ரசனாவாத இலக்கியமும் வாசக அடிமைத்தனமும் திமுக மூடரும்

ஜெயமோகனின் “இப்படி இருக்கிறார்கள்”  கட்டுரையில் வரும் முக்கிய பாத்திரம் ஒரு தி.மு.க காரர். அண்ணாவின் நூல்களையும் கண்ணதாசனின் பாடல்களையும் விட்டால் அவருக்கு வேறு எதுவும் பேச இல்லை. அவை தாண்டி ”நவீன இலக்கிய வாசனையற்ற” ஒரு “முட்டாள்” தி.மு.க “அதிகப்பிரசங்கி”, நவீன இலக்கியத்தின் “சாதனையாளர்களை” நோக்கி அசட்டுத்தனமாக கேள்விகளைக் கேட்கிறார்.

ஜெயமோகனோ, இந்தியத் தத்துவ ஞான மரபையும், சங்க இலக்கியத்தையும், தெரிதாவில் இருந்து தொ. பரமசிவன் வரையிலும் நேரடியாக வாசிக்காமலேயே (மலையாளத்தில் எழுதப்பட்ட கோனார் நோட்ஸ்கள் மூலமாக வாசித்து) கரைத்துக் குடித்தும் திண்ணைப் பேச்சுகளில் அறிந்தும் கருத்து உதிர்ப்பவர். அவரது கட்டுரையின் பாத்திரமான திமுக – காரர் கேட்கும் அசட்டுத்தனமான கேள்விகளை விடப் பன்மடங்கு அசட்டுத்தனமான, குரூரமான, இந்துத்துவச் சார்பான கருத்துக்களை சகட்டு மேனிக்கு உதிர்த்துச் செல்பவர். அவை குறித்து எவர் எவ்வளவு தெளிவான, நியாயமான, அறிவுப்பூர்வமான கேள்விகளை தர்க்க நியாயங்களோடும் ஆதாரங்களோடும் எழுப்பினாலும் சட்டென்று கேள்வி கேட்பவர்களை நோக்கி பாய்ந்து நான்கு தாக்குதல்களைத் தொடுத்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல, அடுத்த “ஆராய்ச்சிக்” கட்டுரையை எழுதுவதில் முனைந்துவிடுபவர்.

அதாகப்பட்டது, எவ்வளவு அறியாமை கொண்ட ஆணவத்தில் நடந்து கொள்கிற நபரகாக அந்தத் திமுக-காரரைச் சித்தரித்திருக்கிறாரோ, அதன் பன்மடங்கு ஆணவ உருக்கொண்ட “ஆளுமை”.

அறியாமை சுடர் விட்டு ஒளிரும் இந்த “ஆளுமை”யின் பேதமையைக் குறிக்க சில எடுத்துக் காட்டுகள்.

இலக்கியம் தொடர்பாக: Meta – fiction என்பது தெரியாமல், Meta – novel என்று திருவாய் மலர்ந்தருளிய “எழுத்தாள மேதை”. (இது 2000 ஆண்டில்)  Epistemology என்ற புலம் எது குறித்தது என்பதும் அறியாதவர் – அச்சொல்லின் ஸ்பெல்லிங்கும் அறியாதவர் (இதுவும் 2000 ஆம் ஆண்டு).

Popular Literature என்பதை பரப்பிய இலக்கியம் என்றும் Populism என்பதை ”பரப்பியம்” என்றும் பரப்பிய பெரும் மேதை. பொன்னியின் செல்வன் நாவலை “பரப்பிய இலக்கியத்திற்குள்” வரும் “க்ளாசிக்” எனும் அளவிற்கு இலக்கிய ரசனை முற்றியவர். (இது 2010 இல்) இந்தப் பத்து வருடங்களில் இவரின் இலக்கிய ரசனை மாறவேயில்லை. அந்த அளவிற்கு அறியாமை எனும் சுடரொளியை தன் ஆன்மாவிற்குள் கரைத்துக் கொண்டவர்.

மிருகங்களுக்கும் ஆன்ம நெருக்கடி உண்டாகும் என்பதை முதன் முதலாக உலகுக்கு உய்த்தியவர். (இது சில நாட்களுக்கு முன்பாக)

நாட்டாரியலுக்கும் வரலாற்று ஆய்வுகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர். ”தமிழகத்திலே இப்ப இருக்கிற பெரிய ஹிஸ்டாரியன்” என்று நாட்டாரியல் ஆய்வாளர் அ. கா. பெருமாளுக்கு சர்ட்டிபிக்கேட் தரும் அளவு அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்த மாமேதை. தான் மதிக்கும் வரலாற்று ஆய்வாளர்களாகச் சில வருடங்களுக்கு முன்பாக இவர் தந்திருந்த ஆசிரியர் பட்டியலை வாசித்து மூர்ச்சையடைந்த விபத்தும் எனக்கு நேர்ந்திருக்கிறது.

இன்னும் பலப்பல எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், ஜெயமோகன் எதற்கும் அசரமாட்டார். “ஆன்ம தரிசனத்தில்” அவர் மூழ்கி எடுக்கும் கழிவுகளை தமிழ் எழுத்து உலகின் மீதும் வாசகர்கள் மீதும் வாறி இறைத்து திரும்பிப் பார்க்காமல் நடைபோட்டுக் கொண்டே இருப்பார்.

அவர் உதிர்த்துச் செல்லும் அபிப்பிராய முத்துக்களின் மூலம்  பற்றிச் சுருக்கமாகக் கூறுவதென்றால் இரண்டு புள்ளிகளைக் குறிப்பிடலாம்.

முதலாவதாக, ஜெயமோகனின் அறிவுத்துறை ”விசாலத்தின்” எல்லையானது தெரிதாவில் இருந்து தொ. பரமசிவன் வரையில் அவர்களது எழுத்துக்கள் எதையும் வாசிக்காமலேயே இலக்கியத் திண்ணைப் பேச்சுகளில் கேட்ட செய்திகளையும் மலையாள கோனார் நோட்சுகளில் வாசித்தவற்றையும் தமிழில் உதிர்ப்பது என்ற அளவில் நிற்பது.

இரண்டாவது, அவருடைய இலக்கிய ரசனை மூலவர்கள், அவரே ஒப்புக் கொண்டிருப்பதிலிருந்து ரசிகமணி டிகேசியும் கல்கியும். அவர்களின் தற்காலத்தைய அவதாரமே ஜெயமோகன். டிகேசியின் கம்பரசக் கதாகாலட்சேப வகைப்பட்ட இலக்கிய ரசனையின் அடியாக, அவரது அடிப்பொடியாக எழுதிய (தமிழ் இசை “ரசனையை உருவாக்குவதில் பெரும் பங்கு ஆற்றிய) தலையணை நாவல்களை எழுதிக் குவிப்பதையே பெரும் சாதனையாக நினைத்துக் கொண்டிருந்த கல்கியின் மிகச் சரியான வாரிசு.

ஜெயமோகனை உச்சிமுகர்ந்து கொண்டாடும் வாசகர்களின் எல்லையும் கல்கி வாசகர் வட்ட எல்லையே. அவர்கள், கல்கியை விளாசி அக்காலத்தில், புதுமைப்பித்தன் எழுதிய “ரஸ மட்டம்” கட்டுரையை வாசிப்பது நல்லது.

தமிழில் இறக்குமதி செய்யப்பட்ட பின் – அமைப்பியல் விமர்சனம்  ரசனாவாத இலக்கிய நுகர்வின்  சாதகமான சில அணுகுமுறைகளையும் சேர்த்து வீழ்த்தி “குடலாபரேஷன்”  அணுகுமுறையாகத் தமிழ் இலக்கிய விமர்சன உலகில் வைக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அத்தகைய “குடலாபரேஷன்” அணுகுமுறையின் எதிர் விளைவாகத்தான் ஜெயமோகன் இன்று மேலும் வலுவாக ரசனாவாத இலக்கிய அணுகுமுறையை முன்வைப்பதும் அதற்கு வாசகர்களிடத்தில் வரவேற்பு கிடைப்பதும். புதுமைப்பித்தனின் “ரஸ மட்டம்” கட்டுரையின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு, ரசனாவாத அணுகுமுறையின் சில சாதக அம்சங்களையும் எடுத்துக் கொண்டு, பின் அமைப்பியல் நோக்கை மறுவரையறை செய்ய வேண்டிய தேவை இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது என்பது எனது எண்ணம்.

ஜெயமோகனின் கட்டுரையில் அவரது வழமையான திராவிட இயக்க எதிர்ப்பு காழ்ப்புணர்வு அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. அதற்காகவே எழுதப்பட்ட கட்டுரை. இதில் சப் – டெக்ஸ்டாக, திராவிட இயக்கத்து கருத்தியலாளர்கள், செயல்பாட்டாளர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் என்ற விஷ ஊசியும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு நைச்சியமான ஜால்ராவும் அடிக்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக, ஜெயமோகனின் ரசனாவாத இலக்கிய அணுகுமுறையும் வாசகர்களிடத்தில் அவர் கோரும் கேள்விக்கு இடமற்ற பற்றுறுதியும் (அடிமைத்தனம் என்று சொன்னால் பலருக்கு அதீதமாகப் படலாம் என்பதால் பற்றுறுதி என்கிறேன்) எத்தகைய வகைப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு எடுத்துக் காட்டைத் தருவது உதவியாக இருக்கும்.

ஜெயமோகன் காழ்ப்பைக் கக்கும் அதே திராவிட இயக்கத்தைச் சேர்ந்த,  – குறிப்பாக திமுக சாய்வு கொண்ட, ஒரு தமிழ் இலக்கண ஆய்வாளரின் நூலில் இருந்து இந்த விவரிப்பைச் சற்று எளிமைப்படுத்தித் தருகிறேன். நூலாகப்பட்டது, திரு. மு. வை. அரவிந்தன் அவர்கள் எழுதிய ”உரையாசிரியர்கள்”.

தமிழ் இலக்கண நூல்களுக்கு உரை நூல்கள் எழுதுவது தமிழ் இலக்கண மரபின் நீண்ட வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு காரணிகளால் (சமணத்தின் மீதான தாக்குதல், தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், மேலும் பல காரணிகள்) அவசியமாக இருந்தது. அவ்வாறு எழுதப்பட்ட உரை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படுவது (உண்மை இல்லை எனினும்) ”இறையனார் அகப்பொருள்” என அழைக்கப்பெறும் உரை நூல். இறைவனால் எழுதப்பட்ட நூல் என்பது தொன்மம் (திருவிளையாடல் தருமிக்கு மண்டபத்தில் பாட்டெழுதிக் கொடுத்துவிட்டு இறைவனாரான சோமசுந்தரக் கடவுள் செய்த அடுத்த வேலை இந்த உரையை எழுதியதாம்).

அவ்வுரைக்கு உரை எழுதப்பட்டது குறித்தும் ஒரு தொன்மக் கதை இருக்கிறது.

பாண்டிய மன்னனின் வேண்டுதலுக்கு இணங்கி இறைவனார் சோமசுந்தரக் கடவுளானவர், “அகப்பொருள்” உரையை எழுதிக் கொடுத்த பிறகு, அதற்கு ஒரு சிறந்த உரையை எழுதித் தருமாறு, பாண்டிய மன்னன் தனது புலவர்களிடத்தில் வேண்டினான். அவன் வேண்டுதலுக்கு இணங்கி சங்கப் புலவர்கள் யாவரும் ஆளுக்கொரு உரை எழுதினர். ஆனால், அவற்றுள் எது சிறந்த உரை என்ற கருத்தொருமிப்பு உருவாகவில்லை. அவரவர் உரையே சிறந்தது என்று ஒவ்வொருவரும் வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, இறைவனாகப்பட்டவர், அசிரீரியாக பின்வருமாறு கூறுகிறார். அவ்வூர் உப்பூரி குடிகிழார் என்பவருக்கு உருத்திரசன்மன் என்று ஒரு மகன் இருக்கிறான். செவி கேளாத ஊமை அவன் (பேசவியலாமையோடு கேட்கும் திறனும் இருக்காது). குமார தெய்வத்தின் அவதாரம். ஒரு சாபத்தினால் இவ்வாறு பிறந்திருக்கிறான். அவனை தீர்ப்பாசனத்தில் அமர வைத்து, அவன் முன்பாக, ஒவ்வொரு புலவரும் தமது உரையை வாசிக்கட்டும். சிறந்த உரை வாசிக்கப்படும் போது, அவன் மெய்சிலிர்த்து குடம் குடமாய் கண்ணீர் வார்ப்பான். சாதா உரை என்றால் உணர்ச்சியற்று இருப்பான். அதிலிருந்து கண்டு கொள்க என்கிறார்.

அவ்வாறே மன்னனும் புலவர்களும் செய்கின்றனர்.

புலவர்கள் ஒவ்வொருவராக தமது உரைகளை வாசிக்க, மதுரை மருதனிளநாகனார் எனும் புலவர் தமது உரையை வாசிக்கும்போது, அந்த ஊமைச் சிறுவன், சில இடங்களில் மெய் சிலிர்த்து கண்ணீர் விடுகிறான். நக்கீரனார் தமது உரையை வாசிக்கும்போது, ஒவ்வொரு பதந்தோறும் கண்ணீர் வார்த்து மெய் சிலிர்க்கிறான். நக்கீரனார் உரையே சிறந்த உரை என்று தேர்வு செய்யப்படுகிறது.

இத்தொன்மம், ஆசிரியன் – உரையாசிரியன் (விமர்சகர்) – வாசகன் என்ற எழுத்து – வாசகத் தொடர்ச்சி நிலை குறித்து நூற்றாண்டுகளாக தமிழ் இலக்கிய மரபில் நிலவி வந்திருக்கும் – ஆதிக்கத்தில் இருந்திருக்கும் கருத்து நிலையைக் குறிப்பால் உணர்த்துகிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆசிரியனின் எழுத்தை சாதாரண வாசகனால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது. அதை விளக்கப்படுத்தும் பணி உரை ஆசிரியனுக்குரியது (விமர்சகருக்கு). உரை ஆசிரியனால், விளக்கபெறும் பிரதியை காது கேளாத, வாய் பேச இயலாத வாசகன் உணர்ந்து, குடம் குடமாகக் கண்ணீர் உகுத்து, மெய்சிலிர்த்து உணர்ச்சிவயமாக நுகர வேண்டும்.

இம்மரபின் தொடர்ச்சிதான் டிகேசி-யும் அவரது வாரிசான கல்கி-யும். இவர்களின் தற்காலத்தைய அவதாரம்தான் ஜெயமோகன். ஒரு சிறிய கூடுதல் விஷயம்  என்னவென்றால், ஜெயமோகன் தனது “படைப்பு”கள் மட்டுமல்லாது பிறரின் படைப்புகளும் இப்படியாகத்தான் வாசிக்கப்பட வேண்டும் என்று “உரை” வாசிக்கும் வேலையையும் தனது பிறவி மோட்சக் கடமையாக மேற்கொண்டிருக்கிறார் என்பதுவே.

தமிழில் அட்டை காப்பியாக இறக்குமதி செய்யப்பட்ட ”குடலாபரேஷன்” அமைப்பியல் மற்றும் பின் – அமைப்பியல் எழுத்தாளர்களுமே இவ்வகையான போக்கில் இருந்து விடுபட்டவர்கள் அல்லர் என்பதற்கு எடுத்துக்காட்டு தமிழவன் தனது நாவலுக்கு தானே எழுதிய “பொழிப்புரை”.

ஜெயமோகனின் குரூரமான ரசனாவாத இலக்கிய அணுகுமுறையில் இருந்து விடுபடுவதோடு, அட்டை காப்பி பின் – அமைப்பியல் அணுகுமுறையின் “குடலாபரேஷன்” ஆய்வுகளில் இருந்தும் விடுபடவேண்டும் என்ற காத்திரமான அவசியம் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

மேற்கத்திய அறிவுச்சூழலில் உருவான கருத்தமைவுகளை உள்வாங்கிக் கொண்டு நமது சூழலுக்குப் பொருத்தமான கருத்தமைவுகளை உருவாக்கவேண்டிய மிகக்கடினமான பணியின் ஒரு கண்ணி அது.

Pleasure of the text – என்ற கருத்தாக்கம் முன்வைக்கும்  எழுத்துடனான வாசக உறவுக்கும் ரசனாவாத இலக்கிய அணுகுமுறை முன்வைக்கும் உணர்ச்சித் ததும்பலுக்கும் பல மைல்கள் இடைவெளி உண்டு. அது ஜெயமோகனுக்குப் புரியவே புரியாது. பின் – அமைப்பியல் விமர்சனத்தை காப்பி – பேஸ்ட் செய்த அதிநவீன மேதாவிகளுக்கும் பிடிபடவில்லை.  அதனால்தான் அவர்கள் ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” நாவல் நோபல் பரிசு பெறத்தக்கது என்று பாராட்டினார்கள். இன்னும் பல கழிவுகளையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். குடலாபரேஷனும் செய்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் புனைவு எழுத்துகளுக்கு தாமே நோட்ஸுகளும் அருளிக் கொண்டிருக்கிறார்கள்.

———

குறிப்பு: திமுகவின் அரசியல் நிலைப்பாடுகளின் சந்தர்ப்பவாதம், திருகுத்தனம் குறித்தான எனது விமர்சனங்கள், இங்கு குறித்திருப்பவற்றால் சமரசம் செய்து கொள்ளப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படக்கூடாது.

%d bloggers like this: