பரமார்த்த குருவும் பரம சீடர்களும் அல்லது கள்ளத் தீர்க்கதரிசியும் பரிசுத்த ஆவிகளும் (அ, மா & Co)

அறிமுகமாக:

இக்கட்டுரையை எழுதி ஏழு வருடங்கள் முடியப் போகிறது. கணையாழி அக்டோபர் 2002 இதழில் அ. மார்க்ஸ் கடமை அறியோம் தொழில் அறியோம் என்று தலைப்பிட்டு (இதே தலைப்பில் வந்துள்ள அவரது தொகுப்பு நூல் ஒன்றில் முதல் கட்டுரையாகவும் வந்திருக்கிறது) கட்டுரையொன்று எழுதினார். அடுத்து நவம்பர் இதழிலும் சில நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளிப்பதாகச் சொல்லி சில குறிப்புகளையும் எழுதினார். இந்த இரண்டிற்கும் மறுப்பாகவே இதை எழுத நேர்ந்தது.

கட்டுரையை வாசித்த கணையாழி ஆசிரியர் ம. ராசேந்திரன், அ. மார்க்சை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை; அதனால் வெளியிட இயலவில்லை என்று நண்பர் யுகபாரதி மூலம் தகவல் தெரிவித்தார். சரியென்று கவிதாசரண் இதழுக்குக் கொடுத்தேன். அவரும் இப்போது அ. மார்க்சை விமர்சிக்க இயலாது என்று சங்கடத்துடன் வெளியிட மறுத்துவிட்டார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து, புது எழுத்து இதழின் ஆசிரியர் ஏதாவது கட்டுரையைக் கொடுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தபோது இதை அனுப்பி வைத்தேன். பதில் பேச்சே இல்லாமல் ஆள் மறைந்துவிட்டார்.

அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசுவோம் என்று வீரமுழக்கம் செய்துகொண்டிருந்தவரிடம் குவிந்திருந்த அதிகாரம் இப்படியாக இருந்தது. சலித்து கோப்பில் புதைத்து வைத்துவிட்டேன். தற்சமயம் இங்கு நடந்து கொண்டிருக்கும் யார் பொய்யன்? என்ற தர்ம யுத்தத்தில் அ. மாவின் சிஷ்ய கோடிகள் அ. மாவுக்காக வாங்கும் வக்காலத்து இதை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரவே தூசி தட்டி எடுத்து அனுப்பி வைக்கிறேன்.

அ. மார்க்சின் கட்டுரையில் கண்ட கடுமையான பிழைகள் இதை எழுதத் தூண்டியது ஒரு காரணம். மற்றொரு முக்கிய காரணத்தையும் சொல்ல வேண்டும்.

அச்சமயம் அடையாளம் பதிப்பகத்தின் சாதிக்குடன் இங்கு பேசப்பட்டிருக்கும் பால் லஃபார்க் – பாப் ப்ளாக் இருவரது கட்டுரைகளையும் மொழிபெயர்த்து நூலாக வெளியிட ஒப்பந்தமாகியிருந்தது (உழைப்பை ஒழிப்போம் என்ற தலைப்பில் வெளிவந்தும் இருக்கிறது). அது எனது முதல் நூலாக்க முயற்சி. இந்த இரண்டு கட்டுரைகளையும் அதற்கு ஓராண்டிற்கு முன்பே இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன். ப்ரிண்ட் அவுட் கூட எடுக்க முடியாதிருந்த நிலையில் பாப் ப்ளாக்கின் கட்டுரையை அப்படியே கணிணியில் பார்த்து எழுதி வைத்திருந்தேன். லஃபார்க்கின் கட்டுரையை ஒப்பந்தமான கையோடு சாதிக் ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்தார்.

அ. மார்க்சுடனான பல அனுபவங்களுக்குப் பிறகு (அவருடன் தொடர்பை முறித்துக் கொண்டிருந்த நிலையில்) மொழியாக்கம் செய்து முடிக்கும் வரையில் இது குறித்து அவரிடம் தெரிவிக்கக் கூடாது என்று சாதிக்கிடம் கேட்டுக் கொண்டும் இருந்தேன்.
ஆனால், சாதிக் அதை மீறி நேராக இரண்டு கட்டுரைகளையும் அவரிடம் கொண்டு சேர்ப்பித்தார். இரண்டையும் படித்துவிட்டு அடுத்த மாதமே அ. மார்க்சின் அறிமுகக் கட்டுரை. இது மொழியாக்கமாக வர இருப்பது பற்றியோ எவர் மூலம் அவர் கைக்கு வந்து சேர்ந்தது என்பது பற்றியோ ஒரு குறிப்பும் கிடையாது.

இதில் அடுத்த கட்ட மோசடி என்னவென்றால் நூலாக வந்தபோது இக்கட்டுரை இணையத்தில் எங்கெல்லாம் கிடைக்கும் என்பது பற்றிய தகவல்களையும் தந்திரமாக சேர்த்துவிட்டிருந்தார் (கணையாழி கட்டுரையில் அந்தக் குறிப்புகள் கிடையாது. சரிபார்க்க விரும்புவோர் பார்த்துக் கொள்ளலாம்). ஏதோ அறிவுத் தாகத்தில் தானே தேடி எடுத்து வாசித்து எழுதியது போலத் தோற்றம் தருவதற்காக.

தமிழுக்கு ஒரு புதிய சிந்தனையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் என்று பட்டப் பெயர் வாங்கும் முனைப்பு இருந்தவருக்கு அவ்விரு கட்டுரைகளின் கருத்துக்களை பிழையின்றி சொல்லும் முனைப்பு கூட இருக்கவில்லை. பிற சிந்தனைகளின் வெளிச்சத்தில் அவற்றைப் புரிந்துகொள்ளும் ஆர்வம் – தேடல் இல்லை. இன்னொரு நபர் இது தொடர்பாக வேலை செய்துகொண்டிருப்பது குறித்தோ, அது அவர் வழியாக வந்ததை acknowledge செய்ய வேண்டும் என்ற குறைந்தபட்ச நேர்மையோ கூட இல்லாது சுயமோகத்தில் அவர் கீழே இறங்கிக் கொண்டிருந்த நேரம் அது.

இன்று அந்தச் சுயமோகம் எஸ் எம் எஸ் படித்து கட்டுரை எழுதும் அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. தொலைபேசியில் நண்பர் ஒருவர் சொன்ன தகவலைக் கேட்டு ஒரு மோசமான கட்டுரை வந்ததாக அறிந்தேன் என்று குறிப்பிட்டுவிட்டு அதை வாசிக்க சிறு முயற்சியும் எடுக்காமல், புறங்கையால் அதைச் சாடிவிட்டுச் செல்லும் அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியைப் பாராட்டும் விதமாக இக்கட்டுரையின் தலைப்பை கழுதை தேய்ந்து கட்டெறும்பான காதை என்று மாற்றும் யோசனையும் வந்தது. கடைசி நேரத்தில் அந்த ஆவலை அடக்கிக் கொண்டேன். இதை எழுதிய சந்தர்ப்பத்தில் வைத்த தலைப்பு Dyslexia. சிலபகுதிகளை மேலும் தெளிவுபடுத்தியும் விரிவாக்கியும் எழுதியிருக்கிறேன்.

நன்றிகள்.

****************************************

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்: உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

பரிசுத்த வேதாகமம், மத்தேயு 7: 13, 14, 15.


   கணையாழி அக்டோபர் 2002 இதழில் கடமை அறியோம் தொழில் அறியோம், என்ற அ. மார்க்சின் கட்டுரையைத் தங்கள் உதவி ஆசிரியர் யுகபாரதியின் அறையில் வைத்தே வாசிக்க நேர்ந்தது. அன்றைக்கு முந்தைய இரவு ஏகத்தண்ணி. நல்ல மழை. காலை எழுந்ததிலிருந்தே லேசாகத் தலைவலி இருந்தது. தலையைப் பிடித்துக்கொண்டே கட்டுரையை சிரமப்பட்டு படித்து முடித்தேன். யுகபாரதியின் அறைக்கு என்னை அழைத்துச் சென்ற நண்பன் தய். கந்தசாமி, அந்தக் கட்டுரையைப் படித்ததால்தான் எனக்குத் தலைவலி என்று கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டான். நான் ஒரு பதிலும் சொல்லவில்லை.

பிற்பாடு, நவம்பர் 2002 இதழிலும் அக்கட்டுரை குறித்து எழுந்த கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் முகமாக அ. மார்க்ஸ் எழுதியிருந்த குறிப்பை வாசிக்க நேர்ந்தது. அன்றைக்கு முந்தைய இரவு மழையும் இல்லை, தண்ணியும் இல்லை. ஆனால், திடீரென்று லேசான தலைவலி பிடித்துக் கொண்டுவிட்டது. தய். கந்தசாமியின் கூற்று உண்மைதானோ என்ற சந்தேகமும் தொற்றிக்கொண்டு விட்டது.

இதுபோன்ற கஷ்டகாலங்களில் மேம்போக்காக புரட்டுவதற்காகவே வைத்திருக்கிற பரிசுத்த வேதாகமத்தை எடுத்துப் புரட்டினால் சில பக்கங்களுக்குள்ளாகவே உன் சிரசின்பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே, (மத்தேயு 5:36) என்ற வசனம்தானா அகப்படவேண்டும்! மூடிவிட்டு சிரசை தரையில் கிடத்திவிட்டேன்.

இது சாதாரண தலைவலியல்ல. அசாதாரண நபரின் பேரால் விளைந்தது. அதற்குரிய முறையில் மருந்து அவசியம் என்பதாலேயே இந்த ‘சுய வைத்தியம்’.
சாதாரண மார்க்சியர்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு அசாதாரணமான மார்க்ஸ் எழுதிய கட்டுரையையும் குறிப்பையும் வாசித்தபோது, முதலில் என் கண்களுக்கு அகப்பட்டது வழக்கம்போல பிழைகள் (அந்த ஏழரைநாட்டு சனியன் இன்னமும் என்னை விட்டுத் தொலைத்தபாடில்லை). முக்கியமான பிழைகள் சிலவற்றை, முதலில் காட்டிவிடுகிறேன்.

1) 1) அமார்க்ஸ் மேற்கோள் காட்டியிருக்கும் பைபிள் வசனங்கள் (வானத்துப் பறவைகளைப் பாருங்கள் …) மத்தேயு, அதிகாரம் 7, வசனங்கள் 27, 29 என்று குறித்திருக்கிறார். தவறு. அவை மத்தேயு, அதிகாரம் 6 – ல் 26, 28, 29 – ல் வருபவை.*1

கேள்விகள்: அசாதாரணமான மார்க்சிஸ்ட் மேற்கோள் காட்டினால், பைபிள் வசனங்கள் வரிசை மாறிவிடுமா? என்னதான் எல்லாவற்றையும் போட்டு உடைத்தாலும் இப்படியா உடைப்பது? எதை உடைத்தாலும் அசட்டையாக உடைக்கலாகுமா? அய்யா, என்னதான் அர்த்தங்கள் தமது ஆதார மூலங்களிலிருந்து அறுந்து, அந்தரத்திலே மிதந்து கொண்டிருக்கிற பின் நவீனத்துவ யுகத்திலே பிரவேசித்துவிட்டதாகப் புளகாங்கிதப் பட்டுக்கொண்டாலும் இப்படி நம்பர்களைத் தப்புத் தப்பாக சொல்வது விளங்குமா?

2) 2) நவம்பர் 2002 இதழில் எழுதியிருந்த குறிப்பில், “Abolition of Work” என்பதே ஒழுங்கவிழ்ப்புச் (anarchist) சிந்தனை என்று குறிப்பிட்டிருக்கிறார். பாப் ப்ளாக் தமது The Abolition of Work (அ. மா – வின் குறிப்பில் ‘The’ மிஸ் ஆகிவிட்டிருக்கிறது)*2 என்ற கட்டுரையின் முதல் பக்கத்திலேயே, உழைப்பைப் போற்றும் காரணத்தாலேயே எல்லா பழைய கருத்தியல்களையும் போலவே ஒழுங்கவிழ்ப்புச் சிந்தனையின் பெரும்பாலான போக்குகளும் பிற்போக்கானவை என்று தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். பழைய ஒழுங்கவிழ்ப்புச் சிந்தனைப் போக்குகளோடு அவர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவை ரொம்பவும் சீரியஸானவை என்று பல கட்டுரைகளில் குறிப்பிட்டும் இருக்கிறார். அ. மா – வின் குறிப்பில் இந்த வித்தியாசங்கள் அழிந்துபட்டிருக்கின்றன. ப்ச்செ …

3) சாதாரணமாக … சாரி, வழக்கமாக, மரபு மார்க்சியர்கள் அதாவது orthodox marxists என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். சாதாரண மார்க்சியர்கள்*3 அதாவது ordinary marxists என்ற பதத்தையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தமிழுக்கு ஒரு புது கலைச்சொல்லை வழங்கியமைக்காக அவருக்கு, அசாதாரணமான மார்க்ஸ் அவர்களுக்கு தமிழ் அறிவுலகம் கடமைப்பட்டிருக்கிறது.

4) பால் லஃபார்க்கின் பிரசுரத்தின் தலைப்பு The Right to be Lazy. இதை தமிழில் literal – ஆக எழுதினால், சோம்பேறித்தனமாக இருப்பதற்கான உரிமை என்று வரும். அப்படி எழுதுவதில் ஏதோ ஒரு நெருடல் இருப்பதால் சோம்பேறிகளாயிருப்பதற்கான உரிமை என்று எழுதலாம். சோம்பேறியாக என்று ஒருமையில் எழுதுவது (அ. மா அப்படியாக எழுதியிருக்கிறார்) மொழியாக்கத்தில் அடிப்படைத் தவறு – கச்சாவாக எழுதினாலும்கூட.
நிற்க. Attention! கொஞ்சம் சீரியஸாவோம்.

சமீபகாலமாக, அசாதாரண மார்க்ஸ் … மீண்டும் மன்னிக்க, அ. மார்க்ஸ் உதிர்த்து வரும் பெயர்களில் ஒன்று நீட்ஷே. (இது 2004 வாக்கில். தற்சமயம் அவரது சொற்பட்டியலில் இருந்து நீட்ஷே மறைந்துவிட்டார். கடவுளின் மரணத்தை அறிவித்தவனுக்கே இந்தக் கதி!) நீட்ஷே master morality, slave morality என்று குறிப்பிட்டு எழுதியவற்றை ஆண்டான் அறம், அடிமை அறம் என்றும், இதில் ஆண்டான் அறம் என்பது ஆண்டைகளின் அறம் என்றும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, கணையாழி கட்டுரையில் அவர் எழுதியிருப்பவை:
அடிமைகளுக்கான அறங்களை வகுத்தளிக்கும் பொறுப்பை ஆண்டான்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

உழைப்பு, கடமை, ஒழுங்கு, அச்சம், இச்சை மறுப்பு, திருப்தி, பொறுமை, சிக்கனம், பணிவு, அடக்கம் … முதலியன பேரற மதிப்பீடுகளாக உருவாகின்றன. இவை பொது அறங்களல்ல, அடிமை அறங்கள்.

ஆண்டான்களின் அறங்கள் இதற்கு நேரெதிரானவை.

அவை என்னவென்று அவர் விளக்காமல், ஆண்டான்கள் ஓய்வையும், கேளிக்கைகளையும் ஒதுக்குவதில்லை; அதேசமயம் அவற்றுக்கு எதிராக உபதேசம் புரியாமலும் இருந்ததில்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார் அ. மார்க்ஸ். தொடர்ந்து, இந்த உபதேசங்களின் குள்ளநரித்தனம் தெரியாமல், இதிலுள்ள வில்லங்கங்கள் புரியாமல் அடிமைகளும் இந்த அறங்களை தமக்கானவையாக ஏற்றுக் கொண்டது அல்லது ஏற்றுக்கொள்ள வைத்தது என்பதுதான் ஆண்டைகளின் வெற்றி, என்று ஒரு சபாஷும் போட்டு விடுகிறார்.

ஆக, மேற்சொன்ன மதிப்பீடுகள் (உழைப்பு, கடமை, இத்யாதி) ஆண்டைகளால் உருவாக்கப்பட்டு, அடிமைகள் மீது திணிக்கப்பட்டுள்ளதால், இனி அடிமைகள் அவற்றைத் தூக்கி எறிந்துவிடவேண்டும். Problem solved! புரட்சி ஓங்குக!

அ. மார்க்ஸ் நீட்ஷேவின் செறிவை மட்டுமல்ல, பிரச்சினைகளின் சிக்கலான தன்மையையும் ஒரு இம்மியளவுகூட புரிந்துகொள்ளவில்லை என்பதற்கு மேற்காட்டிய அவரது புரிதல்கள் சான்று.

முதலாவதாக, ஆண்டான் அறம் என்று நீட்ஷே சொல்வது வீரம், நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, வெளிப்படைத் தன்மை, கொடை, நட்பு, தற்பெருமை பேசாமை (தன்னடக்கம் வேறு) போன்ற பண்புகள். இவை ஆண்டான் அறத்தில் நல்லவை – உயர்ந்த பண்புகள்.

வீண்பெருமை பேசுவது, இச்சகம் பேசுவது, பயன் கருதி மட்டுமே எந்தச் செயலிலும் இறங்குவது, பொய் பேசுவது, அலைபாயும் (திருட்டுப்) பார்வை, கோழைத்தனம் போன்ற பண்புகள் ஆண்டான் அறத்தில் அடிமைகளுடைய பண்புகள் – இவை இழிவானவை.
ஆண்டான் அறத்தில் நல்லவை X கெட்டவை அல்லது உயர்ந்தவை X இழிவானவை, good X bad என்ற கருத்தாக்கமே உண்டு. தீமை – evil என்ற கருத்தாக்கம் கிடையாது.

ஆண்டான் அறத்தில் ஆண்டான்கள் முதலில் நல்லதை – உயர்வானதை வரையறுக்கின்றனர். தாம் மேலோர், உயர்குடியில் பிறந்தோர் என்பதாலேயே தமது செயல்களும் பண்புகளும் மேலானவை என்பது அவர்கள் நோக்கு. அதாவது, தமது செயல்கள் நல்லவை என்பதால் தாம் நல்லவர் என்று அவர்கள் கருதுவதில்லை. வேறுவகையில் சொல்வதென்றால், ஆண்டான் அறம் உள்முகமாக நோக்குவதிலிருந்து தொடங்குகிறது. அதன் பிறகே வெளியே நோக்குகிறது – கீழோர் என்போரை வரையறுக்கிறது.

ஆண்டான் அறத்தைப் பொருத்தவரையில், கீழோர் என்போர் இழிசனர், நலிந்தோர், உயர்குடியில் பிறக்கும் பேறுபெறாத நற்பேறற்றோர். பொய் பேசுபவர்கள் என்பதால் பொருட்படுத்தக்கூட தகுதியற்றவர்கள்; வெறுக்கத்தக்கவர்கள். அவர்களை ஒடுக்குவதில் பெரிய இன்பங்கள் இல்லை. இரக்கம் (இது அடிமைகளின் பண்பு) காட்டுவதும் இல்லை. மாறாக, பரிவு மட்டுமே கொள்கிறது. தன்னிடம் குவிந்துள்ள அபரிதமான ஆற்றலைப் பகிர்ந்து கொள்கிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டால், master morality என்பதை ஆண்டான் அறம் என்பதைவிட மேலோர் அறம் என்று விளக்குவதே சரியாக இருக்கும். ஆண்டான்கள் = ஆண்டைகள், அதனால் ஆண்டான் அறம் என்பது ஆண்டைகள் அறம் என்று விளக்குவது அடிப்படையிலேயே மிகவும் மோசமான பிழை (சொற்குற்றமல்ல பொருட்குற்றம்).

நீட்ஷே குறிப்பிடும் ஆண்டான்கள் ஆண்டைகள் அல்லர். ஆண்டைகள், தமிழ்ச் சமூகச் சூழலில், ஆதிக்க சாதி நிலவுடைமையாளர்களைக் குறிக்கும். நீட்ஷேவின் ஆண்டான்கள் பண்டைய கிரேக்கச் சூழலில், (எதீனிய ஜனநாயக நகரக் குடியரசுகளுக்கும் முற்பட்ட காலத்திய) ஆதிக்கத்தில் இருந்த பிரிவினரைக் குறிப்பது. அதற்கும், பிற்காலத்திய ஐரோப்பிய நிலவுடைமைச் சமூகத்தில் உருவான நிலச்சுவாந்தார்களுக்கும்கூட சம்பந்தம் இல்லை. (சாதாரண மார்க்சியர்களுக்கும் இந்த விஷயம் பாலபாடம். நமது அசாதாரண மார்க்சிற்கு இது பிடிபடாமல் போனது ஏன்?) நீட்ஷேவின் பார்வையில், பண்டைய கிரேக்கப் பண்பாட்டின் வீழ்ச்சிக்குப் பிறகு, இத்தகைய மேலோர் அறம் வீழ்ந்து அடிமை அறம் தலைதூக்கியது. (இந்நோக்கை ஹெகலின் dialectics of master and slave குறித்த கருத்தமைவோடு ஒப்பிட்டு நோக்கியும், அந்நோக்கிலிருந்து ஹெகல் மேற்கத்திய வரலாற்று வளர்ச்சியை விளக்கிச் செல்வதையும் விளங்கிக்கொள்வது மேலும் செறிவான புரிதல்களுக்கு உதவும்).

அடிமை அறமோ தீமையை வரையறுப்பதிலிருந்து தொடங்குகிறது. அதாவது, தன்னிலிருந்து தொடங்காமல், தனது பார்வையை வெளியே இருப்பதன்மீது செலுத்தி, தீயதை முதலில் வரையறுக்கிறது. ஆற்றல் உள்ளது அத்தனையும், வலுவானது அத்தனையும், இதன் தொடர்ச்சியாக அதிகாரம் அத்தனையும் அதற்குத் தீமையானது. 

அடக்கி ஒடுக்கப்பட்டு ஒடுங்கிய வாழ்நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு குழு, தனது உயிர் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தனது பாதுகாப்பிற்காக, அண்டை வீட்டுக்காரனை நேசிப்பது, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டுவது, அன்பு, பொறுமை, கடும் உழைப்பு, தன்னடக்கம், ரகசியம் காப்பது போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்கிறது. விடுதலைக்காக ஏங்குகிறது. இவ்வுலக வாழ்க்கையில் அது கைக்கெட்டாத தொலைவில் இருப்பதால், மறுமையில் சொர்க்கத்தைத் தேடுகிறது. கொள்கையை – கோட்பாட்டை உருவாக்குகிறது. தனது இயலாமையை உள்முகமாக செலுத்திச் செலுத்தி வன்மத்தை (resentment) வளர்த்துக் கொள்கிறது. குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுகிறது. நீதியைத் தேடுகிறது. பழிவாங்கத் துடிக்கிறது. (அடிமை அறத்தில் நீதி என்பது பழிவாங்குதல் – justice as revenge; மேலோர் அறத்தில் நீதி என்பது நியாயமாக நடந்துகொள்ளல் – justice as fairness). தண்டனையைக் கண்டுபிடிக்கிறது. வன்மம் இதன் அடிப்படையான பண்பு.

அதன் பிறகு நல்லவர்களைத் தேடுகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அடிமை அறத்தில் நல்லவர்கள் என்போர் எளிதில் ஏமாறக் கூடியவர்கள் – அசடுகள். எங்கெல்லாம் அடிமை அறவியல் தலைதூக்குகிறதோ, அங்கெல்லாம், அந்த மொழிகளிலெல்லாம், பண்பாடுகளி எல்லாம், நல்லவர்கள் என்பதற்கு ஏமாளிகள் என்ற பொருளும் சேர்ந்து கொண்டுவிடுகிறது. அடிமை அறத்திலேயே முதன்முதலாக நன்மை X தீமை good X evil என்ற கருத்தாக்கம் உருவாகிறது. 

அ. மார்க்ஸ் எழுதுவதுபோல, அடிமைகளின் அறத்தை ஆண்டான்கள் உருவாக்கித் தருவதில்லை. அப்படி உருவாக்கவும் இயலாது. அடிமைகளே ஆண்டான்களின் அறத்தைத் தழுவிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் நீட்ஷே முழங்கவுமில்லை. அடிமை அறம் அவர்களிடத்திருந்தே எழுவது. அடிமை அறத்தை ஆண்டான்கள் உருவாக்கித் தந்தார்கள் என்று சொல்வது, அப்போது அடிமைகள் வெண்ணெய் வெட்டிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வதற்கு ஒப்பானது. இதில் அடிமைகளின் historical agency காலியாகிவிடுகிறது.

தமிழில் விளிம்புநிலை ஆய்வுகளை அறிமுகம் செய்வதில் முன்நின்றவர்களில் ஒருவரான அ. மார்க்ஸ் இவ்விடத்தில் அதைக் கோட்டைவிடுவது இங்கு கவனத்திற்குரியது. அவரது வாசிப்பில் எந்தத் தொடர்ச்சியும், ஒவ்வொரு வாசிப்பிலும் தமது முந்தைய வாசிப்புகளை பரிசீலனை செய்துகொள்ளும் வழக்கமோ, தமது சுயத்தையோ வாழ்வையோ கேள்விக்குட்படுத்திக் கொள்ளும் மனநிலையோ அவரிடத்தில் இல்லை என்பதற்கான சான்றும். அதற்கு மீண்டும் இறுதியில் வருவோம். நீட்ஷேவின் கருத்தமைவுகளுக்குத் திரும்புவோம். 

மூன்றாவதாக ஒரு அறத்தையும் விளக்குவார் நீட்ஷே – அது மதகுருமார் அறம் (priest morality). மேலோர் – போர்க்குணம் வாய்ந்த உயர்குடி மரபினரில் இருந்து பிரிந்த மதகுருமார், அவர்களுடன் முரண்பட்டு, எதிராகத் திரும்பி, ஒரு அறத்தை உருவாக்குகின்றனர். ஒரு கட்டத்தில் மெல்லச் சரிந்து வீழ்ந்துபட்ட மேலோர் அறத்திற்கு மாற்றாக (மேலோர் அறவியலின் பண்புகளைக் கணக்கில் கொண்டால் அவர்கள் வீழ்ந்தே ஆகவேண்டும்; வரலாறு நெடுக இதுவே நிகழ்ந்திருக்கிறது) அடிமைகளை அரவணைத்துக் கொண்டு, அவர்களது அறங்கள், பண்புகள் மேலோங்கிய ஒரு அறவியலை, சாராம்சத்தில் அடிமை அறவியலை ஆதிக்கத்தில் வைக்கின்றனர். (நீட்ஷே உதாரணமாகக் காட்டுவது பண்டைய யூதப் பண்பாட்டை. பண்டைய கிரேக்கப் பண்பாடு அங்ஙனம் சிதைவுக்குள்ளானதையும், ரோமப் பண்பாடு கிறித்தவ அடிமை அறவியலால் வீழ்த்தப்பட்டதையும் வரலாற்று ரீதியாக விளங்கிக் கொள்ள ஹெகலின் முன்குறிப்பிட்ட நோக்கு உதவியாக இருக்கும்).*4

பண்டைய கிரேக்க நாகரீகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து எழுந்த கிறித்தவத்தின் எழுச்சியும் பரவலும், உலகெங்கும் அடிமை அறவியல் மேலோங்குவதற்கு வழிவகுத்துவிட்டது என்றும், மேலோர் அறவியல் ஆங்காங்கே சில பண்பாடுகளில் துளிர்விட்டதையும், இன்றைய உலகில், மேலோர் அறம் – அடிமை அறம் இரண்டும் கலந்த நிலைகளிலேயே தனிமனிதர்களும் குழுமப் பண்பாடுகளும் உருவாக முடியும் என்றும் நீட்ஷே தரும் விளக்கங்கள் செறிவானவை. இங்கு, நமது அசாதாரணமான மார்க்ஸ் இந்தச் சிக்கல்கள் செறிவுகள் குறித்த எந்த அக்கறையும் இன்றி நீட்ஷேவின் சிந்தனைகளை எந்த அளவுக்கு மலினப்படுத்தியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவும் அளவில், அக்கருத்தமைவுகளை சாத்தியமான எல்லைக்குட்பட்டு, செறிவு குறைந்துவிடாமல், எளிமையாக விளக்க முயற்சித்திருக்கிறேன். 

அங்ஙனமின்றி அசாதாரணமான மார்க்ஸ் செய்திருப்பது போன்று ஒரு குத்துமதிப்பாக குத்திவிட்டுச் சென்று விடுவதில் என்ன பெரியகுடிமுழுகிவிடப் போகிறது என்ற கேள்வியும் இருக்கிறது. 

அடிமை அறவியல் குறித்த தெளிவான புரிதலின்றி அந்நோக்கிலிருந்து தலித் அரசியல் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினரின் விடுதலைக்கான கருத்தமைவுகளையும் அரசியல் வழிமுறைகளையும் நடைமுறைகளையும் வளர்த்தெடுக்க முனைந்தோமானால், அந்நோக்கு வன்மம், நீதியைப் பழிவாங்கலாக வரித்துக் கொள்ளல் என்ற திசையில் பயணிக்க வேண்டியிருக்கும். இதுவரையிலான விடுதலை அரசியல் முயற்சிகளின் நகர்வுகள் அங்ஙனமே நிகழ்ந்திருக்கின்றன. மார்க்சியம் உட்பட.

அடிமை அறவியல் நோக்கில் விடுதலை அரசியல் முயற்சிகள் சிக்கியிருப்பது ஒரு விஷச் சுழல் போன்றது. ஒடுக்கப்பட்ட மக்கட் பிரிவினர், நீதி மறுக்கப்பட்டோர், ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடுவதும், அதிகாரத்தைக் கைப்பற்றியதும் நீதியைப் பழிவாங்கலாகக் கைக்கொள்வது மற்ற பிரிவினரை ஒடுக்கத் தொடங்குவது என்பதாக இந்த விஷச் சுழல் தொடர்ந்து கொண்டிருக்கும். கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளின் வரலாற்று நிகழ்வுகளை ஆழக் கற்றோர் இதை விளங்கிக் கொள்ள முடியும். இதன் பொருட்டே அடிமை அறவியல், அதன் வெளிப்பாடுகள் குறித்த கூர்ந்த புரிதல்கள், இந்த விஷச் சுழலில் இருந்து விடுவித்துக் கொள்ளவும், தற்காலச் சூழல் குறித்த தெளிவுகளுடன் புதிய நோக்குகளில் முன்னகரவும் மிகுந்த அவசியம். 

ஆனால், எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்தடுத்து நகர்ந்துவிடும் அசாதாரணர்களுக்கு இவை எல்லாம் ‘பிசாத்து’ என்ற அளவில்தானே இருக்க முடியும்! சரி சற்று இலகுவாவோம். Stand – at – ease! 

அசாதாரணரின் கட்டுரையிலும் அதற்கு அவரே கொடுத்துக் கொண்ட விளக்கக் குறிப்பிலும் தென்பட்ட பிற வேடிக்கைகள். 

இரும்புப் பொறிகளின் இடத்தில் சிலிக்கான் சில்லுகள் என்று சர்வசாதாரணமாக சொல்லிச் சென்றுவிடுகிறார். மன்னிக்க. கார்பனை அடிப்படையாகக் கொண்ட ஆற்றல் – உற்பத்தி – அதிகாரம் இவற்றிற்கு மாற்றாக/இணையாக உருவெடுத்திருப்பவையே சிலிக்கான் சில்லுகள். 

வேலையை ஒழிப்பது என்பதன் பொருள், வேலையின் கட்டாயத் தன்மையிலிருந்து விடுபடுவது. Creation – Re – creation ஆக்குவது, என்கிறார் சாதாரணமாக.
பிரச்சினையின் மையமே உழைப்பு நடவடிக்கை ஒரு creative act – ஆக இருக்கவில்லை என்பதே. பண்டைய கிரேக்கத்திலேயே புரிந்துகொள்ளப்பட்ட பிரச்சினை இது. கிரேக்கத் தத்துவவாதிகள் doing, making என்று இரு வேறு விதமான நடவடிக்கைகள் குறித்துப் பேசுவார்கள். Making என்பது ஒரு விளைபொருளை இலக்காகக் கொண்டு ஒரு செயலை ஆற்றுவது. உழைப்பு அத்தகையது என்பதாலேயே கிரேக்கர்கள் அதை வெறுக்கவும் செய்தார்கள். 

Doing என்பது ஒரு செயலைச் செய்வதில் கிட்டும் இன்பத்திற்காகவே செய்வது. ஒரு புல்லாங்குழலை வாசிக்கும்போது கிட்டும் இன்பத்திற்காகவே அது நிகழ்த்தப்படுகிறது. வாசித்து முடித்ததும் கிட்டும் ஏதோ ஒரு பொருளுக்காக அல்ல (வாசித்து முடித்ததும் ஏதும் இருப்பதில்லை). கிரேக்கத் தத்துவவாதிகளின் நோக்கில் அரசியல் நடவடிக்கை என்பதே அத்தகையதே.*5 

பால் லஃபார்க் பாப் ப்ளாக் இருவரது கருத்தமைவுகளை நீட்ஷே -கிரேக்கத் தத்துவவாதிகளின் சிந்தனைகளின் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்ள முயற்சிப்பது உழைப்பை – அரசியலை, ஒரு கலை நடவடிக்கை போன்று – ஒரு புல்லாங்குழலை வாசிப்பதைக் போன்ற இனிய அனுபவமாக மாற்றுவதற்கான வழிகளை கற்பனை செய்யவும் அதற்குரிய நடைமுறைத் திசைகளைக் காட்டவும் உதவியாக இருக்கும். ஆனால், அசாதாரண மார்க்சிற்கு இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள எங்கே நேரம் இருக்கிறது. அவருக்கு அரசியல் என்பது வேலைக்குப் போவது போல – மாடு மாதிரி உழைப்பது போல. (அனைத்தும் தழுவிய கறாரான ஒரு தத்துவ அமைப்பு தனது என்று ஹெகல் சொல்லிக் கொண்டதையும், அதற்காக அவர் மாடு போல உழைத்ததையும் வைத்து நீட்ஷே அவரை “philosophical laborer” என்று கேலி செய்வான்). 

பாப் ப்ளாக் இத்தனை செறிவுகளோடு உழைப்பை ஒழிப்போம் என்ற கருதுகோளை முன்மொழியவில்லை என்ற போதிலும், உழைப்பை விளையாட்டாக மாற்ற வேண்டும், வாழ்வையே கலைமயமாக்க வேண்டும் என்றெல்லாம் முன்மொழியும்போது இந்த அர்த்தங்களுக்கு நெருங்கியே வருகிறார். அதேபோன்று, விளையாட்டு குறித்த அவருடைய விளக்கங்களிலும் சில பிரச்சினைகள் உண்டு. ஆனால், நமது அசாதாரணருக்கு இவை குறித்தெல்லாம் எந்தக் கேள்விகளும் இல்லை. பாப் ப்ளாக்கின் ஒரு கட்டுரையைப் படித்தோமா, தமிழில் ஒரு அறிமுகக் கட்டுரை எழுதினோமா அடுத்த வேலையைப் பார்க்கப் போவோமா என்பதே அவரது மும்முரம். உழைப்பை ஒழிப்பது குறித்து தமிழில் முதன் முதல் எழுதிய அசாதாரணர் (முதல் முதல் தமிழவன் அன்று அவரே ஒரு சந்தர்ப்பத்தில் கேலி செய்தது நினைவுக்கு வருகிறது) என்று வரலாறு நாளை நினைவு கூறுமல்லவா! 

லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர் என்ற நூலில் காரல் மார்க்ஸ் எழுதிய புகழ்பெற்ற குறிப்பு நினைவுக்கு வருகிறது: Hegel remarks somewhere that all great world – historic facts and personages appear, so to speak, twice. He forgot to add: the first time as tragedy, the second time as farce. வரலாற்றில் தன் பெயரைப் பொன் எழுத்துக்களால் பொறிக்கும் பித்துப் பிடித்துவிட்ட நமது அசாதாரணருக்கு இது இச்சந்தர்ப்பத்தில் சாலப் பொருந்தும். ஆனால், அதற்கும் அவர் புளகாங்கிதம் அடைவார். என்ன இருந்தாலும் என்னை காரல் மார்க்சோடு ஒப்பிட்டுதானே பேசுகிறார்கள் என்று! 

இதுபோல, கருத்துக்களின் செறிவை, உயிர்ச் சக்தியை உறிஞ்சிவிட்டு, மேலோட்டமாக நமது அசாதாரண மார்க்ஸ் எழுதிக் குவித்திருப்பதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். அவரது எழுத்துக்கள் பெரும்பாலானவற்றில் இத்தன்மை இருப்பதைக் காட்ட முடியும். காரணங்கள் என்னவாக இருக்கலாம்? 

இதயத்திலிருந்து, உயிரிலிருந்து, இரத்தத்திலிருந்து அவரது எழுத்துக்கள் வருவதில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் வாசித்ததை மேலோட்டமாக அப்படியே தொகுத்து வைத்துவிட்டு, மீண்டும் வேறொரு சந்தர்ப்பத்தில் வாசித்ததை வேறொரு இடத்தில் தொகுத்து வைத்துச் சென்றுவிடும் நடைமுறையையே அவரது எழுத்துக்கள் காட்டுகின்றன. தமது சொந்த உடலை, உயிரை, ஆற்றலைப் பற்றிய கேள்விகளில் இருந்து – அவற்றுக்கும் புறத்தே நிலவும் பிரச்சினைகளுக்கும் இடையிலான உறவு என்ன என்ற கேள்வியில் இருந்து பிரச்சினைப்பாடுகளின் மீது கவனத்தைக் குவித்து எழும் வாசிப்பு, தேடல், முந்தைய வாசிப்புகளை எப்போதும் கேள்விக்குட்படுத்தும் … மீண்டும் வாசிக்கத் தூண்டும். 

ஆனால், நமது அசாதாரணமான மார்க்சிடம் வெளிப்படுவது? பிரச்சினைகளின் மீது அக்கறை கொண்டிருப்பது போன்ற பாவனை தொனித்தாலும் அவை அத்தகையவையன்று என்பதற்கு இதுவரை தந்த விளக்கங்கள் போதுமானவைதாமா? 

ஏதோ, என்னவோ! இதற்கெல்லாம் சம்பந்தமில்லாத ஒரு குறிப்பைச் சேர்த்துவிட்டு இதை முடித்துக் கொள்ளத் தோன்றுகிறது. 

அச்சு எந்திரம் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டு, புத்தகங்கள் பரவலான புழக்கத்திற்கு வருவதற்கு முன்பாக, வாசிக்கும் பழக்கம் மிகவும் அரிதானதாகவே இருந்தது என்பதைப் பலரும் அறிந்திருக்கக்கூடும். அக்காலங்களில் வாசிப்பு என்பதே வாய் விட்டு உரக்க வாசிப்பதாக இருந்ததையும் பலரும் ஊகித்திருக்கலாம். அக்காலங்களில், உதடுகள் அசையாமல், தனிமையில், மௌன வாசிப்பு செய்வது என்பதே மிகவும் அரிதான, விதிவிலக்கான செயல்பாடாக இருந்திருக்கிறது. *6 

மௌன வாசிப்பு என்பதே கடந்த இருநூறு முந்நூறு ஆண்டுகளில் தோன்றி வளர்ந்த ஒரு வழக்கம். மரபணு ஆராய்ச்சியாளர்களில் ஒரு தரப்பினர், இப்பண்பாட்டு பரவலின் விளைவாக நமது மரபணுக்கூறில் ஒரு சிறு மாறுதல் நிகழ்ந்திருக்கிறது என்றுகூட முன்மொழிந்திருக்கிறார்கள். அக்கூற்று எந்த அளவிற்கு சரியானது என்பது உறுதி செய்யப்படவில்லை. என்றாலும், dyslexia – அதாவது, வாசிப்பது, எழுதுவது, பேசுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு மரபணுக்கூறில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பது மட்டும் உறுதியான ஒரு ஆய்வு முடிவு. 

ஆக, வாசிக்கும் பழக்கம் என்பதே மனிதகுலம் அடைந்திருக்கும் ஆக்கப்பூர்வமான உச்சத்தைக் காட்டும் ஒரு செயல்பாடு. அதை, அதன் சாத்தியமான அதிகபட்ச வீச்சில் பிரயோகிப்பது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதாகவே எடுத்துக் கொண்டாலும், ‘அறிவு ஜீவிகளாக’ தம்மை முன்னிறுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டுபவர்களுக்காவது அது அவசியமான கடமை அல்லவா?
நன்றி: கீற்று
குறிப்புகள்: 

*1 மத்தேயு, அதிகாரம் 7, வசனங்கள் 27, 29 என்று கணையாழி இதழில் வந்தது அச்சுப் பிழை என்று குறிப்பிட்டிருந்தார் அ. மார்க்ஸ். அதை அப்படியாகவே எடுத்துக் கொள்ள விரும்பினாலும், நூலாக வந்தபின்னும் பிழை தொடர்ந்திருப்பதை என்னவாகப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. 

தமது நூலில் அ. மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கும் வசனங்கள் பின்வருமாறு:

வானத்துப் பறவைகளைப் பாருங்கள்
அவை விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை,
களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை …
காட்டு மலர்ச் செடிகள் எப்படி
வளர்கின்றன எனக் கவனியுங்கள்.
அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.
ஆனால் சாலமோன் தனது
மேன்மையான நாட்களில்கூட அவற்றைப்
போல (உடை)
அணிந்திருந்த்தில்லை
என்பன ஏசுவின் சொற்கள் (மத். 6 – 26 -29). 

இது அ. மார்க்சின் நூலில் பக்கங்கள் 11 -12 – இருப்பது. பைபிளின் புதிய பதிப்பிலிருந்து மேற்கோள்காட்டியிருக்கிறார் என்று தெரிகிறது. 

என்னிடம் இருப்பது பழம் பதிப்பு. பழைய பதிப்போ புதியதோ பைபிள் வசனங்கள் வரிசை மாற முடியாது. ஆகையால், பழைய பதிப்பில் இருந்து அதே பகுதி (மத்தேயு 6: 26, 27, 28, 29): 

ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (26)

கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? (27) 

உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; (28)

என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்த்தில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். (29) 

அ. மார்க்ஸ் எடுத்தாண்டிருப்பதில் 27 – ஆவது வசனம் இல்லை. ஆனால், 26 – 29 வசனங்கள் என்று குறிப்பிட மட்டும் செய்வார். யார் இதையெல்லாம் புரட்டிப் பார்த்து வாசிக்கப் போகிறார்கள் என்ற அசட்டைத்தனம். சிஷ்யப்பிள்ளைகளுக்கு இப்படி உளறுவது அசாதாரண பைபிள் ஆகிவிடும். நாலு இடத்தில் இதை மேற்கோள் காட்டி வாயடிக்க அது போதுமே. 

*2 நூலிலும் ‘The’ மிஸ்ஸிங். மீண்டும் அச்சுப் பிழைதானோ? அல்லது கட்டுரையை அந்த லட்சணத்தில் படித்திருப்பாரோ? இவர்தான் ஒரு தகவல் பிழையை வைத்துக் கொண்டு (அதுவும் நான் அதை ஒப்புக்கொண்ட பின்னும், மேற்கொண்டு சரியான தகவலைப் பெற்றுக் கொடுத்த பின்னும்) அக்கட்டுரையை வாசிக்காமலேயே மோசமான கட்டுரை என்று சொல்பவர்! 

*3 சனாதன மார்க்சியர்கள் என்று தான் எழுதியது இப்படி அச்சுப் பிழையாகிவிட்டது என்று நேரில் சந்திக்க நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில் அ. மார்க்ஸ் குறிப்பிட்டார். என்றாலும், வார்த்தையின் சுவை கருதி தொடர்ந்திருக்கிறேன். 

*4 இந்தியச் சூழலுக்கும் இது பொருந்தி வருவதை உணரலாம். டாக்டர். அம்பேத்கர் தமது “Who were the Shudras?” (இங்கு வாசிக்கலாம்) என்ற நூலில் பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கும் நிகழ்ந்த போராட்டத்தில், பார்ப்பனர்களால் வெற்றி கொள்ளப்பட்ட ஒரு பிரிவு சத்திரியர்களே சூத்திரர்களாக்கப்பட்டனர் என்று விவரித்துச் செல்வார். வலுவான வரலாற்று ஆதாரங்களுடன் இக்கருத்தை இதுவரையிலும் நிரூபிக்க இயலவில்லையெனினும், மிகுந்த ஏற்புடைய கருத்தாக்கமே. கட்டுரைக்கு பொருத்தமுள்ள புள்ளியாக வடஇந்தியச் சூழலில் நீட்ஷே குறிப்பிடும் மதகுருமார் X போர்க்குணம் மிக்க உயர்குடியினர் இருதரப்புக்கிடையில் நிகழ்ந்த மோதலின் உதாரணமாக இதைக் காணலாம். தமிழகச் சூழலில் சங்ககாலப் பண்பாட்டில் – குறிப்பாக, கடையெழு வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் மேலோர் அறத்தின் வெளிப்பாடுகளை உணர்த்துவதாகக் கொள்ளமுடியும். 

*5 சற்றே விரிவான விளக்கங்களுக்கு வாசிக்க தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் 

*6 இது தொடர்பாக வாசிக்க வேண்டிய அருமையான நூல், Alberto Manguel என்பார் எழுதிய A History of Reading. British Council Library மற்றும் MIDS நூலகம் இரண்டிலும் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பாக வாசித்தது. நூலாசிரியர் கண்பார்வை இழந்திருந்த போர்ஹே – வுக்கு தமது இளவயதில் புத்தகங்களை வாசித்துக் காட்டியவர் என்பது இதில் மற்றொரு சுவாரசியம்.

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

ஏன் கலை ? … 4

அனைத்திலும் பொதுவான அம்சமாக இருப்பது பயனுள்ள பொருட்கள் – கருவிகள்: முகமூடி, நூல், குடுவை, ஊதல், மூக்குக் கண்ணாடி – கைப்பை, வாசனை திரவியங்கள், மூளை – இதயம், குப்பி, foil paper …. விதிவிலக்காக இருப்பது பயன் தீர்ந்து வீசப்பட்ட அழுக்குப் பொம்மைகள்.

கருவியின் மீது சிறிது ‘அழகியல்’ மதிப்பைத் திணித்துக் கொடுத்துவிடுவதில் ஒரு படைப்பு உருப்பெற்றுவிடுவதில்லை. கருவியின் பயன்பாட்டுத்தன்மையை நீக்கிவிட்டு கண்காட்சியில் வைப்பதாலேயே அது கலைப்பொருளாகிவிடுவதில்லை.

படைப்பு, தன்னிலிருந்து வெளிக்காட்டும் உலகு, முன்னிறுத்தும் மண், இவற்றுக்கிடையிலான மோதல், – உறவு, இதில் வெளிப்படும் ஆற்றல் – இயக்கத்திலேயே கலையாகிறது.

பெனிட்டாவின் கண்காட்சி, முழுமை என்ற அளவில் நின்று எழுப்பிக்காட்டும் உலகு – தேடல், ‘நான்’ குறித்த குழப்பம்; முன்னிறுத்தும் மண் – பெண்ணாயிருத்தல்.

Hand mirror தொலைப்பார்வையில் ஒரு பெண்ணின் முகத்தை முன்னிறுத்துகிறது; அருகில் சென்றால் வாயில் பொருத்திய ஊதல். ஒரு illusion – காட்சி மயக்கம் – குழப்பம். பாட்டியின் கைப்பையும் மூக்குக் கண்ணாடியும் நினைவு கூர்வது ஒரு உலகை – தாய்வழிப் பாரம்பரியத்தை.

அதே நேரத்தில், கைப்பை மண்ணாக முன்னின்று அதைக் கையாண்ட பெண்ணின் (பாட்டியின்) மெல்லிய, சுருக்கங்கள் விழுந்த கைகள், அதன் மெதுவான அசைவுகள், ஊதல் வாங்கக் கெஞ்சி அடம் பிடித்து நிற்கும் பேத்திக்கு ஒரு ரூபாய் நாணயத்தை எடுக்க அதை (கைப்பையை) மடியில் இருத்தி, மெல்லத் திறந்து துழாவுவது, அதில் படிந்திருக்கும் தேய்வுகளில் விரிகிறது. கணவனுக்குத் தெரியாமல் சேர்த்திருந்த பணத்தின் இரகசியத்தை நம் காதோரம் சொல்கிறது. பேரப்பிள்ளைகளுடனான உறவின் கனிவு அதில் கசிந்திருக்கிறது. அவசரத்திற்கென்று எப்போதும், ஏதாவது சிறிது பணம் இருக்கும் என்ற நம்பிக்கை அதனூடாக, மெல்லிய அதிர்வாக நம்மைச் சேர்கிறது.

மாட்டின் இதயம் சட்டென்று ஒரு சமூகப் பிரிவினரின் வரலாற்றுப் பாரம்பரியத்தை நம் முன் நிறுத்துகிறது. Make – up rack பெண்ணாயிருத்தல் என்பதன்றி வேறென்ன? சர்ச்சில் முகமூடி அணிவதில்லை என்ற அறிவிப்பு ‘நான்’கள் குறித்த அவரது குழப்பத்தை – உலகை அறிவித்து விடுகிறது.

பெண்ணாயிருத்தலுக்கும் (மண்) ‘நான்’கள் குறித்த தேடல் – குழப்பத்திற்கும் (உலகு) இடையிலான மோதல் எப்படியாக வெளிப்பாடு கொள்கிறது?

Who did my portrait – ல் இதயம் (மண்) ஓவியமாக சட்டகத்திலிட்டு மாட்டப்பட்டிருக்கிறது. மூளை (‘நான்’களின் பரப்பு – உலகு) ஓவியத்திலிருக்கும் பெண்ணால் நிராகரிக்கும் தொனியில் எதிரே நீட்டப்பட்டிருக்கிறது. சுவற்றில், மேலே கேள்வியாய் விரிந்திருக்கும் வலை (கலை உலகு – அதில் தனது இடம் என்ன?) மண்ணில், கீழேயிருக்கும் முகமூடி (பெனிட்டா) என்று இந்த மோதல்.

இரண்டிற்குமிடையிலான உறவாக வெளிப்படுவது குழந்தைமை. அனைத்திலும் குழந்தைமையின் அடையாளங்கள் (ஊதல், பொம்மைகள், குழந்தைக் கால நினைவுகள்). மொத்தக் காட்சியும் இந்தப் புள்ளியில் குவிகிறது.

இதில் வெளிப்படும் ஆற்றல்: இயக்கம். பொருண்மை இயக்கம், ஆழ்ந்த அதீத உள்ளியக்கம் இரண்டும்.

பார்வையாளர்கள், Last Supper – ல் இருத்தியிருக்கும் பெனிட்டாவின் உருவத்தை முன்னே நின்று மட்டும் நோக்காமல் சுற்றி வருவது, வைன் குப்பியை எடுத்துப் பார்ப்பது, அப்பம் உள்ள பெட்டியைத் திறந்து பார்ப்பது, Door No: 62 – ல் போர்வைகளை விலக்கிப் பார்ப்பது, Make – up rack – ல் முகமூடிகளை எடுத்துப் பார்ப்பது என்பதாக பொருண்மையான இயக்கம் வெளிப்பாடு கொள்கிறது.

Door No: 62 – ல் ஏன் இந்த அழுக்குப் பொம்மைகள் என்ற உறுத்தலான கேள்வியாக, அதில் இரண்டாவதில், முழுக்கப் போர்த்தியிருப்பதை விலக்கி, உள்ளே இருக்கும் sprayer – ஐப் பார்த்து வியப்பது அல்லது குழந்தைமை நினைவுகள் கிளறிவிடப்பட்ட குதூகலமாக; Mary Ammal Appartment (A – Block) – ல் இது என்ன என்று அண்ணாந்து பார்க்கும் குழந்தைகளின் துருதுருப்பான கேள்வியாக; கடைசியாகத் தொங்கும் ஓவியத்தில், மூன்றாவது உருவின் பின்னணியில் பொறித்திருப்பதை, நெருங்கி உற்று ஆராயும் குழந்தை மனமாக; அதில் பொறித்துள்ள வசனமே (”கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும் …” என்று தொடங்கும் சங்கீதம்: 102) தந்தையிடம் கெஞ்சும் குழந்தையின் வினையாக. மீண்டும் Door No: 62 – ல் அழுக்கான, அகோரமான பொம்மைகளில், குழந்தைமையில் உள்ளுறைந்திருக்கும் அமானுஷ்யத்தைக் கண்ணுற்ற அதிர்ச்சியாக, அதீத உள்ளியக்கம், உறக்கம்போல் இயக்கம் பார்வையாளர்கள் அறியாமல் அவர்களை ஆட்கொண்டுவிடுகிறது. காட்சியில் உள்ளுறைந்திருந்த இயக்கம், ஆற்றல் பார்வையாளர்களைத் தன்னுள் இழுத்து சுழற்றி விடுகிறது.

கடந்த இரண்டரை நூற்றாண்டு காலமாக, அழகியல் என்பதாக (உருவம் – உள்ளடக்கம்) ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பிலிருந்து விலகி நிற்கத் தொடங்கும்போது (பெனிட்டாவின் கண்காட்சியில் வெளிப்பட்டது போன்ற) கலை, வாழ்வை – ஆற்றல் என்ற விரிந்த பொருளில்; மானுட வாழ்வு என்ற குறுகிய பொருளில் அல்ல – வியந்து நோக்க, குழந்தைமைக்கு, குதூகலத்திற்கு நம்மையுமறியாமல் இழுத்துச் செல்கிறது.

நமது இன்றைய அறமும், மதமும், தத்துவமும் மானுட வாழ்வு என்ற குறுகிய பரப்பிற்குள், அதிலும் சீரழிந்த எதிர்வினைக்குள் தள்ளுபவை. அரசியலைப் பொருத்தவரையில், அது அறவியல் புலத்திற்குட்பட்டது. அரசியலின் பிரதான கேள்வி நீதி. நீதி என்பதோ ஒரு அறவியல் பிரச்சினை. மேலோர் அறவியலின் (Master morality) நோக்கில் நீதி என்பது நியாயமாக நடந்துகொள்வது (justice as fairness). அடிமை அறவியலின் (Slave morality) நோக்கில் நீதி என்பது பழிவாங்குதல் (justice as revenge).

நமது இன்றைய அரசியல் (இடதுசாரி அரசியல், தலித் அரசியல், ‘பின் – நவீன’ அரசியல் உட்பட) அடிமை அறவியல் நோக்கில், பழிவாங்குதல், வன்மம் (resentment) என்ற நோக்கில் கட்டமைக்கப்பட்டவை. அதனாலேயே, நமது மதமும், தத்துவமும், அறமும் (அரசியலும்) மானுட சீரழிவின் வடிவங்கள். பரபரப்பு, விசாரம், துறவு, விலக்கி வைத்தல் இவற்றின் இயக்க வடிவங்கள்.

இதனாலேயே கலை, மேற்காட்டியது போன்ற, ஆழ்ந்த அமைதியுள்ள, அதீத ஆற்றல்/இயக்கமுள்ள கலை, நமக்கு அவசியமாக இருக்கிறது.

(முற்றும்).

பன்முகம் ஜூலை – செப்டெம்பர் 2003.

ஓவியம், கலை, தத்துவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

ஏன் கலை? … 3

ஒழுங்கமைதி என்றதும், படைப்பை இயக்கமற்ற நிலையில் உள்ள ஒன்றாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு. ஆனால், இயக்கத்திலிருக்கும் ஒன்றுதான் ஓய்வு – அமைதி கொள்ள முடியும். அத்தகைய அமைதி, இயக்கத்தை விலக்கி வைக்கும் வகையிலானதல்ல; இயக்கத்தை தன்னுள் கொண்டது.

இயக்கம் என்பதை, வெளியில், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் பொருண்மை மாற்றமாகக் கண்டால், ஓய்வமைதி என்பதை இயக்கத்திற்குத் தடையாகப் பார்க்கலாம். ஆனால், ஓய்வமைதியை தன்னுள் கொண்ட இயக்கத்தில், இயக்கம் உள்முகமாகக் குவிந்திருக்கும். அத்தகைய இயக்கம் அதீதக் கிளர்ச்சியுடையதாக இருக்கும்.

படைப்பின் ஒழுங்கமைதி இத்தகையது. படைப்பை உலகும் மண்ணும் இழைந்த ஒருமையில் கிரகித்துக் கொள்ளும்போது, இந்த ஒழுங்கமைதியை உணரவும், அதனுள் அலையும் அதீத இயக்கத்தை நெருங்கவும் முடியும்.

ஒரு வரலாற்று மக்கட் பிரிவினர், தமது விதியைத் தீர்மானிக்கும் சிறிய, அடிப்படையான முடிவுகளை எடுக்கும் திறந்த – விரிந்த பாதைகளைக் கொண்டது உலகு. தொடர்ந்து தன்னைத்தானே ஒளித்து, அந்த அளவிற்கு நிழலும் தரும் இயல்பான முன்னிற்றல் மண். இரண்டும் அடிப்படையிலேயே வேறானவைதாம் என்றாலும், முற்றிலும் விலகி நிற்பவையுமல்ல.

உலகு மண்ணில் ஊன்றி நிற்பது. மண் உலகினூடாக ஓங்கி முன்னிற்பது. உலகு ஒரு திறந்த வெளி என்பதால், எப்போதும் மண்ணை மீறி வெளிவர முற்படும். மண் மறைத்துக் கொள்வது என்பதால், எப்போதும் உலகை தன்னுள் அடக்க முற்படும்.

முடிவில்லாத மோதலாக, போராட்டமாக இது நீடித்து இருக்கும். ஆனால், இந்த மோதல் வெறும் முரண் மட்டுமே அன்று. தமது புலத்தை நிறுவமுற்படும் இந்த மோதலில், இருபுலமும் தம்மை நிறுவும் போக்கில், தமது இயற்தன்மையை ஒப்புக்கொள்ளும். அதன் மூலம், மற்றது தனது இயற்தன்மையைக் கடந்து செல்லத் தூண்டுகோலாய் அமையும்.

இந்த மோதல் முயற்சி ஆகும். முயற்சி, மற்றதை அறிந்து கொள்ளும் முயற்சியாக, நெருங்கிய உறவாக (intimacy) வளரும். இந்த உறவே படைப்பின் ஒழுங்கமைதி. அதீத இயக்கம் நிலவும் அமைதி. உறக்கம்போல் இயக்கம்.

படைப்பின் ஒழுங்கமைதியைக் கண்டுகொள்வது என்பது இந்த இயக்கத்தைக் கண்டுகொள்வது. அதில் வெளிப்படும் ஆற்றலில் கரைவது, ஆட்கொள்ளப்படுவது.

மேலுள்ள குறிப்புகளினடியாக பெனிட்டாவின் ஓவியங்கள், installations – களை அணுகிப் பார்க்கும்போது நமக்குத் தோன்றும் உலகு எது? முன்னிற்கும் மண் என்ன? இவற்றுக்கிடையிலான மோதலில், உறவில், இயக்கத்தில் வெளிப்படும் ஆற்றல் என்ன?

முதலில் கண்காட்சியை விவரித்துவிடுவது நல்லது.

1. சிகப்புச் வண்ண திரவம் நிரப்பிய குடுவை. வெளிப்பக்கத்தில் மாபெரும் கலைஞர்களின் – ஓவியர்களின் பெயர்கள். தலைப்பு Memorizing Great Artists. காட்சி இவர்களுக்கான சமர்ப்பணமாகத் தொடங்குகிறது.

2. சுவரோடு சேர்த்து நூலில் ஒரு சிலந்தி வலை. நூலிழை கீழே, மேல் நோக்கிப் பார்த்திருக்கும் ஒரு முகமூடியின் வாயில் பொருத்திய நூற்கண்டிலிருந்து தொடங்குகிறது. Question? என்ற தலைப்பு. மாபெரும் கலைஞர்களுக்கு முன்னே தான் யார் அல்லது அவர்களுக்குப் பின் தன் இடம் என்ன என்பதாகவும், மொத்த கண்காட்சியுமே எழுப்பிக் காட்டும் உலகின் – எனது அருங்காட்சியகம் (பொதுத் தலைப்பு), எனது நினைவுகள், எனது பாரம்பரியம் – கேள்வியாக, நான் யார் என்ற தேடலாகவும் தொனிக்கிறது.

கிரேக்கப் புராணக் கதையொன்றை இதோடு இணைத்தும் பார்க்கலாம்.

ஏதென்ஸில் மிகவும் சாதாரணமான சாயத்தொழிலாளி ஒருவனின் மகளாகப் பிறந்தவள் அராக்னே. நெய்தலில் மிகுந்த தேர்ச்சி பெற்றவளானாள். அவள் நெய்த வடிவங்களோடு சேர்ந்து அவள் புகழும் பரவியது. அறிவே வடிவான கிரேக்கப் பெண் தெய்வம் எதீனாவுக்கும் செய்தி எட்டியது. அராக்னேவை சோதித்தறிய விரும்பி, கிழவி உருவம் எடுத்துச் சென்று, அராக்னேவை போட்டிக்கழைத்தாள்.

கிழவியுருவில் வந்திருப்பது யாரென்று உணர்ந்து, அராக்னே, தெய்வங்கள் கிரேக்கக் காவியத் தலைவிகளை இச்சித்துக் கலவி கண்டு கைவிட்ட கதைகளை நெய்து காட்டினாள். அவளுடைய வேகத்திற்கும் நுட்பதிற்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த எதீனா இதனால் மேலும் கோபமுற்றாள். ஊடுபாவை எடுத்து அராக்னேவின் தலையை நசுக்கிக் கொன்றாள். ஆனால், அடுத்த நொடியே பரிதாபம் கொண்டு, தலையற்று முண்டமாய்க் கிடந்த அராக்னேவை உயிர்ப்பித்து, எப்போதும் நெய்துகொண்டே இருக்கும் சிரமற்ற சிலந்தியாக்கினாள்.

அராக்னே உயிர் பெற்றாலும், சிலந்தியாகி நெய்தாலும், வலை கலையாகுமா?

3. சுவற்றில் மாட்டாமல், தொங்கும் நிலையில், hand mirror (my) என்று தலைப்பிட்ட ஓவியம். தூரப் பார்வைக்கு கண்ணாடியுள் முகம் போன்று தோற்றம் தருகிறது. நெருக்கத்தில் வாயில் பொருத்திய ஊதல் (குழந்தைமை நினைவுகள்?!).

4. ஒரு கண்ணாடிப் பெட்டியுள் செயற்கைப் பட்டுத்துணியில் சாய்த்து, ஒரு கைப்பையும் மூக்குக் கண்ணாடியும் – memory of my grand mother என்ற தலைப்பு. His – (s)tory – க்குப் பதிலாக Her – Story? பெண் வழிக் குடும்பப் பாரம்பரியம், நினைவுகள்?

5. சுவற்றிலிருந்து விலகித் தொங்கும் ரசம் பூசாத வட்டக் கண்ணாடியுள் வட்டமாக வெட்டப்பட்ட, தலைப்பிடாத ஓவியம். அடுக்கி வைத்த வாசனை திரவ பாட்டில்கள். நடுவில் உள்ள பாட்டிலில் உயர்த்திக் கொண்டையிட்ட பெண்ணின் முகம். இடப்புற பாட்டிலின் கீழ் லைஃப் பாய் சோப் கவர் பாதி தெரிகிறது.

6. ரப்பரில் செய்த உரித்த கோழி, பாலித்தீன் கவர் போர்த்தித் தொங்குகிறது. Alive என்ற தலைப்பு.

7. Formal de hyde நிரப்பி அருகருகாக வைத்த இரு குடுவைகள். ஒன்றில் மாட்டு இதயம். மற்றதில் ஆட்டு மூளை – Memory of my grand parents. தனது சமூக – வரலாற்றுப் பாரம்பரியத்தை நினைவு கூர்தல்.

8. சுவற்றில் மாட்டாமல், தொங்கும் நிலையில் Who did my portrait என்று தலைப்பிட்ட ஓவியம். அதில் வலப்புறம், சட்டகத்தில் மாட்டித் தொங்கும் இதயம். இடப்புறம் ஏசய்யா 49.16 வசனம் பொறித்த பலகை. ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் (பெனிட்டா) நீட்டிய கரத்தில் மூளை – நிராகரிக்கிறார்? இதயத்தை சட்டகத்தில் மாட்டியிருப்பதால் தன் பெண் வழி நினைவுகளை முன்நிறுத்துகிறார்?

இதுவரையில் ஒரு பிரிவு.

அடுத்த பிரிவு.

9. காட்சியின் மையத்தில், நுழைவோர் பார்வையில் முதலில் படுவதாக Last Supper. கண்கள் மூடி, தியானித்து, சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் பெனிட்டாவின் உருவம். முன்னே கண்ணாடி மேசை. அதன் மேல் ஒரு சிறு அளவைக் குப்பியில் வைன். இருபக்கமும் பூதக் கண்ணாடிகள் அமைந்த வட்டச் சிறு கறுப்புப் பெட்டிகள். அதனுள் சிறு அப்பங்கள். ஒரு நபர் சுற்றி வர வாகாக இடைவெளி விட்டு மூலையில் இருத்தியிருக்கிறது (கிறித்துவப் பின்னணி.)

10. Door No: 62 என்று தலைப்பிட்டு வரிசையாக சிறு புத்தம் புது பொம்மைக் கட்டில்கள். அவற்றில் போர்த்திய (முகம் மட்டும் தெரியும் படியாக) நிலையில் அழுக்குப் பொம்மைகள். முதல் கட்டிலில் போர்வை மட்டும் விரித்திருக்கிறது. இரண்டாவதில், முழுதாகப் போர்த்தி மறைத்து ஒரு room sprayer. (என்ன என்று போர்வையை விலக்கிப் பார்த்து சிரித்துவிட்டேன். பலரும் செய்திருக்கிறார்கள்.)

11. Make – up rack. முதல் (மேல்) அடுக்கின் தலைப்பு Church – never use mask for church. இரண்டாவது Home – இதில் ஒரு முகமூடி. மூன்றாவதின் தலைப்பு Academy – 2 am already wearing. இதில் முகமூடி எதுவும் இல்லை. நான்காவதில் ஒரு முகமூடி – Hostel. ஐந்தாவதில் சற்றுப் பெரிய முகமூடி – other places. கேள்வி – முகமூடி அணியாத இடம் (Church) என்று எதுவும், யாருக்கும் இருக்கிறதா?

12. உத்தரத்திலிருந்து தொங்கும் பாலிதின் ஷீட்டில் வரிசையாக வெட்டப்பட்ட சதுரங்கள் – Mary ammal Apartment (A – Block) அவற்றுள் சிறு பொம்மைகள். ஒன்றிரண்டில் பொம்மைகள் இல்லை.

13. தலைப்பில்லாதது. தொங்கவிடப்பட்ட, ரசம் பூசாத நீள் – சதுரக் கண்ணாடி. மூன்று உருவங்கள். முதலாவது, foil paper – ல் வெட்டிய தோள்பட்டை வரையிலான உருவரை. இரண்டாவது foil paper பின்னணியில், மொட்டையடித்த பெனிட்டாவின் தோள்பட்டை வரையிலான உருவம். மூன்றாவது, முதல் cutting -ஐப் போல foil paper – ல், ஆனால், பின்னணியில் உள்ள வெள்ளைக் காகிதத்தில் ஊசியால் குத்திப் பொறித்து சங்கீதம்: 102: 1:11,12.

(தொடரும் …)

பன்முகம் ஜூலை – செப்டெம்பர் 2003.

ஓவியம், கலை, தத்துவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

ஏன் கலை? …2

கலை கலைஞனுடைய வினைப்பாட்டிலிருந்து பிறக்கிறது. ஆனால், ஒரு கலைப்பொருளை நிகழ்த்திக் காட்டுவதாலேயே கலைஞன் கலைஞனாக அங்கீகரிக்கப்படுகிறான். அதாவது, கலைப்பொருளே கலைஞனை அடையாளம் காட்டுகிறது.

கலை கலைஞனின் ஊடாகப் பிறக்கிறது. கலைஞன் கலையிலிருந்து பிறக்கிறான். கலை கலைப்பொருளில் உறைந்திருக்கிறது. ஆகையால், அதிலிருந்து தொடங்கிப் பார்க்கலாம்.

நேரடி பிரதிநிதித்துவம் செய்யாத கலைவடிவம் ஒன்றை உதாரணமாகக் கொண்டு பார்ப்போம்.

அகன்று, விரிந்து, அமைதியாக ஓடும் நதியின் கரையில் அமைந்த பெளத்த விகாரை ஒன்றை எடுத்துக்கொள்வோம். விகாரையின் உள், புத்தரின் பாதக்குறடுகள். நந்தவனமாகப் படந்த வளாகம். அதில் கமழும் நிச்சலனம். இடமும் சூழலும் ஒரு தெய்வீக அமைதியில் கரைந்திருக்கின்றன. ஏதேதோ பிரதேசங்களிலிருந்தும் வந்து போகும் பிக்குகளை அரவணைக்கும் – வாழ்வும் மரணமும், இன்பமும் துன்பமும், நிற்றலும் அழிந்துபடுதலும், பதைகளைச் சங்கமிக்கும், மானுட வாழ்விற்கு அர்த்தம் தந்து நிம்மதியைத் தரும் வெளியாக அமைந்து இருக்கிறது விகாரை.

நொய்ந்த ஆற்று மணலில், அமைதி கமழ அந்த விகாரை அமர்ந்திருக்கிறது. இந்த அமர்தல், அதுவரை கண்ணில் படாமலிருந்த ஆற்று மணலின் மென்மையை உணர்த்துகிறது. மெல்ல வருடிச் செல்லும் தென்றலை சுவாசத்தில் முதன்முதலாக கலக்கச் செய்கிறது. மஞ்சளாக ஜொலிக்கும் மாலைச் சூரியனின் கனிவை வடித்துக் கொடுக்கிறது. தொடுவானத்தின் பரப்பை விரித்துக் காட்டுகிறது. பெளர்ணமி நிலவின், விண்மீன்களின், இரவின் குளுமையை, மெளனத்தைப் பேசுகிறது. நந்தவனமாக விரிந்து, அருகமைந்த வனங்களில் கரைந்து, அவற்றுள் உறையும் சகல உயிர்களுக்கும் உருவறை தருகிறது.

விகாரையின் அமர்தல்/எழுப்புதல் சுற்றியிருக்கும் அனைத்தின் மீதும் அருள் பொழிகிறது. மனிதர்களும் மிருகங்களும் சகலமும் அதன் ஒளியில் அர்த்தம் கொள்கின்றன. வாழ்வில் வெளிச்சம் பெறுகின்றன. தன்னிலிருந்து வீசும் உயிச்சுடரில் விகாரை உருவாக்கித்தரும் உலகு (World) இது.

விகாரையின் அமர்தல், முதல் முறையாக அதைச் சுற்றியிருக்கும் அனைத்திற்கும், தம்மைப் பற்றிய பார்வையைத் தருகிறது. புத்தரின் பாதக்குறடுகளை வெறுமனே காட்சிக்கு வைத்திருக்கும் இடமாக அது இல்லை. அதனில் புத்தர் வியாபித்திருக்கிறார். புத்தரின் பெயரும், அவரின் அருள்வழியும் அந்த மண்ணில் இருக்கும் வரையில், அது ஒரு படைப்பாக அங்கு ஒளிவிடும். புத்தரும் அதிலிருப்பார். (புத்தரின் அருள்வழி அழிந்ததும், அது வெறும் வரலாற்று நினைவுச் சின்னம்).

விகாரையின் அமர்தல், ஒரு ‘புனித வெளியைத்’ திறந்துவிடுகிறது. புத்தரின் நினைவை, வழியைப் போற்றி, சமர்ப்பணமாக எழுந்தது விகாரை. அவரின் ‘தெய்வீகத் தன்மைக்கும்’ புகழுக்கும் மரியாதை செய்வது போற்றுதல். விகாரையைக் கட்டி எழுப்புதல் ஒரு புனித வெளியைத் திறப்பதால் சமர்ப்பணம் படையலாகிறது.

இந்தப் புகழும், பெருமையும் திக்கெட்டும் ஒளி வீசி நிற்கிறது. அந்த ஒளியில் பிரசன்னமாவது, வழிகாட்டியாக இருப்பதுதான் உலகு.

ஒரு கலைப் பொருளாக இருப்பது என்பது, இதுபோன்று ஒரு உலகைக் கட்டியெழுப்புவது.

இன்னும் ஒரு அம்சமும் இருக்கிறது.

ஒரு படைப்புருவாக்க நடவடிக்கையில் கல்லோ, மரமோ, உலோகமோ, வண்ணமோ, மொழியோ, ஒலியோ, எடுத்து செய்யப்படுகிறது. படைப்பு முதலில், செய்யப்படுவது.

கருவிகளின் உருவாக்கத்தில், அதைச் செய்ய எடுத்துக் கொள்ளப்படும் பருப்பொருள், எந்த அளவிற்கு கருவியின் கருவித்தன்மைக்குள் கரைந்து, மறைந்துவிடும் பண்புடையதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அது அக்கருவிக்குப் பொருத்தமுடையதாக இருக்கிறது.

இதற்கு மாறாக, நாம் பார்த்த பெளத்த விகாரை, அதைச் செய்ய எடுத்த பருப்பொருட்களை மறையச் செய்துவிடுவதில்லை. அது திறந்துவிடும் வெளியில் – உலகில், முதன் முதலாக, முன்வந்து நிற்கச் செய்கிறது.

நொய்ந்த மணல் அப்போதுதான் அதன் அழகில், மென்மையில் தெரியத் தொடங்குகிறது. தேக்கின் உறுதி விடைத்துத் தெரிகிறது. வண்ணங்கள் ஒளிவீசுகின்றன. வார்த்தை பேச ஆரம்பிக்கிறது. விகாரை, மணலின் மென்மையின் மீது மிதக்கத் தொடங்கும்போது, தேக்கின் உறுதியில் உள்ளுறையும்போது, வண்ணங்களின் சாயலில் காயும்போது, மொழியுள் உறையும்போது இவற்றின் தன்மைகள் முன் வந்து நிற்கின்றன.

கலைப் படைப்பு எதை முன்னிறுத்தி, தான் பின்நின்று அதற்குள் உறைகிறதோ, அது மண் (Earth). மண் முன் வந்து நிழல் தருவது. சோர்வின்றி, முயற்சியேதுமின்றி, இயல்பாக, தானாக, முன்வந்து நிற்பதுவே மண்.

காலடியில் அமைதியாக, எந்நேரமும் உயிரின்/ஆற்றலின் அதிர்வை உணர்த்திக் கொண்டிருப்பது. இந்த மண் மீதுதான், அதனுள்தான் வரலாற்று மனிதன் தனது உலகை உருவாக்கி புழங்கத் தொடங்குகிறான்.

மண் ஏன் படைப்பைப் பின் தள்ளி தான் முன்வந்து நிற்பதாக இருக்கிறது?

மணலின் மென்மையை ‘அறிந்து’ கொள்ள, அதைக் கைகளில் எடுத்து உரசிப்பார்ப்பதோ, எடை நிறுத்திப் பார்ப்பதோ உதவாது. அதை, அதன் இடத்தில், இருக்கவிட்டு, அதன்மீது நடக்கும்போதுதான் அதன் மென்மையை உணரமுடியும். அதை விளக்கமுற்படாமல், அதாகவே இருக்கவிடும் போதுதான் அது தன் மென்மையை நமக்கு உணர்த்த முன்வரும்.

மண், விளக்கத்திற்கு அப்பாற்பட்டதாக, தன்னைத்தானே மூடி மறைத்துக் கொள்ளும்போது மட்டுமே, உணர்தலுக்கு உட்பட்டு வந்து நிற்பதாக இருக்கிறது. மண்ணின் முன்னிற்றல் மறைத்தலின்போதே சாத்தியமாகிறது.

இந்த மறைத்தல், ஒருபடித்தானதாக, எப்போதும் மறைத்து கொள்வதாகவும் இருப்பதில்லை. மிகவும் நுட்பமான, எளிமையான வழிகளில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவும் செய்கிறது. என்றாலும், அது துருத்தி நிற்பதும் இல்லை. எடுத்துக் காட்டாக, கவிதையில்தான் சொற்கள் தம் வீச்சில் நிற்கும். அதே நேரத்தில், அங்கு துருத்தி நிற்பதும் இல்லை.

ஒரு உலகைக் கட்டியெழுப்பி, மண்ணை முன்னிறுத்துவதில்தான் ஒரு கலைப்பொருளின் உள்ளார்ந்த தன்மை, அதன் படைப்புத்தன்மை இருக்கிறது. இரண்டும் படைப்பில் ஒருமித்தே இருக்கின்றன. ஒரு படைப்பை ஆழ்ந்து நோக்கும்போது, அது தன்னளவில், தனித்து நிற்கக் காரணமான இந்த ஒழுங்கமைதியைத்தான் நாம் உணரத் தலைப்படுகிறோம்.

(தொடரும் … )

பன்முகம் ஜூலை – செப்டெம்பர் 2003.

ஓவியம், கலை, தத்துவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

ஏன் கலை? … 1

குறிப்பு:
இக்கட்டுரை Heidegger -ன் The Origin of the Work of Art என்ற கட்டுரையை அடியொற்றி எழுதப்பட்டது. நீட்ஷேவின் சில கருத்தமைவுகளை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு முதலில் உதவியது ஹைடெக்கரின் எழுத்துக்களே. ஆனால், அவருடைய எழுத்துக்களுக்குள் நுழைவதற்கு பெரும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருந்தது. சில வருடத் தேடல்களுக்குப் பின் அவரது எழுத்துக்களுக்குள் நுழைய முடிந்தபோது அடைந்த பரவசம் விளக்க முடியாதது.
இக்கட்டுரையை “தத்துவம் – நடைமுறை -கலை: சில குறிப்புகள்” -ன் தொடர்ச்சியாகவும் வாசித்துப் பார்க்கலாம். வாசகர்கள் பொருட்டு இதையும் சில பகுதிகளாகப் பிரித்துத் தருகிறேன். அச்சில் ஏற்றும்போது செய்த பிழைகள் பல திருத்தப்பட்டுள்ளன. முன் குறிப்பிட்ட கட்டுரையிலும்.
நன்றி.
ஒரு பொருளை அழகானதாக அனுபவிப்பது என்பது அதை மோசமாக அனுபவிப்பதாகும்.
– நீட்ஷே.
ஆற்றலுக்கான விருப்புறுதி
(The Will to Power)

“நமது மதம், அறம், தத்துவம் அனைத்தும் மனித சீரழிவின் வடிவங்கள். இதன் எதிர் இயக்கம்: கலை”, – நீட்ஷேவின் இந்தப் புகழ்பெற்ற பிரகடனத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

ஏன் கலை?

கடந்த 14.04.03 – 19.04.03 தேதிகளில், சென்னை லலித் கலா அகாடமியில், இளம் ஓவியை பெனிட்டா பெர்ஷியாள் வைத்திருந்த கண்காட்சி. My Museum என்ற பொதுத் தலைப்பு. நான்கு ஓவியங்கள், மற்றவையனைத்தும் installations. எதுவும் விற்பனைக்கில்லை. பெரிய கூட்டம் வந்து அலைமோதவில்லை. ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது.

தலைப்பு சுட்டிக்காட்டுவதுபோல, அவருடைய நினைவின் ஆழங்களிலிருந்து ஓர் உலகைக் கொண்டுவந்திருந்தார். என்றாலும், பழமையான இன்னொரு பரிமாணமும் மிதந்து கொண்டிருந்தது. இது முரணாக துருத்தி நீட்டிக் கொண்டிருக்காமல் இழைந்து கலந்திருந்தது.

ஒவியம் என்றாலே ‘உணர்வுகளை’ ஃப்ரேமிற்குள் ‘அழகாகக்’ கொண்டுவந்து சுவற்றில் மாட்டி வைப்பது என்ற, பொதுப்புத்தியாகி விட்டிருக்கிற கருத்தியலைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்திருந்த பெனிட்டாவின் கண்காட்சியை முனவைத்து இங்கு தொடக்கத்தில் எழுப்பிய கேள்விக்குச் சாத்தியமான சில பதில்களில் ஒன்றை முன்வைக்க முயற்சிக்கிறேன்.

கலை ஒரு புதிர். விடைகாண முடியாத புதிர். அதை வியப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், அதனுள் மூழ்கித் திளைக்கக்கூடாது என்றோ, ஆழ்ந்து பார்க்கக்கூடாது என்றோ ஆகிவிடாது. அதாவது, வேறு வகையில் சொல்வதென்றால், கலை என்பது என்ன என்ற கேள்வியைவிட அது எப்படி இயங்குகிறது என்ற கேள்வியே முக்கியமானது.

கலை எப்போதும் ஏதேனும் ஒரு பொருளின் ஊடாகவே வெளிப்பாடு கொள்கிறது (கல் – சிற்பம், வண்ணம் – ஓவியம்). இதனால், பொருளின் பொருட்தன்மை என்ன என்ற கேள்வியை எழுப்புவது அவசியமாகிறது. அதற்கும் முன்பாக, பொருள் என்று எவற்றை வரையறுத்துக் கொள்வது?

மிகவும் விரிவாகப் பொருள் கொண்டால், இருத்தல்கள் (beings) அனைத்துமே பொருட்கள். ஒரு கூஜாவும், அதனுள்ளிருக்கும் தண்ணீரும்கூட பொருட்கள்தாம். இன்று நமது அன்றாட வாழ்வின் பிரிக்கமுடியாத அம்சமாகிவிட்டிருக்கிற தொலைக்காட்சிப் பெட்டியும் இருசக்கர வாகனங்களும் பொருட்கள்தாம். நமக்கு மிகவும் அந்நியமாகிவிட்டிருக்கிற நீதியும், அச்சந்தருகிற மரணமும்கூட இந்த விரிந்த பொருளில், இறுதியில், இறுதிப் பொருட்கள்தாம். இதன்படி, காண்டின் பார்வையை சற்று நீட்டித்தால், கடவுளும்கூட தன்னளவிலான ஒரு பொருள்தான் (thing – in – itself).

ஆனால், பொருள் என்பதை இவ்வளவு விரிந்த அர்த்தத்தில் இங்கு எடுத்துக்கொள்ள இயலாது. இப்பார்வையின்படி, மனிதனும்கூட ஒரு பொருள் என்றாகிவிடும். இங்கு பொருள் எனும்போது வெறும் பொருள் (mere thing) என்ற அர்த்தத்திலேயே எடுத்துக்கொள்ள வேண்டியதாகிறது. இயற்கையிலும், மனிதன் உருவாக்கியும் வைத்திருக்கிற பயனுள்ள பொருட்களை விலக்கி, வெறும் பொருட்களை மட்டுமே பொருள் என்ற வரையறைக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்: கல், மண்கட்டி, மரத்துண்டு என்பதுபோல.

வெறும் பொருளின் பொருட்தன்மை என்ன?

மேற்கின் சிந்தனை வரலாற்றில் மூன்று விளக்கங்கள் கிடைக்கின்றன.

ஒன்று, சில பண்புகள் சேர்ந்து உருவாவது பொருள். எ. கா: கருங்கல். ஒரு நிறம், உறுதித் தன்மை, வரையறுத்த உருவம் இல்லாமை, கரடு முரடான தன்மை, கனத்த தன்மை என்பது போன்ற சில பண்புகளோடு சேர்த்து நாம் அதை அடையாளம் காண்கிறோம். இதுபோன்ற பண்புகள், பொருள் உருவான பிறகு அதற்குச் சேர்பவை அல்ல. அதன் அடிப்படைப் பண்பாக எப்போதும்/ஏற்கனவே இருப்பவை.

இரண்டாவது, பொருட்கள் புலன்களால் உணரக்கூடியவை.

மூன்றாவது, ஒரு வடிவில் (form) செதுக்கிய பருப்பொருள் (matter).

முதலிரண்டைப் பற்றிய விசாரணை, இங்கு எடுத்துக் கொண்டதிலிருந்து விலகி, வேறு புலங்கள் பற்றிய விரிவான அலசலுக்கு இட்டுச் சென்றுவிடும் என்பதால், ஒதுக்கிவிட்டு, மூன்றாவதை மட்டும் சற்று பார்ப்போம்.

ஒரு வடிவொழுங்கு ஏற்றிய பருப்பொருட்கள் பொருட்களாகின்றன என்ற கருத்து கடந்த இரண்டரை நூற்றாண்டுகளாக மேலோங்கியுள்ள ஒன்று. முற்றிலும் மாறுபட்டவையாகத் தோன்றும் கலைக்கோட்பாடுகள், அழகியல் பார்வைகள் பலவற்றிலும் இந்தக் கருத்தியலே ஊடுருவி நிற்கிறது.

பருப்பொருளை வெளியில் ஒரு அளவில் வரையறுத்துக் கொண்டுவருவதே வடிவம். உதாரணத்திற்கு, ஒரு கருங்கற்பாறையை வரையறுத்த நீள – அகலம் உள்ள கருங்கற் பாலமாக வெட்டி எடுத்தலைச் சொல்லலாம். இதன்படி, மேசை, நாற்காலி, காலணிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

பருப்பொருள் இங்கு தீர்மானகரமான காரணி இல்லை. வடிவமே முதலும் முடிவுமான காரணியாக இருக்கிறது. பருப்பொருளை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதைத் தீர்மானிப்பது முதல், எந்த வகையான பருப்பொருளை எந்த அளவிற்கு எடுத்துக் கொள்வது என்பதைத் தீர்மானிப்பதாகவும் வடிவமே இருக்கிறது.

ஆனால், பருப்பொருட்களின் மீது வடிவொழுங்கை ஏற்றுவதால் உருவாவது பயனுள்ள பொருட்கள். இந்தப் பயனுள்ள பொருட்கள் வெறும் பொருட்கள் அன்று; கருவிகள் (equipments). கருவிகள் தொழிற்படுதல் (making – poiesis) என்ற வினைப்பாட்டின் விளைபொருட்கள். பயன் தன்மையே அவற்றின் அடிப்படையான பண்பு.

வடிவொழுங்கேற்றிய பருப்பொருள் என்ற இந்த வரையறுப்பு, உண்மையில் கருவிகளைப் பற்றிய வரையறுப்பு. பொருளுக்கும் கலைக்குமே (உருவம் – உள்ளடக்கம்) ஏற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த இரு நூற்றாண்டுகளின் உலகப் பார்வையையே வடிவமைத்து விட்டிருக்கிறது.

கலை என்பதை நாம் அதன் பயன் தன்மையிலிருந்து பார்ப்பதில்லை. அது கருவித்தன்மை (equipmental – being) சார்ந்த தொழிற்படுதல் குறித்த புலம் சார்ந்ததும் இல்லை. நிகழ்த்துதல் (doing – praxis) என்ற வினைப்பாடு சார்ந்தது.

என்றாலும், கலையின் பிரிக்க முடியாத அம்சமாக முதலில் பளிச்சிடுவது அதன் பொருள்தன்மைதான் என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது.
கலையின் பொருட்தன்மை பற்றிய இந்த் விசாரணை வடிவம் – உள்ளடக்கம் என்ற நோக்கை கேள்விக்குட்படுத்த உதவினாலும், மேற்கொண்டு நகர நாம் இன்னொரு புள்ளியிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது.

(தொடரும் … )

பன்முகம் ஜூலை – செப்டெம்பர் 2003.

ஓவியம், கலை, தத்துவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »
%d bloggers like this: