தயிர்க்காரியும் தந்திரக்காரியும்

நவீன தமிழ் இலக்கியத்தின் சாபங்களில் ஒன்று கல்கியின் “பொன்னியின் செல்வன்”. வெகுஜன இலக்கியப் பிரச்சாரக் குழல்களால், தமிழின் ஆகச் சிறந்த படைப்பாக மீண்டும் மீண்டும் முன்னிறுத்தப்படும் ஆகப் பெரிய குப்பை. இதை நாடகமாகவோ திரைப்படமாகவோ ஆக்கிக்காட்டவேண்டும் என்ற அசட்டுக் கனா வெகுஜன சினிமாக் கலைஞர்களை நீண்ட காலமாக பீடித்திருக்கிறது. 

நல்ல காலமாக அக்கனா இன்றுவரை நிறைவேறாமலிருக்கிறது. காரணங்கள் பல உண்டென்றாலும் எனது அவதானிப்பில் இரண்டு முக்கியமானவை. முதலாவது, நாவலைத் திரைக்கதையாக மாற்றும் திறன் படைத்த திரைக்கதை ஆசிரியர்கள் நம்மிடையே இல்லை. இரண்டாவது, நாவலைத் திரைக்கதையாக மாற்றும்போது, நாவலில் இருந்து எதை எடுத்துக்கொள்ளவேண்டும் எதைத் தவிர்க்கவேண்டும் என்ற புரிதல், நாடக – சினிமா இயக்குனர்களிடத்தில் இல்லை. 

பொன்னியின் செல்வன் “நாவலோ” கல்கியின் வழக்கமான “வச வச வச” என்று அவசியமற்ற அசட்டு இழுத்தடிப்புகள் பக்கத்திற்குப் பக்கம் நிரம்பிய குப்பை. வாரா வாரம் எதையாவது எழுதி, பக்கத்தை நிரப்பியாக வேண்டிய கட்டாயத்தின் பேரில் எழுதப்பட்ட தொடர் கழிவு.  இன்றைய தொலைக்காட்சி மெகா தொடர்களின் முன்னோடி என்று கூறினால் மிகையாகாது. இந்த அசட்டுத்தனத்தைத்தான் வெகுஜன வாசகர்களும் நாடக – சினிமா இயக்குனர்களும் “பிரம்மாண்டம்” என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேடிக்கை. 

இந்தக் குப்பையை தொலைக்காட்சி மெகா தொடராக்கும் கனாவும் சில தொலைக்காட்சி நிறுவனங்களிடத்தில் உண்டு. அதன் பாற்பட்டு மற்றொருவர் என்னை அணுகியதில், தொலைக்காட்சி தொடர் என்பதை மனதில் வைத்து, நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் எழுதித் தந்த முன்னோட்டப் பிரதி (pilot episode – ஆக) இது.  வழக்கம்போல கிடப்பில் போடப்பட்டது.

கல்கியின் “வச வச வச” கழிப்பில் ஏறத்தாழ 80 சதவீதத்தைக் கழித்துக் கட்டி, இரண்டு அத்தியாயங்களை ஒன்றாகச் சுருக்கி எழுதியது. ஒப்பிட்டு வாசித்துப் பார்க்கலாம். இதற்கு மேலாக இந்தக் குப்பையைப் பட்டை தீட்டுவது சாத்தியமே இல்லை. 

 

பொன்னியின் செல்வன்

பாகம் 1 அத்தியாயம் 33 – 34

தயிர்க்காரியும் தந்திரக்காரியும்

 

பாத்திரங்கள்: சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவன், காவலர்கள், நந்தினி

இடம்: பழுவேட்டரையர்  விருந்தினர் மாளிகை வாசல், பழுவேட்டரையரின் தஞ்சாவுர் கோட்டை வீதிகள், நந்தினியின் லதா மண்டம்.

 

காட்சி 1 – விருந்தினர் மாளிகை வாசலில்

பாத்திரங்கள்: சிறிய பழுவேட்டரையர், வந்தியத்தேவன், படைவீரர்கள்.

சிறிய பழுவேட்டரையர் (வந்தியத்தேவனிடம்): இனி இங்கே உனக்கு எந்தவிதமான இடையூறுகளும் இராது. உனக்கு என்ன வேண்டுமோ, தாராளமாய்க் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

வந்தியத்தேவன்: நன்றி தளபதியாரே! இத்தஞ்சை நகரைச் சுற்றிப் பார்க்க ஆவலாய் இருக்கிறேன். பார்க்கலாம் அல்லவா?

சிறிய பழுவேட்டரையர்: தாராளமாக. (படை வீர்ர் இருவரைக் காட்டி) இவர்கள் இருவரும் உனக்கு எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டுவார்கள். கோட்டைக்கு வெளியில் மட்டும் போக வேண்டாம். மாலையில் கோட்டைக் கதவுகளை மூடிவிடுவார்கள். வெளியில் போய்விட்டால் திரும்ப இயலாது.

கூறிவிட்டு, இரண்டு வீரர்களுக்கும் கண்களால் எச்சரிக்கையாக இருக்கும்படி சமிக்ஞை செய்துவிட்டு மாளிகையின் ஒருபுறம் செல்கிறார். சிறிய பழுவேட்டரையரின் சமிக்ஞையை வந்தியத்தேவன் கவனித்துவிடுகிறான். புன்முறுவலித்துக்கொண்டே இரண்டு வீர்ர்களும் பின் தொடர மாளிகையை விட்டு வெளியேறுகிறான்.

  • dissolve –

காட்சி 2 – மாளிகைகளையும் பெரும் கடைவீதிகளையும் வேடிக்கை பார்த்தவாறு, இரண்டு வீரர்களிடமும் ”இது என்ன? அது என்ன?” என்று விசாரித்துக் கொண்டும், தப்பிக்க சந்தர்ப்பம் வாய்க்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டு தஞ்சைக் கோட்டையின் உட்புறம் வந்தியத்தேவன் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள்.

இறுதியாக, மூவரும் கோட்டை பிரதான வாயில் வீதியில் கடைகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் காட்சி.

அப்போது அப்பிரதான வீதியில் ஐம்பது பேர் கொண்ட வீரர் கூட்டம் முரசும் பேரிகைகளும் முழங்க, ஆர்ப்பரித்துக் கொண்டு, கடைகளில் உள்ள பொருட்களை அள்ளிக் கொண்டும் தள்ளிக் கொண்டும் கோட்டை வாசலை நோக்கி கும்பலாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டதும் தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் இரண்டு வீரர்களிடம் இருந்தும் தப்பித்துவிடும் உபாயம் தோன்றவே வந்தியத்தேவனின் முகம் பிரகாசம் அடைகிறது.

அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாதவனைப் போல பாவனை செய்து கொண்டு, இரண்டு வீரர்களையும் நோக்கித் திரும்பி,

வந்தியத்தேவன்: இது என்ன கூட்டம்?

வீரர்கள்: வேளக்காரப் படை!

வந்தியத்தேவன்: அப்படியென்றால்?

வீரர்கள்: அரசரின் சிறப்பு மெய்க்காவல் படையினர். அரசருக்காகத் தம் உயிரையும் விடத் துணிந்தவர்கள். தினமும் அரண்மனைக்குச் சென்று அரசரைத் தரிசித்துவிட்டு செல்வது இவர்களது கடமைகளில் ஒன்று. தளபதியாரின் அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். அரசரின் ஆணைக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். அந்தத் திமிர் இவர்களுக்கு நிறையவே உண்டு. (வெறுப்புடன்) உன்மத்தம் பிடித்துவிட்டால், வீதியில் இவர்களது கொட்டத்தைக் கேட்க ஆள் கிடையாது.

வந்தியத்தேவன்: (ஆச்சரியப்படுவதைப் போன்ற முகபாவத்துடன்) ஓ! இத்தகைய மகாபராக்கிரமசாலிகளின் பிரிவில் சேர்ந்து அரசருக்குப் பணியாற்றுவது பெரும் பேறாயிற்றே!

என்று கூறிக்கொண்டே அக்கும்பலோடு கும்பலாகக் கலந்து முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்று விடுகிறான். இரண்டு வீரர்களும் அவனைப் பின் தொடர முடியாது தவிக்கிறார்கள்.

வீரர் கூட்டம் வீதியில் முழக்கமிட்டுக் கொண்டும் ஆர்ப்பரித்துக் கொண்டும் முன்னே செல்ல, அக்கூட்டத்தில் ஒருவனாக வந்தியத்தேவனும் முழக்கமிட்டுக் கொண்டு கோட்டை வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறான். பின் தொடர்ந்து வரும் இரண்டு வீரர்களும் செய்வதறியாது விழித்துக் கொண்டே கூட்டத்தின் பின்னே வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது, வீதியில் எதிர்ப்புறமாக தயிர் விற்றுக் கொண்டு வரும் ஒரு பெண், வேளக்காரப் படையினரைக் கண்டதும் வீதியோரமாக ஒரு சந்து முனையில் ஒதுங்கி நிற்கிறாள்.

அவளைக் காணும் வேளக்கார வீரனொருவன் அவளை நோக்கிச் சென்று,

வேளக்கார வீரன்: ”அம்மா! தாகமாயிருக்கிறது! கொஞ்சம் தயிர் தருகிறாயா?” என்று குறும்பாகச் சீண்டுகிறான்.

தயிர்க்காரப் பெண்: (கோபமாக) ”தயிர் இல்லை. கன்னத்தில் இரண்டு அறை வேணுமானால் தருகிறேன்!” என்று சீறுகிறாள்.

அதைக் கேட்கும் இன்னொரு வேளக்கார வீரன், அவளை நோக்கி நெருங்கி, “ஓ! அதைத் தான் கொடுத்துவிட்டுப் போ!” என்று கூறியபடி, அவளது கரத்தைப் பிடிக்கச் செல்கிறான்.

பயந்துபோகும் அப்பெண், தயிர்க்கூடையை கீழேபோட்டுவிட்டு, கையை உதறிக்கொண்டு, சந்துக்குள் ஓடுகிறாள்.

வேளக்கார வீரர்கள் ஆர்ப்பரித்து சிரிக்கிறார்கள். நான்கைந்து வீரர்கள் ஆர்ப்பாட்டமாகச் சிரித்துக் கொண்டு அவளைத் துரத்திக் கொண்டு பின்னே ஓடுகிறார்கள்.

இதைக் கவனித்துக் கொண்டிருக்கும் வந்தியத்தேவன், அக்கூட்டத்தில் இருந்து சற்று தூரத்தில் நின்று தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் இரண்டு வீரர்களையும் கடைக்கண்ணால் கவனிக்கிறான். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது பார்வையில் இருந்து தப்பித்துவிட முடிவு செய்து, தயிர்க்காரியைத் துரத்திக் கொண்டு ஓடிய வேளக்கார வீரர்களின் பின்னே “ஓ! பிடி! விடாதே!” என்று கூச்சலிட்டுக் கொண்டே சந்துக்குள் நுழைந்து ஓடத்தொடங்குகிறான். கூட்டத்தின் பின்னே சற்றுத் தொலைவில் இருக்கும் இரண்டு வீரர்களும் செய்வதறியாது, பின் தொடர்ந்து செல்ல வழியில்லாது திகைத்து நிற்கிறார்கள்.

தயிர்க்காரியைத் துரத்திச் செல்லும் வீரர்களும் வந்தியத்தேவனும் இரண்டு மூன்று சந்துகள்வரை அவளைத் துரத்திச் செல்கிறார்கள். ஆனால், ஒரு சந்திற்குள் நுழைந்ததும் தயிர்க்காரி மாயமாக மறைந்துவிடுகிறாள். வீரர்கள் சுற்றுமுற்றும் நோக்கி, அவளைக் காணாமல் சலித்து, சிரித்துக் கொண்டு திரும்பச் செல்கிறார்கள்.

வந்தியத்தேவன் அவர்களைத் தாண்டி, மற்றொரு சந்துக்குள் நுழைந்து ஓடத் தொடங்குகிறான். சிறிது தூரம் ஓடியதும், யாரும் தன்னைப் பின் தொடரவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, நின்று, மெதுவாக நடக்கத் தொடங்குகிறான். இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கிறான். பொழுது சாயத் தொடங்குகிறது தன்னையும் அறியாமல் ஒரு முட்டுச் சந்தினுள் நுழைந்து, முட்டுச் சந்தின் சுவற்றின் மீது சாய்ந்து சரிந்து அமர்கிறான்.

இருள் கவிந்து, சந்திரன் மேலெழத் தொடங்குகிறது.

  • dissolve –

விண்மீன்கள் ஒளிரும் வானம். அரை நிலாவை மேகக் கூட்டம் ஒன்று கடந்து செல்கிறது.

சுவரில் சாய்ந்து உறங்கிவிட்ட வந்தியத்தேவன் திடும் என்று உறக்கம் கலைந்து அண்ணாந்து நோக்குகிறான்.

சுவருக்கு மேலிருந்து ஒரு மெல்லிய பெண் குரல் கேட்கிறது.

பெண் குரல்: ”ஏய்! தூங்கிவிட்டாயா? எத்தனை முறை கூப்பிடுவது? இதோ ஏணியை வைக்கிறேன். ஜாக்கிரதையாக ஏறிவா! என்று அழைக்கிறது.

வந்தியத்தேவன் முகத்தில் குழப்பம். என்றாலும், ”வீரர்கள் இல்லை; இப்போதைக்கு இங்கிருந்து அகன்றால் சரி” என்று நினைத்துக் கொண்டே ஏணியின் மேலேறிச் செல்கிறான்.

மேலேறிச் சென்று அப்பெண்ணின் முகத்தை உற்று நோக்குகிறான்.

பெண்: ”என்ன விழிக்கிறாய்! சீக்கிரம், ஏணியை இந்தப் பக்கம் வைத்துவிட்டு குதி!” என்று சொல்லிவிட்டு அப்பெண் சரசரவென்று மரக்கிளையில் இருந்து இறங்குகிறாள்.

வந்தியத்தேவன் ”இது யாருக்கு வைத்த ஏணியோ!” என்று மனதில் நினைத்துக் கொண்டே அவள் கூறியவாறே செய்கிறான்.

மதிலுக்கு அப்பக்கம் ஒரு தோட்டம் விரிகிறது. சற்று தூரத்தில் மங்கலான வெளிச்சத்தில் ஒரு மாளிகை இருப்பது தெரிந்தது.

அது யாருடைய மாளிகை என்று அவளிடம் கேட்க வாயைத் திறக்கிறான்.

அப்பெண் உஷ்! என்று அவனை எச்சரிக்கை செய்கிறாள்.

எச்சரிக்கை செய்துவிட்டு, மங்கலான நிலா வெளிச்சத்தில் ஒற்றையடிப் பாதையில் முன் செல்கிறாள். வந்தியத்தேவன் அமைதியாக அவளைப் பின் தொடர்ந்து செல்கிறான்.

சற்று தூரம் சென்றதும், ஒரு மரத்தினடியில் நின்று வந்தியத்தேவனை நோக்கித் திரும்புகிறாள். அக்கணம், காற்றின் அசைவில் மரக்கிளை அசைய நிலா வெளிச்சம் வந்தியத்தேவன் முகத்தில் படர்கிறது.

அப்பெண் சற்றே திகைத்து, சந்தேகத்துடன் அவனை உற்றுப் பார்க்கிறாள்.

வந்தியத்தேவன்: என்ன பார்க்கிறாய்?

பெண்: நீ நீதானா என்று பார்க்கிறேன்.

வந்தியத்தேவன்: நான் நான் இல்லாவிட்டால் வேறு யாராயிருப்பேன்? என்று முறுவலித்தான்.

பெண்: போன தடவை வந்திருந்தபோது பெரிய மீசை வைத்திருந்தாயே!

வந்தியத்தேவன்: என்னைப் போல சுவர் ஏறி குதித்து வருபவன் ஒரே வேஷத்தில் வர முடியுமா?

பெண்: முன்னைக்கு இளமையாய் தெரிகிறாயே?

வந்தியத்தேவன்: உற்சாகம் இருக்கையில் இளமை தானே வருகிறது!

பெண்: அப்படியென்ன உற்சாகம்?

வந்தியத்தேவன்: உங்கள் மகாராணியின் தயவு இருக்கும்போது உற்சாகத்துக்கு என்ன குறைவு?

பெண்: பரிகாசம் வேண்டாம். இன்றைக்கு எங்கள் எஜமானி இளைய ராணிதான். ஒருநாள் நிச்சயம் மகாராணி ஆவார்கள்!

வந்தியத்தேவன்: அதைத்தான் நானும் சொல்கிறேன்.

பெண்: ஏதேதேது! உன் மந்திர சக்தியால்தான் மகாராணி ஆனார்கள் என்று கூடச் சொல்வாய் போலிருக்கிறதே!

சொல்லிவிட்டு அப்பெண் அரண்மனையை நோக்கி மீண்டும் நடக்கத் தொடங்குகிறாள். முன்வாசலைத் தவிர்த்துவிட்டு, பின்புறவாசலையும் தவிர்த்துவிட்டு அம்மாளிகைக்கு அடுத்த தோட்டத்தினுள் நுழைந்தாள். அத்தோட்டத்தினுள் மங்கலான வெளிச்சத்துடன் ஒரு திறந்த வெளி மண்டம் விரிந்தது.

அப்பெண்ணைப் பின் தொடர்ந்து செல்லும் வந்தியத்தேவன் பின்வருமாறு தனக்குள் தீவிரமாக யோசிக்கிறான்: “இவள் சொல்லும் “இளையராணி” யார்? பழுவூர் இளையாரணியோ அல்லது மதுராந்தகத் தேவரை மணந்து கொண்ட சின்னப் பழுவேட்டரையரின் மகளோ? யாராயிருந்தாலும், ஒரு மந்திரவாதியை எந்த “இளையராணி” ஏன் இப்படி இரகசியமாகச் சந்திக்க வேண்டும்? தான் மந்திரவாதி இல்லை என்பதை என்னைக் கண்டதும் கண்டு கொள்ளும் “இளையராணி”யை எப்படிச் சமாளிப்பது?

மண்டபத்தை நெருங்கியதும் வந்தியத்தேவனை வாசலில் நிற்கும்படி கண்ணால் சமிக்ஞை செய்துவிட்டு, உள்ளே நுழைந்து மறைந்துவிடுறாள்.

வாசலில் நின்ற வந்தியத்தேவன் வலப்புறம் நோக்குகிறான். வலப்புறம் ஒரு மாளிகை. அதனுள் பல விளக்குகள் எரியப் பிரகாசமாக தோற்றம் தருகிறது. இடப்புறம் நோக்குகிறான். அப்புறம் நிலா வெளிச்சத்தில் இருளடைந்த மாளிகை ஒன்று இருப்பதும் தெரிந்தது.

அப்போது உள்ளிருந்து ஒரு குரல், “வரச்சொல்!” என்று கேட்டது.

அக்குரலைக் கேட்டதும் வந்தியத்தேவனுக்குத் தலைசுற்றத் தொடங்கியது.

அதிர்ச்சியடைந்த முகத்துடன் வந்தியத்தேவன் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான்: “சந்தேகமேயில்லை! இது பழுவூர் இளையராணிதான்!”

%d bloggers like this: