மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR) – உறுப்பினர் உறுதிமொழி

முந்தைய இரு பதிவுகளின் தொடர்ச்சியாக …  

குறிப்பு:

இந்தியத் தேசியம் என்ற சட்டகத்தினுள் இருந்தே அமைப்பின் எல்லை உருவகிக்கப்பட்டிருப்பதை வாசிப்பவர்கள் கவனிக்கலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இச்சட்டகத்தில் இருந்து விடுபட்டிருப்பினும், மனித உரிமை இயக்கங்களுக்கு இந்தியத் துணைக்கண்ட அளவிலான பரஸ்பர பகிர்தல்களும் கூட்டு செயல்பாடுகளும் அவசியம் என்றே கருதுகிறேன்.

—————————–

அரசு என்பது ஒவ்வொரு தனி நபரையும், மானுடக் கண்ணியத்துடனும், சம கரிசனத்துடனும், மரியாதையுடனும் நடத்தக் கடமைப்பட்டது என்பதை வலியுறுத்தும் தத்துவார்த்த நிலையொன்று இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பிற்பாதிகளில் உருவானது. ஐக்கிய நாடுகள் அவையின்  நடைமுறைகளினூடாக இப்பிரச்சினைகள் மீதான சர்வதேச கருத்தொருமிப்பு ஒன்றும் உருவாகி, மனித உரிமைப் பிரகடனங்கள் என்று பொதுவில் அறியப்படும் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (UDHR), பொருளாதார – சமூக – பண்பாட்டு உரிமைகளுக்கான சர்வதேச கூட்டு ஒப்பந்தம் (ICCPR), சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச கூட்டு ஒப்பந்தம் (ICESCR) ஆகியவை இயற்றப்பட்டு அனைத்து தரப்பினருக்குமான வழிகாட்டும் நெறிகளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மனித உரிமைகள் குறித்த சொற்திறங்களை நடைமுறைக்குகந்த சட்ட உரிமைகளாக மாற்றுவதற்கும், இந்த உரிமைகள் நடைமுறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், அதைக் கண்காணிப்பதற்குரிய செயல்திட்டங்களும் அமைப்புகளும் உருவாகவும், பல்வேறு தேசங்களிலும் சர்வதேச அளவிலும், பல்வேறு மக்கட்பிரிவினர் மேற்கொண்ட முயற்சிகளும் போராட்டங்களும் மனித உரிமை இயக்கம் உருவாக வழிவகுத்தன.

தொடர்ந்து, மனித உரிமைகள் என்ற கருத்தாக்கத்தை பெண் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள், தேசங்கள் மற்றும் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, வளர்ச்சி குறித்த உரிமைகள், இன்னும் பிற புதிய தளங்களுக்கு விரிவுபடுத்தவும், மனித உரிமைகள் குறித்த சொல்லாடலை ஒரு கருத்தியலாகச் சுருக்கிவிடாமல், அதையும் கடந்து செல்லத்தக்க ஒரு சொல்லாடலாகவும், அதற்குகந்த ஒரு மொழியை உருவாக்குவதிலும் சர்வதேச மனித உரிமை இயக்கம் தன்னை ஆழ்த்திக் கொண்டுள்ளது.

இந்த சர்வதேச மனித உரிமைப் போராளிகள் சமூகத்தின் ஒரு பகுதியாகப் பாத்திரமாற்ற நாமும் விரும்புவதோடு, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும், மனித உரிமைகள் குறித்த ஒரு அனைத்தும் தழுவிய, மெய்யான புரிதல் ஒன்றை உருவாக்குவதிலும், நமது சொந்த அனுபவங்களிலிருந்து பங்களிப்புகளை செய்யவும் விரும்புகிறோம்.

மனித உரிமைகள் என்பவை தனித்துவமானதும், பிரிக்கமுடியாததும், அனைத்தும் தழுவியதுமானதுமாகும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். என்றாலும், நமது மய்யக் கரிசனம், குறிப்பான சூழல்களில் வாழும் மனிதர்களைப் பற்றியதே என்பதால், அத்தகைய குறிப்பான சூழல்களிலும் நிலைமைகளிலும் அத்தகைய பிரிவினர் அடைய விரும்பும், உறுதி செய்து கொள்ள விரும்பும் உரிமைகளை வலியுறுத்தும், பாதுகாக்கும் நோக்கில், எமது செயற்பாடுகள் குவியம் கொள்வதாக இருக்கும்.

இந்தியாவைப் பொருத்தமட்டில், கடந்த சில ஆண்டுகளில், வாழ்வுரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், சிவில் சமூகத்திலும் சட்டத்தின் வழியிலும் அனைவரும் நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படுதல், தனிநபர்கள் மற்றும் விளிம்பு நிலைப் பிரிவினருடைய உடைமைகளுக்கும் உயிருக்குமான பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. பெண்கள், சாதியமைப்பின் பாகுபாடுத்தலுக்கும் ஒதுக்குதலுக்கும் உள்ளான தனித்துவமான மக்கள் பிரிவினர்,  மதச் சிறுபான்மையினர், அமைப்பாக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று பொருளாதார ரீதியிலும் சமூக அளவிலும் நலிவுற்ற பகுதிகளைச் சேர்ந்த இந்த விளிம்புநிலை மக்கள் பிரிவினர், அரசாலும் கண்காணிப்புக் குழுக்கள், மற்ற நிறுவனமயப்பட்ட குழுக்களாலும் திறம்பட ஒழுங்கு செய்யப்பட்ட ஒடுக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தனிமனித பேச்சுரிமை, எழுத்துரிமை, கூடும் உரிமை மற்றும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகப் போராடுவதற்கான ஜனநாயக உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை நேரடியாக பாதிக்கும் கருப்புச் சட்டங்களை அடுத்தடுத்து கொண்டுவருவதிலும் அதிகார வர்க்கத்தின் பிடியை மேலும் மேலும் இறுக்குவதிலும் அரசு காட்டும் முனைப்பும் கடந்த இரு தசாப்தங்களில் அதிகரித்துள்ளது.

வாழ்வுரிமை, மருத்துவ நல உரிமை, குடியிருப்பு உரிமை, கல்வி உரிமை போன்ற உரிமைகளும் மேலும் மேலும் குறுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து குடிமக்களுக்குமான தனது அடிப்படைக் கடமைகளிலிருந்து அரசு சுரணையற்று நழுவிக்கொள்வது, மற்றும் பாரதூரமான விளைவுகளை உருவாக்கக்கூடிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை, ஆழமான பொது விவாதங்கள் எதற்கும் உட்படுத்தாமலேயே நடைமுறைப்படுத்தியது ஆகியவற்றின் கூட்டு விளைவாகவே இது நிகழ்ந்துள்ளது.

மிகக்கடுமையான இராணுவமயமாக்கல், மற்றும் நமது உள்நாட்டு நில வளங்களை முற்ற முழுதாக அன்னிய மூலதனத்திற்குத் திறந்து விடுவது போன்ற பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது நமது மக்களின் அன்றாட வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்கியிருப்பதோடு, நமது இயற்கை வளங்கள் பாழாகவும் அஞ்சத்தக்க அளவிற்கு அழிவிற்குள்ளாகவும் காரணமாகியுள்ளன. இவற்றையொட்டி, பல புதிய உரிமைப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன.

இத்தகைய நிலையில், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் பல்வேறு சிவில் மற்றும் ஜனநாயக உரிமைப் போராளிகளும் அமைப்புகளும் ஆற்றியுள்ள அளப்பறிய பங்களிப்புகளை, சில சந்தர்ப்பங்களில், மனித உரிமைப் பாதுகாவலர்கள் தமது உயிருக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு ஆற்றியுள்ளதையும் நாம் மதிப்புடன் ஏற்கிறோம்.

தற்போதுள்ள மனித உரிமை இயக்கத்தின் வலிமையையும் வளத்தையும் உயர்த்திப் பிடிக்கவும் மதிக்கவும் செய்கிறோம். அதன் தரத்திற்கும், எட்டியுள்ள மதிப்பிற்கும், எதிர்பார்ப்புகளுக்கும் எம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளவும் விழைகிறோம்.

என்றபோதிலும், அத்தகைய இயக்கங்களின் களப்பணியாளர்கள் என்ற வ்கையில், அரசிலும் சமுகத்திலும் அதிகரித்துவரும் எதேச்சதிகார மற்றும் பாசிசப் போக்குகள் எழுப்பியுள்ள சவால்களை எதிர்கொள்ளும் திறன்வாய்ந்த ஒரு தேசம் தழுவிய, குவிந்த அமைப்பாக எம்மை உறுதி செய்துகொள்ள இயலாமல் போனதற்கு, அமைப்பிற்குள் ஜனநாயகமின்மை, உள்ளூர்வாதம், பிளவுண்டு போதல் ஆகியவை காரணங்களாக அமைந்துவிட்டன என்றும் கருதுகிறோம்.

இப்பலவீனங்களைக் களையும் பொருட்டு, நிறுவனப்படுத்தப்பட்ட ஜனநாயப்பூர்வமான நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை, இவற்றினூடாக, விருப்பபூர்வமாக இணைந்த உறுப்பினர்களைக் கொண்டு அமைந்த, மனித உரிமை ஆர்வலர்களின் ஒரு அகில இந்திய அமைப்பை, பன்மைத்தன்மை வாய்ந்த ஒரு இந்தியாவின் பல்வேறு மனித உரிமைத் தேவைகளுக்கும் முகம் கொடுக்கக்கூடிய, அதே நேரத்தில் அதன் நடவடிக்கைகளிலும் மேற்கொள்ளும் இயக்கங்களிலும் மனித உரிமைத் தரங்களுக்கு செவிசாய்க்கக்கூடியதாக, கடமைப்பட்டதாக அரசை ஆக்குவது என்ற மய்யச் சவாலை எதிர்கொள்வதிலிருந்து கவனம் சிதறிவிடாது இயங்குகிற ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான தேவை இருப்பதையும் உணரத் தலைப்பட்டோம்.

இதை மனதில் கொண்டு, புதிய மனித உரிமை இயக்கம் ஒன்றை உருவாக்கவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் எமது தொடர்சியும் உறுதியும் மிக்க செயல்பாடுகளினூடக, இந்தியக் குடிமக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெறுவோம் என்று உறுதியேற்கிறோம்.

இவ்வமைப்பின் நோக்கங்களும் இலக்குகளுமாவன:

மனித உரிமைகளை வரையறுத்து விவாதித்து, ஒரு கருத்தொருமிப்பை உருவாக்குவது.

மனித உரிமைகளை மதிக்கும் ஒரு பண்பாட்டை உருவாக்குவது. மனித உரிமைகளை நடைமுறைப்படுத்தவும் அதைக் கண்காணித்து உறுதி செய்வதற்குமான தேசம் தழுவிய அமைப்பு ஒன்றைக் கட்டுவது, மற்றும் அரசு கையெழுத்திட்டுள்ள மனித உரிமைகள் மீதான தேசிய மற்றும்  சர்வதேச கூட்டு ஒப்பந்தங்களுக்கு அது பொறுப்புள்ளதாக நடந்துகொள்ள செய்வதற்கான ஒரு இயக்கத்தை முன்னெடுப்பது.

தனிநபர்கள், சமூகக் குழுமங்கள், ஒட்டுமொத்த மக்களுமே எந்த அளவில் மனித உரிமைகளை உண்மையில் அனுபவிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பது.

மனித உரிமை மீறல்கள் பற்றிய தரவுகளைச் சேகரித்து, ஆவணப்படுத்தி பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு செல்வது.

அரச மற்றும் பிற அமைப்பு ரீதியான குழுக்களின் மனித உரிமை மீறல்களைப் பகிரங்கபடுத்தி அவற்றுக்கெதிரான இயக்கங்களை முன்னெடுப்பது.

மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வளர்க்கும் நோக்கில் பிற அமைப்புகள், தனிநபர்களுடன் இணைந்து செயலாற்றுவது.

மனித உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சட்டப்பூர்வமான குறுக்கீடுகளைச் செய்வது.

மனித உரிமைகளை மதிக்கும் ஒரு ஜனநாயகப்பூர்வமான சட்டகத்திற்குள்ளாக இருந்து செயலாற்றும் ஒரு அரசியல் நடைமுறையினூடாக, தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தை வடிவமைக்கும், மாற்றும், உருமாற்றும் ஆற்றலுடையவர்களாக அம்மக்கள் உருப்பெருவதற்கான நிலைமைகளை ஏற்படுத்துவதற்கான அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்வது.

ஆயுதம் தாங்கிய மோதல், அத்துமீறல் அல்லது போர்ச்சூழல்களில், போரிடும் குழுக்கள் சரவதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் குறித்த விதிகளை மதித்து நடப்பதை உறுதி செய்வதும், போரில் ஈடுபடாத மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சாத்தியமான அளவிற்குக் குறைப்பதற்குரிய  நம்பிக்கைக்குகந்த, வெளிப்படையான, அகநிலைமைக்கே உரிய வரம்பெல்லைகளையும் அதைக் காப்பதற்கான நிறுவனப்படுத்தப்பட்ட வழிவகைகளையும் உருவாக்குவது.

இந்த விருப்பு உறுதிமொழிகளுடன் மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் அமைக்கப்படுகிறது.

இந்த விருப்பு உறுதி மொழியை ஏற்றுக் கொள்கிறேன். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தில் சேர ஒப்புதல் அளிக்கிறேன். அதன் விதிகளுக்கும் உபவிதிகளுக்கும் அமைப்பு முடிவுகளுக்கும் கட்டுப்படுகிறேன் என்று உறுதியளிக்கிறேன். 

மனித உரிமைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

PUHR அமைப்பு விதிகள்

முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தது போன்று, 2004 ஆம் ஆண்டளவில், கோவை நண்பர்களின் பொருட்டு PUHR க்காக உருவாக்கிய அமைப்பு விதிகளை பதிவில் ஏற்றுகிறேன்.

உறுப்பினர்:

 1. எந்தவிதமான ஆதிக்க சாதி அமைப்பிலோ, பெரும்பான்மைவாத அமைப்பிலோ உறுப்பினராக இல்லாதவர், சமூக விரோத செயல்பாடுகளிலோ பால் வன்முறைகளினோடோ தொடர்பில்லாதவர் உறுப்பினர் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
 2. மேற்கண்ட வகைகளில் தொடர்புடையவராகத் தெரியவருபவர் உறுப்பினர் தகுதிலியிருந்து உடனடியாக நீக்கப்படுவார்.
 3. இவ்வகையில், குறைந்தது ஐந்து வருட காலம் முற்றிலுமாக துண்டித்துக் கொண்டவர் என்று உறுதியாக தெரியும்பட்சத்தில் உறுப்பினராக இணைத்துக் கொள்வது பரிசீலிக்கப்படும்.
 4. உறுப்பினர்கள் தம்மால் இயன்ற அளவிலான ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர நன்கொடையாகத் தரவேண்டும். ஒரு வருட காலம் தாம் ஒப்புக்கொண்ட நன்கொடையைத் தராமல் இருப்பவர், உறுப்பினராக இருக்க விருப்பமில்லாதவராகக் கருதப்பட்டு நீக்கப்படுவார்.
 5. உறுப்பினர் அட்டை பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் அதற்குரிய கட்டணத் தொகையையும் செலவினத் தொகையையும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எவருக்கு உறுப்பினர் அட்டை வழங்குவது என்பதை செயற்குழு முடிவு செய்யும். உறுப்பினர் அட்டையைப் பெறுபவர் எந்த வகையிலும் அதைத் தவறான வழிகளில் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தியதாக அறியப்பட்டால் உடனடியாக அட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.
 6. உறுப்பினர் எவரும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். கருத்துக்களையும் விமர்சனங்களையும் சுதந்திரமாக பகிர்ந்துகொள்ளலாம். என்றாலும், வாக்களிக்கும் உரிமை, தொடர்ந்து மூன்று முறை பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே உண்டு.
 7. உறுப்பினர் எவரும், பொறுப்புகளில் உள்ள எவரும், தமது தனிப்பட்ட நலன்களுக்காக (பணம், புகழ்) உறுப்பினர் தகுதியையோ பொறுப்பையோ வளைக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அங்ஙனம் ஈடுபடுவாராயின் உடனடியாக பொறுப்பில் இருந்தும் உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்படுவர்.
 8. அமைப்பின் செயபாடுகள் எதிலும் தம்மால் இயன்ற அளவு பங்குகொள்ள விரும்பும் உறுப்பினர் எவரும் வரவேற்கப்படுவர்.
 9. அமைப்பின் ஆவணங்கள், செயல்பாடுகள் அனைத்தும் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, பொதுமக்கள் எவருக்கும், எப்போதும் பார்வைக்கும் பரிசிலனைக்கும் உரியவை.

பொதுக்குழு:

 1. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவசியம் கூடவேண்டும்.
 2. தொடர்ந்து மூன்று பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்பவர் பொதுக்குழு உறுப்பினராக கொள்ளப்படுவர்.
 3. அமைப்பின் பொதுவான திசைப்போக்கை முடிவு செய்யும் குழுவாக செயல்படும்.
 4. அமைப்பின் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்குகொள்ளும் பொதுக்குழு உறுப்பினர்கள், சூழல் – தேவைகளையொட்டி, செயற்குழுவிற்கோ அல்லது அது அமைக்கும் தற்காலிக/குறிப்பான அமைப்புகளுக்கோ தேர்வு செய்யப்படலாம்.
 5. பொதுக்குழுவே செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யவும் நீக்கவும் அதிகாரம் கொண்டது. அசாதாரணச் சூழல்களில் செயற்குழுவே தன் உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்யலாம். ஆனால், அதற்கும் மூன்றில் இருபங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்படவேண்டும். நீக்கத்தை உறுதி செய்யும் இறுதி முடிவு பொதுக்குழுவிலேயே எடுக்கப்பட வேண்டும்.
 6. அமைப்பு விதிகள், பொதுவான செயல்போக்கு குறித்த முடிவுகள் பொதுக்குழுவிலேயே எடுக்கப்பட வேண்டும். சூழல்களையொட்டி செயற்குழு இவற்றில் கொண்டுவரும் மாற்றங்கள் பொதுக்குழுவின் பரிச்சிலனைக்குரியவை; தற்காலிகமானவையாகவே கருதப்படும்.
 7. பொதுக்குழு உறுப்பினர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் விமர்சனங்களை வைக்கவும் எப்போதும் முழுச்சுதந்திரம் உண்டு.

செயற்குழு:

 1. உறுப்பினர் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சமாக ஐவரும் அதிகபட்சமாக பதின்மூவரும் இருக்கலாம்.
 2. செயலாளர், இணைச் செயலாளர், பிற பொறுப்புகள் அனைத்தும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களிற்கொருமுறை சுழற்சி முறையில் கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.
 3. குறைந்தது மாதம் ஒருமுறை அவசியம் கூடவேண்டும்
 4. குறைந்தது மூன்றில் இருபங்கு எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கூடினாலே செயற்குழு கூடியதாகக் கொள்ளப்படும்.
 5. தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்குபெற முடியாமல்/இயலாமல் போன உறுப்பினர்கள் செயற்குழுவிலிருந்து விலகியதாகக் கொள்ளப்படுவர்.
 6. செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள், குறைந்தபட்ச பெரும்பான்மை ஒப்புதல் பெற்றவையாக இருக்க வேண்டும். முடிவுகளில் ஒப்புதல் இல்லாத மற்ற உறுப்பினர்கள் அவற்றை நடைமுறையாக்குவதில் கட்டாயம் ஈடுபட்டேயாக வேண்டும் என்ற அவசியமில்லை.  குறைந்தது அவற்றுக்கெதிராக செயல்படாமல் பொறுத்துப் பார்த்தல் அவசியம்.
——————————————–

விளக்கக் குறிப்புகள்:

அச்சமயம், சமூக – அரசியல் வெளியில் செயல்படுவதைத் தமது குறுகிய சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதீதமாகப் பெருகியிருந்தது என்ற அவதானத்தையொட்டி, அதைத் தவிர்க்கும் நோக்கில் சில விதிகளை வடித்திருந்தேன். எனது செயல் அனுபவங்களும் இயக்க வடிவங்கள் குறித்தான எனது கோட்பாட்டுப் புரிதல்களும் சில விதிகளை வைக்க உதவின. அவை பின்வருமாறு:

உறுப்பினர் விதிகள் 1 – 3: மதவாத அமைப்புகளின் ஊடுருவல் அதிகமாகிவிட்டிருந்த நிலையில், மிகச்சாதாரண மக்களும் ஏதோவொரு கட்டத்தில் ஏதாவதொரு மதவாத அமைப்பில் குறைந்த அளவில் செயல்பட்டிருந்த நிலைமையைக் கணக்கில் கொண்டு உருவாக்கியது.

உறுப்பினர் விதி 5,7: சமூக – அரசியல் வெளிகளில் சுயநலமிகளின் பெருக்கத்தைக் கண்டு அவர்களது ஊடுருவலைத் தடுக்கும் நோக்கிலானது.

பொதுக்குழு விதிகள் 3,5,6: செயற்குழுவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கிலானவை.

செயற்குழு விதி 2: தலைமைப் பண்பு ஒருவரிடத்தில் மட்டுமே முடங்கியிருப்பது இயக்கங்களின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. அத்தகைய முடக்கத்தில் இருந்து விடுபட, பலருக்கும் தலைமைப் பண்பை வளர்க்கும் நோக்கிலானது. மேலும், ஒரு நபர் தலைமை – சுயபிம்ப உருவாக்கத்தைத் தவிர்க்கும் நோக்கிலானதும் கூட.

செயற்குழு விதி 6: அமைப்புகள் குறித்த கோட்பாட்டுருவாக்கத்தில் Democratic Centralization என்பது பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுவது என்ற நோக்கு வலியுறுத்தப்படுவது. அதன் மோசமான விளைவுகளை பொதுவுடைமை இயக்க வரலாறுகள் காட்டும். அதன் இறுக்கத்தைத் தளர்த்தும் நோக்கிலானது இவ்விதி.

மற்றது, சில சிறு திருத்தங்கள் செய்திருக்கிறேன்.

மனித உரிமைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: