“ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு பாலக்காடு கல்பாத்தி ரோட்டில் ஒரு ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஈழவர் ஸ்ரீ சங்கரன் என்பவர் சர்க்கார் வேலையாக பைசைக்கிள் மீது சென்றதற்காக அவ்வீதியில் உள்ள ஒரு பார்ப்பனர் அவரைத் தடுத்து நிறுத்தி மிரட்டி ரோட்டிற்கு புண்ணியார்ச்சனையையும் கும்பாபிஷேகமும் செய்ய 15 ரூபாய் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி வண்டியையும் மேல் வேஷ்டியையும் பிடுங்கி வைத்துக் கொண்டதற்காக,” போலீசார் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து 30 ரூபாய் அபராதமும் விதித்தார்கள் என்று 13.03.1927 தேதியிட்ட ”குடி அரசு” துணைத் தலையங்கத்தில் எழுதுகிறார் பெரியார். விஷயம் அதோடு முடிந்துவிடாமல் உயர்நீதிமன்றம் வரை மேல்முறையீட்டிற்குச் சென்று தண்டனை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
90 ஆண்டுகள் கழித்து காட்சிகள் மாறியிருக்கின்றன. கோலம் மாறவில்லை. பைசைக்கிள் டாக்சியாக மாறியிருக்கிறது. அக்கிரஹாரத்தை சேர்ந்தவர்களே பிரச்சினைக்கு மூலகாரணமாக இன்றுவரையிலும் தொடர்ந்து இருக்கிறார்கள்.
பிரச்சினை பொது வெளியில் மையம் கொண்டிருக்கிறது.
அனைத்துச் சமூகப் பிரிவினருக்கும் சமமான உரிமையுள்ள, அனைவரும் சமமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ள அவசியச் சேவைகள், கேளிக்கைச் சேவைகள் அவற்றை அளிக்கும் மையங்கள் அனைத்தையும் பொது வெளி என்கிறோம். அரசு அலுவலகங்கள், பயணச் சேவைகள் (இரயில், பேருந்து, பிறத் தனியார் வாகன சேவைகள்), தனியார் சேவை நிறுவனங்கள், (வங்கி, காப்பீடு, தொழில்துறை, இன்னபிற), கேளிக்கை வெளிகளான, சினிமா தியேட்டர்கள், கலையரங்கங்கள், பிற பொழுதுபோக்கு வெளிகள் இவை அனைத்திலும் அனைவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும், அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்கிறோம்.
இத்தகைய பொது வெளி நவீன ஜனநாயக அரசமைப்பின் நிர்வாக அலகுகளின் விரிவாக்கத்துடன் இணைந்தே படிப்படியாக உருவாகிறது. ஜனநாயக அரசின் அடிப்படைகளில் ஒன்றான வாக்குரிமை, வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையாக விரிவடைவதோடு சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்துப் பொது வெளிகளிலும் பொதுவான உரிமை உண்டு என்ற கருத்தும் நடைமுறையும் வலுவாக ஊன்றிவிடுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் இந்தப் பொது வெளி உருவான அரசியல் வரலாற்றை ஹேபர்மாஸ், தாமஸ் பிரிட்ஜஸ் போன்ற ஆய்வாளர்கள் விரிவாக விளக்கி எழுதியுள்ளனர்.
ஜனநாயக அரசமைப்போடு சேர்ந்து உருவாகும் இத்தகைய பொது வெளியும், பொது உரிமைகளும், சாதிய உயர்வு – தாழ்வு கற்பிக்கும் சமூகமும் ஆணை அதிகாரத்தின் அடிப்படையில் அமைந்த அரசமைப்பும் / ஆட்சிமுறையும் வழங்கும் வரையறுக்கப்பட்ட குறுகிய உரிமைகளுக்கு மாறாக, பரந்த அளவிலான உரிமைகளை, மிகப் பரந்த அளவிலான மக்களுக்குப் பெயரளவிலாவது அளிப்பவை. ஒப்பீட்டளவில் மிகுந்த ஜனநாயகப் பூர்வமானவை.
இத்தகைய பொது வெளியும் பொது உரிமைகளும் நமது சூழலில் ஆங்கிலேயர் ஆட்சியின்போதே படிப்படியாக உருவானவை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக, தமிழகத்தில் அனைத்துப் பிரிவினரும் சரிசமமாக சந்தித்துக் கொள்ளக்கூடிய பொது வெளி என்பதே இருக்கவில்லை. கோயில், அதை ஒட்டி அமைந்த அக்கிரஹாரம், அதற்குப் புறத்தே இருந்த ஊர், ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சேரி என்றே வெளிகள் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தன.
ஆங்கிலேயர் ஆட்சி, அதன் நிர்வாகத் தேவைகளுக்காக அரசு நிர்வாக அலுவலகங்களை நிறுவ முற்பட்டபோது, ஆங்கிலேயக் கல்வி பெற்று அரசாங்க அலுவலர்களாக பொறுப்பேற்கும் வசதியும் வாய்ப்பும் பெற்றிருந்த “உயர்ந்த” சாதிப் பிரிவினர் அந்த அலுவலகங்கள் தாம் வசிக்கும் இடங்களில் இருக்கும்படியாகவே பார்த்துக்கொண்டனர். எடுத்துக்காட்டாக, தபால் அலுவலகங்கள் அக்கிரஹாரங்களிலேயே திறக்கப்பட்டன. ஊரில் வசதி படைத்த பிற ஆதிக்க சாதியினரும் சேர்த்து செலுத்திய வரிப்பணத்தில் போடப்பட்ட சாலைகளும்கூட அக்கிரஹாரத்திலேயே போடப்பட்டன. இவற்றில் நடக்கும் உரிமை வரி செலுத்திய வசதி படைத்தப் பிற ஆதிக்க சாதியினருக்கும்கூட மறுக்கப்பட்டிருந்தது.
சுருங்கக் கூறினால், அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவானவையாக இருக்க வேண்டிய அரசு அலுவலகங்கள்கூட ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே சேவையை வழங்கக்கூடிய தனி உரிமையாகவே நமது சூழலில் உருப்பெற்றன. அத்தகைய தனி உரிமைகளை எதிர்த்து பொது உரிமைக்காகத் தலித்துகள் மேற்கொண்ட போராட்டங்களை முனைவர் கோ. ரகுபதி “தலித் பொதுவுரிமைப் போராட்டம்” என்ற தமது நூலில் மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.
ஸ்ரீ சங்கரனுக்கு நிகழ்ந்தது போன்றதொரு நிகழ்வை முனைவர் கோ. ரகுபதியும் தமது நூலில் குறித்திருக்கிறார். 1879 ஆம் ஆண்டு, தீயர் சாதியைச் சேர்ந்த துணை நீதிபதி ஒருவர், கல்பாத்தி அக்கிரஹாரம் வழியாகக் குதிரை வண்டியில் சென்றபோது, அதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத கல்பாத்தி அக்கிரஹாரத்து பிராமணர்கள் அவரைத் தாக்கியிருக்கிறார்கள். அதற்காக, பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையும்கூட நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
அரசு / பொது ஊழியர்கள், அனைவருக்குமான பொது வெளியில் தமது பொது வேலையை செய்வது கூட, அவர்களுக்குக் ”கீழான” சாதியை சேர்ந்தவர்களாக இருந்தால், தமது தனி உரிமையில் தலையிடுவதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையே இந்த இரண்டு வரலாற்றுச் சம்பவங்களும் காட்டுகின்றன.
1879 ஆம் ஆண்டிலும், 1927 ஆம் ஆண்டிலும் ஆங்கிலேய அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஜனநாயக ஆட்சியமைப்பின் நிர்வாக அலகுகள் முழுமையாக உருப்பெற்றிருக்கவில்லை. 1950 ஆம் ஆண்டு, இந்திய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டதும், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டதும், நவீன ஜனநாயக ஆட்சி அமைப்பின் நிர்வாக அலகுகள் விரிவாக்கப்பட்டதும், பொது வெளியையும் பொது அலுவலகங்களையும் அவற்றுக்குள் எல்லாச் சமூகப் பிரிவினரும் புழங்குவதற்கான பொது உரிமையையும் ஒரு காற்றாற்று வெள்ளம் போலத் திறந்துவிட்டுவிட்டன.
இப்புதிய சூழலில், பொது வெளியையும் பொது உரிமைகளையும் (தமது பழைய ஆணை அதிகாரத்தையும்) தனி உரிமைகளாக கோரமுடியாத பிராமணர்கள் இரண்டுவிதமான உத்திகளை கைக்கொண்டதை அவதானிக்க முடிகிறது. இரண்டும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக இருப்பதையும் காண முடிகிறது.
முதலாவது, தமக்கான புதிய வெளிகளை உருவாக்கி, அவற்றைத் தமக்கே உரிய தனி உரிமையுள்ள பொது வெளியாக முன்னிறுத்துவது. இரண்டாவது, சமூகத்தின் பிற பிரிவினருடைய பொது உரிமைகளைக் குற்றச் செயல்களாகச் சித்தரிப்பது.
சிறந்த எடுத்துக்காட்டுகளாக, 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய விலங்குகள் நல வாரியத்தையும் 1964 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ப்ளூ க்ராஸ் அமைப்பையும் குறிப்பிடலாம்.
1936 ஆம் ஆண்டு கலாக்ஷேத்ராவை நிறுவி, புகழ் பெற்ற பரத நாட்டியக் கலைஞராக பெயர் பெற்ற ருக்மணி தேவி அருண்டேலே 1962 இல் விலங்குகள் நல வாரியம் உருவாகக் காரணமாக இருந்தவர்.
1964 ஆம் ஆண்டு ப்ளூ க்ராஸ் அமைப்பை உருவாக்கியவர்கள் கேப்டன் சுந்தரம் என்பவரும் அவரது மனைவி உஷாவும். அவர்களுக்குப் பிறகு ப்ளூ கிராஸை நீண்ட காலமாக நிர்வகித்து வழிநடத்தி வருபவர் அன்னாரது மகன் சின்னி கிருஷ்ணன். இவர் ருக்மணி அருண்டேலுடன் விலங்குகள் நல வாரியத்திலும் இணைந்து செயல்பட்டவர். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுவதற்கு முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர். விலங்குகள் நல வாரியத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருபவர்.
இவரது மனைவி நந்திதா கிருஷ்ணன் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் உறுப்பினர்களில் ஒருவர். திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகப் பதவி வகித்த சர். சி. பி. ராமசாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி. சர். சி. பி. ராமசாமி ஐயரோ திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்த கடைசி வருடங்களில் கொலை முயற்சிக்கு ஆளாகி பலமான கத்திக் குத்துக்களைத் தாங்கி உயிர் பிழைத்தவர்.
விலாசினி சொன்ன திகில் கதையைவிட நீண்ட மர்மக் கதைத் தொடராக விரியும் அந்த வரலாறு.
இங்கு நமது கவனத்திற்குரிய புள்ளி, தாம் மட்டுமே (தமது கருத்தியல் மேலாண்மையை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே) புழங்கக்கூடியதாக தனி உரிமை கொண்டாடக்கூடிய ஒரு வெளியை (பரதநாட்டியம் / கலாக்ஷேத்ரா – ப்ளூ க்ராஸ் / விலங்குகள் நல வாரியம்) உருவாக்கிக் கொண்டு, அதைச் சமூகம் முழுமைக்குமான பொது வெளியாக காட்டுவது ஒரு புறம். அதே சமயம், சமூகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொது வெளிகளில் கூடி மகிழ்ச்சியோடு கொண்டாடும் ஜல்லிக்கட்டு போன்ற பொது உரிமையைக் கிரிமினல் குற்றமாக்கிவிடும் போக்கு மறுபுறம்.
தமது தனி உரிமைக்கு ஆட்படாமல் இருக்கும் பிற பொது உரிமைகளை அவற்றின் போக்கில் விடுவதற்குக்கூட விரும்பாத இந்தக் குரூரம்தான் பொது வெளியில் புழங்க வரும் பிற சமூகத்தினரை கிரிமினல்களாகவும் அவர்களது பொது உரிமைகளை நாகரீகத்திற்குப் புறம்பான காட்டுமிராண்டிப் பண்பாடாகவும் குற்றமாகவும் காணச் செய்கிறது. விலாசினி ஓலா டாக்சி டிரைவரைக் கிரிமினல் என்று அழைப்பதும் நாணயத்தின் இந்த மறுபக்கத்தின் பிரதிபலிப்புதான்.
ஓலா பணத்திற்காக பயணம் செய்யும் சேவையை அளிக்கும் ஒரு தனியார் நிறுவனம். இது அனைவருக்கும் அனைத்து நுகர்வாளர்களுக்கும் பொதுவாக வழங்கப்படுவது. பணம் இருப்பவர்கள் அனைவருக்கும் பொது. பிறப்பின் அடிப்படையிலான எந்த ஏற்றத்தாழ்வுகளும் அதில் இல்லை. இருக்கவும் கூடாது (அவ்வாறு இருப்பின் அது சட்டப்படி குற்றமும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் அரசியல் சாசனத்திற்கும் எதிரானதும் ஆகும்).
ஓலா போன்ற ஒரு தனியார் நிறுவனமும், அதன் இணைப்பில் இருக்கும் கார் உரிமையாளர்களையும் டிரைவர்களையும் இதே நியதிக்கு உட்பட்டே அணுக வேண்டும். பணத்திற்காக அதன் சேவையைப் பெறும் நுகர்வாளர்களும் இந்த நியதிக்குக் கட்டுப்பட்டவர்களே. மேலும், நுகர்வாளர்கள் எஜமானர்கள் அல்லர்; பயனாளிகள் மட்டுமே. தமது இஷ்டப்படி பயணிக்க வேண்டுமென்று விரும்பினால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.
எந்தவிதமான பொது நியதிக்கும் கட்டுப்பட முடியாது; தன் இஷ்டப்படிதான் பொது சேவை கிடைக்க வேண்டும் / நடக்க வேண்டும் என்று விரும்புவது பொது வெளியின் பொதுவான உரிமைகளுக்கு எதிரானது.
அவ்வாறு தமது இஷ்டப்படி பொது சேவை நடக்கவில்லை என்ற ஆத்திரத்தில்தான் ஸ்ரீ சங்கரன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஸ்ரீ சங்கரன் அரசாங்க வேலையாக பைசைக்கிளில் சென்றிருக்கிறார். ஓலா டாக்சி டிரைவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நியதிகளுக்கு உட்பட்டு ஒரு பொது சேவையை அளித்திருக்கிறார். பொது வெளியில் புழங்கியதற்காக சங்கரன் ரோட்டிற்கு புண்ணியார்ச்சனையும் கும்பாபிஷேகமும் செய்யவென்று 15 ரூபாய் தண்டம் கட்டிவிட்டு, தனக்குச் சொந்தமான மிதிவண்டியை மட்டுமல்லாது கட்டியிருந்த வேஷ்டியையும் பறிகொடுத்திருக்கிறார். ஓலா டாக்சி டிரைவர், செய்த வேலைக்கான கூலியையும் பறிகொடுத்து (127 ரூபாய்), கொலை மிரட்டல் பழி சுமத்தப்பட்டு (இபிகோ செக்ஷன் 506 i) கிரிமினல் பட்டமும் சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்று வந்திருக்கிறார். 90 வருட கால இடைவெளிக்குப் பின்னரும் நடந்திருப்பது அதே கொடுமைதான்.
(முற்றும்).