சிறுபத்திரிகை உலகத்தைப் போல அரைவேக்காடுகள் நிரம்பிய உலகம் எதுவும் இல்லை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. ஆங்கிலம் தெரிகிறதோ இல்லையோ கையில் ஒரு ஆங்கிலப் புத்தகம் (ஜோல்னாப் பை பழைய ஸ்டைல்), ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்ற ஒரு பாவனை, மூக்கு நுனியில் காத்திருக்கும் ‘நான்’ – இதன் citizen – களின் சில தனிச்சிறப்புகள்.
இத்தகைய ‘தனிச் சிறப்புகள்’ வாய்ந்தவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பதே நல்லது என்ற முடிவெடுத்து சமீப காலமாக தனித்து திரிந்துகொண்டிருந்த வேளையில், சில நாட்களுக்கு முன்பாக சென்னை ஜெமினி மேம்பாலத்திற்கு அருகில் உள்ள Land Mark புத்தகக் கடைக்குள் நுழைந்தேன்.
புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒன்று (புத்தகம்தான்) கண்களில் வெட்டியது. (சனியன், அன்று யார் முகத்தில் விழித்தேனோ தெரியவில்லை.) சு. ரா -வின் “புளியமரத்தின் கதை” ஆங்கிலத்தில். Penguin வெளியீடு. எடுத்துப் புரட்டினேன்.
மொழிபெயர்ப்பாளர் (எஸ், கிருஷ்ணன்?) குறிப்பு. இரண்டாம் பத்தி. The novel is different in that it attempts magical realism before the phrase had become popular. (“மாந்த்ரீக யதார்த்தவாதம் என்ற பதம் பரவலான புழக்கத்திற்கு வருவதற்கு முன்பாகவே அதை முயற்சித்துப் பார்த்திருக்கிறது என்ற வகையில் இந்த நாவல் சற்று வித்தியாசமானது”, என்று ஒரு குத்துமதிப்பாக மொழிபெயர்க்கலாம்.)
சாமி, பேத்தலுக்கு ஒரு அளவேயில்லையா! முன்பு “ஜே. ஜே: சில குறிப்புகள்” எக்ஸிஸ்டென்ஷியலிச நாவல் என்ற சிலாகிப்பு. இப்போது “புளியமரத்தின் கதை” magical realism ஆகப் பார்க்கிறது. சாயிபாபா ஸ்டைலில் சு.ரா. உள்ளங்கையை உயர்த்தினால் எக்சிஸ்டென்ஷியலிசமும் magical realism – மும் கொட்டுகிறது. பக்த கோடிகள் புல்லரித்து பொட்டு வைத்துக் கொள்கிறார்கள்.
விசாலமான ஒரு வீடுதான் அரங்கு. பின்புறம் நோக்கித் திறக்கும் ஒரு வாசல். முன்பக்கமும் ஒரு வாசல் உண்டு.
காலம்: “சுபமங்களா”வில் கடுமையான விவாதங்கள் சற்று ஓய்ந்திருந்த சமயம். சு. ரா. அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த நேரம். புத்தகங்கள் சீராக அடுக்கி வைத்த அறை. அ. மார்க்ஸ், பொ. வேல்சாமி, ரவிக்குமார் ஒரு அரைவட்டமாக அமர்ந்திருக்க எதிரில் சு. ரா.
சு. ரா: அமெரிக்காவில் நூலகங்கள் அற்புதமாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் நாம் கேள்விப்பட்டிருக்காத மேதைகளுடைய நூல்களையெல்லாம் வைத்திருக்கிறார்கள்.
அ. மா: அப்படியா! என்ன மாதிரியான மேதைகள், யாராவது ஒருவரைச் சொல்லுங்களேன்.
சு. ரா: இம்ம்மானுவேல் க்க்கான்ட்ட்!
திரை கவிழ்கிறது.
திரைக்குப் பின்னிருந்து ஒரு குரல்: “இந்த அபிஷ்டுவுக்கு எப்படி இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது!”
ஒரு ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக (1998), அதுவரை வாசித்திருந்ததை தொகுத்துக் கொள்ளவும், மேற்கொண்டு இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டிய திசைகளைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவும் போட்ட வரைபடம் இது.
[அதை இங்கு பகிர்ந்து கொள்ள இயலவில்லை. Scan செய்து பார்த்தேன். தெளிவாக வரவில்லை. மற்றொன்று. கல்விப் புலம் சார்ந்து நான் +2 விற்கு மேலாக படிக்கவில்லை. மிகவும் சாதரணமான ஒரு நர்சரிப் பள்ளியில் 5 – ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி. பின் மீண்டும் மிகவும் சராசரியான அரசு சார் பள்ளியொன்றில் +2 வரை. இதுவே எனது கல்விப் பின் புலம். இதையும் மீறி பல துறை சார்ந்த விரிவான எனது வாசிப்பிற்கு சோர்வடையாத எனது கடும் முயற்சி மட்டுமே காரணம். நான் பயணித்த பல்வேறு துறை சார்ந்த வாசிப்புகள், நூல்களின் கடும் ஆங்கிலத்திற்கும் தமிழ் நாட்டில் உள்ள மேட்டுக்குடி பள்ளிக் கல்விக்கும்கூட ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இந்நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.]
இதிலுள்ளவர்கள் அத்தனை பேரையுமோ அல்லது குறிப்பிட்ட சிலரது படைப்புகள் அத்தனையையுமோ வாசித்து விட்டதாக இன்னும்கூட சொல்லிவிட முடியாது. இங்கு வாசகர்களுக்கு இதைத் தருவதற்கு சில காரணங்கள் உண்டு.
தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலின் வாசகர் தளத்தை சற்று பொதுமைப்படுத்தி இரண்டு விரிவான பிரிவினர் இருப்பதாகச் சொல்லலாம். இலக்கியம் ‘உய்விக்கும்’ என்ற ஒருவிதமான பரவச மனநிலையில் மிதந்து கொண்டிருப்பது; பிச்சமூர்த்தி, மெளனி, புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன் என்று ஒரு லிஸ்டைப் படித்துவிட்டால் தமக்கும் ‘இலக்கியம்’ சித்தித்துவிடும் என்று ஒரு உத்வேகம்; ‘சற்றே’ பலவீனமான ஆங்கில வாசிப்பு; தத்துவங்கள், கோட்பாடுகள் என்றாலே ஒரு அலர்ஜி; அவை ‘படைப்புத் திறனை’ மழுங்கடித்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை; தமது சமூக இருப்பு, தமது ‘நான்’கள் குறித்த எந்தவிதமான தீவிரமான விசாரணைகளும் இல்லாமல் கையளிக்கப்பட்ட ‘நான்’கள் துருத்திக் கொண்டிருப்பது; ஒரு பிரிவினரின் ‘குணாதிசயங்கள்’ இவை. சிறுபத்திரிகைச் சூழலின் பெரும்பான்மையான ‘படைப்பாளிகள்’, ‘படைப்பாளிகளாகத் துடித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள்’ இதற்குள் விழுவர்.
விமர்சகர்களாக, கோட்பாட்டாளர்களாக, ‘அரசியல் அறிஞர்களாக’, ‘அறிவுப் பயங்கரவாதிகளாக’, அறியப்படுபவர்கள், இவர்களுடைய வாசகர்கள் இரண்டாவது பிரிவினர். முதல் பிரிவினருடைய அத்தனை நம்பிக்கைகளையும் கோட்பாட்டளவில் கேள்விக்குள்ளாக்குபவர்கள். ஆனால், ‘நான்’கள் குறித்த விசாரணை என்ற அந்தப் புள்ளியில் மட்டும் இவர்களுக்கும் மேலுள்ளவர்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் கிடையாது (அடியேன், இதற்குள் விழுவேன் என்று நினைக்கிறேன்.)
இன்னும் சற்று துல்லியமாகச் சொல்வதென்றால், ‘நான்’கள் குறித்த இவர்களுடைய விசாரணைகள் வெறும் கோட்பாட்டளவில் நின்றுவிடும். தமது ‘சொந்த’ ‘நான்’கள் குறித்த எச்சரிக்கைகளோ, விசாரணைகளோ இவர்களிடத்திலும் இல்லை என்பது அடியேனின் அவதானிப்பு (சிலரைப் பொருத்த அளவில் இது தவறானதாகவும் இருக்கலாம்.) இதனால், முதல் பிரிவினரைப் போன்றே இவர்களுடைய ‘நான்’களும் துருத்திக் கொண்டு முன்னே வந்து நிற்பதுண்டு. என்றாலும், இதையும் மீறி, சிறுபத்திரிகை வாசிப்புச் சூழலில் பல புதிய திசைகளைத் திறந்துவிட்டது, எந்தக் கேள்விகளுக்கும் இடமேயில்லாத ‘லகரி’ இலக்கியம், ‘அப்பாவித்தனமான’ வாசிப்புகள், போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்கியது இவர்களது பங்களிப்புகளில் சில.
இந்த இரண்டாவது பிரிவினரில் விழுந்துவிட்டவர்களில் ஒருவன் என்கிற முறையில், மேற்சொன்ன ‘சுயவிமர்சனம்’ (இன்னும் பல உண்டு) நீட்ஷேவை வாசித்த பிறகே கிடைத்தது என்கிற ஒப்புதலை வாசகர்கள் முன் வைக்க விரும்புகிறேன்.இரண்டாயிரம் ஆண்டு கால மேற்கத்திய தத்துவ மரபு இருப்பின் ஆதாரம், அடிப்படை (Being of beings) என்ன என்ற கேள்வியில் சிக்கியிருந்ததன் அபத்தத்தைச் சுட்டிக்காட்டி தேக்கமடையாமல், தொடர்ந்து உருவாகி, உருமாறிக் கொண்டிருக்கும் நிகழ்வின்மீது (Becoming) அழுத்தத்தைக் குவிக்கும் நீட்ஷே “வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு” என்றும் முன்மொழிகிறான்.
இவ்விடத்தில், “நமது மதம், ஒழுக்கவியல், தத்துவம் அனைத்தும் மனிதனின் சீரழிவின் வடிவங்கள். இதன் எதிர் – இயக்கம் கலை” என்ற நீட்ஷேவின் மும்மொழிதலை ஏற்றுக் கொள்ள முடிகிற போது, சு.ரா “ஒரு இலக்கிய அறிதல்முறை வேண்டும்” என்று சொல்வதைக் கேட்டு எங்களைப் (அதாவது இரண்டாவது பிரிவினரி சிலர்) போன்றவர்கள் ‘பாய்ந்து பாய்ந்து தாக்குவதேன்?”
ஒன்று, சு. ரா முன்வைக்கும் ‘இலக்கிய அறிதல்முறை’, ‘எங்கோ, ஏதோவொரு’ இடத்தில், இறுதியில் இருப்பின் ஆதாரம் குறித்த தேடலாகத்தான் முடிகிறது. இரண்டாவது, நீட்ஷே மூளைச் சோம்பேறி அல்ல.
“வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு” எனும்போது இலக்கியம் குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அந்த இலக்கியம் Being – ஐ நோக்கிய ஏக்கமாக அல்ல Becoming – ஐப் பிடிக்க முயற்சிப்பதாக (அது சாத்தியமேயில்லை என்றாலும்கூட) அதற்கு அழுத்தம் தருவதாக இருக்க வேண்டும்.
இந்த முன்மொழிதல்களை அதன் சிக்கல்களோடும் செறிவுகளோடும் ஆழத்தோடும் புரிந்துகொள்ள ஒருவர் மேற்கத்திய தத்துவ மரபை ‘கரைத்துக் குடித்தே’ ஆக வேண்டும். முன்னும் பின்னுமாக ஒரு தீவிர வாசிப்பைத் தந்தே ஆகவேண்டும். அதன்பிறகு, அதோடு சேர்த்து நாம் ‘இந்தியத்’ தத்துவ மரபுகள் குறித்துப் பேசலாம்.
மேற்கத்திய தத்துவ மரபுக்கு இவ்வளவு அழுத்தம் தருவதற்குக் காரணங்கள் உண்டு. ஒன்று, நாம் இன்று முன்வைக்கும் அத்தனை வடிவங்களும் மேற்கிற்கே உரியவை. அப்புறம், காலனியத்திற்குப் பிறகு காலனியக்கறை படியாத, ‘தூய’ தனித்துவமான பாரம்பரியம் என்று எதுவும் இல்லை. ‘இந்தியத்’ தத்துவ மரபுகளைக்கூட நாம் மேற்கத்திய தத்துவச் சொல்லாடல்களின் ஊடாகத்தான் பேச வேண்டியிருக்கிறது.
எனது வாசிப்பு இந்த வரைபடத்தின் வலது கீழ் மூலையிலிருந்து (லெனின்) தொடங்கி இடப்பக்கமாக மெதுவாக நகர்ந்த ஒன்று. இன்னொருவருக்கு இன்னொரு மாதிரியாகவும் இருக்கலாம். அதோடு, இது முழுமையான, நிறைவான ஒன்றும் இல்லை. உதாரணத்திற்கு, விட்கென்ஸ்டெய்னுக்கு முன்னும் பின்னுமான analytic மற்றும் linguistic தத்துவ மரபுகளைத் தவிர்த்திருக்கிறேன். ‘இம்ம்மானுவேல் க்க்கான்ட்’ – ற்கு பின்னே நீண்டு செல்லும் மத்தியகால தத்துவப் போக்குகள், கிரேக்க தத்துவப் பாரம்பரியம் அத்தனையும் விட்டிருக்கிறேன்.
எது எப்படியிருந்தாலும் ஒரு புதிய அழகியலோடு, வீர்யம் மிகுந்த படைப்புகளைத் தருவதற்கு, அறிவின் அதிகாரத்தை வெல்வதற்கு, ‘பைத்திய நிலைக்குள்’ போவதற்கு, ஒருவர் முதலில் அறிவை வென்றாக வேண்டும். ‘நிதானமானவர்கள்’ தான் ‘பைத்தியமாக’ முடியும். பிறவியிலேயே பைத்தியங்கள் கிடையாது. அப்படியானவர்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்கள். இல்லையா?
(முற்றும்.)
நிறப்பிரிகை இதழ் 10, 2000.