ஆபரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் அவுட், டாக்டர் சூப்பர்! … 1

நண்பர் பைத்தியக்காரன் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரின் கவிதையை முன்வைத்து வாசிப்பு – மொழி – அதிகாரம் இவற்றுக்கிடையிலான உறவுகளை விளக்க முற்பட்டு எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிடலாம் என்று நினைத்து உட்கார்ந்தேன். ஏற்கனவே சில நாட்களுக்கு முன் எழுதி அனுப்பிய பின்னூட்டத்தை தனிப்பதிவாக வெளியிட நேர்ந்த ‘துர்பாக்கியத்தை’ அவருக்கு மீண்டும் தந்துவிட வேண்டாம் என்று தோன்ற, இந்தப் பதிவு.

பைத்தியக்காரன் தனது கருத்துக்களை இரண்டு பகுதிகளாக தெளிவாகப் பிரித்து, முதல் பகுதியில் மொழியின் அமைப்பு – அர்த்தங்கள் உருவாகும் விதம் – அதிகாரம் இவற்றுக்கிடையிலான உறவுகளைப் பற்றி பொதுவான குறிப்புகளைத் தந்துவிட்டு, இரண்டாவது பகுதியில் சுந்தரின் கவிதை பற்றியும் எழுதியிருப்பதை வாசிப்பவர் எவரும் எளிதாக உணர்ந்திருக்கலாம்.

முதற்பகுதியிலும் எனக்கு மாறுபட்ட சில கருத்துக்கள் உண்டு. மொழியின் அமைப்பு பற்றி (வித்தியாசங்களின் ஊடாக உருப்பெறுவதே மொழி) பெரிய கருத்து மாறுபாடு ஏதும் இல்லை. மொழியின் இயக்கம் பற்றிய அவரது சிதறலான குறிப்புகளில் மிகுந்த மாறுபாடு இருக்கிறது. அவற்றை சந்தர்ப்பம் வாய்க்கும்போது பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

இரண்டாவது பகுதியில் சுந்தரின் கவிதையை எடுத்துக்கொண்டு, ஒரு ‘பன்முகப்பட்ட’ வாசிப்பை எப்படி நிகழ்த்திக் காட்டலாம் என்று அவர் முன்வைத்திருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளின் மீது மட்டும் தற்போதைக்கு.

பைத்தியக்காரன் அடுக்கடுக்காக வைத்திருக்கும் கேள்விகளுக்குள் நான் நுழையப்போவதில்லை. “பதிவின் இந்தத் தலைப்பையே பலவிதமாக வாசிக்கலாம்” என்று தொடங்கி சுந்தரின் கவிதை வரிகளை சில தொகுப்புகளாகப் பிரித்து அவற்றுக்கு எப்படியெல்லாம் ‘பலவிதமான’ அர்த்தங்கள் இருக்கலாம் என்று அவர் அடுக்குவதன் அடிப்படையைக் கேள்விக்கு உட்படுத்துவதே இங்கு செய்ய விழைவது.

(அவர் எழுப்பிய சில கேள்விகளே தவறானவை என்பதை சிலர் குறிப்பிட்டுள்ளதும் மிகச் சரியே. எ – கா: “Cum for me, I am on pills” I understand that she has taken contraceptive pills and he can cum inside her without worrying about pregnancy! என்று “சும்மா” என்பவரும் “tamil” என்பவரும் சுட்டிக் காட்டியுள்ளதைக் குறிப்பிடலாம்.)

பைத்தியக்காரன் தனது கட்டுரையில் சுந்தரின் கவிதைக்குள் புகுமுன்பாக, முதல் பகுதியை முடிக்கும் கடைசிப் பத்தியை எடுத்துக் கொள்வோம்.

“பன்முக வாசிப்பு சாத்தியப்பட வேண்டுமாயின், அதன் அர்த்தங்கள் இதுதான் என்று முத்திரை குத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.”

இதில் பெரிய பிரச்சினைகள் இல்லை. ‘பன்முக வாசிப்பு’ என்பதை எதற்காகச் செய்து பார்க்க வேண்டும் என்ற கேள்வியைத் தவிர. அதற்குப் பிறகு வருவோம்.

“ஒரு கவிதையை புரிந்துக் கொள்ள அதை கவிஞனின் கற்பனாரீதியான எழுச்சியாகவோ அதன் உரைநடை அளவிலான வாக்கிய அலகுகளாகப் பிரித்தோ இனம் காணக்கூடாது. இந்த இரண்டுமே குறுகலான வாசிப்புக்கே இட்டுச் செல்லும்.”

முதல் வரி, “ஆசிரியன் மறைந்துவிட்டான்” (death of the author) என்ற கருத்தாக்கத்தோடு தொடர்புடையது. ஆசிரியனின் ‘கற்பனையில் உருவான’ படைப்புக்கு அவன் கொள்ளும் அர்த்தம் மட்டுமே அறுதியானதல்ல என்று வலியுறுத்துவது. மாறுபாடில்லை. சில நுணுக்கமான வித்தியாசங்கள் உண்டு. அதற்கும் வருகிறேன்.

இரண்டாவது வரியில் முழு உடன்பாடு. மொழியின் இலக்கண அமைப்பு அதன் வாக்கிய அமைப்பிலேயே எவ்வாறாக subject x predicate என்ற துருவங்களை உருவாக்கி “நான்” என்று சொல்லப்படும் ஒற்றைத் தன்னிலையைக் கொண்டிருக்கிறது, அதற்கு நாம் எவ்வாறு பழக்கமாகி அடிமைத் தன்னிலைகளை வரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதோடு நேரடியாகத் தொடர்புடையது.

இந்த இடத்தில் மேலே குறிப்பிட்டுள்ள முதல் வரியின் கருத்தமைவோடு பைத்தியக்காரனின் கட்டுரை முடியும் இறுதிப் பத்தியில் வரும் இந்த வரியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அது பின்வருமாறு (இப்படிப் ‘பின்வருமாறு’ என்று எழுதுவதெல்லாம் எனக்குப் பிடிக்காத நடை. என்றாலும் வாசகர்களுடன் எத்துனை எளிதாக உறவுகொள்ள முடியுமோ அத்துனை முயற்சி செய்யவேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்):

“எனவேதான் சுந்தர் வார்த்தைக் கூட்டங்களில் மட்டுமே அக்கறை செலுத்துபவராக இல்லாமல், பல்வேறு கலைத்துறைகளின் தற்காலப் போக்குகளை பருண்மையாகப் பார்க்கும் போக்கை பெற்றிருப்பவராகவும் இருக்கிறார். எழுதப்படுகிற எழுத்து என்பதைத் தாண்டி, ஓவியம், கொலாஜ் கலந்த ஒரு புதிய அமைப்பைக் கவிதையிலும், உரைநடையிலும் இனம்காட்டுகிறார். இதன் மூலம் ஒற்றைத்தன்மையைத் தவிர்த்து, கவிதையின் சக்தியை, மொத்த கலாச்சார விடுதலைக்கான உந்துதலாக மாற்றுவதுடன், ஆதிக்கச் சக்திகளால் காயடிக்கப்பட்ட பொருளாக மாறிவிடமாலும் பார்த்துக் கொள்கிறார்.”

எனது கேள்வி இதுதான். “ஆசிரியன் இறந்துவிட்டான்” என்று ஒப்புக்கொண்டபின், ஆசிரியன் ஒரு பிரதியை – கவிதையை, சிறுகதையை, குறுநாவலை, நாவலை – எத்துனை கவனமாக, சிறப்பாக எழுதியிருக்கிறாள்/ன் என்று அதே மூச்சில் நாம் ஏன் பாராட்ட வேண்டும்? (primordial sentiment – என்று தமிழவனும், “மரணச் சடங்கின் பதிலீடு” என்று நாகார்ஜுனனும் சொல்லக்கூடுமோ?!)

விட்ட இடத்திற்கு மீண்டும் திரும்பினால் தொடரும் வரி, “கவிதையாக்கம் என்பது, வாசிப்பவனுக்குக் கவிதை தனது ஒலி – வார்த்தை அமைப்புகளைத் திறந்து காட்டுவதாக அமையவிருப்பதைப் பார்க்க வேண்டும்” என்று தொடர்கிறது.

மீண்டும் அதே பிரச்சினை. முந்தைய வரி “ஆசிரியன் செத்துவிட்டான்” என்ற கருத்தை வழிமொழிவதாக இருக்கிறது. கட்டுரையின் கடைசிப் பத்தியில் வரும் மேற்குறிப்பிட்ட பகுதி ஆசிரியனைப் பாராட்டுகிறது. இந்த வரியும் கவிஞனுக்கு அழுத்தத்தைக் குறைத்து ‘கவிதையாக்கம்” என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

தொடர்ந்து பத்தியின் கடைசி வரி, “இந்த அமைப்பு திறந்தவுடன் அர்த்தங்கள் முடிவாக ஏதுமின்றி, ஒன்றிலிருந்து மற்றதற்கான அமைப்பியல் மாற்றம் அடையவே வடிகோலுகின்றன. வாசிப்பவன் இந்த மாற்றங்களை அடையாளம் கண்டுகொண்டு சென்றால், கவிதையின் புரியாதமுகம் கிழிந்து, கவிதை புரிய ஆரம்பிக்கும்” என்கிறது.

மீண்டும் கவிஞனைவிட கவிதைக்கு முக்கியத்துவம் (ஆனால், கட்டுரையின் இறுதிப் பத்தியில் கவிஞனைப் பற்றிய சிலாகிப்பு). அதேசமயம், இதில் புதிதாக மூன்று விஷயங்கள் சேர்ந்துகொள்கின்றன.

கொஞ்சம் நேர்மாறான வரிசையில் கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம்.

3) “கவிதையின் புரியாதமுகம் கிழிந்து, கவிதை புரிய ஆரம்பிக்கும்.” அதாவது கவிதை ‘புரிய வேண்டும்’.

(அடுத்த பகுதிக்கு வருமுன் யோசிக்க சில புள்ளிகள்:

கவிதை புரியக்கூடாது.

கவிதை புரிதலுக்கு அப்பாற்ப்பட்டது.

கவிதை மட்டுமல்ல இலக்கியம்/கலை என்று நாம் சொல்லக்கூடிய எதுவும் புரிதலுக்கு அப்பாற்ப்பட்டது.

முதல் மட்டமாக, புரிதல் என்பதை நாம் இங்கு understanding என்ற கருத்தாக்கத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும். Understanding என்பது “(மேலோட்டமாக அறிந்து) தெளிவது”. அது ஒரு அபிப்பிராயத்தை – opinion – நமக்குள் உருவாக்கும்.

இதற்கும் மேலாக, புரிதல் என்பது ஒரு கருத்தை (idea or concept) உருவாக்கிக் கொள்வது.

2) “வாசிப்பவன் இந்த மாற்றங்களை அடையாளம் கண்டுகொண்டு சென்றால் (செல்ல வேண்டும்)”. கேள்வி்: ‘ஆசிரியனைக் கொன்ற பிரதியை’ வாசிக்கும் வாசகர், பிரதியை எப்படித் தொடர்ந்து செல்ல வேண்டும்? ஏன் தொடர்ந்து செல்ல வேண்டும்?

1) “இந்த அமைப்பு திறந்தவுடன் அர்த்தங்கள் முடிவாக ஏதுமின்றி, ஒன்றிலிருந்து மற்றதற்கான அமைப்பியல் மாற்றம் அடையவே வடிகோலுகின்றன்”.

அதாவது, அர்த்தங்களுக்கு எல்லை கிடையாது. Unlimited semiosis என்று இதைச் சொல்வார்கள். எந்த ஒரு பிரதிக்கும் – கவிதை, நாவல் இன்னபிற – முடிந்த முடிவான அர்த்தம் கிடையாது; எந்த ஒரு சூழ்நிலைமையிலும், அதற்கான அர்த்தங்களை வரையறுக்க முடியாது; ஒரு வாசகனின் புரிதலுக்கு ஏற்ப ஒரு பிரதி எந்த ஒரு அர்த்தத்தையும் உருவாக்கும் சாத்தியத்தையும் தனக்குள் கொண்டிருக்கிறது.

ஆக, பிரதி தனது சூழலில் இருந்து விலகி அல்லது கடந்து அல்லது மேலாக நின்று, எந்த அர்த்தங்களையும் கொடுக்கக் கூடியதாக, தனது சூழலை மீறி எல்லாக் காலத்திற்கும் எல்லா அர்த்தங்களையும் தனக்குள் உள்ளடக்கியதாக ஒரு கருத்து முன்மொழியப்படுகிறது. இது சமயம், இதைச் செய்வது ‘ஆசிரியன்’ அல்ல; ‘பிரதி’ அல்லது பெரும்பாலான சமயங்களில் ‘வாசகர்’ – the work of art or the slavish reader becomes eternal in place of the artist; transcendental argument in another guise.

(ஒப்புக்கொள்வதென்றால், பைத்தியக்காரன் “ஆசிரியன் இறந்துவிட்டான் என்ற கருத்தாக்கத்தின் தொடர்ச்சியாக, பிரதியை முன்வைக்கிறார். ஆனால், பிரதிக்கு காலம் – இடம் சார்ந்த வரையறுப்புகளை மீறிய ஒரு ‘அற்புதத் தன்மையைத்’ தருகிறார். இதற்கு முன்னதாகச் சிலர் இந்த இடத்தை வாசகருக்குத் தந்து, வாசகரே என்ன அர்த்தத்தை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளலாம் என்று மிகைப்படுத்திப் புரிந்திருந்தனர்.)

மொத்தத்தில், ஆபரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் அவுட், டாக்டர் சூப்பர் !!!

இலக்கியம், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: