அரைமண்டைக் கடவுள் மறுப்பாளரின் முட்டாள்தனமான பகுத்தறிவும் மூர்க்கத்தனமான இஸ்லாமிய எதிர்ப்பும்

தில்லியில் இருக்கையில், சீக்கிய நண்பர்கள் சிலர் தமது வழிபாட்டுத் தலமான குருத்வாராவிற்கு என்னை அழைத்துச் சென்றதுண்டு. நான் கடவுள்/மத நம்பிக்கையற்றவன் என்பது அவர்களுக்குத் தெரியும். என்றாலும், தமது வழிபாட்டு வழக்கங்கள் குறித்து எதையும் அறிவுறுத்தாமலேயே குருத்வாராவிற்கு வரச் சொல்லியிருந்தார்கள்.

சென்ற தருணங்கள் பெரும்பாலும், அரசியல் சந்திப்புகள் தொடர்பானவை. சீக்கிய “தேசிய இனத்தின்” சமரசமற்ற தலைவராக விளங்கும் திரு. சிம்ரஞ்சித் சிங் மான் அவர்களையும் அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள்.

முதல் முறை திரு. சிம்ரஞ்சித் சிங் மான் அவர்களைச் சந்திக்க தில்லி நாடாளுமன்ற நூலக வளாகத்திற்கு மிக அருகில் இருந்த பெரிய குருத்வாராவிற்கு வரச் சொல்லியிருந்தார்கள். 1984 ஆம் ஆண்டு “ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்” என்ற பெயரில் துவக்கி வைக்கப்பட்ட சீக்கிய இனப் படுகொலை நினைவு நாள் கூட்டம் அக்குருத்வாரா வளாகத்திற்குள் நடந்தது. வளாகம் என்றால், அதற்குள் வழிபடும் இடம் தவிர்த்து, தங்கும் விடுதி, உணவு சமைக்கும் கூடம், உணவருந்தும் கூடம், கண்காட்சி அரங்கம், பரந்த புல் வெளி என்று பலவும் உள்ளடங்கியதாக இருந்தது.

புல் மேவிய சிறு மைதானத்தில் போடப்பட்டிருந்த சிறிய மேடையில், ஏழுட்டு தலைவர்கள் பஞ்சாபி மொழியில் ஏதேதோ பேசினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து, பேந்தப் பேந்த விழித்து புரியாததைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

கூட்டம் முடிந்ததும், அனைவரும் வழிபடும் தலத்திற்குள் சென்றுவிட்டார்கள். நான் குருத்வாராவை விட்டு வெளியே வந்து, சற்று தூரம் தள்ளிச் சென்று, நாடாளுமன்ற நூலக வளாகத்தை அண்ணாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இரண்டு வெண்குழல் வத்திகளை (சிகரெட்டுகளை) ஊதித் தள்ளினேன். சீக்கிய வழிபாட்டுத் தலங்களான குருத்வாராக்களுக்குள் வெண்குழல் வத்திகள் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட தூரத்திற்குள் எவரும் வெண்குழல் வத்திகளைப் புகைப்பதும் இல்லை. வெண்குழல் வத்திகளை விற்பதும் இல்லை. பிற சமயத்தினரும் இவ்வழக்கத்திற்கு மதிப்பளிக்கிறார்கள். சீக்கியர்கள் பெரும்பான்மையினராக இல்லாத பகுதிகளிலும்.

வெண்குழல் வத்திகளைப் புகைத்துவிட்டு மீண்டும் குருத்வாராவிற்குள் நுழைந்தபோதும் வழிபாடு தொடர்ந்து கொண்டிருந்தது. காலாற வளாகத்தைச் சுற்றி நடைபோட்டுக் கொண்டு, வழிபட வந்தவர்களின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று வழிபாட்டை முடித்துவிட்டு தலைவர்களும் தொண்டர்களுமாக வெளியே வந்தார்கள். சரசரவென நாற்காலிகள் போடப்பட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு. அது முடிந்த உடனே, அனைவரும் உணவருந்தும் கூடத்தை நோக்கி தலைதெறிக்கப் பறந்தார்கள். பசி.

வரச்சொன்ன நண்பர்கள் பசியில் என்னை மறந்து போனார்கள். எல்லோரும் எங்கே ஓடுகிறார்கள் என்று ஆச்சரியப்பட்டு விசாரித்துத் தெரிந்துகொண்டு, உணவுக் கூடத்தை நோக்கி நானும் நடந்தேன்.

கைகால் கழுவிக் கொண்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டுகளில் இருந்து ஒன்றை உருவிக்கொண்டு, வயது வித்தியாசம் பாராமல் எல்லோரும் வரிசையாக கூடத்தின் தரையில் அமர்ந்திருந்தார்கள். பஞ்சாபி மொழியில் பொது உணவுக் கூடத்தின்/சமையலறையின் பெயர் “லங்கர்”. அதிலிருந்து அங்கு பரிமாறப்படும் உணவையும் “லங்கர்” என்றே அழைக்கிறார்கள்.

நீண்ட கூடம். நாலைந்து நபர்கள் கூடைகளில் உணவைச் சுமந்து வந்தார்கள். வரிசையில் அமர்ந்திருந்தவர்களின் அருகில் வந்ததும் கைகளை ஏந்தினார்கள். ஏந்தியவர் கைகளில் கூடையைச் சுமந்து வந்தவர்கள், ரொட்டித் துண்டுகளைப் போட்டார்கள்.

எனக்கு அருகில் வந்ததும் நானும் வலது கையை ஏந்தினேன். ரொட்டி கிடைப்பதற்குப் பதிலாக பஞ்சாபியில் காச்சு மூச்சென்று சத்தம் கேட்டது. கூடையைச் சுமந்து கொண்டிருந்தவர் கோபமாக ஏதோ திட்டிக் கொண்டிருந்தார். என்னைத்தான் திட்டுகிறார் என்று புரிந்தது. ஆனால் என்ன திட்டிக் கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஏன் திட்டிக் கொண்டிருக்கிறார் என்று சுத்தமாகப் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

நல்லகாலமாக, அருகில் அமர்ந்திருந்த சீக்கியர், சட்டென்று என் இடது கையைப் பிடித்து உயர்த்தி, வலது கையோடு சேர்த்து வைத்தார். இருகைகளையும் சேர்த்துவைத்து உயர்த்தி ரொட்டியைக் கேட்க வேண்டும் என்று சைகை செய்தும் காட்டினார். ரொட்டி கைகளில் விழுந்தது.

அந்தக் கூட்டத்தில் தாடி வைக்காமல் இருந்த ஒரே நபர் நானாகத்தான் இருந்தேன். அருகில் அமர்ந்திருந்தவர், “மதராஸி?” என்று கேட்டார். “யெஸ்” என்று பதில் சொல்லிவிட்டு ரொட்டிக்குத் தொட்டுக்க என்ன தருவார்கள், எப்படித் தருவார்கள் என்று கொஞ்சம் பயத்தோடு காத்திருந்தேன். நல்ல காலமாக, அடுத்து சிலர், பாத்திரங்களில், உருளைக் கிழங்கு சப்ஜியை எடுத்துவந்து தட்டில் வைத்துப் பரிமாறிச் சென்றார்கள்.

சாப்பிட்டு முடித்து, கூடத்தைவிட்டு வெளியே வந்து, நண்பர்களை கைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு, வளாகத்திற்குள் இருந்த தங்கும் விடுதியில் சந்தித்தோம். சிம்ரஞ்சித் சிங் மான் அவர்களுடனும் கலந்துரையாடல். பிறருடன் உசாவல்கள் என்று பொழுது கழிந்தது.

கலைந்து செல்லும்போது, என்னை வழியனுப்ப வந்த நண்பரிடம் மதியம் நடந்த சம்பவத்தைச் சொல்லி விளக்கம் கேட்டேன். அடர்ந்த சீக்கியத் தாடிக்குள்ளிருந்து 16 பற்களாவது என்னைப் பார்த்து கேலி செய்தன. “லங்கரில் சமைக்கப்படுவது பொது உணவு. அங்கு இறைவனின் முன் அனைவரும் சமம். அனைவரும் இறைவனின் உணவிற்காக இரு கைகளையும் ஏந்தி நிற்கத்தான் வேண்டும்,” என்றார்.

முதலும் கடைசியுமாக, எனது “சோத்தாங்கைப்” பழக்கத்தை நினைத்து வெட்கப்பட்டது அப்போதுதான். இந்த அனுபவம், மேற்கொண்டு இது குறித்து அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டிவிட்டது. சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் முடிந்தது.

“லங்கர்” – பொது உணவு சமைத்தல், வழிபாட்டுத் தலங்களில் பொது உணவு பரிமாறுதல் (பிற சமயத்தவருக்கும்) இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த முஸ்லீம்களால் அவர்களது வழிபாட்டுத் தலமான மசூதிகளில் கடைப்பிடிக்கப்பட்டது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குரு நானக் இதைத் தமது வழிபாட்டுத் தலங்களில் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகளில் ஒன்றாக இணைத்துக் கொண்டார் என்பன போன்ற விவரங்களை அறிந்துகொள்ள முடிந்தது.

இறைவனின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தாக்கம் இந்தியத் துணைக் கண்டத்தில் உருவான வைதீக சமயத்திற்கு முற்றிலும் புறம்பானது. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்த ஒரு சமயத்தால் அதைக் கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாது. வைதீக சமயத்திற்கு மறுப்பாக எழுந்த பௌத்த சமண சமயங்கள், “கர்மம்” – நன்நடத்தை, நற்சிந்தனை, நல்லொழுக்கம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, இவ்வுலக நல்வாழ்வை வலியுறுத்தி பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை மறுக்க முற்பட்டன. குப்தர் காலத்தில் மீண்டெழுந்த வைதீக சமயம், “கர்ம” சிந்தனையை “கர்ம பலனாக” உள்வாங்கிக் கொண்டு, பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை “கர்ம வினையாக” நியாயப்படுத்தின. நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியில் எழுந்த சிக்கலான சமயச் சிந்தனை மரபுகள் இவை.

இவை குறித்து அறிந்து கொள்ளும் ஆவலோ, தேடலோ அற்ற அரைமண்டைகள்தாம், ஆய்ந்தறியும் பகுத்தறிவுச் சிந்தனையற்று, முரட்டு நாத்திகவாதச் செருக்கோடு, மசூதிகளில் பிற சமயத்தினருக்கும் வழங்கப்படும் உணவுக் கொடையை “பிச்சை” என்று தூற்ற முடியும்.

“பிச்சை”யைக் கேவலமாகப் பார்க்கும் சிந்தனையே வைதீகச் சமயத்தோடு பிணைந்தது என்று சொன்னாலும் மிகையில்லை. மரணச் சடங்குகளைச் செய்யும் சவுண்டிப் பார்ப்பனர்களையும், வழிபடுவோர் காணிக்கையில் வாழும் பூசாரிப் பார்ப்பனர்களையும் இழிவான உட்பிரிவினராக “உயர்சாதி பார்ப்பனர்கள்” விலக்கி வைத்திருப்பது, அவ்விரு பிரிவினரும் வயிற்றுப் பிழைப்பிற்கு “பிச்சை” எடுத்து வாழ்பவர்கள் என்ற காரணத்தின் பொருட்டே.

மற்றொருபுறம், மேற்கத்திய கிறித்தவ மதிப்பீடுகளை உள்வாங்கிக் கொண்டு எழுந்த முதலாளிய மதிப்பீடுகளும் “பிச்சைக்காரர்களை” பாவாத்மாக்களாக வெறுத்து அருவருத்தது. “உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்” (ஆதியாகமம்: 3: 19) என்று தேவனானவர் ஆதாமிற்கு இட்ட கட்டளை முதலாளியச் சிந்தனையை அலைக்கழித்தது. தேவனானவர் இட்ட கட்டளைக்குக் கீழ்படியாது, “உழைக்காமல்” திரிந்த “சோம்பேறி”களையும், நாடோடிகளையும், குற்றம் புரிந்தவர்களையும் கட்டாய உழைப்பு முகாம்களில் அடைத்து பயனற்ற கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தியது. தொழில் முதலாளியத்தின் ஆரம்ப காலம் இத்தகைய கட்டாயக் கடும் உழைப்புச் சுரண்டலின் மீதே எழுந்தது.

உழைக்காமல் இருப்பது இறைவனின் கட்டளையை மீறுவது என்ற கிறித்தவ மதிப்பீட்டின் மீது எழுந்த அதே முதலாளியம்தான் உழைக்காதவர்களின் பெரும் திரளையும் உருவாக்கியது. மூன்று நபர்களுக்கு 4 மணி நேரமாகப் பிரித்துத் தரக்கூடிய வேலையை, ஒரு நபரை 12 மணி நேரம் உழைக்கச் செய்து சுரண்டியது. வேலையற்ற 2 நபர்களை உருவாக்கி, அவர்களைத் திறனற்றவர்கள், சோம்பேறிகள் என்று இழிவுபடுத்தி பிச்சைக்காரர்களாக அலையவும் விட்டது. வேலையற்ற 2 நபர்களைக் காட்டி, வேலையில் இருக்கும் ஒரு நபரைத் தனக்கு விசுவாச அடிமையாக உருமாற்றிக் கொண்டது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்காமல், சிலருக்கு மட்டும் வாய்ப்புகளைத் தந்து, பெரும்பாலானோரை வேலையற்றவர்களாகவும் “சோம்பேறிகளாகவும்” “பிச்சைக்காரர்களாகவும்” சமூகத்தின் விளிம்புகளில் அலையவிடுவது முதலாளியத்தின் இயக்கத்திற்கு அவசியமானது. அவ்வாறு அலைபவர்களையும், மசூதிகளில் வழங்கப்படும் உணவைப் பெற வரிசையில் நிற்பவர்களையும், 12 மணிநேரத்திற்கும் மேலாக கூலிக்கு மாரடித்து, முதலாளிய நுகர் பொருள் பண்பாட்டில் திளைக்கும் விசுவாச அடிமைகள், பிச்சைக்காரர்கள் என்று சாடுவதில் வியப்பில்லை.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்க விழையாத மேற்குலக கிறித்தவச் சிந்தனை மரபின் ஒரு குறிப்பிட்ட சரடில் உருவான முதலாளியச் சிந்தனையும் இயக்கமும், இந்தியத் துணைக்கண்டத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் உருவாவதை வெறுக்கும், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்து சாதி ஒதுக்கலை வலியுறுத்தும் பார்ப்பனச் சிந்தனைக்கு மிகவும் அணுக்கமானது.

மூன்றே முக்கால் வீதமேயான பார்ப்பனர்கள் தமது கருத்தியலை, முக்கால்வாசி பெருந்தொகையினரின் சிந்தனையாக மாற்றியதுதான் அதன் வெற்றி. அதேவீதமுள்ள முதலாளிய அடிமைகளின் சிந்தனையை ஓடாய் தேயும் உழைப்பாளர்களின் சிந்தனையாக மாற்றியது முதலாளியத்தின் வெற்றி. எள்ளி நகைக்கத்தக்க சிறு கூட்டத்தின் கருத்தியல், ஆகப் பெரும்பான்மையினரின் கருத்தியலாக உருமாறுவதுதான் அடிமைத்தனத்தின் அடையாளம்.

இத்தகைய பெரும்பான்மைவாத அடிமைகள் உலகின் எந்த மூலை முடுக்குகளுக்குச் சென்றாலும், அங்கு காண நேரும் புதியனவற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளும் திறனற்றவர்களாகவே இருப்பார்கள். புதியன எதையும் காண மறுப்பார்கள். ஏற்கனவே கொண்டிருந்த கருத்தமைவுகளையே மறு உறுதி செய்து கொள்வார்கள்.

பெரும்பான்மைவாதம் பிறவற்றின் நியாயங்களைக் காண மறுக்கும் மூடத்தனம் மட்டுமன்று. பிறவற்றின் நியாயங்களை மறுக்கும் முரட்டுத்தனமும்கூட. அத்தகையோர், பகுத்தறிவையும் கடவுள் மறுப்பையும் மதமாக மாற்றிவிடும் பக்திமான்களாக இருக்கவே தகுதிபடைத்தவர்கள்.

%d bloggers like this: