புதிய முகம்

எச்சரிக்கைகளற்று சுழன்றோடும் குருதியின்
இருள் நிறைந்த புதிர்களை
கரையுடைத்துப் பாயத்துடிக்கும் வெள்ளமென
விளிம்பில் தளும்பும் உணர்ச்சி வேகங்களை
சலனமேதுமில்லாமல் நோக்க
காதலை நினைத்து கவலை கொள்ளாதிருக்க
நிறைந்த மனதோடு அதன் வருகையை எதிர்கொள்ள
மதிக்க
நான் பழகிக் கொண்டுவிட்டேன்
பன்முகங்கொண்ட நமது நான்களுக்குள்
எங்கோவற்றாதிருக்கும் ஒரு ஊற்றிலிருந்து
அது சுரக்கிறது என்று தோன்றுகிறது
உனக்கு நான் காட்டும் இந்த முகம்
இந்தப் பூமியில்
இதுவரையில்
யாருக்கும் காட்டாதவொன்று

– ஆலிஸ் வாக்கர் (1944 – )
Alice Walker, Revolutionary Petunias, Harcourt Brave Javonovich, 1973.
Colour Purple என்ற நாவலின் மூலம் உலகளாவிய அளவில் அறியப்பட்டவர் (இந்த நாவல் Steven Spielberg ஆல் அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது). இவரைப் பற்றிய சற்று விரிவான அறிமுகத்துடன் இவரது சிறுகதையொன்று நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 4 – ல் வெளியாகியுள்ளது.
இக்கவிதை ஒரேயொரு இதழோடு நின்றுபோன வேறு வெறு இதழில் பிரசுரமானது.
கவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004

தங்கைக்கு ஒரு கடிதம்

நுனிநாக்கில் பழிப்பது
மானிடற்கேயுரிய பல்வீனத்தின்பாற்பட்டு பெருமை பேசித்திரிவது
அல்லது விதித்துக்கொண்டுவிட்ட எல்லைகளை மீறத்துணிவது
யாவும் ஆபத்தானது
ஒரு பெண் கடவுளர்களைப் பகைத்துக் கொள்வதென்பது ஆகாது மூழ்கடித்துவிடக்கூடிய கடல்கள் துயர்தரும் பயங்கரங்கள் கொடும்பாவங்களெனும் சாபம்
அதோடு
சீறிப் பாய்கிற மின்னலையும் கடவுளர் தம்வசம் வைத்திருக்கின்றனர்.

ஆனால் இதைவிடவும் மோசமானதிருக்கிறது
மண்டியிடுவது துதிப்பது அலைக்கழித்து ஆட்டம் காட்டுவது
அன்பாயிருப்பது அல்லது துன்பத்துளிகளைக் கொட்டுவது
அல்லது சட்டென்று ஒன்றுமறியாக் குழந்தையை அணைத்துக்கொள்வது
எதுவும் நடக்காது
நீ
நல்ல அழகானவளோ இல்லையோ, நிச்சயிக்கப்பட்டவளோ அல்லது
மணம் துறந்திருப்பவளோ – ஒன்றும் பலிக்காது
கடவுளர்கள் பலிகொள்பவர்கள்
தீரத் தீரக் கேட்பவர்கள்.

இவை மட்டும் செய்ய உனக்கு அனுமதியுண்டு
வெயிலுக்கென்று நிழல் தேடக்கூடாது
இருள் இறங்கும்போது எந்த விளக்கும் ஏற்றிவைக்கக்கூடாது
சத்தம் காட்டாமல் மூச்சு விடவேண்டும்
அப்புறம்
எப்போதும் அவர்கள் உன்னுள் கூர்ந்து நோக்குகிறார்கள்
என்ற பயமிருக்கட்டும்
அமைதியாக
உன் இதயத்தைப் பூட்டி வைத்துவிடு
கடவுளரை, அவர்களது மேன்மைமிக்க லீலைகளை
துணிந்து எதிர்த்தால்
மரணம் நிச்சயம்.

– ஆன்னி ஸ்பென்ஸர் (1882 – 1975)
The Book of American Negro Poetry, Edited with Prefaces and Critical notes by James Weldon Johnson, Harcourt Brace Javonovich, 1959.

வாழ்ந்த காலத்தில் மிகக் குறைவாகவே கவிதைகளைப் பிரசுரித்ததாலோ என்னவோ சரியான அங்கீகாரம் கிடைக்கப் பெறாதவர். இவருடைய Before the Feast of Shushan என்ற கவிதையோடு இன்னும் நான்கு கவிதைகளை ஜேம்ஸ் வெல்டன் ஜான்ஸன் என்ற புகழ் பெற்ற ஆஃரோ அமெரிக்கக் கவிஞர் அவர் தொகுத்த The Book of American Negro Poetry (1922) என்ற தொகுப்பில் சேர்த்தார். அதன் பிறகே அவருடைய கவிதைகள் தொடர்ந்து பல தொகுதிகளில் பிரசுரம் பெற்றன.

கவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004

வேண்டுதல்

இங்கே, வீட்டில்
ஒரு சின்ன மூலையில்
பலிபீடம் ஒன்று வைக்கலாமா என்று யோசித்திருக்கிறேன்
எது எப்படியோ, வீட்டில் எங்கு வேண்டுமானாலும்
மண்டியிட்டு விழுந்துவிடுவது எனக்குப் பழக்கமானதுதான்
சில நேரங்களில் எதைப் பற்றியுமே யோசிக்காமல்
மண்டியிட்டு வணங்குவதுண்டு
கடவுளே, இதோ என் சித்தம், எடுத்துக்கொள்
என்று சிலபோது சொல்வதுண்டு
ஏனென்றால் அந்த நேரங்களில்
எப்போதும் வீட்டில் ஒருவரும் இருப்பதில்லை
அதனால் என் சித்தத்தை எடுத்துக்கொண்டு
என்னை அவன் வழியில் இட்டுச் செல்லவெண்டுமென்று
ஆண்டவனை நான் கேட்டுக் கொள்வதுண்டு.

உண்மையிலேயே இன்று நல்ல மழையடிக்கிறது
என்ன?

– இஸபெல்லா மரியா ப்ரெளன்
The Book of American Negro Poetry, Edited with Prefaces and Critical notes by James Weldon Johnson, Harcourt Brace Javonovich, 1959.

தமது ஆறாம் வயதிலேயே ப்யானோ வாசிக்கக் கற்றுக் கொண்டவர். கவிதைகளோடுகூட இசைப் பாடல்களும் இயற்றுபவர்.

கவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004

கருப்புக் கனவுகள்

எல்லா இளைஞர்களைப் போலவும்
அவர்களும் கனவுகள் கண்டார்கள்
புகழைப் பற்றியும் காதலையும் அதிகாரத்தையும்

எல்லா இளைஞர்களைப் போலவும்
அவர்களும் நம்பிக்கை வைத்தார்கள்
வாழ்வின் பொன்னான வேளை குறித்து

மற்ற எல்லோரையும் போலவே அவர்களும் கண்டார்கள்
நீர்க்குமிழிகள் போல காற்றில் மிதந்து
தம் கனவுகள் சிதறிப் போனதை
எதுவுமே நடவாதது போல
இப்போது
இங்கு வாழவும் கற்றுக் கொண்டார்கள்.

– ஜியார்ஜியா டக்ளஸ் ஜான்சன் (1886 – 1966)

The Book of American Negro Poetry, Edited with Prefaces and Critical notes by James Weldon Johnson, Harcourt Brace Javonovich, 1959.

ஜியார்ஜியா டக்ளஸ் ஜான்சன் ஃஆர்லெம் மறுமலர்ச்சிக் காலத்தின் (1919 – 40) தலைசிறந்த பெண் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். இவருடைய முதல் கவிதைத் தொகுதி The Heart of a Woman 1912 – ல் வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்றபொதிலும், இனப் பிரச்சினையின்பால் கவனம் செலுத்தவில்லை என்பதற்காக விமர்சிக்கப்பட்டது. Bronze: A Book of Verse என்ற தொகுப்பில் முழுக்க முழுக்க இனப் பிரச்சினை குறித்த கவிதைகளைத் தந்து இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். என்றபோதிலும், பொதுவில் இவரது ஆர்வங்கள் காதல், வாழ்வு குறித்த உணர்ச்சிமயமான, ஏக்கம் நிறைந்த குறிப்புகளாகவே இருந்தன.

கவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004

ஊதாப்பூ

என் மகள் கால்களை விரித்து குனிந்து
மயிர்களற்றிருக்கும்
தன் யோனியைப் பார்க்கிறாள்
எப்போதும் முகத்தைச் சுளிக்க வைக்கும் இந்தத் துணுக்கு
அவளுடைய வீறிடல் இல்லாமல்
அந்நியர் எவரும் தொட்டுவிட முடியாத ஒன்று. அவள்
என்னுடையதைப் பார்க்கக் கேட்கிறாள்
சிதறிக் கிடக்கிற பொம்மைகளுக்கு நடுவே ஒரு நொடி நேரம்
நாங்கள் அருகருகே எதிரெதிரே
இரட்டை நட்சத்திரங்கள் போல நிற்கிறோம்
மழித்துச் செதுக்கிய அவளுடைய முத்து மணிக்கு முன்னால்
பெருத்த எனது வரிச்சோழி
இருந்தும் அதே பளிங்குப் புழை, வரித்த மடிப்புகள்
மூன்று வயது அவளுக்கு, அவளுடைய அறியாமையைச்
சொல்லும் அது
உணர்வுகளின் உச்சத்தில் நாங்கள்!
சிறு ஊதா மொட்டுக்களாக
அவள் வீறிட்டு பின்னால் நகர்ந்து போகிறாள்
ஒவ்வொரு மாதமும் அது எனக்கு எங்கே நோகிறது
என் கால்களுக்கிடையில் அது என்ன சுருக்கம் விழுந்த கயிறு
என்று கேட்கிறாள்
இது நல்ல இரத்தம் நான் சொல்கிறேன்
ஆனால் அதுவும் சரியில்லை, முழு உண்மையில்லை
என்ன செய்ய
நான் கருப்புத் தாயாகவும் அவள் பழுப்புக் குழந்தையாகவும்
நாங்கள் ஊதாவுக்குள்ளும்
ஊதா எமக்குள்ளும்
இருப்பது எல்லாம் இதனால்தான்
என்பதை அவளுக்கு எப்படிச் சொல்ல?

– ரீட்டா டோவ் (1952 – )
Sister Fire: Black Womanist Fiction and Poetry, Edited by Charlotte Watson Shermon, Harper Perennial, 1984.

அமெரிக்க அரசின் அரசவைக் கவிஞராக (1993 – 95) அறிவிக்கப்பட்ட முதல் ஆஃப்ரோ – அமெரிக்கர் என்ற பெருமைக்குரியவர். ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். 60 – களின் கருப்பு அழகியல் இயக்கத்தின் குறுகிய வரையறைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதாக, ஒரு சாராம்சவாத கருப்பு அடையாளத்தை நிராகரிப்பதாக அறிவித்துக் கொள்பவர்.

நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4 மே 1998

அமிழ்து

ஒரு திராட்சையாக நீ இருந்திருந்தால்
நான்
அந்தக் கொத்திலிருந்து
உன்னை
பறித்து
எடுப்பேன்
குளிர்ந்த நீரில் உன்னை அலசி
இன்பக் கனியில் கைபட்டுவிடாமல்
மெல்ல தோலை உரித்து எடுப்பேன்
ஒரு சொட்டு
சிந்திவிடாமல்
ருசித்து ருசித்து
உள்ளிருக்கும்
சாற்றை உறிஞ்சிக் குடிப்பேன்
அமிழ்து
சுத்தமான அமிழ்து
தாகம் சற்று தணிந்து
சாய்ந்து கிடப்பேன்
திளைத்து
மகிழ்ந்து
மகிழ்ச்சியில்
திளைத்து
நீ
விதைகள் இல்லாமல்
இருப்பதை நினைத்து

– Doris L. Harris
Sister Fire: Black Womanist Fiction and Poetry, Edited by Charlotte Watson Shermon, Harper Perennial, 1984.

இவரைப் பற்றிக் கிடைத்த விபரம்: பிட்ஸ்பர்க்கில் பிறந்தவர். 1993 – ஆம் ஆண்டுக்கான Astrea Foundational Award பெற்றவர். நிக்கி கியோவானி கவிதைப் பரிசும் வென்றவர்.

நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4 மே 1998

நெருப்பு

எனக்கு வயது பதினாலு ஆகிவிட்டது
சதையின் வேட்கைக்கு எப்போதோ பலியாகிவிட்டேன்
அவனில்லாமல் இனி உயிர்வாழ முடியாது
அந்தப் பையன்
இன்னும் மறைவில் கைசூப்புவதுண்டு
அதெப்படி என் கால்கணுக்கள் மட்டும்
எப்போதும் சாம்பல் நிறத்தில்
நாளை எழுவதற்குள்
இறந்துவிட்டால் என்ன
அப்புறம் அம்மா படுக்கையறைக்குள் இருக்கிறாள்
கதவு தாளிட்டிருக்கிறது

அடுத்த பார்டிக்குள்ளாக
நடனமாட கற்றுக்கொள்ள வேண்டும்
என்னுடைய அறை மிகவும் சின்னதாகிவிட்டது
ஒருவேளை பட்டம் பெறுவதற்குள்
நான் இறந்துவிட்டால்
அவர்கள் சோக கீதம் இசைப்பார்கள்
எப்படியிருந்தாலும் கடைசியில்
என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுவார்கள்
எதையும் செய்ய எனக்கு விருப்பமில்லை
ஆனால் செய்ய நிறைய இருக்கிறது
அப்புறம் அம்மா படுக்கையறைக்குள் இருக்கிறாள்
கதவு தாளிட்டிருக்கிறது

என் பக்கக் கதையைக் கேட்க
எவருக்கும் தோன்றுவதில்லை
கணிதக் குழுவில் நான் இருந்திருக்கவேண்டும்
அவனுடையதைவிட என் மதிப்பெண்கள் அதிகம்
இடுப்புறைகள் அணிந்தவளாக
ஏன் நானிருக்கவேண்டும்
நாளை உடுத்துவதற்கு ஒன்றும் இல்லை
பெரியவளாகும் வரைக்கும் நான்
உயிர்வாழ்வேனா
அப்புறம் அம்மா படுக்கையறைக்குள்
கதவு தாளிட்டிருக்கிறது

ஆட்ரே லோர்ட் (1934 – 92)
Audre Lorde, The Black Unicorn, Norton Paper Back, 1978.
உணர்ச்சி வேகமும் சொற்செறிவும் மிக்க கவிஞர். கவிதைகளாகவும் உரைநடையாகவும் இவர் எழுதியவை 13 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. பாலியல், அரசியல், பொருளியல் மற்றும் அமெரிக்க கருப்பின மக்கள் உரிமைகளுக்காகவும், தன்பால் புணர்ச்சியாளர்களின் உரிமைகளுக்காவும் வாழ்நாள் முழுக்கப் போராடியவர். இவருமே ஒரு லெஸ்பியன். வெளிப்படையாகவும் தம்மை அறிவித்துக் கொண்டவர். நியூயார்க் நகரிலுள்ள ஃஅன்டர் கல்லூரி உட்பட பல்வேறு சிறந்த கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4 மே 1998
%d bloggers like this: