தொடர்ந்து …

இரு வாரங்கள் வலைப்பதிவு உலகில் இருந்து ஒதுங்கி இருந்தது ஆசுவாசமாக இருந்தது. விரும்பி வாசிப்பவர்களை அவ்வப்போது எட்டிப்பார்த்ததும்.

நிம்மதியாக சில நூல்களை வாசிக்க முடிந்தது.

நீண்ட காத்திருப்பிற்குப் பின் தனிப்பட்ட வாழ்வின் பெரும் சிக்கலொன்றும் அவிழ்ந்ததில் மகிழ்ச்சி.

இதுபோதில் google reader – ல் பிடித்தமானவர்களின் பதிவுகளை சேர்த்து வைத்து வாசிக்கப் பழகிகொண்டது ஒரு புதிய விஷயம். தொடர்ந்து நல்ல பதிவுகளுக்கான குறிப்புகள் சேர்த்து ரீடரின் shared item என்பதில் வைத்து உரையாடல்களை நிகழ்த்தும் வாய்ப்பை அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.

நாகார்ஜுனன் தமிழ் வெகுமக்கள் சினிமா குறித்த கருத்தரங்கம் பற்றி குறிப்பிட்டு, தாம் கட்டுரை வாசிப்பதாக இருந்தால் எங்கிருந்து தொடங்கக்கூடும் என்று எழுதியிருந்த பதிவு சுவாரசியம் (சில மாறுபாடுகள் உண்டு.) அதையும் விட அவரது கேள்விப்பட்டியல் meme – ஆக படர்ந்தது இன்னும் சுவாரசியம்.

கருத்தரங்கம் குறித்த தமது பார்வைகளைத் தொகுத்துத் தரும்படி இரு நண்பர்களைக் கேட்டிருக்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் வந்து சேரும் என்று நம்பிக்கை. சேர்ந்ததும் பனித்திரை பக்கத்தில்.

அவற்றைப் பதிவிலேற்றியதும் நண்பர்கள் அய்யனார் மற்றும் ஸ்ரீதர் நாராயணன் இருவரின் meme அழைப்பிற்கான பதிவும், நாகார்ஜுனன் திரைப்பட ஆய்வுகள் பற்றி குறித்திருந்த சில விஷயங்கள் மீதான எனது நோக்கையும் வைக்கலாம் என்று ஒரு யோசனை.

மற்றது, நேரம் கிட்டும்போது வழமைபோல பதிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.

சென்ற பதிவில் பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் என் அன்புகள். தனிப்பட்ட மின்னஞ்சல் வழியாக தங்கள் அன்பை பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் தனிப்பதிவிட்டு தனது ஆற்றாமையையும் அன்பையும் வெளிப்படுத்திய நண்பர் சுந்தருக்கும் :))

பொதுவானவை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

கடந்த ஒரு வருட காலம் இங்கு கொட்டிய குப்பையை வாசித்து, கருத்துக்களைப் பகிர்ந்து, நட்பும் கொண்ட வலைப்பதிவு நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும்.

தனித்து இயங்குவது எழுத்தைக் கருமமாகக் கொண்டவர்களுக்கு நல்லது என்பது எனது நீண்ட நாள் நம்பிக்கை. சில அரசியல் நடவடிக்கைகள், நம்பிக்கைகள் பாற்பட்டு “நிறப்பிரிகை” என்று அறியப்பட்ட சிற்றிதழ் சார்ந்த நட்புகளோடு இணைந்து சில வருடங்கள் செயல்பட்டது தவிர்த்து பெரும்பாலும் அங்ஙனமே செயல்பட்டும் எழுதியும் வந்திருக்கிறேன்.

இங்கு வலைப் பதிவுலகிலும் இனி அங்ஙனமே செயல்படுவது என்று முடிவு செய்திருக்கிறேன். தொடர்ந்த அவதூறுகள் எனது குதூகுல இயல்பிலிருந்தும், நான் நகர விரும்பும் நோக்கிலிருந்தும் திசைதிருப்புவதாகவும், எனது நேரம், ஆற்றலின் வீணடிப்பிற்கு இட்டுச் செல்வதாலும் இம்முடிவு. Justice or revenge என்ற எதிர்மையிலிருந்து தப்பித்துக் கொள்ளவும். விரும்பத்தகாதவற்றை மறக்கவும்.

அதன் பொருட்டு அனைத்து திரட்டிகளின் சேவைகளிலிருந்தும் விலகிக் கொள்ள விழைகிறேன். திரட்டிகளின் நிர்வாகத்தினருக்கும் எனது கோரிக்கையை அனுப்பிவைத்துவிட்டேன்.

ஏற்கனவே பதிந்து வரும் முகவரிகள் தொடர்ந்து இருக்கும். வாசகர்களுக்கும் நட்பு வட்டத்தினருக்கும் திறந்தே இருக்கும்.

கடந்த ஒரு வருட காலத்தில் என்னுடன் தொடர்ந்து உரையாடி, பகிர்ந்து, முரண்பட்டு, நட்புகொண்ட அன்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டியவர்கள்: தொடக்கத்தில் என்னை ஊக்கப்படுத்தியும் தொடர்ந்து உரையாடியும் வந்த அன்பிற்குரிய டி.ஜே, தீவிர கருத்துப் பகிர்தலுக்கான கனவுகளோடும் திட்டங்களோடும் அழைப்பு விடுத்த முரண்வெளி அன்பர்கள், சிறந்த நட்புக்கான அடையாளமாய்க் கண்ட நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர், வசீகர நாட்டுப்புறக் கதைசொல்லியாய் எனைக் கவர்ந்த நண்பர் ஆடுமாடு, பொங்கும் ஆர்வத்தால் [ஆர்வக் கோளாறு என்றும் சொல்வார்கள்:)) ] அணைத்துக்கொண்ட அய்யனார், கென், மோகந்தாஸ், காதலியாய் எனை வரித்துக் கொண்ட முபாரக் [ஆள் அனுப்பி ஃபோட்டோ எடுத்து பாக்கெட்டில் வைத்துத் திரிகிறார்] சில பகிர்வுகள்தாமெனினும் ‘நான்’ மூக்கை நுழைய விடாது ஆழ்ந்து பகிர்ந்த நண்பர் ஜமாலன், எப்போதும் எனக்காகக் காத்திருக்கும் நண்பன் பைத்தியக்காரன்.

இவர்கள் தவிர்த்து, உற்சாகத்தோடு வரவேற்ற லக்கி லுக் மற்றும் பாலபாரதி, அவ்வப்போது ரசித்துப் படித்த சிறந்த கும்மிப் பதிவாளர் குசும்பன், கூர்ந்த நகைச்சுவையுடன் எழுதும் பொய்யன், கும்மியோடு எதிர்பாராத தருணத்தில் தனது வாசிப்பின் விரிவால் ஆச்சரியப்படுத்திய அண்ணாச்சி ஆசிஃப் மீரான், சினமின்றி பார்ப்பனியத்தைக் காய்ந்த TBCD, எம்பெருமான் முருகனே எழுந்தருளினார் போன்று எப்போதும் தோற்றம் தரும் உண்மைத் தமிழன் ஆகியோருக்கும் எனது அன்புகளும் நன்றிகளும்.

பொதுவானவை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »
%d bloggers like this: