பதினைந்து வருடங்களும் இரண்டரை லகரமும் ஒரு தற்கொலை முயற்சியும் – மீள்பதிவு

குறிப்பு: முன்னர் இக்கட்டுரையைப் பதிவிலேற்றியபோது பலரும் இதை எனது தனிப்பட்ட வாழ்வு குறித்ததாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருந்தது. இப்போது இதை “தத்துவம், நடைமுறை, கலை: சில குறிப்புகள்” மற்றும் “ஏன் கலை?” இரு கட்டுரைகளின் தொடர்ச்சியாக வாசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
நீண்ட நெடுங்காலம் துன்பம் தாங்கியிருப்பவர்களுக்காக
நான் அழுதிருக்கிறேன்
ஆனால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு
துயரச் சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடப்பவர்களுக்காக
எங்கனமழுவது
எண்ணங்களைக் கொன்றுவிடு
அதையெல்லாம் உணர்ந்துகொள்வதென்பது ஆன்மாவிற்குரியது
என்றாலும் மெளனித்துப் பார்த்திருப்பது எனை பலவீனமாக்குகிறது
ஓ, துயரம் எவ்வளவு கருணையையும் சேர்த்திழுத்து வருகிறது
இறைவனே எமை இரட்சிப்பீராக.
-ராக் இசைப் பாடகி ஷெரில் க்ரோ – வின் Redemption Day என்ற பாடலின் ஆரம்ப வரிகள்.
ஒரு நற்காலைப் பொழுது. நான் உறங்கியிருக்கவில்லை. என் தந்தையும். தங்கையின் திருமணம் முடிந்து மூன்று மாதங்களாகியிருந்தது. தந்தை என் அறையின் கதவைத் தட்டி உள்ளே வந்தார். என்னோடு சில நிமிடங்கள் பேசக்கேட்டார். காத்திருந்தேன்.”இத்தனை வருடங்கள் மறைத்து வைத்திருந்த உண்மை ஒன்றை உன்னிடம் சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது. நீ நாங்கள் பெற்ற பிள்ளையில்லை.”

எந்தச் சலனமுமின்றி உட்கார்ந்திருந்தேன். பதினெட்டு வயது முதலே நான் வளர்ந்த குடும்பத்தாரிடம் எனக்கு நெருக்கமில்லை. ஆத்மார்த்த நண்பனோ தத்துவவாதியோ, வழிகாட்டியோ – ஆங்கிலத்தில் friend, philosopher, guide என்று சொல்வார்களே, அதுபோல ஒருவரும் இருந்ததில்லை. இன்றுவரை எஞ்சியிருப்பவர் மிகச்சில நல்ல நண்பர்கள் மட்டுமே. சத்தியமாக என் (வளர்ப்புத்) தந்தை ஒருபோதும் இதில் ஒருவராகவும் இருந்ததில்லை. எப்போதும் என்னை அநாதையாகவே – அந்நியனாக அல்ல – உணந்திருக்கிறேன். சுகுமாரனுடைய “உறவுகள் மயானம் கலைபவை” என்ற வரி, என் மனதில் தைத்த மிகச்சில வரிகளில் ஒன்று.

“இன்று மதியத்திற்குள் ஒரு லகரம் ஏற்பாடு செய்கிறேன். ஒரு வருடம் தருகிறேன். திரும்ப வரும்போது இரண்டாகக் கொண்டுவர வேண்டும்.”

குப்பைத் தொட்டியில் கண்டெடுத்து வளர்த்த ஒரு அனாதைக்கு ஒரு லகரம், ஒரு வருடம்! தேவதைக் கதை ஒன்றோடு நீதிக் கதை ஒன்றைக் கலந்து குழப்பியடித்தது அல்லது தட்டாம்பிள்ளை சுற்றி சட்டென்று கைவிட்டது போன்றதொரு நிலைமை.

வலிய வந்த சீதேவியை உதறிவிடக்கூடாது என்பதற்காக அல்ல, பாவப்பட்ட என் (வளர்ப்புத்) தந்தையின் பொருட்டு மறுமொழி பேசாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தேன். வெட்கித் தலை குனிந்திருந்தேன்.

ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் என் தற்கொலை நாடகம். நாடகம் என்று அப்படி ஒரேயடியாகவும் சொல்லிவிட முடியாது. உண்மையிலேயே வாழ்க்கை ‘வெறுத்துப்’ போய்தான் முடித்துக் கொள்ள முடிவு செய்தேன். இலட்சியங்கள் எல்லாம் முறிந்து பல வருடங்கள் ஆகியிருந்தன. ‘குறிப்பீடுகளற்ற, நிலையில்லாத குறிப்பான்களின்’ உலகில்தான் உழன்று கொண்டிருந்தேன். ஆனால், ஆத்மார்த்தமான உறவு கொள்ளத்தக்க, நேர்மையான நபர்கள் என்று கருதியவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை – அது தகர்ந்துபோனது. இலட்சியமற்று எதற்காக? உறவுகளற்று யாருக்காக?

உறக்கமற்ற இரவுகளுக்காக அப்போது, எப்போதும் வைத்திருக்கும் ketasma. நாற்பதோ ஐம்பதோ நினைவில்லை. நேரம் செல்லச் செல்ல தாகம் வறட்டத் தொடங்கியது. நா வெளித்தள்ளி விடுவது போன்ற வறட்சி (சும்மா அப்படியே உறங்கிப் போய்விடுவோம் என்ற நினைப்பு). அது எப்படித்தான் அந்த நேரம் பார்த்து, கடைசியாக ஒருமுறை என் (உடன்பிறவா) தங்கையிடம் சொல்லிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்ததோ தெரியவில்லை. (நாடகவெளி விரிந்தது இந்தப் புள்ளியில்?) அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தேன்.

அப்புறம், நடந்ததைப் பலரும் பலமுறை பார்த்திருக்கலாம். மருத்துவமனையில் தொண்டைக்குழிக்குள் குழாய் இறங்கியபோது, வலி தாங்காமல் கத்தியதையும் மீறி, நர்ஸ் ஒருத்தி “சனியனுங்க, வந்துடுதுங்க” என்று திட்டியது காதில் விழுந்தபோதுதான் உறைத்தது. ஒரு கனவுபோல எல்லாம் நடந்து முடிந்தது. ஆனால், இரவெல்லாம் கூடிப் பேசி கழித்த நண்பர்களில் ஒருவர்கூட இதுவரையில், தனிமையில் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை என்ற கசப்பு மட்டும் இன்னும் தங்கியிருக்கிறது. வெகுநாள் கழித்து, காரணம் – ‘கத்தரிக்காய்’ என்று ஒருவர் சொன்னதாகக் கேட்டு வெறுப்பும் தட்டியது.

ஆக, என் முன் ஒரு தேர்வு, ஒரேயொரு தேர்வு வைக்கப்பட்டிருந்தது. ஏற்றுக்கொண்டேன். முடிவு ஊகிக்கச் சிரமமானதல்ல. இரண்டு வருடங்கள் கழித்து, இரண்டரை லகரக் கடனோடு திரும்பினேன். ஆனால், அந்த இரண்டு வருடங்கள் மதிப்பு மிக்கவை. வாழ்வு, கலை, அரசியல் இவற்றுக்கிடையிலான உறவுகள் என்ன என்ற தெளிவு உருவாக உதவியவை. மூன்றிலிருந்தும் பெற்றவை. அடிபட்டுக் கற்றவை. (அனுபவம் என்பது மோசமான ஆசிரியன் – நீட்ஷே)

இதையெல்லாம் இங்கு ஏன் பகிர்ந்து கொள்ள வேண்டும்?யாருக்கும் நேராத தனித்த அனுபவமில்லை. மனப்பிறழ்வின் விளிம்புவரை சென்று வந்தவர்கள், தற்கொலையில் முடிந்தே போனவர்கள், அன்றாட வாழ்வின் இயக்கத்திலிருந்து விலகி விழுந்து தள்ளாடிக் கொண்டிருப்பவர்கள் சிலரையாவது சிற்றிதழ் உலகம் அறியும். ஆனால், ஒரு கள்ள மெளனம். ஒரு சிறு துளியாவது பொறுப்பேற்றுக் கொள்ளாது, குற்றம் அத்தனையும் அவர்களது தலைமீதே சுமத்திவிடும் அயோக்கியத்தனம். அதைவிடக் கேவலம், ‘பொறுப்பற்றவர்கள், குடிகாரர்கள், கலகக கண்மணிகள்’ என்ற அவதூறுகள்.

சண்டை – சச்சரவுகள், பழிகள், அவதூறுகளுக்கு சிற்றிதழ் உலகில் என்றும் பஞ்சம் இருந்ததில்லை. ஆனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு வன்மத்தோடு, மிக மோசமான எல்லைகளுக்கு இன்று அவை விரிந்திருப்பது எதனால்? முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போலிகளின் பெருக்கம் சாத்தியமானது எப்படி? ‘மதிப்பீடுகளின் வீழ்ச்சி’ பற்றி இலக்கிய – அதிகாரத் தரகர்களும் கேலி பேசும் கேலிக்கூத்தான சூழல் எப்படி உருவானது? ‘தறுதலைகள்’ ஏன் உருவானார்கள்?

வாழ்வினூடாகவும் கலையினூடாகவும் தெறிப்பது ஆற்றல். ஆற்றல் எப்போதும் வடிவம் கொள்வது. ஆற்றலின் பல வடிவங்களுள் வாழ்வும் கலையும் சாத்தியமானவை என்று சொல்லலாம். ஆனால், ஒவ்வொரு வடிவமும் ஆற்றலைத் தேக்குவது. அதனால்தான் கலைமுயற்சிகளின் தீராக் காதலாக, புதிய வடிவங்களை நோக்கிய தேடல், தேக்கத்திலிருந்து விடுபடுதல், எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

ஆற்றலும் வடிமும், தேக்கமும் அதிலிருந்து விடுபட்டு மீறிச் செல்வதுமாக, தீராத, தீர்க்கப்பட முடியாத முரணாக, என்ன வடிவம், அது எப்படிக் கலையும், என்ன உருக்கொள்ளும் என்று முன்சொல்ல முடியாத புதிராக இந்த இயக்கம். ஆற்றல் எப்போதும் புத்தாக்கம் (creative force), வினை புரிவது. வடிவம் நிலைபெற்றவுடனேயே புத்தாக்கத்தைத் தடுப்பது; எதிர்வினை புரிவது (reactive force). என்றாலும், ஆற்றலைத் தேக்கி வைப்பது; புத்தாக்கத்திற்கான சேகரமாக இருப்பது. ஆற்றலென்பது வினை. அதன் தேங்கிய வடிவம் எதிர்வினை.

ஆற்றலின் பல வடிவங்களுள் ஒன்று உயிர். உயிரின் வடிவங்களுள் ஒன்று மானுடப் பிறவி. மானுட வாழ்வினூடாகத் தெறிக்கும் ஆற்றலின் மிகவுயர்ந்த வெளிப்பாடுகளுள், உச்சபட்ச சாத்தியங்களுள் ஒன்று கலை. ஆனால், அது ஒன்று மட்டுமன்று. தத்துவச் சிந்தனையாகவும், சகமனிதர்களுடன் கொள்ளும் உறவிலும் புத்தாக்கமிக்க ஆற்றல் வெளிப்பாடு கொள்கிறது.

சக மனிதர்களுடனான உறவு என்ற புலமாக வாழ்வை வரையறுத்துப் பார்க்கும்போது (மானுட வாழ்வு என்று நாம் வழக்கமாகச் சொல்லும் பொருளில்) மிகச் சிறந்த மனிதர் யார் என்ற கேள்வியாக அது உருப்பெறுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நீதி பற்றிய கேள்வியாக, அன்பு, கருணை, நட்பு, காதல், வீரம், கொடை (gift) என்பதாக, இவை எடுக்கும் வடிவங்களைப் பற்றிய புலமாக.

வாழ்வுப் புலத்தில் ஆற்றல் எடுக்கும் வடிவங்களுள் ஒன்றான கொடை, மானுடர்களுக்கிடையிலான உறவுகள் இறுகி நிலைகொண்டுவிடாமல், தொடர்ந்து சுழற்சியில், இயக்கத்தில் இருக்கச் செய்வது. அது ஒருவழிப்பாதையிலானதாக, அபகரித்துப் பெறவேண்டியதாக மாறியதும், வரலாற்றில் நாம் காணும் பல்வேறு அதிகார அமைப்புகளாக (தந்தைவழிக் குடும்ப அதிகாரம், எதேச்சதிகாரம், நவீன ஜனநாயகம்), அவற்றுக்கிணையான அமைவுகளாக (நிலவுடைமை, சாதியப் படிநிலை சமூகம், முதலாளியம்) மானுடர்களுக்குள் பொதிந்திருக்கும், அவர்களுக்கிடையிலான உறவுகளில் வெளிப்படச் சாத்தியமுள்ள ஆற்றலைத் தேக்கி நிலை கொண்டு விடுகிறது. அன்றாட வாழ்வின் நிர்ப்பந்தங்களாக, உழைப்பது, அதன் பலன்களைக் (செல்வச் சேகரிப்பை) கொடையாக சுழற்சிக்கு விடாமல் தேக்கி, அதிகாரத்தின் துணுக்குகளாக, கண்ணிகளாக மாறுவதும் நிகழ்கிறது. அரசியல் என்று சொல்லப்படும் புலம் உருவாகிறது.

வாழ்வுப் புலத்தில் ஆற்றல் தொடர்ந்து புத்தாக்கம் பெறுவதற்கான சூழலமைவை உருவாக்குவது என்பது, அப்புலத்தின் குறுகிய சிறு ஒரு பகுதியாக உருப்பெற்று விரிந்த அரசியலுக்குள், அதிகார அமைவுகளைத் தகர்ப்பதை நோக்கிய செயல்பாடுகளாக புரிந்து கொள்ளப்படும்போது, வாழ்வை அரசியல் மயப்படுத்தும் போக்கு, personal is political என்ற முழக்கம் எழுகிறது. இதன் தொடர்ச்சியாகவே அல்லது இணையாகவே, அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஊடுருவி, கட்டுக்குள் கொண்டுவரும் நுட்பங்கள் எழுகின்றன. நிலவும் அதிகார அமைவுகளை எதிர்ப்பது, அதிகாரத்தைப் பறிப்பது, இன்னொரு வடிவம் கொடுப்பது … மொத்தத்தில் எதிர் – அரசியல் போக்குகள் உருவகின்றன. வாழ்வு அரசியலாக குறுக்கப்படுகிறது.

இதற்கு மாற்றாக, வாழ்வுப் புலத்தில் ஆற்றலை விடுவிப்பது என்பது, கொடையைத் தொடர்ந்து மற்றவர்க்கு கையளிப்பதற்கான, சுழற்சியில் விடுவதற்கான சூழலமைவை உருவாக்குவது. குறைந்தபட்சம், நிலவும் சூழலில், அதற்கான சாத்தியங்களைத் தேடுவது; அதற்குகந்த மதிப்பீடுகளை விதைப்பது, வளர்ப்பது. இதன் முதல் நிபந்தனை, அதிகாரத்தின் அறிந்த வடிவங்கள் அனைத்தையும் எதிர்த்துக் கொண்டிருப்பதல்ல. அதிகாரத்தை எதிர்த்துக் கொண்டு மட்டுமே இருப்பது, அதன் சுழற்சிக்குள் சிக்கிக் கொள்வது. மாறாக, அதிகாரத்திலிருந்து கூடுமானவரையில் விலகி நிற்பது.

கூடுமானவரையில் எனும்போது, முற்றிலும் விலகி நின்று ஆற்றலை விடுவிக்கும் வெட்டி வீறாப்புப் பேச்சுக்களிலிருந்தும் விலகி நிற்பது. ஆற்றலைத் தேக்கி வைத்திருக்கும் வடிவங்களுள் இருந்து, அதை விடுவிக்கத் தேவையான ஆற்றலை முதலில் நாம் பெறுவது. ஆற்றலைக் கொடையாக மீண்டும் சுழற்சிக்குவிட, முதலில் நாம் ஆற்றலுள்ளவர்களாக (அதிகாரம் உடையவர்களாக அல்ல) வேண்டும். கொடையைத் துவக்கி வைக்க, முதலில் நாம் ஆற்றலை (பொருள், அறிவு, ஆன்ம, கலைச் செல்வங்களை)ச் சேகரிக்க வேண்டும்.

அத்தகைய திசைகளில் நகரும்போது, அரசியல் புலத்திலான செயல்பாடுகள் நாம் இதுவரையில் முயன்று பார்த்திராத வடிவங்களை எடுக்கலாம். கடந்த காலங்களில், இந்தத் தேடலில் இறங்கியவர்கள், புதிய மதிப்பீடுகளை உருவாக்கி அதன்படி வாழ்ந்தும் காட்டியவர்களை மிகச் சிறந்த மனிதர்களாக (அரிதாக) வரலாற்றில் நாம் அறியவும் நேர்கிறது.

கலை மானுட வாழ்விலிருந்து பிறக்கும் ஒன்று என்ற வகையில், பெரும்பாலான நேரங்களில், அதிகார அமைவுகளிலிருந்து விலகி நிற்பதாக, புதிய மதிப்பீடுகளைப் பற்றிய தேடலில் இன்னொரு புலமாக, தொடர்ந்த தலைமுறைகளுக்கு இந்தத் தேடலைக் கையளிக்கும் கொடையாக இருக்கிறது. மானுட வாழ்வை ஊடறுத்துச் செல்லும் ஆற்றலின் சாத்தியங்களுள் ஒன்று என்ற வகையில், அதன் குறிப்பான வடிவங்களுக்கேயுரிய கச்சாப் பொருட்களை (இலக்கியத்திற்கு மொழி, ஓவியத்திற்கு வண்ணம், நாடகத்திற்கு வெளி, தத்துவத்திற்கு சிந்தனை, திரைப் படத்திற்கு அசையும் நிழலுருவங்கள்) எடுத்துக் கொண்டு, அவற்றின் உறைந்த வடிவங்களிலிருந்து உலுக்கி, மானுட உடலினூடாகவும் உள்ளத்தினூடாகவும், இரண்டிலும் அதிர்வுகளை உண்டாக்குவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, ஆற்றலை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக கலை, அதன் உண்மையான் பொருளில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

முதல் வகையில், மானுட வாழ்வுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. இரண்டாவது வகையில், மானுட வாழ்வின் இன்னொரு பரிமாணமாக உருத்திரட்சி கொள்கிறது. இதில் முதலாவதை மட்டுமே காணும் போக்கு பெரும்பாலும் இலக்கியத்திலேயே நிகழ்கிறது. இலக்கியம் அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அம்சமாக இருக்கும் மொழிப் புலம் சார்ந்து இயங்குவதன் உடன் – நிகழ்வு இது. ஆனால். கலையின் பிரதான அம்சமாக, அதன் சாரமாக இருப்பது, ஆற்றலின் உயர்ந்த வீச்சு மட்டுமே. அதனால்தான், ஆற்றலின் வீச்சைத் தாங்கும் திறனற்ற மானுட உடல்களை, கலைஞர்களை பலிகொள்வதாகவும் அது இருக்கிறது (எழுத்தும் கொல்லும்).

வாழ்வு, சமூக வடிவங்களுக்குள் நிலைகொண்ட அதிகார அமைவுகளுக்குள் இறுகி, சாத்தியங்கள் குறுகி, தேங்கி நிற்கையில், அதனுள்ளிருந்து ஆற்றலை விடுவிப்பது, தேர்வுகளைப் (choice) பற்றிய கேள்வியாக நிற்கிறது. உயிர் வாழ்விற்கான சாத்தியங்களே குறுகிக் கிடக்கும் இன்றைய சூழலில், தேர்வுகளும் வரையறுக்கப்பட்டு குறுகிக் கிடக்கின்றன. நம்முன் இருக்கும் மிகச்சில தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்து அதனுள்ளிருந்து ஆற்றலை, குறிப்பாக கொடையை, விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். இதில், இலக்கியம் என்னதான் ‘வாழ்வைப் பற்றிய பரிசீலனையாக’ இருந்தாலும், தேர்வுகளுக்கான முற்றமுழுதான பதிலீடாக, அல்லது குறைந்தது தேர்வுகளுள் ஒன்றாகக்கூட ஆகிவிட முடியாது.

இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களே அல்லது புரிந்திருந்தும் அதை மறைத்து, தமது சொந்த வாழ்வில் பாதுகாப்பான நிலைகளில் ஒளிந்து கொண்டு ‘இலக்கியம் சமைப்பவர்களே’, கலாச்சாரக் காவல்காரர்களாக, இலக்கிய ‘உன்னதம்’ பேசி அதிகார பீடங்களைக் கட்டமைப்பவர்களாக, நிலவும் அதிகார அமைவுகளோடு நெருங்கிய உறவு கொண்டவர்களாக, இலக்கியத்தை/கலையை நிறுவன மயப்படுத்துபவர்களாக, இலக்கியத்திற்குள் அரசியலை/அதிகாரத்தை நிறுவுபவர்களாக, அதன் மூலம் எதிர் – அரசியல் நுழையக் காரணமானவர்களாக, கொடையை அபகரிப்பவர்களாக, அதைத் தட்டிப் பறிக்க வேண்டிய சூழலை உருவாக்குபவர்களாக, அடுத்த இலக்கிய வாரிசு யார் என்ற கேள்வியை – போட்டியை எழுப்புபவர்களாக, ‘அமரத்துவம் பெறுவதற்கான சாதகமாக’ இலக்கியத்தைச் சிறுமைப்படுத்துபவர்களாக, இந்த மோகத்தைப் பரப்புபவர்களாக, இதன் மூலம் போலிகளையும் உருவாக்குபவர்களாக பரிணமிக்கிறார்கள்.

வாழ்வின் சாத்தியங்கள், ஆற்றலின் வெளிப்பாடுகள் பற்றிய எந்தவிதத் தேடலும் உணர்தலும் இல்லாத, எல்லாவற்றிலும் அரசியலை, நிலவும் அமைவின் பிரதிபிம்பங்களை மட்டுமே ‘கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு’ தேடும் எதிர் – அரசியல்வாதிகள், தம் பங்குக்கு இலக்கியத்தை அரசியல் மயப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். எதையும் உருவாக்கும் திறனற்ற இவர்கள் ஆற்றலற்றவர்கள் (எதையும் உருவாக்க முடியாத ஒருவருக்கு எதையும் அழிப்பதற்கும் உரிமை கிடையாது – நீட்ஷே). எதிர்ப்பதின் மூலம் தியாகிப் பட்டம் பெற்று, வரலாற்றில் தம் பெயர் பொறித்துவிட்டுச் செல்லும் விருப்பமே இவர்களது ‘செயல்பாடுகளின்’ ஆழத்தில் ஓடுவது.

தமது இந்த வேட்கையை மறைத்துக்கொள்ள இவர்க்ள் கைக்கொண்ட உத்தி ‘அரசியலே வாழ்க்கை’ என்ற முழக்கம். வாழ்விற்கான மாற்றாக/பதிலீடாக இலக்கியம் எப்படி இருக்க முடியாதோ அதே போல அரசியலும் இருக்க முடியாது என்பதை மறைத்து அதிகார, எதிர் – அதிகாரப் புள்ளிகளாகப் பரிணமித்தவர்கள் இவர்கள். நீட்ஷே எழுப்பும் grand politics என்ற கேள்விக்குள் நுழையக்கூட முயற்சிக்காதவர்கள். அதாவது அறியப்படாத ஒன்றுக்குள் நுழைய முயற்சிக்காதவர்கள் என்ற வகையில் கோழைகளும்கூட.

தமிழ்ச் சிற்றிதழ் உலகில், 80 – களின் இறுதிகளில், இலக்கியத்திலும் அரசியலிலும் எழுந்த, பலருக்கும் உத்வேகம் தந்த தீவிர முயற்சிகள், வாழ்விற்கும் அரசியலுக்கும், வாழ்விற்கும் கலைக்கும் (முக்கியமாக இலக்கியத்திற்கும்) இடையிலான உறவு குறித்த இந்தப் புரிதல்கள் இல்லாமல் நகர்ந்ததாலேயே வெகுவிரைவிலேயே தேக்கம் கண்டன என்று தோன்றுகிறது. ‘வாழ்வே இலக்கியம்’ என்று தொடர்ந்து புலம்பி வந்தவர்கள் இந்த முயற்சிகளில் தமது அதிகாரம் அசைந்துவிடும் என்பதைக் கண்டுகொண்டு, அதைத் தக்கவைத்துக்கொள்ள ‘இலக்கியமே வாழ்வு’ என்பதையும் சேர்த்துக் கொண்டார்கள். இதன்மூலம், புதிய முயற்சிகளில் இறங்கியவர்களில் சிலரைக் கவர்ந்து தம் பக்கம் இழுக்கவும் முடிந்தது. இலக்கிய அரசியல் பேசியவர்களை ஒதுக்கவும் முடிந்தது. இன்று, தமது அதிகார எல்லைகளை விரித்து, அதில் தம்மை எதிர்த்தவர்கள் சிலருக்கு பங்கு கொடுத்து சேர்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். அதற்காக ஏங்கித் தவிக்கும் எண்ணற்ற போலிகளையும் (திடீர் ஃபெமினிஸ்டுகள், இன்ன பிறர்) உருவாக்கி உலவவும் விட்டிருக்கிறார்கள்.

இலக்கியத்தை அதிகாரப் போட்டியின் களனாக மாற்றியது இலக்கியவாதிகளைத் தொழிலாளர்களாக மாற்றியிருக்கிறது. விளைவு, ஒவ்வொரு புத்தகச் சந்தைக்கும் ஒரு புத்தகத்தையாவது போட்டுவிடும் வேகம். இலக்கியச் சந்தையில் தம் பெயர் தொடர்ந்து சுழற்சியில் இருக்க வேண்டும் என்ற அரிப்பு. மிகை – உற்பத்தி. மிகை – உற்பத்தியின் தவிர்க்க முடியாத உடன் – விளைவு போலிப் பண்டங்கள் ( use and throw பண்டங்களும்கூட). இலக்கியம் உற்பத்தியாகியிருக்கிறது. இலக்கியம் உற்பத்தியானால் சந்தை விரிவாக வேண்டும். காலனிகள் வேண்டும். ஐரோப்பிய புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கவே இருக்கிறார்கள். உலகமயமாக்கல்!

இந்த ‘இலக்கியப் பயிர் வளர்க்கும்’ முயற்சியின் பின்னாலுள்ள அதிகார வெறியையும், அதை எதிர்த்து ‘சமர்’ செய்தவர்களின் அதிகார வேட்கையையும் உணர்ந்துகொண்டு, இரண்டிலும் சிக்காமலும், தேடலில், தெளிவேதும் கிட்டாத நிலையில், கோபத்தில் வெடித்தும், விரக்தியில் திணறியும் அலைந்தவர்களில் சிலர் ‘தறுதலைப்’ பட்டம் கட்டிக் கொண்டதை ஒரு சோகக் கதை என்றல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? எனக்குத் தெரிந்து (என்னைத் தவிர்த்து) வாழ்வு கசந்து, போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் மணிவண்ணன். வாழ்வையே முடித்துக் கொண்டவர் உ.வே. துளசி.

தப்பிப் பிழைக்க நான் கொடுத்த விலை, பதினைந்து வருட வாசிப்பும், அரசியல் செயல்பாடுகளினூடாகப் பெற்ற வாழ்வனுபவமும் இத்யாதியும்.

80 – களின் இறுதிகளின் தீவிரத் தேடல்களில் பங்குபெற்றவர்களில் மிகச் சிலர், இலக்கியம் வழியாக அதிகாரத்தை அறுவடை செய்யும் முயற்சிகளிலிருந்து முற்றிலும் விலகி நின்று, இன்றுவரையிலும் தொடர்ந்து, தனித்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமே இதில் மகிழ்ச்சிக்குரிய ஒரே விஷயம்.

வாழ்வோ கலையோ அரசியலோ (நீட்ஷே – வின் grand politics) வெற்றியை நோக்கி நகர்பவையல்ல. வெற்றியை இலக்காகக் கொண்டிருக்கத் தேவையில்லை என்பது தோல்வியைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்பதுமல்ல. ‘தோல்வியடையாமல்’, வெற்றியையும் துறந்து, தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பது. மாறுபட்ட புலங்களான வாழ்வையும் கலையையும் இன்ன பிறவற்றையும் எல்லைகளற்ற விளையாட்டாகத் தொடர்ந்து கொண்டிருப்பது.

தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்க, ஆற்றலை சேகரிப்பதும் சேமிப்பதும் அவசியத் தேவை. சேமிப்பது, ஆற்றலை அதன் முழு வீச்சில் மீண்டும் வெளிப்படுத்த, கொடையாக மற்றவர்க்கு, அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கையளிக்க என்பதை மறக்காமலிருப்பதும் தேவை.

கவிதாரண் மே – ஜூன் 2004

முதலில், மணல் பிரதி ஜனவரி 2004 இதழில் வெளிவந்தது

வகைப்படுத்த முடியாதவை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »
%d bloggers like this: