வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக முதலில் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லதெனப்படுகிறது. கி. ரா. வின் கதை சொல்லி இப்பொழுது ப்ரேம் – ரமேஷ் கைகளுக்குப் போயிருக்கிறது. ‘கண் தெரியவில்லை, ஜாடை புரியவில்லை’ என்று சொல்லி கி. ரா. ரிடையர்மென்ட் வாங்கிக் கொண்டிருக்கிறார். (ஆசிரியர் குழுவில் க. பஞ்சாங்கம் ஒப்புக்கு, தங்கர்பச்சான் துட்டுக்கு என்று சொன்னால் ஆள் வைத்து அடிக்கவும் வாய்ப்புண்டு. தவிர்த்துவிடுகிறேன்).
ப்ரேம் – ரமேஷ் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே தமிழ் அறிவுச் சூழலில் நன்கு அறியப்பட்டவர்கள் என்றாலும், “ப்ரேம் பேசாமல் ஒரு இலக்கியக் கூட்டமா?” என்ற அளவிற்கு நிலைமை முன்னேறியிருப்பது சமீக காலங்களில்தான்.
“பின்நவீனத்துவத்தை வெறும் கோட்பாட்டு அறிமுகமாக இல்லாமல் முதன் முறையாகப் படைப்புகளுடாக நிகழ்த்திக் காட்டியவர்கள். இவர்களுடைய தத்துவக் கட்டுரைகள் தமிழில் பல புதிய சிந்தனைத் தளங்களை உருவாக்கிக் கொடுத்திருப்பதுடன், அவற்றினூடாக ஒரு புதிய அறவியல், அரசியல், அழகியல் சாத்தியப்பாடுகளை தமிழ்ச் சமூகத்தில் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. தமிழில் நவீனத்துவத்திற்குப் பின்னான காவிங்களை முன்னுதாரணமற்ற வகையில் பேரளவில் எழுதிய இவர்களின் தாக்கம் இல்லாமல் இலக்கியம், தத்துவம் இவற்றில் மாற்றுச் சிந்தனை எதுவும் இல்லை என்னும் அளவுக்கு பாதிப்பை நிகழ்த்தியவர்கள்”, என்று தமது தொகுப்பின் (இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும்) பின்னட்டையில் போட்டுக் கொண்டவர்கள் என்று இன்னமும் இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிராத துர்பாக்கியசாலிகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.
இவர்களுடைய மொத்த எழுத்துக்களையும் எடுத்துக் கொண்டு இந்தத் துணிபுகளுக்கு அவை தகுதியானவைதானா என்று அலசுவது இங்கு சாத்தியமில்லை என்றாலும், இதழின் சரிபாதி பக்கங்களை இவர்களது ‘சிந்தனைகளே’ அடைத்துக் கொண்டிருப்பதால் அவற்றுக்குக் கொஞ்சம் அதிகக் கவனம் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன்.
முதலில், உம்பர்ட்டோ ஈக்கோ – வின் நாவல்களை முன் வைத்து பின்நவீனத்துவ கதை சொல்லல் குறித்து இவர்கள் சொல்பவை.
ஈக்கோவின் முதல் நாவலான Name of the Rose பற்றிய குறிப்புகளில், “எழுத்து எத்தனை முறை எழுதப்பட்டாலும் எழுத்தைத்தான் எழுதிச் செல்கிறதே தவிர உலகை அல்ல. எழுத்தின் வெளிக்குள் எவ்வளவு திணித்தாலும் எழுத்துக்குப் புறம்பான எதையும் நுழைத்துவிட முடிவதில்லை.
இலக்கிய ஆக்க முறையில் ‘பாவனை எழுத்து’ அல்லது ‘நிகழ்த்துதல் எழுத்து’ என்பது முக்கியமானது. அதாவது இங்கு உண்மை என்று எதுவும் கூறப்படாமல் – கூறுதல் முறை மட்டுமே – ‘இது இப்படியாக’ … என்பது போல் எழுதிச் செல்லும் முறை.
மத்தியகால ஐரோப்பிய வரலாறு, கலாச்சாரம் பற்றிய தகவல்களை ஆய்வுப்பூர்வமாக பல்வேறு பிரதிகளிலிருந்து தொகுத்து ஒரு முன்பிரதித் தொகுப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.
மேற்குலகின் – குறிப்பாக கிறிஸ்தவ – இறையியல் பற்றியும், தத்துவ முரட்டுவாதம் பற்றியும் பல கேள்விகளை விளையாட்டுத்தனமாக இந்நாவல் எழுப்பி சந்தேகப்படுதலின் சாத்தியங்களை அதிகமாக்கிவிடுகிறது. இந்தப் புனித மறுப்பு கதை கூறல் எல்லாப் புனிதப் பிரதிகளின் முற்றொருமையையும் கலைத்துப்போட்டு அவற்றின் ‘கதைப்பாட்டு’ சாத்தியங்களை அதிகமாக்கிவிடக்கூடியது.”
இரண்டாவது நாவலான Foucault’s Pendulum பற்றிய குறிப்புகளில், “புனைவு மற்றும் உண்மை என்பவை தனித்தனியே இல்லை எனவும் புனையப்படுபவையே எல்லாம் என்பதையும் இந்நாவல் அடையாளப்படுத்தும்”, என்று எழுதுகிறார்கள்.
இங்கு பிரித்து – தொகுத்துத் தந்திருப்பவற்றை மேலோட்டமாக ஒரு வாசிப்பு தந்தாலே அடிப்படையான ஒரு முரண் எழுவதைக் காண முடியும்.
எழுத்து, புனைவு, புற உலகை – உண்மையைச் சுட்டுவதில்லை என்று ஒரு பக்கமும் ஈக்கோவின் நாவல் (Name of the Rose) மத்தியகால ஐரோப்பாவின் வரலாறு, கலாச்சாரம், தத்துவ நம்பிக்கைகள் பற்றிய ‘தகவல்களை’ ‘ஆய்வுப்பூர்வமாக’ தொகுத்து வைக்கின்றன – அதாவது ஒரு கடந்தகாலப் புற உலகை ‘அப்படியே’ நம்முன் உருவாக்கி வைக்கின்றன என்று இன்னொரு பக்கமும் சொல்வது பிடிபடும்.
இங்கு உதைக்கிற சொற்கள் ‘தகவல்கள்’ மற்றும் ‘ஆய்வுப்பூர்வமாக’ இரண்டு மட்டும்தான். இந்த இரண்டு சொற்களுக்கும் வழக்கில் உள்ள அர்த்தங்களைப் பற்றிய (தகவல்கள் என்பவை புறவயமாகக் கண்டறியப்பட்டு சேகரிக்கப்படுபவை, அதனால் மறுக்கப்படமுடியாதவை; ஆய்வு புறவயமாக, ஒரு புறவயமான முறையியலின் அடிப்படையில் செய்யப்படுவது, அதனால் மறுக்கப்படமுடியாதது) கேள்விகளே இல்லாமல் ஆளப்பட்டிருப்பதே பிரச்சினை. தகவல்களும், ஆய்வுகளும் மொழியில், மொழியால் செய்யப்படுவதும் அவை ஒரு கதையாக (கதை சொல்லுதல் என்றால் பொய் சொல்லுதல்; கதை விடுகிறான், கதை சொல்கிறான் என்றுள்ள வழக்குச் சொற்களை நினைத்துப் பார்க்க) சொல்லப்படுவதும் அன்றாட வாழ்விலும்கூட நாம் காணும் ‘உண்மை’.
இந்த ஒரு சறுக்கல் தொடர்ந்து இவர்களுடைய பார்வைகளைப் பற்றிய கேள்விகள் பலவற்றை எழுப்பிவிடுகிறது. ‘உண்மை’, மனித அர்த்தப்படுத்தல்களிலிருந்து விலகிய தனித்த அர்த்தமுள்ள ஒரு புற உலகு என்று எதுவுமே இல்லை என்பதெல்லாம் உண்மைதான். மனித வாழ்க்கையும், புற உலகு பற்றிய பல்வேறு பார்வைகளும் எல்லாமும் புனைவுகள்தான். ஆனால், இதிலிருந்து எழும், இந்தப் புனைவுகளுக்கும் இலக்கியப் புனைவுகளுக்கும் என்ன உறவு என்ற கேள்விக்கு இவர்கள் எந்தப் பதிலும் தருவதில்லை. இதை இவர்கள் எந்த இடத்திலும் எதிர்கொண்டதாகவும் தெரியவில்லை.
இந்தக் கேள்வியை இவர்கள் எதிர்கொள்ளாததன் விளைவாக, மிகவும் நுட்பமான ஒரு அழகியல்வாதத்திற்குள் விழுந்துவிடுவதைக் காட்டமுடியும். ஈக்கோவின் நாவல்கள் ‘இலக்கியத் தரமானவை’. ‘தீவிர இலக்கியப் பயிற்சி’ இல்லாதவர்களும் விரும்பிப் படிக்கத் தக்கவையாக அமைந்தவை என்றெல்லாம் பேசுவதே வேடிக்கையான ஒரு சான்று.
ஈக்கோவின் நாவல்கள் துப்பறியும் நாவல் வடிவத்தில் எழுதப்பட்டதே ‘இலக்கியத் தரத்தை’க் கேலி செய்த ஒரு நிகழ்த்துதல். பின்நவீனத்துவ சிந்தனைகளின் அடிப்படையான முற்கோள்களில் ஒன்று ‘தீவிர இலக்கியத்திற்கும்’ ‘வணிக இலக்கியத்திற்கும்’ இடையில் உள்ளதாகச் சொல்லப்பட்ட மதிப்பு வித்தியாசத்தைக் கேலி செய்வதும், ‘தீவிர இலக்கியத்தை’ அதன் பீடத்திலிருந்து இறக்கி வைப்பதும்தான் என்பது ‘தமிழில் முதன் முதலாக பின்நவீனத்துவ படைப்புகளை நிகழ்த்திக் காட்டியவர்களுக்கு’ எப்படி மறந்து போனது!
எப்படி மறந்து போனது என்பதைப் பற்றிய விசாரணையை இன்னொரு சந்தர்ப்பத்திற்கு வைத்துக்கொண்டு இப்போதைக்கு இது selective amnesia – வாக இருக்க வாய்ப்புண்டு என்று எடுத்துக் கொள்வோம். ஆனால், இந்த selective amnesia இவர்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் போலிருக்கிறது.
“ஸீரோ டிகிரி” – க்கு விமர்சனத்தை எழுதும்போது ரமேஷ் பிரேதனுக்கு இது அடிக்கடி வந்து விட்டிருக்கிறது போலிருக்கிறது. லால் சலாம் அத்தியாயத்தில் முனியாண்டி, தமிழ்ச் செல்வன் என்கிற தீவிரவாதி இருவர் மீதும் முனியாண்டியின் பாங்க் கொள்ளை பற்றிய நாவல் தொடர்பான விசாரணை நடக்கும். ரமேஷ் பிரேதன் இதை “தனித் தமிழ்நாடு கேட்கும் ஒரு தீவிரவாதியை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும்போது வேறொரு விசாரணைக்காக அங்கு வரும் “சூர்யா” என்று எழுதுகிறார். இதைவிட பெரிய வேடிக்கையான s.a., “தமிழகத்தின் மூன்றாம் அரசியலையும் ஏறக்குறைய அதன் இணை அமைவாக இயங்கும் சிறு பத்திரிகை கலாச்சாரச் சூழலையும் கிண்டலுக்கும் கேலிக்கும் உட்படுத்தும் சாரு நிவேதிதா” என்று எழுதுவதுதான். Millenium Joke! Thanks to s. a. !
ஏற்கனவே சொல்லப்பட்டு வந்த கதைகளை (புனைவுகளை) கதை சொல்லும் முறைகளை, ஒரு முறை என்ற அளவில் கேலியும் கிண்டலுமாகத் திரும்பச் சொல்வது, அதனூடாகக் கதை, கதைக் கரு, கதாபாத்திரம், (யதார்த்தவாத) எழுத்து, புனைவு இவற்றுக்கு பழக்க அடிமையாகிக் கிடக்கும் வாசகனின் கவனத்தை சற்று விமர்சன நோக்கில் திருப்புவது பின்நவீனத்துவ கதை சொல்லல் முறைகளில் ஒன்று என்பதே அடியேனின் எளிய அறிவுக்கு எட்டிய புரிதல். ஈக்கோவின் நாவல்களும் இந்த வகைக்குள் வருபவையே.
ஆனால், இதழில் ப்ரேம் – ரமேஷ் எழுதியுள்ள “ஆதியின தேவதைகளின் தலைமறைவுக் காலம்” என்ற குறுநாவலில் மருந்துக்கூட ஒரு எள்ளல் தொனி இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்ட புனைவுகளும் எதுவும் இல்லை. வலிந்து வரிந்து ஒரு ‘செவ்வியல் தரமான’ ‘படைப்பை’த் தரும் முயற்சியே இருக்கிறது.
இதழில் உள்ள “நதிக்கரையில்” என்கிற ஜெயமோகனின் குறுநாவலிலும் இதே முயற்சிகளும் (இன்னும் சிலவும்) இருந்தாலும் ஏற்கனவே சொல்லப்பட்ட ஒரு புனைவைத் திரும்பச் சொல்லும் முயற்சி என்ற அளவிலாவது குறிப்பிடத்தக்கது. ஜெயமோகனின் குறுநாவலில் உள்ள இன்னொரு முக்கிய பிரச்சினை அவரது முயற்சி காவியத்தை ‘மறுவாசிப்பு’ (!) செய்வதன் ஊடாக நாவலை எழுதுவது.
இதிலிருந்து கி. ரா. வின் நாட்குறிப்புகளில் அவர் சொல்லும் குட்டிக்கதைகள் பெரிதும் மாறுபட்டவை. எனது சாய்வில் வரவேற்கத் தக்கவை. நாட்டுப்புற கதைகளைச் சொல்லி அதைத் தன் வாழ்க்கையோடு (எனும் புனைவோடு) இடம் மாற்றிப் போட்டுப் பார்ப்பது. ப்ரேம் – ரமேஷ் போல பின்நவீனத்துவம் போன்ற கொம்புகள் எதுவும் தெரியாமலேயே மெல்லிய எள்ளல் தொனியோடு ஒரு கதையைத் திரும்பச் சொல்லிப் பார்ப்பது.
கி. ரா. வுக்கு கண் தெரியாமல் போனாலும் ஜாடை புரியாமல் போனாலும் கதை சொல்லத் தெரிந்திருக்கிறது. ஏராளமான கதைகள் அவர் வசம் இருக்கும். ப்ரேம் – ரமேஷ் அவரிடமிருந்து உருப்படியாக ஒரு கதையையாவது கேட்டுத் தெரிந்து கொள்வது மிகுந்த புத்திசாலித்தனமான ஒரே காரியமாக இருக்கும்.
குறிப்பு:
ஆறாம் திணை மின் இதழில் சிற்றிதழ் பக்கத்தில் கதை சொல்லி – 5 -ஆம் இதழுக்கான விமர்சனமாக 99′ -ல் எழுதப்பட்டது. ஒரே ஒரு இதழோடு நின்று போன பெருமாள் முருகனின் வேறு வேறு (ஏப்ரல் 2000) இதழில் வெளியானது. இதற்கு ‘மறுப்பு’ என்ற பேரில் ரமேஷ் ப்ரேதன் எழுதி அனுப்பிய மிகக் கேவலமான தனிநபர் தாக்குதலை பெருமாள் முருகன் வெளியிட மறுத்து எனக்கு ஒரு பிரதியை அனுப்பி வைத்தார். தமிழில் தாம் இருவர் மட்டுமே ‘சிந்தனையாளர்கள்’, ‘தத்துவாதிகள்’ என்று வெட்கமின்றி சுயதம்பட்டமடித்துக் கொண்டிருக்கும் இவர்களது இலட்சணம் அதை வெளியிட்டால் கிழிந்து நாறிவிடும்.
அதற்கான தேவையும் இப்போது இல்லை என்று தோன்றுகிறது. சமீபத்திய நிகழ்வு ஒன்றில் இதே ‘பெண்ணிய சிந்தனையாளர்’ “என் பொண்டாட்டியை இப்படிச் சொல்லியிருந்தால் நான்கு தலைகள் உருண்டிருக்கும்”
என்று ‘பண்பட’ பேசியதும் இன்னும் இவர்களது பல்வேறு நடவடிக்கைகளும் (காலச்சுவடு, உயிர்மை, ஜெயமோகன் என்று எந்தவித பாரபட்சமுமின்றி யாரிடமும் சந்தர்ப்பத்திற்கு தகுந்தார்போல கூட்டுவைத்துக் கொள்ளும் இவர்களது ‘புதிய அறவியலை’ச் சொல்கிறேன்) இவர்களது போலித்தனங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.
அது கிடக்கட்டும். இங்கு தொட்டுச் சென்றிருக்கும் சில விஷயங்களை வாசகர்கள் இதற்கு முன் பதிவிட்டுள்ள ‘தலைப்பும் வாலும்’ கட்டுரையோடும் அடுத்து பதிவிடவுள்ள கட்டுரையோடும் இணைத்து வாசிக்க வேண்டுகிறேன்.
நன்றி.