வாய்ப்பாட்டு மார்க்சியரின் அலுங்காத இந்திய எதிர்ப்பும் அமெரிக்க தீர்மானத்தின் சட்ட நுணுக்க அரசியலும்

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்திய அரசு நீர்த்து போகச் செய்த விடயம் உலகறிந்தது. தீர்மானம் நிறைவேறிய பிறகு இலங்கை அரசின் அமைச்சரவைப் பிரதிநிதி கெஹெலியா ரெம்புக்வேலா, தீர்மானத்தில் ஒரு முக்கியமான அழுத்தம் நீக்கப்பட்டதற்கு தமது அரசு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று அறிவித்தார்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அரசு துணைச் செயலாளர் ராபர்ட் ப்ளேக்கும், இத்தீர்மானத்தின் அம்சங்களை வடிவமைப்பதில் அமெரிக்காவுடன் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒத்துழைத்தது என்று அறிவித்தார். ஆக, பெயரளவில் அது அமெரிக்க தீர்மானமாக இருந்தாலும், இந்தியாவின் ஒத்துழைப்பின்றி அதன் அம்சங்கள் வரையறுக்கப்பட முடியாது என்பது தெளிவு.

இவ்வருடமும், தீர்மானத்தின் இரண்டாவது வரைவிலேயே மிக மோசமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசு இராணுவ நீக்கம் செய்யவேண்டும் என்று முதல் வரைவில் இருந்த பகுதியே நீக்கப்பட்டிருக்கிறது. மீண்டும், செப்டெம்பர் மாதம் வர இருக்கும் ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் அமர்வு வரையில் சிங்கள அரசுக்கு அவகாசமும் அனுசரணையும் வழங்கப்பட உள்ளது. கடந்த வருடமும் சிலர் அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கக்கூடாது என்றும் இந்திய அரசை எதிர்த்து போராடுவதே நமது வேலை என்றும் குட்டையைக் குழப்பினார்கள்.

இவ்வருடமும் அதே குழுவினர் அமெரிக்க தீர்மானத்தை எதிர்ப்பது நமது வேலை அல்ல. ”வலுவான” தீர்மானம் ஒன்றை ஐநா மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவரும்படி இந்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அத்திசையில் நமது போராட்டங்கள் இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். அத்தகைய வாதம் இந்திய அரசுக்கு எவ்வகையில் சாதகமானது என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில், அமெரிக்க தீர்மானத்தின் முக்கிய அம்சம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. அமெரிக்கா முன்மொழியும் தீர்மானம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இனப்படுகொலை என்ற வார்த்தையையே மிகக் கவனமாகத் தவிர்த்து வருகிறது. அவ்வாறு தவிர்ப்பதன் காரணம் என்ன? இனப்படுகொலை குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கில் தீர்மானம் இயற்றினால் ஏற்படும் பாரதூர விளைவுகள் யாவை?

1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிரான ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையின் முதல் பிரிவு, இனப்படுகொலையை தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கிறது. இரண்டாம் பிரிவு, இனப்படுகொலைக்கான வரையறையைத் தருகிறது. மூன்றாம் பிரிவு, இனப்படுகொலை தொடர்பாகத் தண்டனைக்குரிய செயல்கள் எவை என்று வரையறுக்கிறது. அவை பின்வருமாறு:

அ) இனப்படுகொலை

ஆ) இனப்படுகொலை செய்வதற்காகச் சதித் திட்டம் தீட்டுதல்

இ) இனப்படுகொலை செய்ய நேரடியாகவும் பகிரங்கமாகவும் தூண்டுதல்

ஈ) இனப்படுகொலை செய்ய முயற்சித்தல்

உ) இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல். (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide Adopted by Resolution 260 (III) A of the United Nations General Assembly on 9 December 1948.)

இப்பிரிவுகள் சிலவற்றின் முக்கியத்துவத்தையும் நுட்பத்தையும் புரிந்துகொள்வது அவசியம். பொதுவாக, அனைத்து நாட்டுச் சட்டங்களும், குற்றத்தைப் புரிந்தவரை முதன்மைக் குற்றவாளி என்று வரையறுக்கின்றன. இரண்டாம் நிலைக் குற்றவாளிகளாக, முதன்மைக் குற்றவாளியின் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தவர்களை வரையறுக்கின்றன. “உடந்தையாக” இருந்தவர்களுக்கான வரையறை என்பது குற்றத்தை இழைக்கத் துணைபுரிந்தவர்கள், திட்டம் தீட்டியதில் பங்குபெற்றவர்கள், குற்றத்தை இழைக்கத் தூண்டியவர்கள் எனப் பலப் படிநிலைகள் கொண்டது.

குற்றத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து இரண்டாம் நிலைக் குற்றவாளிகளான உடந்தையாக இருந்தவர்களுக்கான தண்டனையின் தீவிரம் மாறுபடும். மேலே குறித்துள்ள படிநிலை வரிசையில் அவர் எந்நிலையில் இருக்கின்றார் என்பதைப் பொறுத்து அவருக்கான தண்டனையின் தீவிரம் மாறுபடும். எடுத்துக்காட்டாக, கொலைக் குற்றத்தைச் செய்தவருக்கு, அவர் அக்கொலைக் குற்றத்தைச் செய்யப் போகிறார் என்று தெரிந்தே அதற்கான ஆயுதத்தைத் அளிப்பவருக்கு நிச்சயம் தீவிரமான தண்டனை கிடைக்கும். தெரிந்தே ஆயுதத்தைத் தந்தவருக்கும், அக்கொலையைச் செய்யத் திட்டமிடுவதில் பங்குபெற்ற – ஆனால், நேரடியாகக் கொலையைச் செய்யாத மற்றொருவருக்கும் இடையில் “உடந்தையின்” தன்மையில் வித்தியாசம் இருப்பதால், தண்டனையின் தீவிரத்திலும் வித்தியாசம் இருக்கும்.

இனப்படுகொலை குறித்தான சர்வதேசச் சட்டம் இதிலிருந்து மாறுபட்டது. சர்வதேசச் சட்டம் இனப்படுகொலையை “குற்றங்களில் எல்லாம் ஆகப்பெரும் குற்றம்” – “Crimes of Crimes” என்று வகைப்படுத்துகின்றது. இக்குற்றத்தை நிச்சயமாக ஒரு நபரால் மட்டுமே நிகழ்த்த முடியாது. பல்வேறு படிநிலைகளில் பல்வேறு நபர்கள், தரப்பினரின் ஒத்துழைப்பின்றி, பங்குபெறுதல் இன்றி இனப்படுகொலை நிகழமுடியாது. ஆகையால், அவ்வாறு பங்குபெறும் எந்த ஒரு நபரும், தரப்பும் தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறையோடு சர்வதேசச் சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இனப்படுகொலையைக் களத்தில் நிகழ்த்துபவர்கள் ஈழத்தில் நிகழ்ந்தது போல, மிகச் சாதாரணமான சிங்கள இராணுவ வீர்ர்களாக இருக்கலாம். அல்லது ருவாண்டாவில் நிகழ்ந்தது போல இராணுவ வீர்ர்கள் மட்டுமின்றி மிகச் சாதாரண அண்டை வீட்டுக்காரராகவும் இருக்கலாம். ஜெர்மனியில் யூத இனப்படுகொலையைக் களத்தில் நிகழ்த்திய மிகச் சாதாரணமான அரசு ஊழியர்களாகவும் இருக்கலாம். நடப்பில், பெரும்பாலான இனப்படுகொலைகள் இத்தகைய “சாதாரண” மனிதர்களாலேயே களத்தில் நிகழ்த்தப்படுகின்றது.

இனப்படுகொலையை நிகழ்த்தத் தூண்டுபவர்கள், திட்டமிடுபவர்கள், வழிநடத்துபவர்களோ களத்தில் இருந்து வெகுதொலைவில் இருப்பவர்கள். அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் நபர்கள் – ஜனாதிபதிகள், சர்வாதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், சிவில் உயர் அதிகாரிகள். இராஜபக்சே காய்கறி நறுக்குவதற்காகக் கூட தன் வாழ்நாளில் ஒருமுறைகூட கத்தியைப் பிடிக்காதவராக இருக்கலாம். ஹிட்லர் தனிப்பட்ட முறையில் ஆகப்பெரும் கோழையாக இருக்கலாம். ஆனால், இவர்களே இனப்படுகொலையின் சூத்திரதாரிகள்.

தேசியச் சட்டங்களின்படி நோக்கினால், இனப்படுகொலையைத் ”திட்டமிடுவது, தூண்டுவது, வழிகாட்டுவது” ஆகிய குற்றங்கள் இரண்டாம் நிலைக் குற்றங்கள் என்ற அளவிலே நின்றுவிடும். நேரடியாகக் களத்தில் இனப்படுகொலையைச் செய்தவர்களே முதன்மைக் குற்றவாளிகள் ஆனபடியால், அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையைக் காட்டிலும் குறைவான தண்டனையே தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரத்தின் உச்சங்களில் இருப்பவர்கள் தப்பித்துக் கொண்டுவிட முடியும். இதை மனதில் கொண்டு, இனப்படுகொலை தொடர்பாகத் தண்டனைக்குரிய செயல்களாக இனப்படுகொலைக்கு எதிரான ஜெனீவா மாநாட்டுத் தீர்மானத்தின் மூன்றாம் பிரிவு வரையறுத்துள்ள செயல்களை மீண்டும் பார்ப்போம்:

அ) இனப்படுகொலை

ஆ) இனப்படுகொலை செய்வதற்காகச் சதித் திட்டம் தீட்டுதல்

இ) இனப்படுகொலை செய்ய நேரடியாகவும் பகிரங்கமாகவும் தூண்டுதல்

ஈ) இனப்படுகொலை செய்ய முயற்சித்தல்

உ) இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல்.

இவற்றில் முதலாவதும் நான்காவதும் (இனப்படுகொலை, இனப்படுகொலை செய்ய முயற்சித்தல்) களத்தில் நேரடியாக இனப்படுகொலை செய்பவர்கள் குறித்தவை. இரண்டாவதும் மூன்றாவதும் (இனப்படுகொலை செய்வதற்காகச் சதித் திட்டம் தீட்டுதல், இனப்படுகொலை செய்ய நேரடியாகவும் பகிரங்கமாகவும் தூண்டுதல்) களத்தில் இனப்படுகொலையில் ஈடுபடாத, அதிகாரத்தின் உச்சங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருப்பவர்கள் குறித்தவை. இறுதியாக வருவது இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல். அதாவது, சர்வதேசச் சட்டம், வழமையான தேசியச் சட்டங்களின்படி குற்றத்திற்கு உடந்தையாக இருக்கும் இரண்டாம்நிலைக் குற்றவாளிகள் செய்யக்கூடிய செயல்களான ”சதித்திட்டம் தீட்டுதல், தூண்டுதல்” ஆகியவற்றை முதல் நிலைக் குற்றச்செயல்களாக வரையறுக்கிறது.

இத்தகைய நுட்பத்தின் மூலம், குற்றத்தில் நேரடியாக ஈடுபடாத, அதிகாரத்தின் உச்சங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருக்கும், ஆனால் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான ஜனாதிபதிகள், சர்வாதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், சிவில் உயர் அதிகாரிகள் எவரும் எவ்வகையிலும் தப்பித்துவிடுவதற்கான வழிகளை அடைத்துவிடுகிறது. இவற்றுக்கு அப்பாற்பட்ட வேறுவகைகளிலான செயல்களை இனம்பிரித்துக் காண, ”உடந்தையாக இருத்தல்” என்று தனியாக ஒரு பிரிவையும் உருவாக்கி வைத்திருக்கிறது. அவற்றையும் தண்டனைக்குரிய குற்றங்களில் ஒன்றாகத் தனித்தும் நேரடியாகவும் குறிப்பிடுவதன் மூலம் “குற்றங்களில் எல்லாம் ஆகப்பெரும் குற்றமான” இனப்படுகொலையைப் பொறுத்த அளவில், முதல்நிலைக் குற்றங்கள் – இரண்டாம்நிலைக் குற்றங்கள் என்ற பிரிவினைக்கே இடம் இல்லை என்பதை வலியுறுத்துகின்றது.

இது தொடர்பில் கவனத்திற்குரிய மேலும் இரு அம்சங்கள் உண்டு. ஒன்று, சர்வதேசச் சட்டங்களின்படி களத்தில் நேரடியாக இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளி தண்டனைபெறாமல் இருந்தாலும் (தப்பித்து தலைமறைவாக இருக்கும்பட்சத்தில்) இனப்படுகொலைக்கு உடந்தையானவரை அக்குற்றச் செயலுக்காகத் தண்டிக்க முடியும். மற்றது, இனப்படுகொலையை நிகழ்த்துவதற்குப் பயன்பட்ட கருவிகளை, ஆயுதங்களை, பிற பொருட்களை (எ. கா: விஷவாயு) அளித்த தனியார் நிறுவனங்களும் அதன் அதிகாரிகளும்கூட இனப்படுகொலைக் குற்றத்திற்கு உடந்தையானவர் என்று தண்டிக்கப்பட முடியும்.

இதில் நாம் அடுத்து கவனத்தில் கொள்ள வேண்டியது இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல். இனப்படுகொலையில் உடந்தையாக இருந்தமையாகக் கருதத்தக்க செயல்கள் யாவை?

ருவாண்டாவிற்கான சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் பிரிவு 91 இனப்படுகொலையில் உடந்தையாக இருப்பவர்களை கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறது:

1) அன்பளிப்புகள், வாக்குறுதிகள், மிரட்டல்கள், அதிகார அத்துமீறல், குற்றமாகக் கருதத்தக்க வகைகள் அல்லது சூழ்ச்சிகள் மூலம் அத்தகையை செயலைச் செய்யும்படி நேரடியாகத் தூண்டுதல் அல்லது செய்யும்படி ஆணையிடும் நபர் அல்லது நபர்கள்.

2) அத்தகைய செயலில் பயன்படுத்தப்படும் என்பதை அறிந்தே, ஆயுதங்கள், கருவிகள் அல்லது வேறு வழிவகைகளைப் பெற்றுத்தருதல்.

3) அத்தகைய செயலைச் செய்யும் குற்றவாளி அல்லது குற்றவாளிகள் அத்தகைய செயலைச் செய்வதற்குத் தயார்படுத்தல் அல்லது திட்டமிடுதல் அல்லது அச்செயலைத் திறம்படச் செய்து முடித்தலுக்கு அறிந்தே உதவி செய்யும் அல்லது தூண்டுதல் செய்யும் நபர் அல்லது நபர்கள்.

இவற்றில், மூன்றாவதான செயல்களில் ஈடுபட்டதாக இந்திய அரசைக் குற்றம்சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்களை உடனடியாகத் திரட்ட முடியாதென்றாலும், அத்தகைய வகையில் இந்தியா செயல்பட்டிருக்கிறது என்பது பலமான ஊகத்திற்கு உரியது என்று குறைந்தபட்சமாகவேணும் கூற இயலும்.

ஆனால், இரண்டாவது செயலில் இந்திய அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்படையாகவே இருக்கின்றன. 2000 ஆம் ஆண்டு இந்திய அரசு சிங்கள அரசிற்கு சுகன்யா என்று பெயரிடப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலையும் 2007 ஆம் ஆண்டு (இனப்படுகொலை போரின் துவக்கத்தில்) விக்ரம் என்று பெயரிடப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலையும் வாடகைக்கு அளித்திருக்கிறது. மேலும் இந்திரா என்று பெயரிடப்பட்ட ராடார்களை 2006 – இல் இரண்டும் 2007 – இல் இரண்டும் அளித்திருக்கிறது. (Arms Trade with Sri Lanka – global business, local costs. Jonas Lindberg, Camilla Orjuela, Siemon Wezeman, Linda Åkerström, 2001 பக்: 44 – 45) இவ்வாயுதங்களின் உதவியில்லாமல் சிங்கள அரசாங்கம் இனப்படுகொலையை நடத்தி முடித்திருக்கவியலாது.

இந்த ஆதாரம் ஒன்றே, ஈழத்தில் இனப்படுகொலையை நிகழ்த்திய சிங்கள அரசிற்கு, ஆங்கு இனப்படுகொலை அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்தே உதவி செய்த இந்திய அரசு அவ்வினப்படுகொலைக்குத் துணைநின்ற உடந்தையான குற்றவாளி என்பதைக் காட்ட போதுமானது. சற்று முன்னர் குறித்துள்ளபடி, “குற்றங்களில் எல்லாம் ஆகப்பெரும் குற்றமான” இனப்படுகொலையில் முதல் நிலைக் குற்றம், இரண்டாம் நிலைக் குற்றம் என்ற பாகுபாட்டிற்கே இடமில்லை. அவ்வகையில் இந்திய அரசைச் சர்வதேசச் சட்டத்தின் கீழ் இனபடுகொலை குறித்த விசாரணையில் குற்றவாளிகளில் ஒரு தரப்பாக நிறுத்த முடியும். அதே போன்று, அமெரிக்க அரசும் பிரிட்டிஷ் அரசும் இனப்படுகொலையில் உடந்தையான தரப்பினராக நிறுத்தப்பட முடியும்.

அத்தகைய ஒரு சூழல் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காகவே, ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானங்களில், இனப்படுகொலை என்ற வார்த்தையை அமெரிக்க அரசும் இந்திய அரசும் மிகக்கவனமாகத் தவிர்த்து வருகின்றன. தற்சார்பான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற மெலிதான அழுத்தத்திலும்கூட இனப்படுகொலை குறித்து கவனமாக மௌனம் காக்கின்றன.

மாற்றாக, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையே (ஒருவேளை நடந்தால்) நடத்தப்பட வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இவ்விடயங்கள் குறித்த விசாரணையில், சிங்கள அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு உள்நாட்டுத் தரப்புகள் மட்டுமே குற்றவாளி எனக் குற்றம் சுமத்தப்பட முடியும். மூன்றாம் தரப்பான வேறு நாடுகளை உடந்தையான குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை என்றும் கூறலாம்.

இலங்கை தீவினில் நடைபெற்ற போர் சர்வதேசச் சட்டங்களின்படி ஒரு “உள்நாட்டு போர்”. சர்வதேச போர் அன்று. ஆனால், சர்வதேச நாடுகளின் பங்களிப்பைப் பலவகைகளில் (அமைதிப் பேச்சு வார்த்தைகள், இராஜ தந்திரத் தலையீடுகள், ஆயுதங்கள் கொள்வினை) கொண்டிருந்த போர். இதில், சர்வதேச நாடுகளின் பலவிதமான பங்களிப்புகளும் தலையீடுகளும் அதன் விளைவுகளும் வெளிவருவதைத் தவிர்த்துவிட்டு, “உள்நாட்டு போர்” குறித்த உள்நாட்டு விசாரணையோடு, உள்நாட்டுத் தரப்புகளை மட்டுமே குற்றவாளிகளாக நிறுத்திப் பிரச்சினையை அதோடு மூடிவிடவே இந்திய அமெரிக்க அரசுகள் முயற்சிக்கின்றன.

இனப்படுகொலை குறித்த தற்சார்பான சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றால், இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால், உடந்தைக் குற்றவாளிகள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் ஏற நேரிடும். புவிசார் அரசியல் என்ற அம்சத்திற்கு அப்பாற்பட்டு, இலங்கை அரசின் மீது கடுமையான நடவடிக்கை எதையும் ஐநா மன்றமோ ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலோ எடுத்துவிடாமல் இந்திய அமெரிக்க அரசுகள் தடையாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். “வலுவான”தொரு தீர்மானத்தை ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவருமாறு இந்திய அரசை நிர்பந்தித்து போராட வேண்டும் என்ற வாதத்திற்குத் திரும்புவோம்.

இதுவரை விளக்கியிருப்பதை மனதில் கொண்டால், இந்த வாதம் இனப்படுகொலையில் உடந்தைக் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட வேண்டிய இந்திய அரசிற்கு அத்தகையை நெருக்கடி உருவாகாமல் தடுக்கும் வாதம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். வேறுவகையில் இத்தகைய வாதத்தை வைப்பவர்களை குற்றத்திற்கு உடந்தையான தரப்பிற்கு உடந்தையாக இருப்பவர்கள் என்றே சொல்ல முடியும். உடந்தைக் குற்றவாளிக்கு உடந்தையான இத்தரப்பின் முன்வரிசையில் தோழர் தியாகு நிற்கிறார். வாய்ப்பாட்டு மார்சியர்களின் முற்றிய தமிழ் வாரிசே தான் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார். திண்ணைப் பேச்சு மார்சியத்தை தாண்டியவரல்ல என்று சாட்சியமளிக்கிறார்.

திண்ணைப் பேச்சு மார்க்சியர்களுக்கே உரிய குதர்க்கத்தோடு, “இனப்படுகொலை என்ற முன்முடிவோடு எப்படிப் பன்னாட்டு விசாரணையை கோரமுடியும்?” என்று எதிர் கேள்வியும் எழுப்புகிறார். இவ்விடயம் தொடர்பாக, 2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் 18 இல் ஐநா மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சிலில் இயற்றப்பட்ட தீர்மானம் 1564 இன்படி அமைக்கப்பட்ட டார்ஃபர் குறித்த பன்னாட்டு விசாரணைக் குழு, டார்ஃபரில் சர்வதேச மனிதநேயச் சட்டங்களும் மனித உரிமைச் சட்டங்களும் மீறப்பட்டுள்ளனவா என்பதை மட்டுமின்றி இனப்படுகொலை நிகழ்ந்துள்ளதா இல்லையா என்பதைப் பற்றியும் விசாரிக்க அதிகாரம் கொண்டதாக அமைக்கப்பட்டது என்பதை அவரது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

(Acting under Chapter VII of the United Nations Charter, on 18 September 2004 the Security Council adopted resolution 1564 requesting, inter alia, that the Secretary-General ‘rapidly establish an international commission of inquiry in order immediately to investigate reports of violations of international humanitarian law and human rights law in Darfur by all parties, to determine also whether or not acts of genocide have occurred, and to identify the perpetrators of such violations with a view to ensuring that those responsible are held accountable’. – Report of the International Commission of Inquiry on Darfur to the United Nations Secretary-General Pursuant to Security Council Resolution 1564 of 18 September 2004)

இவ்வாறு உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பரப்பி, இனப்படுகொலை என்ற நோக்கில் விசாரணை நடத்தக் கோருவதையே கேள்விக்குரியதாக்கும் தியாகு, வெறுமனே திண்ணை பேச்சு வாய்ப்பாட்டு மார்க்சியர் மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் நலன்களால் பீடிக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகத்தையே இது எழுப்புகின்றது. இவரோடு சேர்ந்து இயங்கும் வாய்ப்பாட்டு மார்க்சியக் குழுவினரும், “பிரதான எதிரி” “புரட்சியை ஏற்றுமதி செய்யவியலாது” “ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுவது என்பது உள்நாட்டு அரசை எதிர்த்து போராடுவது” என்பது போன்ற லெனினிய சூத்திரங்களை ஒப்பித்துக் கொண்டே, குற்றத்திற்கு உடந்தையான தரப்பிற்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.

சுற்றுச்சூழல் தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை வைத்திருக்கும் பா. ம. கவை சேர்ந்த அருள் இரத்தினம் என்பவரும், தி. மு. க வின் “டெஸோ” குழுவினரும்கூட இந்திய அரசிற்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்ற தியாகுவின் வாதத்தையே மீண்டும் மீண்டும் வைக்கின்றனர். பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் பிடியிலும் பார்ப்பனர்களின் கட்டுக்குள்ளும் அகப்பட்டிருக்கும் இந்திய அம்னெஸ்டி “கம்பெனியும்” ”வலுவான தீர்மானத்தைக் கொண்டுவருமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தும்” கையெழுத்து இயக்கமொன்றை முன்னெடுத்திருக்கிறது.

மார்க்சிய எதிர்ப்பு, அமெரிக்க ஆதரவு தமிழ்நாட்டு என். ஆர். ஐ பெயர்ப் பலகை அமைப்பு ஒன்றும் அமெரிக்காவை எதிர்க்கக்கூடாது என்று தீவிர “லாபி” இயக்கமொன்றை முன்னெடுத்திருக்கிறது.

மேடையில் ஆடுபவர் யாரென்று தெரிகிறது. ஆட்டுவிப்பவர் யாரோ?

தொடர்பில் வாசிக்க வேண்டியவை: 

Genocide in International Law The Crimes of Crimes, William A. Schabas, Cambridge University Press 2000.

Enforcing international humanitarian law: Catching the accomplices, William A. Schabas,   RICR Juin IRRC June 2001 Vol. 83 No 842 (439 – 458)

The Permanent International Criminal Court – Legal And Policy Issues Edited by Dominic McGoldrick, Peter Rowe and Eric Donnelly. Oxford and Portland Oregon, 2004.

நன்றி: tamilsnow.com

%d bloggers like this: