சமீபமாக வந்த நூல்களில் “hot sales” என்று பலராலும் பரியந்தமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது சேகுவாரா: வாழ்வும் மரணமும். ‘வீரமரணம்’ அடைந்த ‘மாபெரும் மனிதர்களின்’ ஜீவிதத்தின்பால் மனுஷ குமாரர்களுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது என்பதை நூல் hot sales ஆகியிருப்பது மறுபடியும் ருஜூப்படுத்தியிருக்கிறது. அதுபோன்றதொரு மரணமும் வாழ்க்கையும் தமக்குக் கிட்டவேண்டும் என்ற ஆசை யாரை விட்டது?! வரலாற்றில் தமது பெயர் பொன் எழுத்துக்களால் பொறித்து வைக்கப்பட வேண்டும் என்ற அவா யாருக்குத்தான் இல்லை?!
ஆனால், இந்த விருப்பங்கள், வேட்கைகளை பூசி மெழுகி, மூடிமறைக்கத்தான் எத்தனை சிரத்தைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எத்தனை கொள்கைகள், கோட்பாடுகள், எவ்வளவு அரசியல் செயல்பாடுகள், இலக்கிய ஆக்கங்கள்?!
மிகச்சிலரைத் தவிர ஒருவரும் இவற்றுக்குப் பின்னாலிருக்கும் வேட்கைகளை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை என்பதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். வெட்கமின்றி சொல்லப்படுவது: தன்னடக்கம்.
திரு. எஸ். பாலச்சந்திரன் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ஜோர்ஜ் ஜி. காஸ்டநாடா – வின் இந்நூல் சே – வின் தத்துவார்த்தப் புரிதல்கள், அரசியல் நடைமுறைகள் இவற்றிலிருந்த பலம் – பலவீனம் என்பதற்கு அப்பாற்பட்டு சே – வின் இந்த வேட்கையை – வரலாற்றில் தனது பெயர் பொன் எழுத்துக்களால் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆசையை – தன்னையுமறியாமல் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது என்று சொல்லலாம்.
சே – வை தீவிர இடதுசாரிகள் எவரும் என்றுமே ஒரு கம்யூனிஸ்டாக ஒப்புக் கொண்டதில்லை. ‘குட்டி முதலாளிய சாகசக்காரர்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவது வழக்கம். விரிவான விவரிப்புகள், ஆதாரங்களோடு இக்குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது இந்நூல். என்றாலும், சே – வை ஒரு கிளர்ச்சிக்காரராக, போராட்டத்தின் குறியீடாக, 60 – களில் உலகெங்கும் வீதிகளுக்கு இறங்கத் துணிந்த இளைஞர்களுக்குப் பெரும் உத்வேகம் தந்தவராக அங்கீகரித்திருப்பது மேற்சொன்னவர்களிடமிருந்து விலகும் புள்ளி.
இந்த அங்கீகாரமும்கூட விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக நூல் முன்மொழிந்து விடவில்லை என்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விஷயம். சே – வின் இறுதி நாட்களிலேயே பொருந்தாமல்போன அவருடைய நடவடிக்கைகள் தற்காலத்திற்குச் சுத்தமாகப் பொருந்தாதவை என்று தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. சே – வின் வாழ்விலிருந்து ‘உத்வேகம்’ பெறுவதற்காகவே நூலைப் படிக்க முனையும் வாசகர்களுக்கு தெளிவான எச்சரிக்கைப் புள்ளி இது.
சே – வின் நிறை – குறைகளை எந்தவிதமான தயக்கங்களும் இல்லாமல் சரியாகவே சுட்டிக் காட்டுகிற நூலில் முக்கியமான குறையாகப்படுகிற ஒரு விஷயம்: போராளி சே – வின் ஆளுமை உருவாக்கத்தைக் கண்டுபிடிக்க முயலும் ஆரம்ப அத்தியாயங்கள் இரண்டு சமன்பாடுகளை வைக்கின்றன; ஒன்று, உடற்பயிற்சி – ஆஸ்துமா = சேவின் மனவலிமை; இரண்டு, ரக்பி – ஆஸ்துமா = பின்னாட்களில் சிறந்த கொரில்லாப் போர்முறைகளை வகுத்த யுத்த தந்திரி சே.
அதாவது, ரக்பி ஆட்டத்தில், களத்தில் தேவையான திட்டமிடுதல்களைக் கோருகிற பின்கள ஆட்டக்காரராக சே விளையாடியது, பின்னாட்களில் மிகச் சிறந்த கொரில்லா யுத்த தந்திரியாக அவரது ஆளுமை உருவாக வழிவகுத்ததாம்.
Personality என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஆளுமை என்ற சொல்லின் லத்தீன் வேர்ச்சொல் persona. இச்சொல் முகமூடியைக் (mask) குறிப்பது. இதிலிருந்து பெறப்படுவது யாதெனில், personality – ஆளுமை என்பதே ஒரு முகமூடியாம். இப்படியான பின் நமது தேடல்கள் எதை நோக்கியதாக அமையலாம்?
ஒரு நபர் இந்தப் பல முகமூடிகளை எப்படி லாவகமாகக் கழற்றி, மாற்றி அணிகிறார் என்பது ஒரு சாத்தியம். ‘பன்முகப்பட்ட ஆளுமையைக்’ கண்டடைவதற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நூல் இந்த விஷயத்தில் ‘கோட்டை விட்டிருக்கிறது’ என்பதாகச் சொல்லலாம்.
ஆனால் ‘குற்றம்’ நூலுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. “வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?” (பரிசுத்த வேதாகமம், நீதி மொழிகள் 30:4) என்று இன்னமும் தேடியலைந்து கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் சரிபங்கு இருக்கிறது இல்லையா?
இந்தியா டுடே, அக்டோபர் 2, 2002.