ரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்

புத்தகங்கள் புத்தகங்களோடு பேசுகின்றன என்று ஒரு கருத்தாக்கம் உண்டு. தேர்ந்த வாசகர்கள் அந்தப் பரிபாஷையை சட்டென்று கண்டுகொள்வார்கள். ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் மற்றொரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களை எப்படி கையாண்டிருக்கிறது என்ற நுட்பத்தை வாசிக்கும் போக்கிலேயே உணர்ந்துகொள்வார்கள். இந்த நுட்பத்தை ஒரு விளையாட்டாக கையாளும் எழுத்தாளர்கள் நல்ல படைப்புகளைத் தருபவர்களாக இருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் மற்ற புத்தகங்களை நகல் எடுப்பவர்களாக இருக்கிறார்கள்.

திரைப்படக் கலையிலும் இந்த விளையாட்டு உண்டு. பல திரைப்படங்கள் தமக்கு முந்தைய படங்களோடு நுட்பமாகவும் சில சமயங்களில் வெளிப்படையாகவும் பேசுவதை தேர்ந்த சினிமா பார்வையாளர்கள் உடனடியாக கண்டுகொள்வார்கள்.

முந்தைய படங்கள் விட்ட இடத்திலிருந்து தொடங்கும் அல்லது முந்தைய படங்கள் காட்டாத விஷயங்களை காட்டும் படங்கள் நல்ல திரைப்படங்களாக உருவாகின்றன. முந்தைய படங்கள் தொட்ட இடத்திலேயே தங்கிவிடும் படங்கள் மோசமான திரைப்படங்களாக உருவாகின்றன. சராசரியான சினிமா பார்வையாளர்களுக்கும் இது தெரியும்.

முந்தைய படங்கள் காட்டத் தவறிய விஷயங்களை காட்டத் துணிந்த, அண்மைக்காலத்தில் வெளியான நல்ல படங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக, “காதல்”, “பரியேறும் பெருமாள்” போன்றவற்றைக் குறிப்பிடலாம். தமிழ் சினிமா உலகின் சலிக்காத கருப்பொருளான காதலுக்குத் தடையாக இருக்கும் சாதி வெறியை வெளிப்படையாக சுட்டிக்காட்டிய படங்கள் இவை.

முந்தைய படங்கள் தொட்ட இடத்திலேயே தேங்கிவிட்ட படங்களுக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைத் தரலாம். இவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவும், மற்ற படங்களை “உல்டா” செய்த படங்களாகவுமே இருப்பதையும் உடனே கண்டுகொள்ளலாம். லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட பொழுதுபோக்குப் படங்கள் இவை. கதாநாயக பிம்பத்தை ஊதிப் பெருக்கி காட்டுவதையே தொழிலாக கொண்டவை.

சில எடுத்துக்காட்டுகளை பார்ப்போம். பி. யூ சின்னப்பா கதாநாயகனாக நடித்து 1940-இல் வெளியான படமான “உத்தம புத்திரன்”, 1939 இல் ஹாலிவுட்டில் வெளியான “The Man in the Iron Mask” என்ற படத்தின் சுத்தமான காப்பி. இது 1958 இல் சிவாஜி கணேசனின் நடிப்பில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டது. 1944 இல் வெளியான “ஜகதலப் பிரதாபன்” படத்தில், ஒரு பாடல் காட்சியில் பி. யூ. சின்னப்பாவின் பல உருவங்கள் பல இசைக் கருவிகளை வாசிக்கும் காட்சி, “திருவிளையாடல்” படத்தில் “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலில் “ரீமேக்” செய்யப்பட்டது.

1964 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்து வெளியான “நவராத்திரி”, 1949 ஆம் ஆண்டு வெளியான பிரிட்டிஷ் திரைப்படமான “Kind Hearts and Coronets” என்ற திரைப்படத்தின் உல்டா. அப்படத்தில் கதாநாயகன் Alec Guinness ஒன்பது வேடங்களில் நடித்திருப்பார். 1965 ஆம் ஆண்டு எம். ஜி. ஆரின் நடிப்பில் உருவான “கலங்கரை விளக்கம்” ஹிட்ச்காக்கின் “Vertigo” திரைப்படத்தின் உல்டா. Vertigo படத்தை பார்த்துவிட்டு “கலங்கரை விளக்கம்” படத்தை பார்ப்பவர்களுக்கு தலை சுற்றும் என்பது நிச்சயம்.

கமலஹாசன் நடித்த “நாயகன்” திரைப்படம் “God Father”-ன் உல்டா என்பதும், “அவ்வை சண்முகி” “Mrs. Doutbfire”-ன் உல்டா என்பதும், ரஜினி நடித்த “எந்திரன்” பல ஹாலிவுட் படங்களை கலந்து கட்டி உருவாக்கிய உல்டா படம் என்பதும் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். அண்மையில், வெளியான “விக்ரம் வேதா” 1962-இல் வெளியான “Harakiri” என்ற ஜப்பானிய படத்தின் உல்டா என்பது சிலருக்காவது தெரிந்திருக்கும். பொழுதுபோக்கையும் லாபத்தையும் மட்டுமே இலக்காக கொண்டு இயங்கும் திரையுலகில் இவை சாதாரண விஷயங்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

மேலே குறிப்பிட்ட உல்டா விஷயங்களை “தழுவல்” என்று சிலர் கவுரவமாக அழைப்பது உண்டு. ஹாலிவுட்டின் லாபகரமான பொழுதுபோக்கு சினிமாவை தழுவிக்கொள்வதால் அது தழுவல்.

ஆனால், தமிழ் படங்களையே உல்டா செய்து கமுக்கமாக வெளியிடும் சில சாமர்த்தியசாலிகள் இருக்கிறார்கள். “தில்லானா மோகனாம்பாள்” படத்தின் ரீமேக்காக வெளியான “கரகாட்டக்காரன்” வகைப் படங்கள் இந்த ரகத்தில் சேராது. அவை மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ ரீமேக் என்று ஒப்புக்கொண்டவை. “கரகாட்டக்காரன்” படத்தில் வரும் காரை பழைய காராகத்தான் காட்டுவார்கள்.  

ஆனால், ஒரே கதையை அங்கே இங்கே டிங்கரிங் செய்து, புத்தம் புதிய கதை என்ற போர்வையில் வெளியிடுவது ஒரு தனிச்சிறப்பான உல்டா வகை. அதற்குத் தனித்திறமை வேண்டும்.

அந்த தனித்திறமை மிளிரும் திரைப்படம்தான் “அசுரன்”. 1995 இல் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான “பாட்சா” படத்தின் புத்தம் புதிய காப்பிதான் “அசுரன்”.

“பாட்சா”வில் இடைவேளை வரை எந்தவிதமான வம்புதும்பிற்கும் போகாத, பாசத்திற்கு கட்டுப்பட்ட, குடும்பத்தினரின் முன்னேற்றம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்ட, அதற்காக எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொள்ளும் கதாநாயக பாத்திரம். இடைவேளையின் போதுதான் அந்த பாத்திரம் மும்பையில் ஒரு மிகப் பெரிய தாதாவாக உலா வந்த விஷயம் வெளிப்படும். அதன் பிறகு, பாட்சா, பழைய தாதா சாகசங்களை மீண்டும் செய்து காட்டுவார். வில்லனோடு மோதி மரண மாஸ் காட்டுவார்.

“அசுரன்” படத்தின் கதையும் அதே தான். இடைவேளை வரை எந்தவிதமான வம்புதும்பிற்கும் போகாத, பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எல்லாவிதமான அவமானங்களையும் தாங்கிக் கொள்கிற தகப்பன் பாத்திரம். இடைவேளையின் போது, அந்த சாதுவான கதாநாயகன், இளவயதில் 8 கொலைகளை செய்த பெரிய சாகசக்காரன் என்பது காட்டப்படுகிறது. பிறகு எஞ்சியிருக்கும் தன் ஒரே மகனை காப்பாற்ற, ஒற்றை நாடி உடம்பை வைத்துக்கொண்டு, அடியாட்கள் கூட்டத்தை அடித்து துவம்சம் செய்கிறது. மரண மாஸ் காட்டுகிறது.

மரண மாஸ் படங்களுக்கே உரிய ஃபார்முலாவை எப்படி உல்டா செய்தால் என்ன? யார் உல்டா செய்தால் என்ன? எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு. யாரும் எந்த கேள்வியும் கேட்கப்போவதும் இல்லை. படம் பார்த்தோமோ, பாப்கார்ன் சாப்பிட்டோமா, விசில் அடித்தோமா என்று வந்துவிடவேண்டியதுதான்.

ஆனால், ஒரு மரண மாஸ் உல்டா படத்திற்கு முற்போக்கு முலாம் பூசும்போதுதான் பிரச்சினை எழுகிறது. தலித் மக்களின் பிரச்சினையை அட்டகாசமாக சித்தரித்திருத்திருக்கும் படம் என்று ஆரவாரம் செய்யும்போதுதான் அருவருக்கத் தொடங்குகிறது.

“பாட்சா” படக் கதைக்கருவை, திருநெல்வேலி கிராமம் ஒன்றில் நிலவும் சாதிப் பிரச்சினையின் பின்னணியில் உல்டா செய்திருந்தாலும், எடுத்துக்கொண்ட சாதிப் பிரச்சினையை சரியாக வெளிப்படுத்துவதில் அக்கறை காட்டாமல், கதாநாயகனின் பிம்பத்தை ஊதிப் பெருக்கி காட்டுவதே படத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

எந்த கிராமத்தில், எந்தக் காலத்தில், ஒரு தலித் இளைஞன், தன் முறைப்பெண்ணை அவமானப்படுத்திய ஊர் ஆதிக்க சாதி இளைஞர்களை, தனியாளாக ஊருக்குள் புகுந்து அடித்து துவைத்து, அவர்களை மரத்தில் கட்டிவைக்கும் அதிசயம் நடந்திருக்கிறது என்ற கேள்வியோடு படத்தில் சாதிப் பிரச்சினையின் நம்பகத்தன்மையை உரசிப் பார்க்கலாம்.

விட்டு வைத்திருப்பார்களா அந்த இளைஞனை? அங்கேயே வெட்டி கொன்று போடாமல் விட்டிருப்பார்களா? இதுவரை வெளிவந்த எந்த சினிமாவும் காட்டியிருக்காத ஒரு காட்சியை, இந்தியத் துணைக்கண்டத்திலேயே இதுவரை எந்த ஊரிலும் நடந்திருக்காத அட்டகாசமான கற்பனை சாகசத்தை அனாயசமாகவும் அசட்டுத்தனமாகவும் சித்திரித்திருப்பதால்தான் இந்தப் படத்திற்கு முற்போக்கு பட்டமா?

ஆனால், படத்தின் கதாநாயகன், ஆதிக்க சாதி இளைஞர்களை ஊருக்குள் புகுந்து அடித்து, மரத்தில் கட்டி வைக்கிறான். பண்ணையாரோ, கொஞ்சம் கோபத்தை காட்டி, “எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு” என்று கடிந்துகொண்டு, அவர்களின் கட்டை அவிழ்க்க சொல்லிவிட்டு தன் பாட்டிற்கு போய்விடுகிறான். கதாநாயகன், முறைப்பெண்ணை மீண்டும் செருப்பை அணியச் செய்து அவரை ஊரில் வலம் வரச் செய்கிறான். ஊர்காரர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஆதிக்க சாதியினரின் சாதி ஆணவம் எந்த அளவிற்கு இந்தக் காட்சியில் சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கிறது? சாதி ஆணவத்தால் அவமானப்படும் தலித்துகளின் ஆன்ம வலி எந்த அளவிற்கு இந்தப் படத்தில் சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கிறது? எள்ளவிற்கும் இல்லை.

செருப்பை அணிந்ததால் அவமானப்படுத்தப்படும் பெண்ணின் ஆன்ம வலிக்கு படத்தில் துளியும் இடம் இல்லை. அவமானப்படுத்தியவர்களின் சாதி ஆணவம் குறித்த ஆழ்ந்த சித்தரிப்பிற்கும் படத்தில் இடம் இல்லை. அவமானப்படுத்தியவர்களை அடித்துத் துவைக்கும் கதாநாயக பிம்பமே திரையையும் கதையும் ஆக்கிரமித்துக்கொள்கிறது.

தன் மகனை காவல் நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்காக, ஊர்காரர்கள் ஒவ்வொருவர் காலிலும் கதாநாயகன் விழும் காட்சியில், ஊரே சோக மழையில் நனைந்துவிடுகிறது. திரையரங்கிலும் சோக இசை காதுகளை அடைக்கிறது. அந்த சோக கீதத்தில் ஆதிக்க சாதி ஆணவம் மறைந்து மங்கி, தந்தை பாசத்தின் உச்சமும், கதாநாயகனின் நடிப்புத் திறனும் திரையை ஆக்கிரமித்துக்கொள்கிறது.

காணாமல் போனதாக சொல்லப்படும் தன் மூத்த மகனை தேடிக் கண்டுபிடிக்க காவல் நிலையத்திற்கு கதாநாயகன் செல்லும்போது, “முற்போக்கு” வழக்குரைஞர் கதைக்குள் தலைகாட்டவே இல்லை. கதாநாயகனின் “ஃப்ளாஷ் பேக்”கிற்கு பிறகுதான் அவர் கதைக்குள் வரவேண்டும் என்று கதையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால், ஒன்றும் அறியாத அப்பாவியாக கதாநாயகன் காவல் துறை அதிகாரியிடம் மன்றாடவேண்டியதாகிவிடுகிறது.

கதாநாயகனின் மூத்த மகனை கொல்பவனும், இளைய மகனை கொல்வதற்காக அடியாளாக அமர்த்தப்படுபவனும் ஒரு தலித் இளைஞனாகவே இருக்கிறான். இளைய மகனை பிடிக்க முடியாமல், வில்லனுக்கு விளக்கம் சொல்லும் ஒரு காட்சியில் இது சொல்லப்படுகிறது. ஆதிக்க சாதி ஊர்காரர்களில் அடியாட்களே இல்லாத பஞ்சத்தின் காரணமாக இந்த “முற்போக்கு” அம்சமும் கதையில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

கதாநாயகன் ஃப்ளாஷ் பேக்கில் தன் கதையை சொன்ன பிறகு பார்வையாளர்களுக்கு அவனுடைய வீர தீரமும் 8 பேரை வீட்டிற்குள் புகுந்து கொன்றவன் என்பதும் தெரியவருகிறது. அந்த கொலைகளுக்காக போலீசில் சரணடைந்து தண்டனை பெற்று வந்தவன் என்பதும் தெரியவருகிறது. அவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த வழக்குரைஞருக்கு இந்த உண்மை தெரியும். வழக்குரைஞரை ஊர்காரர்களுக்கும் தெரியும், போலீஸ்காரர்களுக்கும் தெரியும். ஆனால், கதாநாயகனின் பின்புலம் ஊர்காரர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் கடைசிவரை தெரியாது. இத்தனைக்கும் ஃப்ளாஷ் பேக் கதை திருநெல்வேலிக்குள் தான் நடக்கிறது. “பாட்சா” படத்தில் வருவதைப் போல ஃப்ளாஷ் பேக் கதை மும்பையில் நடந்திருக்கவில்லை. 8 கொலைகளை செய்து, சிறைக்கும் சென்று வந்தவனைப் பற்றி திருநெல்வேலி ஜில்லாவில் யாருக்குமே தெரியாமல் போனது கதையின் சிறப்பம்சம்.

கதையின் ஃப்ளாஷ் பேக் பகுதியிலும் சரி, கதை நிகழும் காலத்திலும் சரி, ஊர்காரர்களுக்கும் கதாநாயகனுக்கும் இடையில் நடக்கும் மோதலை, “இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான மோதலை ஊர் பிரச்சினையாக மாற்றாதே” என்று இரண்டு வில்லன்களுக்கும் ஊர்காரர்கள் சொல்கிறார்கள். அதாவது, இந்த மோதல், ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பண்ணையார்/பெரும் பணக்காரருக்கும், தலித் சாதியை சேர்ந்த ஒரு சாதாரண இளைஞன்/விவசாயிக்கும் நடக்கும் வர்க்க மோதலாகவே சொல்லப்படுகிறது. பிரச்சினையின் மையப் புள்ளி சாதி அல்ல, வர்க்கப் பிரச்சினைதான் என்று சூசகமாக சொல்லப்படுகிறது. சாதிப் பிரச்சினையை பின்னுக்குத் தள்ளி, அதை வர்க்கப் பிரச்சினையாக காட்டுவதால்தான் கம்யூனிஸ்டுகள் பலரும் இப்படத்தை கொண்டாடுகிறார்கள். ஆதிக்க சாதியினரின் ஆணவத்தை நேரடியாக சுட்டிக்காட்டி, தலித் மக்கள் அனுபவிக்கும் வலியை தெளிவாக காட்டிய “பரியேறும் பெருமாள்” படம் குறித்து இவர்கள் காத்த மௌனம் இங்கே எட்டிப் பார்க்கிறது.

இறுதியாக, தமிழ்நாட்டின் எந்தக் கிராமத்தில், எந்தக் காலத்தில், பஞ்சமி நில மீட்புக்கான போராட்டத்தை எந்த கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்திருக்கிறது? 1990-களில் நிகழ்ந்த பஞ்சமி நில மீட்பு போராட்டத்தை முன்னெடுத்தது தலித் இயக்கங்களும், அவர்கள் சார்ந்திருந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்தான் என்பதுதானே வரலாற்று உண்மை. ஒரு வரலாற்று உண்மையை அப்பட்டமாக திரித்து காட்டியிருப்பதால்தான் இப்படத்திற்கு முற்போக்கு சாயம் பூசுகிறார்கள் போல.

%d bloggers like this: