அரண்மனைக் கொலைகளும் அந்தப்புர ரகசியங்களும் இடைத்தரகர்களும் – 1

இத்தாலியை இந்தியாவுடன் ஒப்பிட்டு முதன்முதலாக எழுதிய பெருமை காரல் மார்க்சுக்கு உரியதுதானா? தெரியவில்லை. என்றாலும், “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி” என்று தலைப்பிட்டு 1853 இல் அவர் எழுதிய புகழ்பெற்ற கட்டுரையில், இத்தாலியின் புவியியல் அமைப்பையும் பிரிட்டிஷ் இந்தியாவின் புவியியல் எல்லைகளையும் ஒப்பிட்டுத் தொடங்கி, அரசியல் வரலாற்று ரீதியிலும் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிய ஒப்புமைகள் சிலவற்றையும் சுட்டிக் காட்டியிருப்பார்.

நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இந்திய அரசியலில் இத்தாலி தொடர்பு கொள்ளும் என்று அப்போது காரல் மார்க்சால் கற்பனை செய்திருக்க முடியுமா? தெரியவில்லை.

ஆனால், ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இத்தாலியாகப் பரிணமித்த பண்டைய ரோமப் பேரரசுக்கு பண்டைய தமிழகத்துடன் நெருங்கிய வணிக உறவு பல நூற்றாண்டுகளாக நிலவி வந்திருக்கிறது என்பது காரல் மார்க்சுக்குத் தெரியாது என்பது தெரிகிறது. அதற்கு அவரைக் குற்றம் சொல்லவியலாது என்பதுவும் தெரிகிறது.

பழம் தென்னிந்தியத் துறைமுகங்களிலும், கடற்கரைப் பகுதிகளில் இருந்து வெகுதூரம் தள்ளியிருந்த வணிக நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளில், ரோமப் பேரரசின் நாணயங்கள் குவியல் குவியலாக கண்டெடுக்கப்பட்ட காலம்வரை அவர் உயிருடன் இருக்கவில்லை. ஒருவேளை காரல் மார்க்ஸ் உயிருடன் இருந்திருந்தால், இவ்வணிகத் தொடர்ச்சியைக் குறித்து மட்டுமல்லாமல், பண்டைய ரோமப் பேரரசிற்கும் தற்காலத் தமிழக / இந்திய அரசியல் நிகழ்வுகளுக்கும் உள்ள ஒப்புமைகள் சிலவற்றை எண்ணி வியந்திருப்பார்.

காலமும் வெளியும் இவ்விரு பிரதேசங்களுக்கும் இடையிலான தொடர்புகளை அறுத்த பின்னும், ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரோமப் பேரரசில் நிகழ்ந்ததை ஒத்த சம்பவங்கள், தற்போது தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றிருப்பார். “வரலாற்றுச் சம்பவங்களும் நபர்களும் இருமுறை தோற்றம் பெறுகின்றன. முதல் முறை களிக்கூத்தாடும் குரூரமாக. இரண்டாம் முறை, சலிப்பூட்டும் கசிந்துருகலாக“ என்று எழுதியும் இருப்பார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொலைதூரப் பிரதேச பேரரசு ஒன்றில் நிலவிய கொடுங்கோலாட்சிக்கும், ஜனநாயகம் “தழைத்தோங்கும்” காலத்தில், அமைதிப் பூங்காவெனப் பெயர் பெற்ற தமிழகத்தில், தற்காலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவங்களுக்கும் என்னதான் தொடர்பு?

நெருங்கிய தொடர்பு கொண்டவைகளுக்கு இடையில் பாரதூரமான வித்தியாசங்கள் இருப்பதைப் போலவே, தொடர்பற்றவைகளுக்கு இடையில் தொடர்புகள் தோன்ற வாய்ப்புண்டு.

முதல் குற்றவாளி (accused no. 1) என்று உச்சநீதிமன்றத்தால் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாகத் தோன்றும் மூன்று சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

அவை, ரோமப் பேரரசில் நிகழ்ந்த அரண்மனைக் கொலைகள், ஊரறிந்த அந்தப்புர ரகசியங்கள், இடைத்தரகர்களின் பேராசைப் பொச்சரிப்புகளை ஒத்தவையாக, ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமைகள் கொண்டவையாக உள்ளன.

 அரண்மனைக் கொலைகள்

உலக வரலாற்றில் மிக அதிகமான, மிகக் குரூரமான அரண்மனைச் சதிகளும் படுகொலைகளும் நிகழ்ந்த “பெருமை” ரோமப் பேரரசுக்கே உரியது.

சதித் திட்டம் தீட்டி, அரசனைக் கொன்று, அரச பதவியைக் கைப்பற்றியவர் செய்த முதல் காரியம், முந்தைய அரசனுக்கு நெருக்கமாக இருந்த அனைவரையும் – மனைவி, மக்கள், உறவினர், விசுவாசமான ஊழியர்கள், இராணுவ அதிகாரிகள், செனட் உறுப்பினர்கள், இன்னபிறரை அழித்தொழிப்பதே வழமையாக இருந்தது.

சதியும் படுகொலையும் புரிந்து அரச பதவியைக் கைப்பற்றியவர்கள், எந்நேரமும் எவரும் தம்மைக் கொலை செய்யக்கூடும் என்ற அச்சத்திலும், பிரமையிலும் சந்தேகத்திலும் எவரையும் எந்நேரத்திலும் கொலை செய்யும் பயங்கரமும், அதன் விளைவாக படுகொலை செய்யப்படுவதுமாக தொடர்ந்தது.

சதிகள் – சதிகளைப் பற்றிய புரளிகள் – சதி தீட்டியோரைப் படுகொலை செய்தல் – படுகொலை பற்றிய புரளிகள் – புரளிகளின் அடிப்படையிலான படுகொலைகள் என்பதாக ஒரு விஷச் சுழல்.

இத்தகைய விஷச் சுழலின் விளைவாக, உலக வரலாற்றில் எப்பேரரசும் கண்டிராத “நான்கு பேரரசர்களின் ஆண்டு “(கி.பி . 68 – 69), “ஐந்து பேரரசர்களின் ஆண்டு“ (கி.பி. 193) போன்ற விசித்திரங்களை ரோமப் பேரரசு கண்டது.

ரோம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது “பிடில்” வாசித்துக்கொண்டிருந்தவன் எனப் புகழ் பெற்ற நீரோ, ரோமானிய செனட்டால், “பொதுமக்களின் எதிரி” என்று அறிவிக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதற்கு அஞ்சியே தற்கொலை செய்துகொண்டான். அவனது தற்கொலையைத் தொடர்ந்து உருவான காலப்பகுதியே “நான்கு பேரரசர்களின் ஆண்டு“ என அழைக்கப்படுகிறது.

நீரோ ஆட்சியைக் கைப்பற்றியதோ, அவனது தாயார் செய்த கொலைச் சதியால். பேரரசன் க்ளாடியஸின் மூன்றாவது மனைவியின் இறப்பிற்குப் பிறகு அவனை மணம்புரிந்துகொண்ட நீரோவின் தாயார் ஆக்ரிப்பைனா, க்ளாடியஸை வற்புறுத்தி தனது மகன் நீரோவை வாரிசாக அறிவிக்கச் செய்தாள். அதன் பின்னர், க்ளாடியசுக்கு விஷக் காளான்களை உண்ணக் கொடுத்து அவனைக் கொன்று நீரோவை அரியணை ஏறச் செய்தாள். நன்றிக் கடனாக நீரோ, தன் தாயாரைக் கொன்றான்.

க்ளாடியஸோ, “கொடூர மிருகம்” என ரோமானிய வரலாற்றாசிரியர்களால் இகழ்ந்துரைக்கப்பட்ட அரசன் கலிகுலா அவனது மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டபோது, அஞ்சி நடுநடுங்கி திரைச்சீலைக்குப் பின்னே ஒளிந்திருந்தான். அவனை அடையாளம் கண்டுகொண்ட மெய்க்காப்பாளர்கள், அரச குடும்பத்தில் எஞ்சியிருந்த ஒரே ஆண் என்ற காரணத்தால் அவனை அரசனாக அறிவித்தார்கள்.

க்ளாடியஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் செய்த முதல் காரியம், கலிகுலாவைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டிய மெய்காப்பாளர்களுக்கு – அதாவது, அவன் ஆட்சியைக் கைப்பற்றக் காரணமாக இருந்தவர்களுக்கு, மரண தண்டனை வழங்கியதுதான்.

“ஐந்து பேரரசர்களின் ஆண்டு“ புகழ்பெற்ற மார்கஸ் ஆரிலியஸின் மகன் காமடஸின் படுகொலையுடன் தொடங்கியது. காமடஸ் மூத்த சகோதரி லுசில்லா அவனைக் கொலைச் செய்யச் சதித்திட்டம் தீட்டி, அது தோல்வியடைய, கமோடஸ் அவளை நாடு கடத்தி, பின்னர் கொலையும் செய்தான். ஆனால், அவன் தனது ஆசைநாயகி மார்சியாவின் சதியால் கொலை செய்யப்படவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது. காமடஸின் கிறுக்குத்தனங்கள் எல்லைமீறிப் போனதைத் தொடர்ந்து, அவள் அவனுக்கு மதுவில் விஷத்தைக் கலந்து கொடுத்தாள். அதை அருந்தியும் அவன் இறக்காமல் போகவே, காமடஸின் உடற்பயிற்சி ஆலோசகன் அவனது கழுத்தை நெரித்துக் கொன்றான்.

செப்டிமஸ் செவரஸ் ஆட்சியைக் கைப்பற்றியதோடு “ஐந்து பேரரசர்களின் ஆண்டு“  முடிவுக்கு வந்தாலும், அவனைத் தொடர்ந்து அரசனான அவனது மகன் கேரகல்லா, சிறுநீர் கழிக்க சாலையில் ஒதுங்கியபோது கொலை செய்யப்படும் அளவிற்கு ரோமப் பேரரசில் சதித்திட்டங்களும் அரண்மனைப் படுகொலைகளும் மலிந்து போயின.

ரோமப் பேரரசில் நிகழ்ந்தது போன்ற கொடூரக் கொலைகள் நடைபெறவில்லை என்றபோதிலும், தற்காலத் தமிழகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெறாமல் இல்லை. தற்காலத் தமிழகத்தில் முயற்சிக்கப்பட்ட முதல் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி எனக் குறிப்பிட வேண்டுமெனில், எம்ஜிஆரின் ஆட்சியைக் கலைத்துவிட்டு, தன்னை முதலமைச்சராக்கும்படி ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தைத்தான் குறிப்பிடவேண்டும். ஜெயலலிதா “ஜனநாயக வழிப்படி“ ஆட்சியைக் கைப்பற்றியதுகூட, ராஜீவ் காந்தி படுகொலையைக் காரணம் காட்டி, திமுக அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்தே நிகழ்ந்தது என்பதையும் மறந்துவிடலாகாது.

இப்போது, முதல் குற்றவாளி (accused no. 1) ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புரளி ஒன்று காட்டுத் தீயைப் போலப் பரவியது பலருக்கும் நினைவில் இருக்கலாம். அவரது மரணத்தை அடுத்து மற்றொரு புரளியும் பரவியது. அவற்றின் சாரம் ஒன்றுதான். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அன்று. அது எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட (முதல் புரளி) / திட்டமிட்டு நடந்த (இரண்டாவது) ஒரு கொலை.

இவற்றின் தொடர்ச்சியாக, கோடநாடு பங்களா காவலாளிக் கொலையும், அக்கொலையைச் செய்தவர்களின் கொலையும் அரங்கேறியிருக்கின்றன. மர்ம முடிச்சுகள் நிறைந்த திகில் கதையில் வரும் திடுக் சம்பவங்களைப் போன்ற நிகழ்வுகள் தமிழக அரசியல் சூழலைக் கவ்வியிருக்கின்றன.

முதல் குற்றவாளி (accused no. 1) ஜெயலலிதாவின் மரணம் குறித்து புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிமுக-வின் ஒரு தரப்பினாலேயே எழுப்பப்பட்டு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் பேரங்கள் முடிவுக்கு வராமல் இழுபறி நிலை நீடித்துக் கொண்டிருக்கும்போதே, கோடநாடு பங்களாவை மையம் கொண்டு மர்மம் நிறைந்த கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன.

முதல் குற்றவாளியாக (accused no. 1) தீர்ப்பளிக்கப்பட்ட வாரிசு இல்லாத ஒரு முதலமைச்சரின் மரணம், அவரது மரணம் இயற்கையானதா, தற்செயலாகவோ திட்டமிட்டோ நடைபெற்ற ஒரு கொலையா என பலத்த சந்தேகங்கள், மரணத்தைத் தொடர்ந்த அதிகாரப் போட்டி, அப்போட்டியில் மரணமுற்றவருக்கு மிக நெருக்கமாக இருந்த ஒரு தரப்பை (மன்னார்குடிக் குடும்பம்) அதிகார பீடங்களில் இருந்து முற்றிலுமாகத் துடைத்து அழிக்க மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியல் நாடகங்களும் பின்னணியில் நடைபெறும் பேரங்களும், மரணமுற்றவரின் மாளிகையின் (கோடநாடு) முன்னாள் பணியாளர்கள் “அரண்மனைக்குள்“ புகுந்து கொள்ளையடிக்க முயற்சி, அவர்களது மரணம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ரோமப் பேரரசில் நிகழ்ந்த சம்பவங்கள் (வன்முறை சற்றுத் தணிந்து) ஒரு பயங்கரக் கனவைப் போல மீண்டும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவா?

நன்றி: மின்னம்பலம்

%d bloggers like this: