நாடோடி மன்னனின் தங்க மலை ரகசியம்

கடந்த ஆண்டு, தமிழகம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வரலாறு காணாத இளைஞர் எழுச்சியுடன் புலர்ந்தது. விவசாயிகளின் தணியாத தாகத்துடன் அந்தி மயங்கி அமைதி கண்டது.

இவ்வருடம், மீண்டும் காவிரி உரிமை மீட்பு போராட்டமாகப் புலர்ந்து உச்சி வெய்யிலில் புடம் போட்டுக் கொண்டிருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், அனைத்து எதிர்க் கட்சிகளும் மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் கரம் கோர்த்திருக்கின்றன. தொழிற்சங்கங்களும், வணிகர் சங்கங்களும், திரைத் துறையினரும், ஊடகத் துறையினரும், மருந்து விற்பனையாளர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைப் பிரிவினரும், இன்னும் பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அரவணைத்துள்ளனர்.

ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் தேங்கியிருந்த தமிழக அரசியல் களம் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டங்களால் புது ஆற்றலைப் பெற்று பொங்கிப் பிரவாகிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த ஆற்றல்கள், அரசியல் களத்தில் புதியன (Inventions/Innovations) பல புனைந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், கடந்த 30 ஆண்டுகால அரசியல் தேக்கத்திற்கு காரணமாக இருந்த ஆற்றல்கள், இப்புதுமைகளை போலச் செய்து (Imitation) கொண்டிருக்கின்றன.

இவ்விரு போக்குகளையும் அடையாளம் கண்டுகொள்வது, தமிழக உரிமை மீட்பிற்கு மிகுந்த அவசியமாகும்.

புது ஆற்றல்கள் – புதுப் பாய்ச்சல்கள் – புதியன புனைதல்

கடந்த ஆண்டின் ஜல்லிக்கட்டு ஆதரவு இளைஞர் எழுச்சி தமிழகத்தின் புதிய ஆற்றல்கள் அனைத்திற்கும் புது வெளிகளை மடை திறந்துவிட்ட ஒன்று எனச் சொல்வது சாலப் பொருந்தும்.

கடலில் கால் நனைக்கச் செல்லும் உல்லாச வெளியாகத் திகழ்ந்த கடற்கரையையும், காற்று வாங்க காலாற நடக்கச் செல்லும் பூங்காக்களையும் அரசியல் போராட்ட வெளியாக மாற்றிக் காட்டியது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர் எழுச்சி. அடையாளச் சடங்காக இருந்த இரயில் மறியல் போராட்டங்களை உயிரைத் துச்சமென மதித்து எதிர்கொண்டு மறிக்கும் வீர விளையாட்டாக மாற்றிக் காட்டியது.

இதன் தொடர்ச்சியாக, உரிமைக் கோரிக்கைகளை அடையாளக் கோரிக்கைகளாக வைக்க “அகலத் திறந்து” வைக்கப்பட்டிருக்கும் “ஜந்தர் மந்தர்” மைதானத்தை, அரசை அதிரவைக்கும் அரங்காக மாற்றிக் காட்டினர் தமிழக விவசாயிகள்.

சிறு நீரைக் குடித்தும், செத்த எலிகளைக் கடித்தும், நிர்வாணக் கோலத்தைத் தரித்தும் விவசாயிகளின் துயரத்தை உலகம் உற்று நோக்க வைத்தனர். இந்தியத் துணைக்கண்டமெங்கும் தற்கொலையில் உயிரை மாய்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் அனைவருக்கும் புது வழியைக் காட்டியது தமிழக விவசாயிகளின் தில்லி முற்றுகை.

இவை தமிழகம் கண்டிராத புதியன புனைதல். புதுப் பாய்ச்சல்கள்.

தற்போதைய காவிரி உரிமை மீட்பு – ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டங்களிலும் இப்புதிய ஆற்றல்களின் புதியன புனைதல், புதுப் பாய்ச்சல்கள் தொய்வு காணாமல் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

09.04.2018 அன்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமத்து மக்கள், “மக்கள் நாங்கள் வந்திருக்கிறோம்! நீங்கள் வெளியே வாங்க!” என்று கோஷமிட்டு தமது கோரிக்கைகளை கேட்க ஆட்சியரை அலுவலகத்தை விட்டு வெளியே வரவழைத்தது இதுவரை சாத்தியமாகாத புதுமை.

ஐ பி எல் போட்டிகளுக்கு எதிராக தமிழ் அமைப்புகளும், இரு பிரதானக் கட்சிகளின் செல்வாக்கிலிருந்தும் விடுபட்ட கலைஞர்களின் வசம் வந்திருக்கும் திரைத்துறை அமைப்பினரும் ஒருமித்த குரலில் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டிருப்பதும் தமிழகம் கண்டிராத புதுமைகள்.

பழம் ஆற்றல்கள் – தேக்கங்கள் – போலச் செய்தல் 

இப்புதிய ஆற்றல்களின் புத்தெழுச்சியைக் கண்டு, கால் நூற்றாண்டுகால உறக்கத்திலிருந்து விழித்து “யானை மேல் அம்பாரி ஏறி” அசைந்து ஆடி உலாவரத் துவங்கியிருக்கின்றன பழம் ஆற்றல்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்னர், கொள்கைத் திருவோடு ஏந்தி மக்கள் மன்றத்தின் முன் நின்ற இவ்வாற்றல்களின் வானளாவிய கொள்கைகள் தங்கத் தகடுகளின் முன் தேய்ந்து, புதியன புனையும் ஆற்றல் இழந்து, வீச்சிழந்து, தொய்ந்து, தேய்ந்து கிடக்கின்றன.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின்போது, சீறி வந்த இரயில் முன்பாக, மதுரை மாநகர் இளைஞர்கள், உயிரைத் துச்சமென மதித்து பாய்ந்ததைக் கண்டு அரண்டவர்கள், இப்போது இரயில் நிலையங்களில் மூச்சிரைத்து நிற்கும் எஞ்சின்களின் முன்பாக உரக்க கோஷமிடுகின்றனர். 04.04.2018 அன்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய இரயில் மறியல் போராட்டங்களில் இது அரங்கேறியது.

தில்லியை முற்றுகையிட்ட தமிழக விவசாயிகள் நிஜமான செத்த எலிகளை வாயில் வைத்துக் கடித்து தமது வாழ்வின் நிலையை உலகுக்கு உணர்த்த முற்பட்டனர். 04.04.2018 அன்று கோவையில் சாலை மறியல் நடத்திய திமுகவினரோ பொம்மை எலிகளைக் கடித்து, தம் மீது கவனத்தைக் குவிக்கின்றனர்.

தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு கருப்பு கொடி காட்டத் துணிவது ஏற்புடையதே என்றாலும் சலித்து தேய்ந்து போனதொரு வடிவம். கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு அதிலும் புதுமை புனைந்துள்ளனர் புதிய ஆற்றல்கள். மாட்டு வண்டியில் ஏறி ஊர்வலம் வருவது, மறைந்த முதல்வர் எம் ஜி ஆரின் “நாடோடி மன்னன்” படப் பாடலை போலச் செய்தல்.

இப்பழம் ஆற்றல்கள், புதிய ஆற்றல்கள் புனைந்த புதிய வடிவங்களை போலச் செய்வதும் பழையனவற்றையே திரும்பத் திரும்பச் செய்வதும் ஏன்?

ஐ பி எல் போட்டிகளுக்கான எதிர்ப்பில் மென்மை காட்டுவது, இதற்கான காரணத்தை வெள்ளிடை மலையாகக் காட்டிவிடுகிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணி திமுக குடும்பத்தை சேர்ந்த கலாநிதி மாறனுக்குச் சொந்தமானது என்பது ஒன்றும் “தங்க மலை ரகசியம்” அன்று.

சுரங்கம் தோண்டத் “தங்க மலைகள்” கைவசம் இருக்கையில் புதியன புனைதல் எங்ஙனம் எழும்! புதியனவற்றை போலச் செய்தலும் பழைய “நாடோடி மன்னன்” பாடலை மீண்டும் போலச் செய்தலுமே தொடரும்.

புதியன புனைதலும் போலச் செய்தலும்

எந்தவொரு சமூகத்திலும் மாற்றத்தின் உந்துசக்தியாக இருப்பது புதியன புனைதலே (Invention/Innovation).

சமூகத்தில் முன்னேறிய நிலையில் இருப்போரே புதியனவற்றைப் புனைகின்றனர். ஜனநாயக நெறிகள் வலுப்பட்டிருக்கும் சமூகங்களில், சமூகத்தில் பின் தங்கிய நிலையில் இருப்போருக்கும் புதியன புனையும் சாதகமான நிலைமைகள் கூடுகின்றன. முன்னேறிய நிலைமைகளில் இருப்போர் அப்புதியனவற்றை மௌனமாக (சங்கடத்துடன்) ஏற்றுக்கொண்டு, போலச் செய்வதும் (Imitation) நிகழ்கிறது.

புனையப்பட்ட புதியன போலச் செய்தல் மூலம் சமூகம் முழுக்கப் பரவி நிலைபெறுகிறது.

புதியன புனைதல் புதிய ஆற்றல்களால் முன்னெடுக்கப்பட்டு, போலச் செய்தல் மூலமாக சமூகம் முழுக்கப் பரவி நிலைபெறும்போது, சமூகம் புதிய நிலைகளுக்குச் செல்கிறது.

பழைய ஆற்றல்கள் புதியனவற்றை தம் வயப்படுத்திவிடும்போது, சமூகம் பழைய நிலைமைகளில் தேங்கிவிடுகிறது.

இந்த எச்சரிக்கை தமிழ் சமூகத்திற்கு இன்று மிக மிக அவசியமானது.

நன்றி: தமிழ் இந்து

தொடர்புடைய கட்டுரைகள்:

தைப் புரட்சி – தொடரும் அதிர்வலைகள்

தைப் புரட்சி: இனக்குழு குறியீட்டு அடையாளத்தின் எழுச்சி 

 

 

தைப் புரட்சி – தொடரும் அதிர்வலைகள்

மனித மிருகம் என்பது என்ன? இக்கேள்விக்குப் பல அறிஞர்கள் பலவிதமான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். சிந்திக்கும் மிருகம், அரசியல் மிருகம், உழைக்கும் மிருகம், சிரிக்கும் மிருகம், விளையாடும் மிருகம், பழக்க மிருகம் போன்ற விளக்கங்கள் இவற்றில் அதிகக் கவனம் பெற்றவை.

அதிகக் கவனம் பெறாத விளக்கம் ஒன்றும் உண்டு. அது “போலச் செய்யும் மிருகம்“. உண்மையைச் சொல்வதென்றால் “மனிதன் ஒரு போலச் செய்யும் மிருகம்“ என்ற விளக்கத்தை எந்த அறிஞரும் இதுவரை அளித்திருக்கவில்லை.

ஆனால், மானுடச் சமூகத்தின் அடிப்படையான பண்பாக “போலச் செய்தல்” (imitation) இருக்கிறது என்பதை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புகழ் பெற்று விளங்கியவரான ஃப்ரெஞ்சு சமூகவியலாளர் கப்ரியேல் டார்ட் என்பார் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். 1916 ஆம் ஆண்டு, கொலம்பியா பல்கலைக் கழகத்தில், இந்தியாவில் சாதிகளின் தோற்றம் குறித்து ஆற்றிய புகழ் பெற்ற ஆய்வுரையில் மாமேதை அம்பேத்கர், கப்ரியல் டார்டின் இக்கருத்தாக்கதைக் கையாண்டு, சாதிகள் இந்தியா முழுக்கப் பரவியிருப்பதற்கான காரணத்தை விளக்கியிருப்பார் என்பது சிறப்புக் கவனத்திற்குரியது.

அம்பேத்கரின் ஆய்வுரையில் அதிகக் கவனம் பெறத் தவறியக் கருத்தாக்கமும் அதுவே. போலவே, கப்ரியல் டார்டின் கருத்தாக்கமும் சமூகவியல் ஆய்வுப் புலத்தின் கவனத்தைப் பெறத் தவறியது ஒரு துரதிர்ஷ்டம். என்றாலும், அண்மைக் காலங்களில் கப்ரியல் டார்டின் கருத்தாக்கங்கள் மீளவும் கவனத்தைப் பெறத் துவங்கியிருக்கின்றன.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்கு முன்பாக அவர் முன்வைத்த “போலச் செய்தல்“ குறித்த செறிவு மிக்க கருத்தாக்கங்கள் தற்கால அரசியல் நிகழ்வுகளை கூர்மையாகப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கின்றன என்பதே அவற்றின் சிறப்பாகும்.

கடந்த சில வாரங்களாக, தமிழ்நாட்டில் எழுச்சி பெற்றிருக்கும் காவிரி நதி நீர் உரிமைக்கான போராட்டங்களையும் இப்”போலச் செய்தல்“ நோக்கில் காணலாம்.

இவற்றில், எனது கவனத்தை ஈர்த்தவை இரண்டு. முதலாவது, 04.04.2018 அன்று கோவையில் திமுகவினர் வாயில் எலிப் பொம்மைகளை வைத்து அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டது.

இரண்டாவது, அதே நாளன்று, இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியினர், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் நிகழ்த்திய இரயில் மறியல் போராட்டங்கள்.

கோவை திமுக வினர் வாயில் எலிப் பொம்மைகளை வைத்து நிகழ்த்திய மறியல் தில்லியில் தமிழக விவசாயிகள் நிஜமான செத்த எலிகளை வாயில் வைத்துக் கடித்து நிகழ்த்திய போராட்ட நிகழ்வின் “போலச் செய்தல்“.

இரயில் மறியல் போராட்டங்களில், இரயில் நிறுத்தங்களில் வேகம் குறைந்து வந்து கொண்டிருந்த இரயில்களுக்கு முன்பாக இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியினர் பாய்ந்து ஓடியதை தொலைக்காட்சி செய்திகளில் தமிழக மக்கள் கண்ணுற்றிருப்பார்கள்.

இது, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கடந்த வருடம் தமிழகத்தில் வெடித்த இளைஞர்களின் எழுச்சியின்போது, மதுரையில் சில துணிச்சல் மிக்க இளைஞர்கள் மிகவேகமாக வந்துகொண்டிருந்த இரயிலைத் தம் உயிரைப் பொருட்படுத்தாது எதிர் சென்று மறித்து நிற்க வைத்த போராட்டத்தின் “போலச் செய்தல்“.

ஆனால், சில வித்தியாசங்களும் உண்டு.

கடந்த வருடம் மதுரையில் மறிக்கப்பட்டது மிக வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு இரயில். மறித்தது, உயிரைப் பொருட்படுத்தாத இளைஞர்கள்.

இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் மறித்தவை இரயில் நிலையங்களுக்கு வேகம் குறைந்து வந்துகொண்டிருந்த, அல்லது இரயில் நிலையங்களில் இருந்து மெதுவாகப் புறப்பட்டுக் கொண்டிருந்த இரயில்களை. மறித்தோர் பெரும்பாலும் தலை நரைத்தவர்களாக இருந்ததைக் காணமுடிந்தது.

கடந்த வருடம் தில்லியில் விவசாயிகள் வாயில் வைத்தது நிஜமான செத்த எலிகள்.

இப்போது கோவை திமுகவினர் வாயில் வைத்தது பொம்மை எலிகள்.

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, போலச் செய்தலில் சில விதிகள் அமைந்துவிடுவதுண்டு. “போலச் செய்தலின் விதிகள்“ (The Laws of Imitation) என்ற தமது புகழ்பெற்ற நூலில் கப்ரியல் டார்ட் அவற்றைத் தொகுக்க முற்பட்டிருக்கிறார்.

அவற்றில் சில:

  1. சமூக மாற்றத்தின் உந்துவிசையாக இருப்பது புதியது புனைதல் (Invention).
  2. புனையப்பட்ட புதியது, போலச் செய்தல் (Imitation) வழியாக சமூகம் முழுக்கப் பரவுகிறது.
  3. புதியது புனைதல் சமூகத்தில் முன்னிலையில் இருப்பவர்களிடத்தில் இருந்து தொடங்கி, போலச் செய்தலாக சமூகத்தில் பின் தங்கியிருப்பவர்களிடத்தில் சென்று சேர்கிறது. ஜனநாயக நெறிகள் மேலோங்கியிருக்கும் சமூகங்களில், புதியது புனைதல் பின் தங்கியிருப்பவர்களிடத்தில் இருந்து தொடங்கி முன்னிலையில் இருப்பவர்களால் போலச் செய்தலாகப் பரவுவதற்கான நிலைமைகள் அதிகரிக்கின்றன.
  4. போலச் செய்தல் காலம் மற்றும் வெளி ஆகிய இருநிலைகளில் அருகில் இருப்பவர்களிடையே கூடுதலாக இருக்கும். இடைவெளி கூடக்கூட போலச் செய்தலின் தன்மை அல்லது வீர்யம் குறையும். ஒரு குளத்தில் கல் எறிந்தால் தோன்றும் அதிர்வலைகள் போல புதியது புனைதலால் தோன்றும் போலச் செய்தலின் பரவல் இருக்கும்.
  5. ஒரு சமூகத்தில் பல புதியன புனைதல் தோன்றுகின்றன. சில நிலைத்து போலச் செய்தல் மூலம் சமூகம் முழுக்கப் பரவுகின்றன. பல புதியன புனைதல் தோன்றிய சுவடே தெரியாமல் மறைந்துவிடுகின்றன.

சில புதியன புனைதல் நிலைத்து நிற்பதும், பல மறைந்துவிடுவதும் ஏன் என்ற கேள்வியின் ஆய்வாகத்தான் கப்ரியல் டார்டின் நூல் விரிகிறது. இங்கு விரித்து எழுதுவது சாத்தியமன்று. நோக்கமும் அன்று.

கவனத்திற்கு உரிய புள்ளிகளை மட்டும் ஒப்புநோக்கி குறித்துக்கொள்வோம்.

1000 மைல்கள் தொலைவுக்கு அப்பால் தமிழக விவசாயிகள் நிகழ்த்திய போராட்டம் ஒரு வருடம் கழித்து கோவை திமுகவினரால் போலச் செய்யப்படும்போது, நிஜ எலி பொம்மை எலியாக மாறிவிடுகிறது.

மிக வேகமாக வந்து கொண்டிருந்த இரயிலை உயிரையும் பொருட்படுத்தாது மறித்த இளைஞர்களின் போராட்டம் ஒரு வருடம் கழித்து போலச் செய்யப்படும்போது, இரயில்களின் வேகம் குறைந்துவிடுகிறது. மறிப்பவர்களின் வயதும் கூடிவிடுகிறது.

காலம் வெளி இவற்றுக்கிடையிலான தொலைவு கூடும்போது போலச் செய்தலின் வீர்யம் குறைந்துவிடுகிறது. குளத்தில் எறியப்பட்ட கல்லால் தோன்றும் அதிர்வலைகள் குளத்தின் கரையில் வேகம் குறைந்திருப்பதைப் போல.

சமூகத்தில் பொருட்படுத்தப்படாத பிரிவினராகக் கருதப்படும் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் புனைந்த புதியனவற்றை, சமூகத்தில் மிகவும் முன்னேறிய பிரிவினராக, முற்போக்கானவர்களாகக் கருதப்படும் இரண்டு கட்சியினர் (திமுக, கம்யூனிஸ்ட்டுகள்) போலச் செய்கின்றனர். வழி காட்ட வேண்டியவர்கள் காட்டப்பட்ட வழியில் பின் தொடர்கின்றனர்.

பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் ஜனநாயக நெறிகள் நிலைபெற்றிருப்பதற்கான சான்றுகளில் இது ஒன்று. அதே சமயம், கருத்தாக்கங்களின் அளவில் முன்னேறிய பிரிவினராகக் கருதப்படுவோரின் தேக்கத்தையும் சுட்டுவது.

தமிழக விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும் எறிந்த கல்லின் அதிர்வலைகள், புனைந்த புதிய போராட்ட முறைகள் நிலைபெற்று தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதே இதில் மகிழ்ச்சிக்குரியது.

நன்றி: தமிழ் இந்து 

தொடர்புடைய கட்டுரை: தைப் புரட்சி: இனக்குழு குறியீட்டு அடையாளத்தின் எழுச்சி

%d bloggers like this: