனிக்கவில்லை. காரணம், மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கருப்பர்களாக இருந்தது. ஆனால், இப்போது, சிமோண்ட்ஸை மட்டுமே குறிவைத்துத் தாக்கியிருப்பதில் அது பட்டவர்த்தனமாகியிருக்கிறது.

இந்த இனவெறிப் போக்கின் ஊற்றுக்கண் பா. ஜ. க. வளர்த்திருக்கும் இந்துத்துவ மனநிலை.

வெறுமனே இந்துத்துவ மனநிலை மட்டுமேயன்று.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே கருப்பர்களை “ஊத்தையர்கள்” என்று வெறுக்கும் மனப்போக்கையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இது மிகக் குறிப்பாக சாதிய மனப்போக்கோடு இணைந்தது.

சைவ – வெள்ளாளக் கருத்தியல் போக்கின் வெளிப்பாடு. ஈழத் தமிழ் சமூக அமைப்பில் பிள்ளைமார் சாதிய ஆதிக்கத்தின் வெளிப்பாடே இந்த சைவ – வெள்ளாள கருத்தியல் போக்கு எனப்படுவது.

இன்னும் பல நுட்பங்களோடும் இக்கட்டுரையை வாசித்துப் பார்க்கலாம்.

இதில் விரித்திருக்கும் தத்துவார்த்த நோக்கு வேறொரு இடத்திலும் குறிப்பிட்டிருந்த James P. Carse – வின் Finite and Infinite Games: A Vision of Life as Play and Possibility என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது. சில காலம் கழித்து வாசித்த Eric Berne – ன் Games People Play: The Psychology of Human Relationships என்ற நூலினாலும் இது என்னுள் செறிவடைந்திருக்கிறது.

——–

 

நவம்பர் 6 – ஜம்ஷெட்பூர், நவம்பர் 9 – நாக்பூர், நவம்பர் 12 – ராஜ்கோட். மூன்று நாட்கள், மூன்று முற்றிலும் வேறான நகரங்கள், ஆனால் ஒரேவிதமான மனநிலையின் பிரதிபலிப்புகள்.

ஜம்ஷெட்பூரில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 3 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இருந்தபோது, பார்வையாளர்களின் ‘அட்டகாசத்தால்’ ஆட்டம் நிறுத்தப்பட்டது. 18 நிமிடங்கள் கழித்து ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்து, இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்து, ராம்நரேஷ் சர்வான் ஒருமுறை ‘தப்பிப் பிழைத்து’, கடைசி பந்தில் 3 ரன்கள் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு, கடைசியில் அது எல்லைக்கோட்டைத் தாண்டி, 4 ரன்களாகி முடிவுக்கு வந்தது.

கடைசி நிமிடப் பதைபதைப்புவரை ஆட்டத்தை நகர்த்திக்கொண்டுபோகும் தந்திரம் கையாளப்பட்டு ரசிகர்கள் ஓரளவுக்கு திருப்தி செய்யப்பட்டார்கள்.

நாக்பூரிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 பந்துகள் வித்தியாசத்திலேயே வெற்றி காண முடிந்தது. இங்கு இந்திய அணி நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிலையிலேயே முந்தைய ஆட்டத்தில் எதிரணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த ராம்நரேஷ் சர்வான் மீது பார்வையாளர்கள் தமது ‘கோபத்தைக்’ காட்டினார்கள்.

ராஜ்கோட்டிலும், இந்திய அணி வெற்றி பெறும் நம்பிக்கையான நிலையில் இருந்தபோதும், பார்வையாளர்களின் ‘கைவரிசை’ தொடர்ந்தது. இந்திய அணியின் ஒரேயொரு விக்கெட்டை வீழ்த்தியதற்காக, ட்ரேக்ஸ் மீது ‘தண்ணீர் பாட்டில் தாக்குதல்’ தொடுக்கப்பட்டது. ஆட்டத்தில் விளையாடாத மற்றொரு வீரர், பெட்ரோ காலின்ஸின் முகத்தில் ஒரு சிறு மணல் பையும், பிறகு ஒரு கல்லும் விழுந்தது. ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

ஒரு பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, இந்திய அணி தோல்வியின் விளிம்பில் நிற்கும் சந்தர்ப்பங்களில் அரங்கில் கனத்த மெளனம் கவிழ்ந்துவிடும். பரபரப்பான கடைசி ஓவர்களில், தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னால், இருக்கைகளின் நுனியில் ஒட்டிக்கொண்டிருந்த வயதுபோனவர்கள் ஒன்றிரண்டுபேரின் உயிர் மாரடைப்பில் பறந்துபோகும். இளைஞர்கள் சோகம் கவிந்த முகத்தோடு தெருக்களில் கூடி, வெற்றி நழுவிப்போன சந்தர்ப்பங்களை ஆதங்கத்தோடு பேசிக் கொண்டிருப்பார்கள்.

இப்போதோ, இந்திய அணி தோல்வி அடைவது என்பதை சகித்துக்கொள்ளவே முடியாத அளவுக்கு நிலைமை ‘முன்னேறியிருக்கிறது’. 1996 – ல் கல்கத்தாவில் நடைபெற்ற ப்ருடென்ஷியல் கோப்பை அரை இறுதிப் போட்டியில் நிகழ்ந்த கலவரம், சமீபத்திய கலவரங்களுக்கெல்லாம் முன்னோடி என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

என்ன மனநிலை இது? என்ன வகையான நோய்க்குறி இது? யார் பொறுப்பு இதற்கு? இனிவரும் ஆட்டங்களில் இதுபோன்று நடக்காது என்று என்ன உத்திரவாதம்? தீவிரமாக யோசிக்க வேண்டிய அவசியம் நம் எல்லோர் முன்னும் எழுந்திருக்கிறது.

இந்திய அரசின் தேசிய விளையாட்டு ஃஆக்கிதான் என்றபோதிலும், அரசால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டாக, பெருமளவிலான ரசிகர்களை கவர்ந்திழுக்கும், கோடிகள் புரளும், பல பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பர உத்திகளுக்கு பக்கபலமாக இருக்கும் விளையாட்டாக கிரிக்கெட் இருப்பது எல்லோரும் அறிந்த விஷயமே. என்றாலும், இந்த விளையாட்டு வெகுஜன கலாச்சாரத்தில் விளைவித்திருக்கும் போக்கை பலரும் கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள்.

ஆனால், இதைப் புரிந்து கொள்வதற்கு, விளையாட்டுக்கள் என்றாலே என்ன, வாழ்வில் அவற்றின் இடம் என்ன, சமூக வாழ்வில், பரஸ்பர உறவுகளில் நாம் விளையாடிக் கொண்டிருக்கும் விளையாட்டுகளின் தன்மை என்ன என்பவை குறித்து ஒரு தெளிவுக்கு வரவேண்டியது அவசியம்.

இயற்கைக்கு நோக்கம் எதுவும் இல்லை என்பதுபோல, வாழ்க்கைக்கு அதனளவில் அர்த்தம் எதுவும் இல்லை. இவற்றுக்கு உள்ளதாகச் சொல்லப்படும் அர்த்தங்கள் எல்லாம், மனிதர்கள் ஏற்றிச் சொன்னவை என்பதற்கு மேலாக வேறு ஒன்றும் இல்லை. அர்த்தங்கள் எதுவும் இல்லை என்றாகிவிடும்போது, நாம் வாழ்வை ஒரு விளையாட்டாகப் பார்க்கமுடியும். இதில் நாம் என்ன வகையான விளையாட்டுகளை ஆடிக்கொண்டிருக்கிறோம் என்பதே அப்போது கேள்வியாக அமையும்.

விளையாட்டுகள் இரண்டு வகையானவையாக இருக்கின்றன. ஒன்று, எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு (finite games); மற்றது, எல்லைகளற்ற விளையாட்டு (infinite games).

எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு வெற்றியை இலக்காகக் கொண்டு ஆடப்படுவது. எல்லைகளற்ற விளையாட்டின் நோக்கமோ தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு இல்லை.

வெற்றியை இலக்காகக் கொண்டு ஆடப்படும் எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு யாராவது ஒருவர், ஒரு தரப்பு வெற்றி பெற்றவுடன் முடிந்துவிடக்கூடியது.

இரண்டு வகையான விளையாட்டுகளிலுமே ஆட்டக்காரர்கள், சுதந்திரமான விருப்பத்தின் பேரிலேயே பங்குகொள்கிறார்கள். ஆனால், எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டில், வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற அழுத்தம் இருப்பதால், அதன் ஆட்டக்காரர்கள், எந்த நேரத்திலும் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளவோ, வேறு ஒரு ஆட்டத்தைத் துவங்கவோ தமக்குள்ள சுதந்திரத்தையும் விருப்பப்பூர்வமான தேர்வையும் மறந்துவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு காலம், இடம், எண்ணிக்கை என்பவற்றால், வெளியே இருந்து வரையறை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையிலான ஆட்டக்காரர்கள் மட்டுமே இதில் பங்குபெற முடியும். அதன் ஆட்டக்காரர்கள் திறன்களின் அடிப்படையில் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றவர்கள், ஆட்டத்தில் பங்குபெறத் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.

எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டின் விதிமுறைகள் அனைத்து தரப்பினராலும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாகின்றன. அவற்றை மீறுவது என்பது, எதிர்பார்க்கப்படும் முடிவுக்குத் – யார் வெற்றியாளர் என்பதை கண்டுகொள்வதற்கு – தடையாகி, குழப்பத்தை விளைவித்துவிடும் என்பதால் அனுமதிக்கப்படுவதில்லை. எப்போதும் முடிவையே எதிர்பார்த்திருப்பதால், எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டின் அடிப்படையான பண்பாக கடும் பொறுப்புணர்வு (seriousness) பிரிக்க முடியாமல் கலந்திருக்கிறது.

இதற்கு மாறாக, எல்லைகளுக்குட்படாத விளையாட்டின் நோக்கமே ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதாக இருப்பதால், வெற்றியாளரைத் தீர்மானிப்பதைப் பற்றிய விருப்பமே அதில் இல்லை. ஆட்டத்தில் யாரும் வெற்றிகொண்டு விடுவது ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்பதால், அதன் விதிமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டுவிடும். யாரும், அதற்குள் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம், புத்துணர்ச்சி பெற்றுக் கொள்வதற்காக தற்காலிகமாக வெளியேறலாம், அல்லது, ஆட்டத்தின் விதிகளை மாற்றக்கோரி விளையாட்டிற்கு ஒரு புதிய திசையையோ, ஒரு புதிய விளையாட்டையோகூட துவக்கி வைக்கலாம்.

எல்லைகளுக்குட்படாத விளையாட்டு, அடிப்படையில் எல்லைகளுடனேயே விளையாடும் ஆட்டமாகும். அதன் அடிப்படையான பண்பு விளையாட்டுத்தனம். கட்டற்ற சிரிப்பாக இது வெளிப்படும். மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பல்ல. மற்றவர்களோடு சேர்ந்து சிரிக்கும் சிரிப்பு.

எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டில் பங்குபெறுபவர்கள், வெற்றியாளர் என்ற பட்டத்தைப் பெறுவதற்காகப் போராடுகிறார்கள். பட்டத்தை வென்றவர் அனைவரது கவனத்திற்கும் உரியவராகிறார். அனைவரது பார்வையிலும் நிற்கிறார். தோல்வியுற்றவரை எவரும் கண்டுகொள்வதில்லை. எல்லோர் கண்முன்பாகவே அவர் காணாமல் போய்விடுகிறார்.

இந்த வகையான விளையாட்டில், வெற்றி என்பது, பார்வையாளர்கள் இருக்குப்போதே அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பார்வையாளர்களுக்கு முன்பாக விளையாடும்போது, எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டின் ஆட்டக்காரர்கள் எப்போதும் தோல்வி என்ற வாள் தமது தலைகளுக்கு மேலாகத் தொங்கிக் கொண்டிருப்பது பற்றிய எச்சரிக்கையுணர்வுடன், பார்வைக்குப் புலப்படாமல் போய்விடக்கூடாது என்ற அச்சத்துடனேயே விளையாடுகின்றனர். பார்வையாளர்கள் தம்மைத் தோல்வியாளர்களாகக் கருதிவிடக்கூடாது என்ற விருப்பமே வெற்றி பெறுவதற்கான உத்வேகமாக இங்கு மாற்றம் கொள்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தம்மைப் பற்றிப் பார்வையாளர்கள் கொண்டிருக்கும் மதிப்பீட்டைத் தவறு என்று நிரூபிப்பதற்காகவே விளையாடத் தொடங்குகிறார்கள். மற்றவர்கள் தம்மைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பை மாற்றுவதற்கானதாக விளையாட்டு மாறிவிடுவதால், ஆட்டக்காரர்கள் தமது ஆட்டத்தைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களாக, அதாவது அவர்களே பார்வையாளர்களாக மாறிவிடுகிறார்கள். இதனால், உண்மையான பார்வையாளர்கள் அவர்களுக்கு எதிரில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாகிவிடுகிறது.

இதில் பார்வையாளர்களின் பாத்திரம் என்ன? முதலில், பார்வையாளர்களை எப்படி வரையறுப்பது என்பதைப் பார்த்துவிடுவது நல்லது.

பார்வையாளர்களை எண்ணிக்கையை வைத்தோ, குறிப்பிட்ட இடத்தை வைத்தோ தீர்மானிக்க முடியாது. பார்வையாளர்கள் எப்போதும் குறிப்பான ஒரு நிகழ்வைச் சார்ந்தே உருவாகிறார்கள்.

“அன்று நான் டி.வி – யில் ஏதோ ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று படத்தை நிறுத்திவிட்டு அவசரச் செய்தி ஒன்றை ஒளிபரப்பு செய்தார்கள். முக்கிய பிரமுகர் ஒருவர் அகால மரணமடைந்த செய்தியை அறிவித்தார்கள். நான் அதிர்ந்து போனேன்,” என்று நினைவுகூறும்போது அங்கே ஒரு பார்வையாளர் இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை ஒட்டியே பார்வையாளர்கள் உருவாகிறார்கள்.

ஒரு நிகழ்வின் பார்வையாளர்கள் எங்கு வேண்டுமானாலும் சிதறி இருக்கலாம். என்றாலும், அவர்களை ஒன்றிணைக்கும் ஒரு பண்பு இருக்கிறது. யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பதைக் காணும் ஆவலே, சிதறி இருக்கும் அத்தனை பார்வையாளர்களையும் ஒன்றுபடுத்தும் அம்சம்.

இந்த ஆவல், பார்வையாளர்களை, தாம் வெறுமனே பார்வையாளர்கள்தாம் என்பதை மறக்கச்செய்து, விளையாடும் அணிகளோடு, ஆட்டக்காரர்களோடு, தம்மை முற்றிலுமாக ஒன்றிணைத்துக்கொள்ளும் அளவிற்கு இட்டுசெல்கிறது. தாம் அடையாளப்படுத்திக்கொள்ளும் அணி தோல்வியடையும்போது, தாமே தோல்வியடைந்தது போல உணர்ந்து தலைகவிழ்கிறார்கள்.

இதன் காரணமாகத்தான், தாம் வெறுமனே பார்வையாளர்கள் மட்டுமல்ல, ஆட்டக்காரர்களும்கூட என்று நிரூபிக்க வேண்டிய – தம்மைப் பற்றிய மற்றவர்களது அபிப்பிராயத்தை மாற்றவேண்டிய – மனநிலைக்கு ஆட்படுகிறார்கள். அதற்கான செயல்களில் இறங்குகிறார்கள். மேற்கத்திய தீவுகள் அணியுடனான சமீபத்திய ஒருநாள் போட்டிகளின்போது நிகழ்ந்த பார்வையாளர்களின் கலவரங்களில் வெளிப்படும் மனநிலை இதுதான்.

இந்த மனநிலை, ஏதோ கிரிக்கெட் விளையாட்டின்போது மட்டும் வெளிப்பட்ட ஒரு விதிவிலக்கு என்று எடுத்துக்கொண்டுவிட முடியாது. நமது ஜனநாயகத்தின் ‘வளர்ச்சியை’, அது இப்போது அடைந்திருக்கும் இடத்தை, நமது சமூகக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே பார்க்கலாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக, இந்திய அணி தோல்வியுறும் சந்தர்ப்பங்களில், மௌனத்தைச் சுமந்துகொண்டுபோன பார்வையாளர்களின் கலாச்சாரம், இந்திய சமூகத்தில் மற்றவர்களை அங்கீகரிக்கும் பண்பாடு எஞ்சியிருந்ததைக் காட்டுகிறது. இப்போது, ஒரு இந்திய விக்கெட் வீழ்ந்தாலும், வீழ்த்திய வீரரைக் குறிவைத்துத் தாக்கும் அளவுக்குப் பார்வையாளர்களிடையே வன்மம் ஓங்கியிருப்பது, நமது பொதுவான சமூகக் கலாச்சாரத்தில், மற்றவர்களை, மாற்றுக் கருத்து உள்ளவர்களைக் கொஞ்சமும் சகித்துக் கொள்ளக்கூட முடியாத பண்பு சகல மட்டங்களிலும் பரவியிருப்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது.

இது ஏதோ, இந்திய சமூகத்தின் பிரச்சினை மட்டுமே என்று சொல்லி முடித்துக் கொள்ளவும் முடியவில்லை. காரணம், இது ஜனநாயகம் என்று நாம் சொல்லும், அது உருவாக்கும் கலாச்சாரத்தின் உள்ளார்ந்த பிரச்சினையும்கூட. நவீன ஜனநாயகம், பண்டைய கிரேக்க நகரங்களில் நிலவிய ஆட்சிமுறையை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதைப் பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், அந்த மாதிரியின் தன்மை என்ன?

போட்டி. வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் போட்டியின் மாதிரியில் உருவானது அது. சுயநலம் கருதாத பொதுநலன் என்ற போர்வையில், வெற்றி பெறுவதற்காக ஒருவர், மற்றவரின் கருத்துக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்த வடிவத்தின் வெளிப்பாடு விவாதம் (debate). அடிப்படையில் இது ஒரு எல்லைக்குட்பட்ட விளையாட்டு.

இதிலிருந்து விலகி, எல்லைகளற்ற விளையாட்டாக அரசியலையும் கலாச்சாரத்தையும் மாற்றுவதற்கான வடிவங்களை உருவாக்கும் வரையில், எந்தப் பிரச்சினைக்கும் விடிவு இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

தினமணி கதிர் 24.11.02

அரசியல், சமூகம், விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: