பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் அடிப்படைகளும் பரிணாம வளர்ச்சியும் – 5
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் கொண்ட பிரதிநிதித்துவ அரசாங்கங்கள், தம்மை குடியரசுகள் என்றே கருதின என்பதையும், ஏறத்தாழ 50 ஆண்டுகள் கழித்தே ஜனநாயக அரசுகள் என்று அழைக்கப்படலாயின என்பதையும் கண்டோம். அதே போன்று, நாம் இன்று அடிப்படை ஜனநாயக உரிமை என்று கருதும் வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையும்கூட ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகாலம் சொத்துடையோருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகளிலேயே சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அவ்வுரிமை படிப்படியாக நீட்டிக்கப்பட்டது.
ஜனநாயக அரசியலின் தவிர்க்கமுடியாத அங்கமாக நாம் கருதும் கட்சி அரசியலும்கூட இவ்வரசுகளின் ஆரம்பகாலங்களில் இருக்கவில்லை. பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவிய புரட்சியாளர்கள் கட்சிகளை நாட்டின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் “குழுக்களின் பிளவுபடுத்தும் அரசியல்” என்றே கருதினர். “ஒரு கட்சி இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்லமுடியாதென்றால், அப்படிப்பட்ட சொர்க்கம் எனக்கு தேவையே இல்லை,” என்ற அமெரிக்கப் புரட்சியின் தலைவர்களில் ஒருவரான தாமஸ் ஜெஃபர்ஸனின் வாசகம் புகழ் பெற்றது. வெகுமக்கள் கட்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகளில்தான் தோன்ற ஆரம்பித்தன.
அண்மைக்காலங்களிலோ, உலகம் முழுக்கவே தேர்தல் அரசியலின்பால் வாக்காளர்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. வாக்களிப்போரின் சதவீதமும் சரிந்துகொண்டே வருகிறது. கட்சிகளின் மீதான நம்பிக்கையையும் மக்கள் இழந்து வருகிறார்கள். கட்சிகளின் கொள்கைகளை முன்வைத்து வாக்குகள் சேகரிப்பதற்கு மாறாக, வலுவான தலைவர்களை முன்நிறுத்தி வாக்கு சேகரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும், தேர்தல் அரசியலின் – பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் அடிப்படைகளாக இருப்பவை வாக்குரிமையும் கட்சி அரசியலும்தான் என்ற கருதுகோள் தவறானது என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. வாக்குரிமையை சமூகத்தின் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே வரையறுத்து வைத்தும் தேர்தல் அரசியல் செயல்படமுடியும். கட்சிகளே இல்லாமலும் தேர்தல் அரசியல் செயல்படமுடியும் என்பதை உணர்த்துகின்றன.
அவ்வாறெனில், தேர்தல் அரசியலின் – பிரதிநிதித்துவ அரசாங்கங்களின் அடிப்படைகள் எவை என்ற கேள்வி எழுகிறது.
பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் எங்கெல்லாம் அமைக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் பின்வரும் நான்கு முக்கிய அம்சங்கள் அவற்றின் அடிப்படையான அம்சங்களாகத் திகழ்கின்றன.
முதலாவதாக, குடிமக்களின் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் பெற்றவர்களுக்கே ஆட்சி புரியும் உரிமை இருக்கிறது என்ற கருதுகோளில் இருந்தே பிரதிநிதித்துவ அரசாங்கம் பிறந்தது என்பதை முந்தைய பகுதியில் கண்டோம். அவ்வாறு வழங்கப்பட்ட ஒப்புதலும் அங்கீகாரமும் வாழ்நாள் முழுமைக்குமான அங்கீகாரம் அன்று. தமது விருப்பத்திற்குரிய ஒரு பிரதிநிதியையோ, கட்சியையோ, அதன் தலைவரையோ வாழ்நாள் முழுக்க ஆள்வதற்கு அனுமதிக்கும் வகையில், ஒரேயொருமுறை மட்டுமே நடத்தப்படுவதல்ல தேர்தல். வழங்கப்பட்ட ஒப்புதலும் அங்கீகாரமும் மீண்டும் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவும் புதுப்பிக்கப்படவும் வேண்டும். எனவேதான், குறிப்பட்ட வருடங்களுக்கு ஒருமுறை, சீரான இடைவெளியில் மீண்டும் மீண்டும் தேர்தல்களை நடத்துவது பிரதிநிதித்துவ அரசாங்கங்களின் அடிப்படையான அம்சமாக அமைகிறது.
இரண்டாவதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், வாக்காளர்களின் விருப்பங்களுக்குக் கட்டுப்படாமல், கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், தம் விருப்பத்தின் பேரில் செயல்படுவதற்கான சுதந்திரம். இதன் காரணமாகவே, வேட்பாளர்களைத் திருப்பி அழைப்பதற்கான உரிமையையும், வேட்பாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட உரிமையையும் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் தம் ஆரம்ப காலங்களிலேயே நிராகரித்தன. தமது விருப்பங்களை நிறைவேற்றாத, தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத வேட்பாளர்களை அடுத்த தேர்தலில் நிராகரிக்கும் உரிமையை மட்டுமே வழங்கின.
மூன்றாவதாக, கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம். வேட்பாளர்களைத் திருப்பி அழைக்கும் சுதந்திரம், சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் சுதந்திரம் ஆகியவற்றுக்குப் பதிலீடாகவே கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் வழங்கின. தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் – அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்துக்களை குடிமக்கள் எப்போதும் எங்கும் முன்வைக்கவும் வெளிப்படுத்தவும் செய்யலாம். அவற்றை ஆட்சியிலிருப்போர் கவனத்தில் கொள்வார்கள் என்ற அளவிற்கே இவ்வுரிமை வரையறுக்கப்பட்டது. இவ்வுரிமை வேட்பாளர்களும் வாக்காளர்களும் சந்திக்கும் புள்ளியாகவும், ஒருவகையில், வாக்காளர்களின் இணக்கத்தை உருவாக்குவதாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.
இறுதியாக, விவாதங்களின் மூலம் முடிவெடுத்தல் என்ற அம்சம். பிரதிநிதித்துவ அரசாங்கங்களை தோற்றுவித்தவர்கள், தமது அரசமைப்பை பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை உடையவர்களும் ஒரு சபையில் ஒன்றாகக்கூடி, விவாதித்து, முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு முறையாகவே கருதினர். இவ்விடத்தில் முடிவின்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டே இருப்பதுதான் விவாதம் என்று பொருள் இல்லை. விவாதம் கருத்தொருமிப்பை நோக்கியது. ஒரு குறிப்பிட்ட சட்டம் அல்லது திட்டம் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக நடத்தப்படுவது. கருத்தொருமிப்பு பெரும்பான்மையின் அடிப்படையில் இறுதி செய்யப்படுவது.
இந்நான்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான பிரதிநிதித்துவ அரசமைப்பு, தனது இருநூறாண்டு கால வரலாற்றில் மூன்று பரிணாம வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. அம்மூன்று நிலைகளிலும் மேற்கண்ட நான்கு அடிப்படை அம்சங்களையும் வெவ்வேறு வடிவங்களில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
பிரதிநிதித்துவ அரசாங்கம் எடுத்த முதல் வடிவம் நாடாளுமன்றவாதம். இக்காலகட்டத்தில் வாக்குரிமை சொத்துரிமையால் வரையறுக்கப்பட்டிருந்தது. சமூகத்தில் பெரும்பான்மையானவர்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. கட்சிகளோ அவை முன்வைத்த கொள்கைத் திட்டங்களோ இருக்கவில்லை. சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் பெற்ற “பெரிய மனிதர்கள்” தமக்கிருந்த பரவலான தொடர்புகள், வரையறுக்கப்பட்டிருந்த வாக்காளிடர்களிடையே பெற்றிருந்த நன்மதிப்பு ஆகியவற்றின் காரணமாக, நம்பிக்கையின் பாற்பட்டே தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமது வாக்காளர்களின் “அறங்காவலர்” என்றே தம்மைக் கருதிக்கொண்டனர். ஆக, பிரதிநித்துவ அரசாங்கம் பெயர் பெற்ற பிரமுகர்களின் – மேட்டுக்குடியினரின் ஆட்சியாகவே தொடங்கியது.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள், நாடாளுமன்றங்களில் தமது தொகுதி வாக்காளர்களின் “அறங்காவலர்” என்ற வகையிலேயே செயல்பட்டனர். வாக்காளர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கும் தேவையே இவர்களுக்கு இருக்கவில்லை என்பதால் வாக்காளர்களின் விருப்பங்களின்பாற்பட்டு நடந்துகொள்ளும் நிர்ப்பந்தங்களும் இவர்களுக்கு இருக்கவில்லை. இக்காலகட்டத்தில், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் என்பது, குறிப்பிட்ட கோரிக்கைகள் சார்ந்த அமைப்புகளால் நாடாளுமன்றத்திற்கு மனுக்கள் அளிப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற வடிவங்களை எடுத்தன. விவாதங்கள் மூலம் முடிவெடுத்தல் என்பது நாடாளுமன்றங்களில் தமது சொந்த ‘மனசாட்சியின்’படியும், நம்பிக்கைகளின்படியும் வாக்களிப்பதாகவும், குறிப்பிட்ட பிரச்சினைகளில் ஒத்த கருத்துள்ள மற்ற பிரதிநிதிகளோடு குழுவாக இணைந்து செயலாற்றுவதாகவும் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் செயல்பாடுகள் இவ்வாறான நாடாளுமன்றவாதமாகவே இருந்து வந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி கால்நூற்றாண்டில் வாக்குரிமை படிப்படியாக விரிவாக்கப்பட்டதாலும், வெகுமக்களுக்கான கட்சிகள், சோஷலிசக் கட்சிகளின் எழுச்சியாலும் இந்நிலையில் மாற்றங்கள் நிகழத்தொடங்கின. பிரமுகர்களின் செல்வாக்கு முடிவுக்கு வந்து அரசியலில் கட்சிகள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கின. பிரதிநிதித்துவ அரசாங்கம் நாடாளுமன்றவாதம் என்ற வடிவத்திலிருந்து கட்சி ஜனநாயகம் என்ற வடிவத்திற்கு மாறியது.
சமூகத்தில் நிலவும் பிளவுகளைப் பிரதிபலிப்பதாக பிரதிநிதித்துவம் வெளிப்படத் தொடங்கியது. கட்சிகள் தாம் சார்ந்திருந்த சமூகக் குழுக்களின் நலன்களை முன்வைத்து வாக்குகளை சேகரித்தனர். வாக்காளர்களும் அவ்வாறே வாக்களிக்கத் தொடங்கினர். என்றாலும் கட்சிகளின் ஆட்சியில், கட்சியின் தொண்டர்களும் கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர். பிரமுகர்களின் இடத்தை இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர். வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கவேண்டும் என்று பிரதிநிதித்துவ ஆட்சிமுறையை தோற்றுவித்த புரட்சியாளர்களின் பார்வை இதிலும் தொடர்ந்தது.
வேட்பாளர்கள் தமது சொந்த மனசாட்சிப்படியும், நம்பிக்கைகளின் அடிப்படையிலும் செயல்படுவதற்குப் பதிலாக, கட்சியின் கட்டளைப்படி நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் உள்ளேயும் செயல்பட்டனர். வாக்காளர்களின் விருப்பங்கள் கோரிக்கைகளைக் காட்டிலும் கட்சியின் செயல்திட்டங்களும் ஆணைகளுமே பிரதிநிதிகளின் செயல்பாடுகளை தீர்மானித்தன. கருத்துக்களை வெளிப்படுத்துவற்கான சுதந்திரம் நாடாளுமன்றத்திற்குள் எதிர் கட்சிகளுடனான கருத்து மோதலாக வெளிப்படத் தொடங்கியது. விவாதங்களின் மூலம் முடிவெடுத்தல் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு பெரும்பான்மை அல்லது கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக மாறியது.
கட்சி ஜனநாயகம் கட்சிகளின் ஆதிக்கத்திலிருந்த ஆட்சியமைப்பாகவே இருந்தது.
மேலை நாடுகளில் 1970-கள் தொடங்கியும், இந்திய/தமிழக சூழலில் கடந்த இருபது ஆண்டுகளிலும் பெரும்பாலான கட்சிகள் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்கின. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவுவது வழக்கமாகிப் போனது. “பார்வையாளர்” ஜனநாயகம் என்ற புதிய போக்கு தலைதூக்கத் தொடங்கியது. ஊடகங்களைத் திறம்படக் கையாளத் தெரிந்த புதிய மேட்டுக்குடியினரின் ஆட்சியாக இந்த “பார்வையாளர்” ஜனநாயகம் உருவாகியிருக்கிறது.
கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்களுக்குப் பதிலாக, ஆற்றல் மிக்க தலைவர்களை முன்நிறுத்தும் போக்கு இப்புதிய முறையில் பரவலாகியுள்ளது. கட்சி தொண்டர்களுக்கும், கட்சிப் பிரமுகர்களுக்கும் இருந்த இடத்தை ஊடகச் செல்வாக்கு மிக்க புதிய பிரமுகர்கள் நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிப்பதற்கு மாறாக, குறிப்பிட்ட தேர்தலில் தலைதூக்கி நிற்கும் ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது சில முக்கிய பிரச்சினைகளே தேர்தலின் முடிவுகளை தீர்மானிப்பவையாக மாறிக்கொண்டிருக்கின்றன.
வேட்பாளர்கள் கொள்கைகளையோ திட்டங்களையோ முன்னிறுத்துவதற்குப் பதிலாக, எந்த விஷயத்தை முன்னிலைப்படுத்தினால், வாக்காளர்களைப் பிளவுபடுத்தி அதிக வாக்குகளை சேகரிக்கமுடியும் என்ற நோக்கில் அணுகத் துவங்கியிருக்கிறார்கள். தம்மைப் பற்றியும் தமது கட்சியைப் பற்றியும் தமது தலைவரைப் பற்றியும் ஊடகங்கள் வாயிலாக சில குறிப்பிட்ட பிம்பங்களை முன்னிறுத்துவதையே பிரதானப்படுத்துகிறார்கள். வாக்காளர்கள் தமது விருப்பங்கள் சார்ந்து வாக்களிப்பதற்குப் பதிலாக, பிரச்சினைகளுக்கு எதிர்வினையாற்றும் முகமாக வாக்களிக்கும் போக்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. வாக்காளர்கள் பார்வையாளர்கள் போன்று எதிர்வினையாற்றுபவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
கட்சிக்குள் நடைபெறும் விவாதங்களாக இருந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம், கருத்துக் கணிப்புகளாக உருமாற்றம் கண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்ட வணிக நோக்கங்களைக் கொண்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இத்தகைய கருத்துக் கணிப்புகள் அரசியல் ஆர்வம் குறைந்துள்ள வாக்காளர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பவையாகவும், அவர்களுடைய கருத்துக்களின் பரப்பைக் குறைப்பவையாகவும் உள்ளன.
இறுதியாக, அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்தும், நேரடி அரசியலில் ஆர்வம் குறைந்தும் போயுள்ள பெருவாரியான வாக்காளர்கள், அரசியல் விழிப்புணர்வு கூடியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக பெறும் வாய்ப்புள்ளவர்களாக இருப்பதால் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குபவர்களாகவும் தமக்குள்ளாக விவாதிப்பவர்களாகவும் உருவெடுத்துள்ளார்கள்.
தமிழக இந்திய சூழலில் இந்த மாற்றங்களை விரிவாகவும் தனிக் கவனம் கொடுத்தும் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.
நாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை, ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்குமான இடைவெளி இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கும் “பார்வையாளர்” ஜனநாயகத்தில் இருந்து விடுபட்டு, தற்காலத்திற்கு உகந்த முறையில் குடவோலை முறைக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியுமா என்பதே.
(தொடரும்… )
நன்றி: விகடன்