பிதுக்கி எழுதுதலும் பதுக்கி எழுதுதலும் – 2

பிதுக்கி எழுதுதலிலும் சரி, பதுக்கி எழுதுதலிலும் சரி பல்வேறு வகைப்பாடுகள் உண்டு. அதில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த பெருமைக்குரியவர் என்று நாளைய வரலாறு மேதகைமை பொருந்திய அ. மார்க்சின் பெயரைத் தன் ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பதித்து வைக்கும். ஆனால், அதுவரை பொறுமையாகக் காத்துக் கொண்டிராமல், அ. மார்க்சைப் போல “நமது சமகால வரலாற்றுச் சிறப்புமிக்க” காரியத்தை இன்றே செய்துவிடுவது சாலச் சிறந்தது.

சத்திரிய விவாதம் குறித்த தனது கட்டுரையில் மேதகு அ. மார்க்ஸ் (இனி மே. மா) அவர்கள் ஒரு முக்கியமான பிரச்சினையை எப்படி கள்ளத்தனமாகப் பதுக்கி எழுதி நழுவவிடுகிறார் எனப் பார்ப்போம்.

சத்திரியர் தொடர்பான ஒரு பிரச்சினை எழுந்து ஒருவாறு ஓய்ந்திருக்கிறது. நமது சமூக அமைப்பில் மிகவும் நுணுக்கமாகக் கையாள வேண்டிய விஷயமிது. காலங் காலமாகச் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் அத்தகைய பெயர்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் முயற்சியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ‘பள்ளர்கள்’ என்கிற அடையாளம் எம்மை இழிவு செய்கிறது, நாங்கள் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’ என ஒரு பிரிவு மக்கள் சொல்லும்போது நாம் என்ன செய்ய இயலும்? இத்தகைய மேல்நிலையாக்கம் அல்லது சமஸ்கிருதமயமாக்கல் எல்லாம் காரியத்திற்கொவ்வாது என்றெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க இயலாது. ‘தமிழன்’ அல்லது ‘இந்து’ முதலான பேரடையாளங்களுக்குள் இந்தப் பிரச்சினைகளத் தீர்த்துவிட இயலாது என்பதை இன்றைய சர்ச்சை உறுதி செய்துள்ளதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

மே. மாவது கட்டுரையின் ஆரம்பப் பத்தி இது. தொடர்ந்து பல எடுத்துக்காட்டுகளை அள்ளித் தெளித்து வழங்குகிறார். கட்டுரையின் இப்பகுதியை இவ்வாறு முடிக்கவும் செய்கிறார் =>

1980களுக்குப் பின் உலக அளவில் அடையாள அரசியல் ஒன்று உருவானது குறித்து நான் தொடர்ந்து எழுதிவருகிறேன். இந்தியாவிலும் அந்நிலை உருவானது. சாதி அடிப்படையில் வெளிப்படையாகக் கட்சிகள் இயங்கத் தொடங்கின. ஒடுக்கப்பட்ட சாதிகளுள் ஒன்றான வன்னியர்கள் தமது நியாயமான கோரிக்கையை முன்வைத்து கால் நூற்றாண்டுக்கு முன் பெரும் போராட்டம் ஒன்றைத் தொடங்கிய போது அக்கினிக் கும்பத்துடன் கூடிய சத்திரிய அடையாளத்துடன் வன்னியர் சங்கம் வெளிப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். ஆண்ட பரம்பரையாக அவர்கள் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டனர்.

இங்கே “ஸ்டார் ஸ்டார் ஸ்டார்” வைத்து முடித்துவிட்டு திரும்பவும் கட்டுரையின் ஆரம்பப் பத்தியில் எழுப்பிய கேள்விக்குத் திரும்புகிறார். அதற்கு மூன்று பத்திகள். அந்த மூன்று பத்திகளில் அவர் “பிதுக்கி” எழுதியிருப்பதைக் காட்டியாகிவிட்டது. இங்கே எதைப் பதுக்கி இருக்கிறார் என்பதைக் காட்ட வேண்டியிருக்கிறது.

பதுக்கியிருப்பதாவது => “நமது சமூக அமைப்பில் மிகவும் நுணுக்கமாகக் கையாள வேண்டிய விஷயமிது.”

கேள்வி இதுதான். அவரே குறிப்பிட்டிருப்பதைப் போன்று “நுணுக்கமாகக்” கையாண்டிருக்கிறாரா?

“காலங் காலமாகச் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் அத்தகைய பெயர்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் முயற்சியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று சொல்பவர் அதை எவ்வாறு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று காட்டியிருக்கிறாரா?

அதிகபட்சமாக அவர் காட்டியிருக்கும் “நுணுக்கம்” என்ன?

இதுதான் =>

இத்தகைய மேல்நிலையாக்கம் அல்லது சமஸ்கிருதமயமாக்கல் எல்லாம் காரியத்திற்கொவ்வாது என்றெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க இயலாது. 

[”சமஸ்கிருதமயமாக்கல் எல்லாம் காரியத்திற்கொவ்வாது” என்று யார் 'தத்துவம்' பேசிக் கொண்டிருக்கிறார்கள்? யார் அந்த "imaginary reader or critic"?].

தொடர்ந்த வரியில் தமிழன் அல்லது இந்து என்ற அடையாளங்களுக்குள் [இரண்டையும் தட்டையாக சமப்படுத்தி, இரண்டும் ஒன்றே என்று மொட்டையாக ஒரு குத்து குத்திவிட்டு - அதாவது பிதுக்கி எழுதி] இந்தப் பிரச்சினைகளை தீர்க்கமுடியாது என்பதை சர்ச்சை “உறுதி செய்துள்ளது” என்று தீர்ப்பும் சொல்லிவிடுகிறார்.

அதைத் தொடர்ந்துதான், நீண்ட வரலாற்று வியாக்கானமும் எடுத்துக் காட்டுகளும்.

மே. மா காட்டியிருக்கும் இந்த “நுணுக்கமான” ஆய்வு அப்படியானதுதானா? இந்த “நுணுக்கத்திற்குள்” அவர் பதுக்கி வைத்திருப்பது என்ன?

இந்தியத் துணைக்கண்டப் பகுதியிலும், தமிழ்நாட்டிலும் சாதி அடையாளமங்கள் மட்டுமே சாத்தியம். தேசிய அடையாளங்கள் சாத்தியம் இல்லை என்பதையே பதுக்கிச் சொல்கிறார் என்பது துணிபு. ஆகையால்தான், அவரது வரலாற்று வியாக்கியானம்,

ஒடுக்கப்பட்ட சாதிகளுள் ஒன்றான வன்னியர்கள் தமது நியாயமான கோரிக்கையை முன்வைத்து கால் நூற்றாண்டுக்கு முன் பெரும் போராட்டம் ஒன்றைத் தொடங்கிய போது அக்கினிக் கும்பத்துடன் கூடிய சத்திரிய அடையாளத்துடன் வன்னியர் சங்கம் வெளிப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். ஆண்ட பரம்பரையாக அவர்கள் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டனர்.” 

என்பதோடு முடிந்துவிடுகிறது.

அவர்கள் தம்மை ஆண்ட பரம்பரையாக அடையாளப்படுத்திக் கொள்வதன் மீதான ஒரு சிறு விமர்சனமும் வைக்காமல் இருப்பதிலேதான் அந்தப் பதுக்கல் இருக்கிறது.

அந்தப் பதுக்கல், இந்தியத் துணைக்கண்ட அமைப்பின் சாராம்சமாக இருப்பது சாதி என்ற அமைப்பே என்கிற காலனியாதிக்க அறிவு உருவாக்கிய சாராம்சவாதக் கருத்துநிலை (மே. மாவைப் போல அடைப்புகுறிகளுக்குள் essentialism). தெரிதாவை சும்மா மேலாக்க மேய்ந்துவிட்டு, “கோனார் நோட்ஸ்” கட்டுரைகள், எழுதினால் மட்டும் போதாது என்பது இங்கு தொடர்ந்த எனது விமர்சனம். இது எவ்வாறு காலனியாதிக்க அறிவு உருவாக்கிய சாராம்சவாத நிலை என்பதை சற்றேனும் விளக்கமாக இனி எழுத இருப்பவற்றில் பார்க்கலாம்.

இது இப்படித்தான் இருக்கும் – அதாவது, சாதிகள் தம்மை உறுதிப்படுத்திக்கொள்வது ”வரலாற்று இயல்பு” – என்று பதுக்கிச் சொல்கிறார் மே. மா. “ஆண்ட பரம்பரை என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்” என்று ஒரு ஸ்டேட்மெண்ட். அவ்வளவுதான். அது வரவேற்கப்பட வேண்டியதா, விமர்சிக்கப்பட வேண்டியதா என்று ஒரு வார்த்தை கிடையாது. அதுதான் பதுக்கல்.

மே. மாவைப் போன்று பதுக்கி – பிதுக்காமல் (தமிழ் தேசிய அமைப்புகளை மொந்தையாக சேர்த்து வைத்து, சாதி விடயத்தில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்று மொத்தையாகக் குத்துவிடுவது. தமிழ் தேசிய அமைப்புகளிடையே இருக்கும் வித்தியாசங்களை மறைத்து மொத்தாக பேஸ்ட்டைப் பிதுக்குவது மாதிரி பிதுக்கித் தள்ளுவது) இது விடயத்தை பெரியார் எப்படிக் கையாள்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு பின்வருமாறு. தனது உரையின் தொடக்கத்திலேயே பெரியார் கூறுவது எத்தனை நேர்மை மிக்கதாக இருக்கிறது என்பதை மே. மாவின் பதுக்கலோடு ஒப்பிட்டும் பார்க்க வேண்டும்:

சகோதரர்களே!
உங்கள் சமூகமானது தென்னிந்தியாவில் ஒரு பெரிய சமூகமாக இருக் கிறது. உங்கள் சமூகம் பொதுவாக நாட்டிற்கு பெரிதும் பிரயோஜனமுள்ள விவசாயத்தொழில் முதலிய வேலைகளைச் செய்யக் கூடியதாகவும் இருக் கிறது. உங்கள் சமூகத்தில் அனேக பெரியார்களும் இருக்கின்றார்கள்.  இப்படிப்பட்ட ஒரு பெரிய சமூக மகாநாட்டைத் திறந்து வைக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு ஒரு பெருமையாகவும் கருதிக் கொள்ளுகிறேன். ஆனால் இதைத் திறந்து வைக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் நான் சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன். அதாவது புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி நான் உங்கள் குலப் பெருமையைப் புகழ்ந்து கூறி ஆகாயமளாவ உங்களை மகிழ்வித்து ஏமாற்றிவிட்டுப்போக நான் இங்கு வரவில்லை. 
மேற்கண்டவாறு தொடங்கி, அடுத்த பத்தியிலேயே, மிக நேரடியாக, வெளிப்படையான விமர்சனத்தையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் வைக்கவும் செய்கிறார் பெரியார்.
பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந் தால் தங்கள் ஜாதிப் பெருமையைப் பற்றி பாட்டிக் கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக் கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக் கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இம் மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் நீங்கள் சில ஜாதிக்கு மேலானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்து விடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனெனில் நீங்கள் சில ஜாதிக்குப் பெரியார்கள் ஆக வேண்டுமென்றும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட நீங்கள் கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக் கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ் ஜாதி பட்டம் நிலைத்து விடுவதோடு நீங்கள் மேல் ஜாதி என்கின்ற தத்துவம் தகராறில் இருந்து விடுகின்றது.
(கட்டுரையை இங்கே வாசிக்கலாம்:http://thozharperiyar.blogspot.in/2012/05/blog-post.html )
வெளிப்படையான விமர்சனங்களை வைப்பதோடு மட்டும் பெரியார் நிறுத்திக் கொள்ளவில்லை. அவரது விமர்சனம் “சாதியை விட்டொழியுங்கள்” என்பதான மொட்டையான விமர்சனமும் இல்லை. சாதி உறுதிப்பாடும் – சமஸ்கிருதமயமாக்கலுமே நடக்கும் என்ற மே. மாவைப் போன்றதான மொட்டையான சாராம்சவாதமுமாகவும் இல்லை. இறுதிப் பத்தியில் என்னதான் செய்ய வேண்டும் என்பதையும் தெளிவுபடக் கூறுகிறார்.
மற்றபடி இந்த நாட்டில் இருக்கும் உங்கள் சமூகம் ஒற்றுமையுடன் பாடுபடாவிட்டால் நீங்கள் எவ்வளவோ மேன்மை பெற்று இந்த நாட்டுக்கு எவ்வளவோ நன்மை செய்யலாம். சட்டசபை ஸ்தல ஸ்தாப னம் இவைகளை கைப்பற்றி அதன் மூலம் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உதவி செய்து நாட்டை உயர் நிலைக்கு கொண்டு வாருங்கள். வெறும் நாமமும் பூணூலும் ஒன்றையும் அளித்து விடாது. மூடப்பழக்க வழக்கங்களை விட்டு ஓட்டி அறிவை பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்யுங்கள்.  சட்டசபை முதலிய தேர்தல்களில் நீங்கள் தைரியமாய் முன் வாருங்கள். கட்சி பேதங்களை விட்டு ஒழியுங்கள். முதலில் உங்கள் சமூகம் முழுவதும் ஒன்றானால்தான் மற்ற சமூகங்களுடன் நீங்கள் சரிசமமாக ஒத்துவாழமுடியும் … 
”ஆண்ட பரம்பரை” என்று பெருமிதம் கொள்வதாலும் மேல்நிலையாக்கத்தாலும் சாதியும் ஒழியப்போவதில்லை, சாதி ஒடுக்குமுறையும் நிச்சயமாக ஒழியப்போவதில்லை. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதியினர் அணிதிரள்வது அவசியம். எதற்காக?
சட்டசபை ஸ்தல ஸ்தாப னம் இவைகளை கைப்பற்றி அதன் மூலம் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உதவி செய்து நாட்டை உயர் நிலைக்கு கொண்டு வாருங்கள். 
என்பதற்காக. அதுதான் பெரியார்.
ஒடுக்கப்பட்ட சாதியினர் தமது சாதியளவில் அணிதிரளுதல் சாதியை ஒழிக்கவும் தம்மைக் காட்டிலும் அதிகமாக ஒடுக்கப்படுவோரைக் கடைத்தேற்றவுமே என்று தெளிவுபடக் கூறுகிறார் பெரியார்.
தெரிதாவை மட்டுமல்ல, பெரியாரையும் மேய்ந்துவிட்டு ஒரு “கோனார் நோட்சும்” போட்டுவிட்ட மே. மாவின் கட்டுரையில் இந்தப் புரிதல் வெளிப்பட்டிருக்கிறதா?
வெளிப்படவில்லை என்பதை மேலும் விளக்க வேண்டுமா?
காரணத்தை மட்டும் மீண்டும் ஒருமுறைக் கூறிவிடுகிறேன்.
அவரது நோக்கம், சமூகத்தில் சாதி அணிதிரட்டல்கள் நிகழ்வதன் நியதிகளை விளங்கிக் கொண்டு, சாதி ஒழிப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் பொருள்கோடல் செய்வது என்பதில்லை. அந்நோக்கில் நின்று செயலாற்ற வேண்டும் என்பதுவும் அறவே இல்லை.
ஆகையால்தான் சாதி ஒழிப்பு என்ற நோக்கைப் பதுக்கி எழுதுகிறார்.
அவரது நோக்கம், தமிழ் தேசியக் கருத்தியலை அடிப்பது. பிதுக்கி அடிப்பது.
பிதுக்கவே பதுக்குகிறார். பதுக்கி பிதுக்குகிறார்.
இப்படியாக பதுக்கிப் பிதுக்கலில் தேர்ந்திருப்பதால் வரலாறு இவரை ”பிதுக்கிப்பதுக்கிய பெரும்பித்தன்” என தன் ஏடுகளில் பதித்து வைக்குமாக.

பிதுக்கி எழுதுதலும் பதுக்கி எழுதுதலும் – 1

ஒரு அரசியல் நோக்கிற்குள் இருக்கும் பல்வேறுபட்ட போக்குகளை அங்கீகரிக்காமல் ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தி வீழ்த்தும் எந்த ஒரு விவாத முன்னெடுப்பும் அடிப்படை அரசியல் அறத்தில் இருந்து வீழ்ந்ததாகவே அமையும். அத்தகைய அடிப்படை அரசியல் அறமற்ற மோசடித்தனம் மிகுந்த அரசியல் சொல்லாடலை சமீப ஆண்டுகளில் மிகக் கீழ்மையாக முன்னெடுத்து வருபவர்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பவர் திருவாளர் அ. மார்க்ஸ்.
ஈழப் படுகொலை தொட்டு இவர் கட்டவிழ்த்துவிட்ட கீழ்மையான அரசியல் பொய்களும் நடவடிக்கைகளும் பலமுறை பல தரப்பினரால் கேள்விக்குள்ளாக்கப்பட்ட போதும் அவற்றை, அருவருக்கத்தக்க தன்முனைப்பில் நின்று “அவதூறு” என்று கடந்து சென்றுகொண்டே மீண்டும் மீண்டும் பிரதிநிதித்துவ அரசியலின் பேரால் சாதியப் பற்றுகளை நிலைநிறுத்தும் அரசியல் சொல்லாடலையே முன்னிலைப்படுத்தியும் வருகிறார்.
அவர் முன்னிலைப்படுத்தும் அரசியல் போக்கின் மோசமான விளைவுகளை மட்டுமின்றி அவர் எழுப்பும் கேள்விகளிலும் அவரது மொழியின் தொனியிலும் உள்ளார்ந்து இருக்கும் “வெறுப்பு” அரசியலையும் போலித்தனத்தையும் வெளிக்காட்டும் பொருட்டே இதை எழுதவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது.

ஈழப் படுகொலையின் போது அவர் முன்வைத்த விடுதலை அரசியல் எதிர்ப்புப் போக்கு கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டதும் சில காலம் பதுங்கிக் கிடந்தவர், சமீபமாக மீண்டும் அசட்டுத்தனமான தேசிய விடுதலை எதிர்ப்பு அரசியலை முன்வைக்க ஆடும் ”ததிங்கினத்தோம்”களின் அபத்தங்களிலும் இருந்தும் அப்பட்டமான திரிப்புகளில் இருந்தும் தொடங்குகிறேன்.

இதுவரையிலும் சீமானையும் பெ. மணியரசனையும் அடித்து விளையாடிக் கொண்டிருந்தவர் தமது கடைசியான கட்டுரையில் மே – 17 இயக்கத்தினரையும் இலக்கு வைத்து தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். (அதிலும் அவ்வியக்கத்தின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. ”சிறியவர்களை” பெயர் குறிப்பிட்டு அழைத்து “பெரியவர்கள்” ஆக்கிவிடக்கூடாதாம். என்னே கீழ்மையான பெரியண்ணாத்தைத்தனம்!)

பெ. மணியரசன் முன்வைக்கும் வகைப்பட்ட தமிழ் தேசிய அரசியலில் எனக்கு எந்த வகையிலான உடன்பாடும் கிடையாது. சீமான் அவர்கள் முன்வைக்கும் வகைப்பட்ட அரசியலில் எனக்கு முழு உடன்பாடு கிடையாது. கடும் விமர்சனங்களும் உண்டு. த. ஒ. வி யினர் 90 களில் வைத்த தெலுங்கர் எதிர்ப்பு அரசியலை நேரடியாக விமர்சித்து பொழிலன் அவர்களுடனேயே விவாதித்திருக்கிறேன். இன்று அவ்வியக்கத்தினர் அந்தத் தவற்றில் இருந்து விலகியும் வந்திருக்கிறார்கள். அதனாலேயே அத்தோழர்களோடு அணுக்கமான உறவு உண்டு. அதே போன்று த. நா. மா லெ க வினருடன் பெரிய தொடர்புகள் இல்லையெனினும் அவ்வமைப்பு இவ்வாறு பரிணாமம் கொள்ளும் முன்னர் அதில் இருந்தவன் என்ற வகையில் மோசமான போக்குகளுக்கு செல்லக்கூடியவர்கள் அல்லவென்பதுவும் எனது துணிபு. அத்தகையதொரு ஆரோக்கியமான தமிழ் தேசிய இயக்கங்களில் ஒன்றாக கருதுபவற்றில் மே – 17 இயக்கத்தினரையும் கொள்கிறேன்.

தமிழ் தேசிய விடுதலை அரசியலை முன்னெடுப்பவர்களில் இப்படிப் பலவித போக்கினர் உண்டு. இவை அனைவரும் அறிந்தவை. ஆனால், தேசியம் என்றாலே பாசிசம் என்று உளறிக் கொண்டிருக்கும் மேதாவிக்கு மட்டும் இந்த வித்தியாசங்கள் எதுவும் கண்ணில் படுவதில்லை. தமிழ் தேசியம் என்றுகூட அவரால் சொல்ல இயலுவதில்லை. தமிழ் பாசிசம் என்கிறார். இயக்கங்களிடையே உள்ள இத்தகைய வித்தியாசங்களைக் கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக வைத்து மொந்தையாக “பாயாசம்” என்று அடிப்பது அறிவு நேர்மையின்மை என்பதன்றி வேறு என்ன?

இவ்வாறு இல்லாததை “பிதுக்கி” இவர் எழுதுவதற்கும், தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல் “பதுக்கி” எழுதுவதற்கும் அனேக எடுத்துக் காட்டுகளைக் காட்ட முடியும்.

ஒரு எடுத்துக்காட்டை வைத்து இந்த முதல் பகுதி.

பிதுக்கி எழுதுதல்:

//இன்று தமிழ் அடையாளம் வெட்கமில்லாமல் பார்ப்பனீயத்துடன் அடையாளம் காண்கிறது, ராஜராஜ சோழனுக்கு விழா எடுக்கிறது. அவன் தேவதாசிமுறை கொண்டு வந்ததைப் போற்றுகிறது. மராத்திய நடுத்தர சாதி அடையாளத்தை முன்நிறுத்தும் ஃபாசிசக் கட்சியான சிவசேனாவைத் தன் முன்மாதிரி எனச் சொல்லிக் கொள்கிறது. அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்கிறது. அண்ணல் அம்பேத்கரை வடநாட்டார் என்கிறது. இத்தகைய சொல்லாடல்கள் ஊடாகத் தமிழர் ஒற்றுமை எப்படிச் சாத்தியம்? தமிழர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதன் மூலமே சாதி ஒழிந்துவிடுமா?//

முதல் வரியில் பெ. மணியரசன். இரண்டாவது வரியில் சீமான். கட்டுரையின் தொடக்கத்தில் மே – 17 இயக்கத்தினர். சத்திரியர் தொடர்பான ஒரு பிரச்சினை எழுந்து ஒருவாறு ஓய்ந்திருக்கிறது. நமது சமூக அமைப்பில் மிகவும் நுணுக்கமாகக் கையாள வேண்டிய விஷயமிது.] ஒரே கட்டுரையில் மூன்று இயக்கத்தினரையும் “தமிழ் பாசிசமாக” ஒட்டு மொத்தமாக குன்சாக வைத்து அடித்துவிடும் மேதாவி இங்கே பிதுக்கியிருப்பது என்ன?

//அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்கிறது. அண்ணல் அம்பேத்கரை வடநாட்டார் என்கிறது.// இந்த இரண்டு கருத்துநிலையையும் வைப்பவர்கள் யார்? முதலாவது கருத்துநிலை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் முன்வைப்பது. இரண்டாவது கருத்துநிலை பள்ளர் சமூகத் தலைவர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்வைப்பது. இந்த நிதர்சனமான உண்மையைப் பற்றி வாயைத் திறக்காமல், அதை தமிழ் தேசிய விடுதலை அரசியலைப் பேசும் இயக்கத்தினர் மீது மொத்தாக வைத்து, மொத்தமாக குத்து விடுகிறார் மேதாவி அ. மார்க்ஸ்.

இதுவே பிதுக்கி எழுதுதல். கள்ளத்தனமும் கூட.

பதுக்கி எழுதுதலுக்கான எடுத்துக்காட்டுடன் அடுத்த பகுதியைத் தொடர்கிறேன்.

பதுக்கி எழுதுதலும் பதுக்கி எழுதுதலும் – 2

தேசாபிமானம் ஒழிய வேண்டும் என பெரியார் மொழிந்த சூழல்

 ஈ. வெ. ரா. குறிப்பு

தோழர்களே, எனது மேல் நாட்டுச் சுற்றுப் பயணம் ஒருவாறு வெற்றியுடன் முடிந்து11-11-32 தேதி காலை ஈரோடு வந்து சேர்ந்திருக்கிறேன்….

… சீக்கிரத்தில் எனது சுற்றுப் பிரயாணத்தின் விருத்தாந்தங்களையும், காட்சிகளையும், அதனால் நான் கொண்ட கருத்துக்களையும் அதை எந்த அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கி சீக்கிரம் பத்திரிகையில் வெளியிடவும் உத்தேசித்து இருக்கிறேன்….

முக்கிய குறிப்பு

இயக்கத் தோழர்களும் இயக்க அபிமான தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளுவதிலும், பெயருக்கு முன்னால் பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக “தோழர்” என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா – ஸ்ரீ – கனம், திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜித் என்பது போன்ற வார்த்தைகள் சேர்த்து பேசவோ எழுதவோ கூடாது என்று வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன்….

குடி அரசு – அறிக்கை – 13.11.1932

ஈ. வெ. இராமசாமியின் கொழும்பு விஜயம்

கொழும்பு பர்ஷியன் ஹோட்டல் விருந்து

இன்று உலகில் பெரும் பாகத்தில் நடக்கும் தேசபக்திக் கிளர்ச்சிக்கும் ஜாதியக் கிளர்ச்சிக்கும் தனது அபிப்பிராயம் மாறுபட்டிருப்பதாகவும் இவ்வித கிளர்ச்சிகள் கஷ்டப்படும் மக்களுக்கு எவ்வித மாறுதலையோ பயனையோ கொடுக்காதென்றும் ஏழை மக்களின் கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டு அதின் பேரால் சோம்பேரி வாழ்க்கைப் பிரியர்களாலும், பேராசைக்காரகளாலும் நடத்தப்படும் போட்டி ”வியாபரங்களே”  இன்று தேசீயமாயும், ஜாதீயமாயும், மதாபிமானமாயும் இருக்கின்றதே தவிர அவற்றுள் நாணயமோ உண்மையோ சிறிதும் தன்னால் காணக்கூடவில்லையென்றும், உலகில், ஒரு பெரிய மாறுதல், அதாவது வெடி மருந்து சாலையில் தீப்பிடித்து வெடிக் கிளம்புவது போல சமீபத்தில் ஏற்படப் போகின்றதென்றும் வாழ இஷ்டமிருக்கின்றவர்கள் அதற்குத் தகுந்தபடி தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும், இப்போதையப் பெரும் கிளர்ச்சிகள் உலக உண்மைக் கஷ்டத்தைக் கஷ்டப்படும் மக்கள் அறிய முடியாமல் இருப்பதற்குச் செய்யும் தந்திரமென்றும் பேசினார்.

குறிப்பு: 20.10.1932 இரவு கொழும்பு பர்ஷியன் விடுதியில் தோழர். டி. சாரனாதன் மற்றும் சில செட்டித் தெரு தோழர்கள் ஆகியோர் அளித்த விருந்தில் கலந்து கொண்டு பேசியது.

குடி அரசு – சொற்பொழிவு – 13.11.1932

ஆதி திராவிடர் சங்க வரவேற்பு

தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே வசிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அம்முயற்சிக்கு எதிரியாய் இருக்கும் சாதனங்களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவைகளை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் – உலக தாழ்த்தப்பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டுமென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யாமல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேரி செல்வவான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து போராடி விடுதலை அடையத் தயாராயிருக்க வேண்டுமென்றும் பேசினார்.

குறிப்பு: 22.10.1932 இரவு கொழும்பு ராதாபுரம் டிவிஷன் திருநெல்வேலி ஜில்லா ஆதிதிராவிடர் சங்கத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசியது.

குடியரசு – சொற்பொழிவு – 13.11.1932

பெரியார் தேசாபிமானம் என்பதை விட்டொழிக்க வேண்டும் என்பதை எந்தச் சூழலில் – context ல் மொழிந்தார் என்பதை மேலுள்ள அவரது கருத்துக்களில் இருந்து அறியலாம். அதாவது, அவரது ஐரோப்பிய சுற்றுப் பயணம் – குறிப்பாக, சோவியத் குடியரசில் அவரது அனுபவம் இதில் கடுமையான செல்வாக்கு செலுத்தியிருப்பது கண்கூடு.

“தலை”யை நன்றாக மண்டையைக் கழுவி அனுப்பியிருக்கிறார்கள் சோவியத் காம்ரேடுகள் என்று வேடிக்கையாக சொல்லத் துணியலாம்.

என்றாலும்,1929 ஆண்டளவிலேயே இந்தியத் தேசியத்தை பெரியார் மிகத் தெளிவாக மறுத்திருக்கிறார். தேசியம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

எடுத்துக் காட்டாக, குடி அரசு தலையங்கம் 01.09.1929 -லிருந்து ஒரு பகுதி:

”இந்தப் பதமானது [தேசியம்] ஆங்கில பாஷையில் ”நேஷனல்” என்கின்ற பதத்தின் மொழி பெயர்ப்பு என்கின்ற முறையில் ஏற்பட்டதே தவிர மற்றபடி அது இந்தியாவின் வேறு எந்த பாஷையிலும் எந்த கருத்திலும் இருந்ததல்லவென்றே சொல்லலாம்.

… ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டும் என்று பார்ப்போமானால் குறைந்த பட்சம் ஒரு தேச மக்கள் தங்களது மனத்தையும் மனசாட்சியையும் விற்காமலும் விட்டுக்கொடுக்காமலும் வயிறு வளர்கும்படியாகவாவது இருக்க வேண்டும். ஈதன்றி அதற்கு மேற்பட்ட தேசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அறிவு வளர்ச்சி வேண்டும். கல்வி வேண்டும். ஆராய்ச்சி வேண்டும். கண்ணியமானத் தொழில் வேண்டும். சமத்துவம் வேண்டும்.ஒற்றுமை வேண்டும். தன் முயற்சி வேண்டும். உண்மை உணர்வு வேண்டும். ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்காமலிருக்க வேண்டும். சோம்பேறிகள் இருக்கக் கூடாது. அடிமைகள் இருக்கக் கூடாது. தீண்டாதவர்கள் தெருவில் நடக்கக் கூடாதவர்கள் முதலியவர்கள் இருக்கக் கூடாது. இனியும் இது போன்ற எவ்வளவோ காரியங்கள் செய்யப்பட வேண்டும்.”

இதில், ஒரு ஆரோக்கியமான தேசியக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தேசியம் என்ற நோக்கே இந்தியத் துணைக்கண்டத்திற்கு புதியதொரு கருத்தோட்டம் என்பதையும் தெளிவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், தேசியம் என்பதற்கான வரையறை தருவதற்கான முயற்சியாக இதைக் கூறிவிட இயலாது.

சோவியத் பயணத்திற்குப் பிறகு அவரது கருத்தோட்டத்தில் ஒரு மிகப் பெரிய மாறுதல் நிகழ்ந்திருப்பதை மேலே உள்ள முதல் மூன்று குறிப்புகளும் உணர்த்தும். ”தலை” சர்வதேசியவாதத்திலும் பாட்டாளி வர்க்க உணர்விலும் புல்லரித்துப் பேசியிருக்கிறார் என்பதுவும் விளங்கும்.

ஆனால், இது எத்தனை காலத்திற்கு நீடித்தது என்பது வரலாறு அறிந்தோருக்குத் தெரியும். கோ. கேசவனின் பெரியார் குறித்த நூலே போதுமானது (அந்நூலில் உள்ள பல கருத்துக்களோடு உடன்பாடு இல்லையெனினும்).

இந்த இடைப்பட்ட, பாட்டாளிவர்க்க சர்வதேசியப் புரட்சிகர உணர்வில் இருந்து மீண்ட பின்னரே, பெரியார், திராவிட நாடு கோரிக்கையை ஒரு அரசியல் கோரிக்கையாக தெளிவாக முன்வைத்ததுவும் வரலாறு.

ஆனால், நம்ம ஊரு பின் நவீனத்துவ பட்டுக் குஞ்சு, அ. மார்க்சு இதை பெரியாரின் அந்தக் குறிப்பிட்ட காலகட்டப் புரிதலில் இருந்து பிரித்து எடுத்து, அதுதான் பெரியாரது தேசியம் குறித்த அறுதியான, இறுதியான “கோட்பாட்டுப் பார்வை” என்பது போலவும், பெரியார் ஒரு ”எதிர் – தேசியவாதி” எனவும் வரையறுத்த அபத்தமும், அதை வைத்து அவரது அடிப்பொடிகள் அடித்த கூத்தும் எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன!

இவை குறித்து விரிவாக எழுத இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. பார்ப்போம்.

தேசியம், பெரியார் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பெரியாரின் நுட்ப நகர்வுகள்!

தற்சமயம் செய்து கொண்டிருக்கும் ஒரு பணியாலும், இடைக்கிடையே கையையும் காலையும் சும்மா வைத்திருக்க முடியாமல் வலிப்பு வந்தவனைப் போல உதைத்துக் கொண்டும், கண்ணையும் காதையும் பொத்திக் கொண்டிராமல், வாசிக்கக்கூடாதவற்றை வாசித்தும், கேட்கக்கூடாத, பார்க்கக்கூடாத விடயங்களைப் பார்த்தும், உடலும் மனமும் சோர்ந்து அல்லலுற்றுக் கழித்த இந்த வாரம் “இயலாமை வாரம்!”

இன்று காலையும் அவதியுடனே தொடங்கியது! முக்காத் தூக்கத்தில் விழித்து, எதையும் செய்யவியலாமல் முகநூலைத் திறந்து, பார்க்கக்கூடாத, கேட்கக்கூடாத, படிக்கக்கூடாத விடயங்களைச் செய்து நாளைப் பாழடித்துக் கொண்டேன்.

உறக்கம் வராமல் படுத்திருப்பது, எழுவது, கணிணியைத் திறப்பது, கண்டதை மேய்வது என்று அலைக்கழிந்து கொண்டிருந்த மதிய வேளையில் மனதை மேலும் சஞ்சலப்படுத்தியது, எங்கோ தொடுப்பு பிடித்து ”கீற்று” இணையதளத்தில் ”பெரியாரின் தமிழர் விரோதப் போக்கு” குறித்து வெளியாகியிருந்த பெ. மணியரசன் மற்றும் அவரது கட்சியாரின் இரண்டு கட்டுரைகள்.

வரலாற்றுப் பின்புலம் பற்றிய எந்தவிதமானப் புரிதலுமின்றி, சகட்டுமேனிக்கு ஆதாரங்களை அடுக்கி, வீச்சரிவாளைக் காற்றில் சுழற்றியிருந்த அவ்விரண்டு கட்டுரைகளும் நேரடியாக பதில் சொல்ல அருகதையற்றவை என்பதே என் நோக்கு.

பெரியாரின் திராவிடம் என்ற கருத்தாக்கத்தை எந்த வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வது, அது எங்ஙனம் தமிழ் தேசிய அரசியல் உருவாக்கத்திற்கு எதிரானது அன்று என்பதை ”திராவிட இனம்” என்ற கருத்தாக்கம் எவ்வாறு உருவானது என்பதன் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து அணுகுவதன் மூலமே ஆரோக்கியமான நோக்கில் புரிந்துகொள்ளப்பட முடியும் என்பதை மட்டும் தற்சமயம் முன்மொழிய விழைகிறேன்.

அதன்மீது ஒரு “கண்” வைத்திருக்கிறேன் என்பதை மட்டும் இப்போதைக்கு குறித்துச் செல்லவும் விரும்புகிறேன்.

நாள் முழுக்க பாழானபின் நல்ல வேளையாக, இன்றைய இரவு சற்றே இதம் தருவதாக அமைந்தது.

அது பெரியாரின் கட்டுரையை வாசிக்க உட்கார்ந்ததில் கிடைத்த இதம்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடாக (பெரியார் தி.க வினரின் ”குடி அரசு” தொகுப்புகளை இன்னும் வாங்கவில்லை – இயலவில்லை; விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையுண்டு) வந்திருக்கும் தொகுதி 7-ல் முதல் கட்டுரையான “தீண்டாமை ஒழிப்பில் உள்ள மத தத்துவம்!” (”குடி அரசு” 21.06.1925) என்ற கட்டுரையை வாசித்துக் கிடைத்த – பரவசம் என்று சொல்வதில் தவறில்லை – அனுபவமே இன்றைய நாளை இனிய நாளாக முடிப்பதாக அமைந்தது.

அக்கட்டுரையில் பெரியார் தமது அரசியலை முன்னிலைப்படுத்த வைக்கும் “rhetorical moves” ஆக அவதானித்த விடயங்கள்தாம் என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியவை.

அவதானித்தவற்றை விளக்கப்படுத்த முயற்சிக்கிறேன்.

கட்டுரையின் இரண்டாவது பத்தி:

“பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும் வரிசைக்கிரமத்தில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரென்றும், வணாச்சிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என ஐந்துவகை ஜாதியாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றவவென்றும் இவற்றிற்கு ஆதாரம் மனு ஸ்மிருதி என்றும் சொல்லப்படுகிறது. தமிழர்களாகிய நம்மை இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், சாதி என்பதும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும், மனு தர்ம சாஸ்திரமோ, மனு ஸ்மிருதியோ தமிநாட்டினர்க்கோ, தமிழர்க்கோ இவ்வன்னிய பாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை….” (இதுவும் இனிவரும் அழுத்தங்களும் என்னுடையவை).

சாதியையும் வருணாசிரமத்தையும் மறுக்க பெரியார் இங்கு முன்னிலைப்படுத்தும் கருத்துருவாக்கம் முக்கியமானது. அவை தமிழ்ச் சொற்கள் அல்ல – அதனால், தமிழர் பண்பாட்டுடனோ வரலாற்றுடனோ சமூக வாழ்வுடனோ தொடர்புடையவை அல்ல என்ற காரணத்தை முன்வைக்கிறார்.

அதன் வழி தமிழர் என்ற சமூகம் – அல்லது அடையாளம், சாதியற்றது என்பது அவரது முன்மொழிதல். இதையே அவர் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழல்களில் விட்டுக்கொடுக்காமல் முன்வைத்தார் என்பது எனது துணிபும் (பருண்மையாக உறுதிப்படுத்த வேண்டிய ஒன்று).

இதை நிறுவ, அடுத்த பத்திகளில், சூத்திரர் என்ற கருதுகோளின் பொருள் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறார். அச்சொல்லிற்கான ஏழு பொருள்களில் நான்கை பட்டியலிடுகிறார் (”மனுஸ்மிருதியில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை; யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப்பட்டவன்; அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன்; வைப்பாட்டியின் மகன் முதலிய எழுவித …”)

அம்பேத்கர் தமது வரலாற்று ரீதியான பொருள்கோடல் வாசிப்பில், பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையிலான போரில், வெற்றி கொள்ளப்பட்ட சத்திரியர்களே சூத்திரர் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்ற கருத்தாக்கத்தை முன்வைப்பார்.

ஆனால், பெரியார், அத்தகைய வரலாற்று ரீதியான பொருள்கோடல் வாசிப்பிற்குள் இறங்காமல், ஒரு நேரடியான, அரசியல் – உளவியல் நோக்கை முன்னிலைப்படுத்தும் rhetorical move -ற்குள் நகர்கிறார் அடுத்த பத்திகளில். அது பின்வருமாறு:

“மேலே கூறப்பட்டபடி, “சூத்திரர்” என்பதற்கு ஆதாரப்படி தாசி மகன் என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன் சக்கிலியை விட தாசி மகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில் நான் சந்தோஷப்படுவேன்.”

இது எத்துனை நுட்பமான நகர்வு என்பதை பெரியார் யாரை நோக்கிப் பேசிக் கொண்டிருந்தார் என்பதைக் கணக்கில் கொள்ளும்போது மட்டுமே விளங்கும்.

யாரை நோக்கிப் பேசுகிறார் பெரியார்?

கட்டுரையின் இறுதிப்பத்திக்கு முன்பான மூன்றாவது பத்தியில் இது தெளிவாகிறது:

“நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக் கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும்பொழுது ‘ஆ! நம்மையா? சர்பட்டம் பெற்ற நம்மையா? ஜமீந்தாராகிய நம்மையா? லட்சாதிகாரியாகிய நம்மையா? சத்திரம் சாவடி கட்டிய நம்மையா? தூயவேளாளனாகிய நம்மையா? பரிசுத்தனாகிய நம்மையா, உத்தம்னான நம்மையா? மடாதிபதியான நம்மையா? இன்னும் எத்தனையோ உயர் குணங்களும் எவ்வித இழிவுமற்ற நம்மையா? …”

விரிவாக நோக்கினால் பிற்பட்ட சாதியினரை நோக்கிப் பேசுகிறார் பெரியார்.

இதில் என்ன நுட்பம் இருக்கிறது? “பெரியார் பிற்பட்ட சாதியினரின் பிரதிநிதியாகவே செயல்பட்டார்; அவர்களை நோக்கியே பேசினார்; அவர்களுடனேயே இயங்கினார்” என்று வாதிட்ட “நிறப்பிரிகை” இரவிக்குமார் அவர்களின் கூற்றுக்கு வலு சேர்ப்பதாகத்தானே மேலே பெரியார் பேசியிருப்பது உறுதி செய்கிறது என்று “குறுக்கு” மூளைகள் வாதிட முன்வரலாம்.

அவற்றுக்கு மறுப்பான பெரியாரின் நகர்வுகளை மேலே குறிப்பிட்ட பத்திகளுக்கு முன்பான பத்திகளில் காணலாம்:

“இவ்விதக் கெடுதியான பெயர் [சூத்திரன் - தாசி மகன்] நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நம் சகோதரர்களைக் காண அருகில் வர, தொட, பேச, பார்க்க முடியாபடி கொடுமையாய் நடத்தி ஊருக்கு வெளியில் குடியிருக்கும்படியும், ஸ்நானம் செய்வதற்கோ, வேஷ்டி துவைத்துக் கொள்வதற்கோ, வீதியில் நடப்பதற்கோ, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம்.”

So what is Periyar’s subtle rhetorical moves here? பெரியாரின் நுட்பமான வாதங்கள் நகரும் விதம் என்ன?

1. முதலாவதாக, பெரியார், மிகத் தெளிவாக, சாதி – வர்ணாஸ்ரமம் – இன்ன பிற சாதியைக் குறிக்கும் சொற்கள் தமிழ் சொற்களே அல்ல என்ற காரணத்தை முன்வைத்து, தமிழ்ச் சமூகம் என்பதை வரலாற்று ரீதியாக சாதியற்ற சமூகம் என்பதாக நிறுவ முயற்சி செய்கிறார். அத்தகைய எதிர்கால தமிழ் தேசத்தையே அவர் விரும்புகிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்த விரும்புகிறார்.

2. பிற்படுத்தப்பட்ட சாதியினரை நோக்கியே அவர் பேசுகிறார். அவர்தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் “சூத்திரர்” என்ற இழிவு, பஞ்சமர் என்ற நிலையினும் தாழ்ந்தது என்று இழித்துப் பேசுகிறார். “சூத்திரன்” என்று விளிக்கப்படுவதைக் காட்டிலும் “பஞ்சமன்” என்று விளிக்கப்படுவது எனக்கு மேலானது; நீவீர் – சூத்திரர் – அவர்களைக் காட்டிலும் இழிவானவர் எனச் சொல்வதன் மூலம் அவர்களை – பஞ்சமரை ஒடுக்கும் அருகதையற்றவர் என எள்ளி நகையாடுகிறார்! இதை political rhetoric – அரசியல் சூடேற்றும் பேச்சு – என்பதாகக் கொள்ள வேண்டும். “உனக்கு மானம் இல்லையா; ரோஷமில்லையா” என்ற வகையிலான சூடேற்றும் அரசியல் சொல்லாடல் களனைத் திறந்துவிடுகிறார் பெரியார்.

இது முதல் நுட்ப நகர்வு!

3. அதை, “உம்மிலும் கீழாக நினைத்துக் கொண்டிருக்கிறீரே! அவர்களைக் காட்டிலும் தாழ்ந்த இழிபிறவிகள் என்ற குற்றச்சாட்டு உம்மீது இருக்கிறதே! அதைக் காணத் தவறும் நீவீர், உம்மிலும் கீழானவராக நினைத்துக்கொண்டு, இன்னொரு தரப்பினரை ஒடுக்க முனைகிறீரே! உமக்கு வெட்கமாயில்லை!” என்று செருப்பால் அடிப்பது போன்று கேட்கிறார் பெரியார்!

இதுவே பெரியாரின் இரண்டாவது நுட்பமான நகர்வு!

3. மூன்றாவதாக இன்னொரு நுட்பமான அடியையும் போடுகிறார் பெரியார். அது பின்வருமாறு:

“இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக் கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும் அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்குத் தான் தீண்டாதவராகவும் பார்க்கக்கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல் இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற சாதியாயிருக்கிற ஐரோப்பியருக்குத் தீண்டாதாராகவும், கிட்ட வரக்கூடாதவராகவும் இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம்.”

தீண்டாமையை நீ (பிற்படுத்தப்பட்ட சாதியார்) அனுபவித்துக் கொண்டிருப்பதோடல்லாமல், (பார்ப்பனர்களிடம் சூத்திரர் அனுபவித்த ‘தீண்டாமையையும் இதற்கு முந்தைய பத்தியில் குறிப்பிடத் தவறவில்லை பெரியார்) ஒட்டு மொத்த சமூகமே ஐரோப்பியருக்கு அடிமையாக, தீண்டாமையை அனுபவித்துக் கொண்டிருப்பதில், அதை நீயும் (பிற்படுத்தப்பட்ட சாதியினர் – சர் பட்டம் பெற்ற நீ என்ற பகுதி இதன் பின்னே வருகிறது) அனுபவித்துக் கொண்டிருக்கிறாயே உனக்கு வெட்கமில்லையா எனக் கேட்கிறார்.

4. நான்காவது புள்ளியே, பெரியாரின் மையப் புள்ளி. அது சாதி ஒழிப்பு (annihilation of caste): “இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம் பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பது அல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விலக்க வேண்டுமென்பது அல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்க வேண்டும் என்பது தான் தீண்டாமையின் தத்துவம்.”

இந்த ஒட்டு மொத்த சமூகமுமே படிநிலை வரிசைப்படி அளவில் தீண்டாமையை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. இதிலே ”பஞ்சமர்” என்போரின் மீதான பிரச்சினை என்று பார்க்காதீரய்யா சர் பட்டம் பெற்ற கோமானே! தீண்டாமையை ஒழிப்பது என்பது சமூகத்தின் அனைத்து படிநிலைகளிலும் படிந்துள்ள தீண்டாமையை ஒழிப்பதுதான் என்ற சாதி ஒழிப்பு நிலையை இங்கே அடுத்த கட்ட நுட்பமான நகர்வாக வைக்கிறார் பெரியார்.

இதையெல்லாம் இப்போது நுட்பமாகச் சொல்வது அபத்தமாகப் படலாம். ஆனால், அன்றைய கால கட்டத்தில், பெரியார், இந்த வாதங்களை முன்வைத்தது சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புச் சொல்லாடலில் மிக நுட்பமானவை. பிற்பட்ட சாதியினரை நோக்கி, உன் மீது நீ ஒடுக்கும் பிரிவினர் மீது இருக்கும் ஒதுக்குதலைக் காட்டிலும் கேவலமான ஒதுக்குதலும் பழிச்சொல்லும் இருக்கிறது. ஆகையால், அவர்களை ஒடுக்க உனக்கு ஒரு தகுதியும் இல்லை. அவர்களோடு சமமானவன், இன்னும் சொல்லப் போனால், அவர்களைக் காட்டிலும் கீழான பிரிவினன் என்று சொல்லத் தகுந்தவன் நீ! அவர்களை ஒடுக்குவதில் இருந்து விடுபட்டு, ஒட்டுமொத்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட முன்வருவதே உனது விடுதலைக்கான முதல் படி என்று வலியுறுத்த பெரியார் கைக்கொண்ட நுட்பங்களை இன்று வியக்க வரலாற்று சூழல் குறித்த புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.

திராவிடம் குறித்த பெரியாரின் முன்வைப்பையும் இவ்வாறு அரசியல் சொல்லாடல் சூழலில் வைத்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்தால், அது, தமிழ் தேசிய விடுதலைக்கு முரணான ஒன்றல்ல என்பது விளங்க வரும்.

ஒரு சிறிய எடுத்துக் காட்டுக் குறிப்பை மட்டும் தற்சமயம் தருகிறேன்.

இதே கட்டுரையில், பெரியார், மலையாளிகள் குறித்து எழுதிச் சென்றுள்ள துணுக்குகள் அவை:

1. “…அதே மாதிரி [சாதிய ஒதுக்குதலில்] வைசியர்களிடத்திலும் சத்திரியர்கள் பிராமணர்கள் நடந்து கொள்வதையும், அதே மாதிரி சத்திரியர்களிடத்திலும் பிராமணர்கள் நடந்து கொள்வதையும் பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மையாக நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் …”

2. “மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களை சூத்திரர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதில் பெருமை அடைகின்றனர்.”

கவனிக்க வேண்டிய புள்ளி, புரிந்து கொள்ளப்பட வேண்டிய புள்ளி, பெரியார் ஏன் “மலையாளிகள்” என்றோ “கேரளம்” என்றோ குறிப்பிடாமல், ஒரு மொழியைக் குறிக்கும் சொல்லை – மலையாளம் என்ற சொல்லை இடம் என்பதாக பொருள்படுத்திக் கொள்கிறார்?

இதைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் முயற்சியில் நகர்ந்தால், பெரியாரின் திராவிடம் என்ற கருத்தாக்கமும் அரசியலும், தமிழ் தேசிய அரசியலுக்கு எதிரானதன்று என்ற தெளிவை நோக்கி நகரலாம்!

கட்டுரையை பெரியார் முடிக்கும் விதம் அலாதியானது!

இறுதிப் பத்திக்கு முந்தைய பத்தியில் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தோரின் கருத்தை அவர்களுக்கு எதிராகவே திருப்பி விட்டிருக்கிறார்:

“இந்த இழிவு சூத்திரர்கள் என்பவரை இப்படிக் கட்டிக் கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் தேவடியாள் மகன் என்று இன்னொருவருவ கூப்பிடும்படியாகக் கடவுள் வைத்துவிட்டார்.”  - இது Class!

தொடர்ந்து இறுதிப் பத்தியில்:

“இது எதைப் போலிருக்கிறதென்றால், அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு இந்துக்கள் என்று சொல்லுவதற்கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகம்மதியரல்லாதார் என்று அழைப்பது போலவும் நாமும் இந்துக்களாகவும், இந்தியாவின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை ‘அல்லாதார்’ என்கிற அணியைக் கூட்டி முகம்மதியரல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்றி ஏம் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமுமில்லாமல் …”

மேலே உள்ள இறுதிப் பத்தியின் இந்த வாக்கியத்தில், பெரியாருக்கு அப்போது, இந்துக்கள் என்பதற்கான அடையாளம் “முகம்மதியரல்லாதார்” என்ற எதிர்மறை அடையாளமாக – அரசாங்கத்தால் சூட்டப்பட்ட அடையாளமாக இருந்திருக்கிறது என்ற புரிதலைத் தொனிக்கிறது. அதே சமயம், அவர் அதனுள் இருந்தே, அதை ஏற்றுக் கொண்ட புரிதலிலேயே செயல்பட்டிருக்கிறாரோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

ஆனால், அடுத்த தசாப்தங்களில், ”இந்து” என்ற வகையினத்தையே கேள்விக்கு உட்படுத்துவதை நோக்கி அவர் நகர்ந்ததற்கான தொடக்கப் புள்ளியாகவும் இது இருந்திருக்கலாம்.

எப்படியிருந்தபோதிலும், 1925 வரையிலும் கூட இந்துக்கள் என்ற வகையினம் இருக்கவில்லை என்பதுவும் அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற கேள்வியும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது. கல்விப் புலங்களில் நன்கு ஆராயப்பட்ட அறியப்பட்ட இவ்விடயம், அரசியல் புலத்தில் அதன் விரிவு கூடி அறியப்படாமல் இருப்பது வருத்தத்திற்கு உரிய புள்ளிகளில் ஒன்று!

பெரியார் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

”வாசிப்பின் நிமித்தங்கள்” – சில நினைவுக் குறிப்புகள் (3)

அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ பாட்டாளிவர்க்க உணர்வில் புடம்போட்டுக் கொள்ள எடுத்த முயற்சிகள் அத்தனையும் என்னளவில் தோல்வியிலேயே முடிந்தன. குட்டி முதலாளியப் பின்னணியில் இருந்து வந்த குட்டி முதலாளியாகவே வாழச் சபிக்கப்பட்டிருந்தேனோ என்னவோ, அறிவுஜீவி என்ற அடைமொழியும் அதனுடன் விரைவிலேயே என்னை மீறி சேர்ந்துகொண்டது. அதைச் சூட்டியதும் ஒரு காம்ரேடுதான்.

அறிவுஜீவிப் பட்டம் கிடைத்த வரலாறு வேடிக்கையானது என்பதால் பதிவு செய்யப்பட வேண்டியது. அறிவுஜீவிக் கூட்டத்தின் மீதான வெறுப்பின் உச்சம் தலைக்கேறியிருக்கும் இந்த சந்தர்ப்பம் அதற்குப் பொருத்தமாகவும் இருக்கும்.

90 களின் துவக்க ஆண்டுகளில் தீவிர வாசிப்பில் மூழ்கியிருந்ததில், பகல் பொழுது உறக்கம், இரவு முழுக்க பசித்த வாசிப்பு என்பதாகக் கழிந்தவை.  இதன் பக்கவிளைவாக, கடுமையான டஸ்ட் அலர்ஜி. மூச்சிலே பிரச்சினையில்லை. கண்களுக்கு.

லேசாகக் கூசும் வெளிச்சமும் பிரச்சினையானது. கண்களில் ஒருவிதமான சிறு பூச்சி மொய்ப்பு தொந்தரவானது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் “ப்ளெயின் க்ளாஸ்” அணிய வேண்டியதாயிற்று. அந்த மூக்குக் கண்ணாடிதான் அறிவுஜீவிப் பட்டத்தை ஒரு தோழரிடம் இருந்து அன்பளிப்பாகக் கிடைக்க வழிகோலியதே தவிர வாசிப்பு நிமித்தமாக எழுந்த வாதப்பிரதிவாதங்கள் அன்று. அவர் அந்தப் பட்டத்தைச் சூட்டிய பிறகு தோழர்கள் பக்கம் தலைவைத்துப் படுப்பதையே நிறுத்திக் கொண்டேன்.

அந்தக் காலகட்டத்திலும் சரி, இன்றைய நிலையிலும் சரி, வாசிப்பின் நிமித்தமாக கருத்தமைவுகளைப் பகிர்ந்து கொண்டு அளவளாவும் நெருங்கிய நட்புகள் இன்றியே கழிக்க சபிக்கப்பட்டவன் போலும். இடையில் சில ஆண்டுகள் (96 – 99) ராஜன் குறையின் நட்பு அத்தகைய அறிவார்த்த பகிர்தல்களுடன் கூடிய ஒரு சிறு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

அப்போது கிடைத்த நட்புகளே ரோசா வசந்த், சஃபி, வெங்கடேஷ் சக்ரவர்த்தி, திருச்சி கண்ணன் போன்றோர். அ. மார்க்சின் தொடர்பும் நெருங்கிய உறவும் உருவானதும் அதே காலகட்டத்திலேதான். இவர்களில் அ. மார்க்சுடனும் ராஜனுடனுமான உறவு நெருக்கமே அதிகம்.

கட்சியில் பணியாற்றிய காலம் என்னை உருவாக்கிய வடிவமைத்த ஒரு பொற்காலம். அதே போன்று, அதற்கு இணையான ஒரு பொற்காலம் அந்த “நிறப்பிரிகை” நட்பு வட்டம். இரு சந்தர்ப்பங்களிலும் வயதிலும் அனுபவத்திலும் மிக இளையவனாகவும், முதிர்ச்சியற்றவனாகவும் அனைத்தையும் வியப்போடும் உற்சாகத்தோடும் அனுபவித்த பேறு எனக்கு வாய்த்தது.

ராஜனுடனான உறவு ஒரு மூத்த சகோதரனுக்கு ஒப்பானது. ஒவ்வாத ஒரு மேட்டிமைத்தனம் கொண்டிருந்தாலும் பழகுவதில் அவரிடம் கிடைத்த சமத்துவம் முற்றிலும் புதிதான ஒன்றாக இருந்தது. சோம்பலை நெருங்கிய அவரது நிதானம் ஆச்சரியமும் பல சமயங்களில் எரிச்சலும் ஊட்டுவதாகவும் இருந்தது.

அ. மார்க்சுடனான உறவு நெருக்கம் தந்தை – மகன் என்ற அளவிற்கு பரிமாணம் பெற்றது. ஆனால், அப்போதும் அவரோடு அறிவார்த்த உரையாடல் ஒருபோதும் சாத்தியப்பட்டதில்லை.

அத்தகைய தீர்க்கமான பார்வை நான் பழகிய அளவில் அன்றும் அவருக்கு இருக்கவில்லை. ஒருவித மோசமான அறிவு எதிர்ப்பு மனநிலை, தேடித் தேடி வாசிக்கும் பழக்கமின்மை அவரிடம் ஆழ உறைந்திருந்தது. அதற்கு அவர் செய்துகொண்ட சமாதானம் “பார்ப்பன அறிவுஜீவிகளின் மேட்டிமைத்தனம்” என்பதாக இருந்தது. தமிழ்நாட்டின் அறிவுஜீவிக் கலகக் குரலாக அவர் உருப்பெற்றதற்கு இந்த “பார்ப்பனிய மேட்டிமைத்தனம்” தந்த சுயநியாயப்பாடு என்ற மோசமான விபத்தே தவிர வேறில்லை.

 

வாசிப்பின் நிமித்தங்கள் – 1 

வாசிப்பின் நிமித்தங்கள் – 2 

 

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

இன்மை

மெய் வருத்தலற்ற புனைவு தரித்து

ஆன்மாவற்ற உலகு அலைகிறது

நீதியில்லா மாந்தர்

நேர்மை தொலைத்த மாக்கள்

உளச்சுத்தி இழந்த பொய்யர்

நா பிறழ்ந்த நரகர்

நட்பற்ற நவிலர்

துப்பற்ற துடியர்

துறவற்ற தடியர்

காதலற்ற கள்ளக் காளையர்

அன்பற்ற பெண்டிர்

ஆழி சூழ் உலகு

உரசவொரு கல் தேடி

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மொக்கை மார்க்சுக்கு மூன்று கேள்விகள்!

கோணல் புத்தி கொண்டவர்களுக்கு எந்தச் சம்பவம் கிடைத்தாலும் கேணை சேஷ்டைகள் செய்வதைத் தவிர்க்கவே இயலாது போலிருக்கிறது :-)

சமீபத்தில் நிகழ்ந்த என்கவுண்டர் கொலைகள் குறித்த தனது இரு முகநூல் குறிப்புகளில் திருவாளர் பரமார்த்த குரு அவர்கள் இடையிலே சொருகிச் செல்லும் நாகாசு வரிகள் இந்தக் கோணல் புத்திக்கு சமீபத்தைய உதாரணம்.

முதலாவது, அன்பு கசிய எழுதப்பட்ட குறிப்பிலே சொட்டும் போலித்தனம்!

யூமா வாசுகி என்று அறியப்பட்ட புலம்பல் புடைப்பாளியின் ”நெஞ்சை நக்கி” கசக்கிப் பிழிந்து கண்ணீர் விட்டு அரசியல் நிகழ்வுக்கு நகரும் கள்ளக் கசட்டுத்தனம்!

யூமா வாசுகியை கிட்டத்தட்ட 94 ஆம் வருட அளவில் பழக நேர்ந்திருக்கிறேன். பெருமாள் முருகனின் நட்பினூடாக!

அப்போது, நாங்கள் வாடகை இருந்த வீட்டிலே பக்கத்து ஒரு போர்ஷன் (ஒரு அறை – ஒரு சமையலறை கொண்டது) காலியாகிவிட, வாசிப்பு நிமித்தம் தனிமை வேண்டிய எனது வற்புறுத்தலுக்கு இணங்கி அதையும் வாடகைக்கு எடுத்து எனக்கென்று தந்தனர் எனது பாவப்பட்ட பெற்றோர். (அதுவரை நாங்கள் இருந்த வாடகை வீட்டில் மூன்றே அறைகள் – ஒன்று “ஹால்”; ஒன்று சமையலறை; மற்றது, பெற்றோர் உறங்கும் “பெட்ரூம்”). வாடகை அப்போதைய இந்தியப் பணத்தில் 150 ரூபாய் மட்டுமே!

பக்கத்து போர்ஷனை வாடகைக்கு எடுத்த பின்னரே, வாசிப்பிற்குரிய தனிமையும் நண்பர்களின் வருகையும் தங்குதலும் நீண்ட உரையாடல்களும் சாத்தியமாயின.

பெருமாள் முருகன் தவிர்த்து அந்த 4 – 5 வருடங்களில் அதிகம் தங்கியவர் பைத்தியக்காரன் என்ற பெயரிலே ப்ளாக் உலகிலே அறியப்பட்ட சிவராமன். கோணங்கி தங்கிய இரு சந்தர்ப்பங்கள் சுவாரசியமானவை! :-)

95 ஐஆம் வருடம் இருக்கும். ஒருநாள் மதிய அளவில், (இரவு முழுக்க வாசித்து நான் எழும் நேரமது அக்காலங்களில்) பதைபதைக்க வந்தார் யூமா வாசுகி. வழமையான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு மிக நேரடியாக, தனது ஜோல்னாப் பையில் இருந்து, ஒரு கத்தியை எடுத்து நீட்டி, “வளர்மதி, இரண்டு நாட்களுக்கு முன்பு “முன்றில்” – ல் சாரு நிவேதிதாவுக்கும் எனக்கும் சண்டையாகிவிட்டது. என்னவென்றே தெரியவில்லை. அவனைக் கத்தியால் குத்திவிட வேண்டும் என்று வெறிபிடித்திருக்கிறது. இந்தக் கத்தியோடேயே அலைந்து கொண்டிருக்கிறேன்” என்று பதட்டம் சற்றும் குறையாமல் கலங்கினார் [சிற்றிதழ் உலகிலே புகழ் பெற்ற அச்ச்சம்பவம் => சாரு நிவேதிதா, “தமிழில் எழுத்தே கிடையாது” என்று சொல்ல, யூமா வசுகி “அப்போ ஏனடா தமிழிலே எழுதுகிறாய்?” என்று கேட்டு - அப்போதும் அடித்தது யூமா வாசுகியே!]

விழித்து எழுந்திருந்த எனக்கு என்ன சொல்வதென்றோ செய்வதென்றோ புரியவில்லை. எப்படிச் சமாதானம் செய்து அனுப்பினேன் என்றும் நினைவில்லை.

வார இறுதியில் பெருமாள் முருகனை வழமையாக சந்திக்கும் போது சம்பவத்தைச் சொன்னதும், “அவர் அப்படித்தான். விடுங்க” என்று சிரித்தார்.

அடுத்த சம்பவம், மேற்கு மாம்பலத்தில் ஒரு சாராயக் கடையில் நிகழ்ந்தது.

நண்பர் ஒருவரோடு மதுவருந்திக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, அருகில் இருப்பவர் யூமா வாசுகி என்பதைக் கண்டுகொண்டு, அவரோடு சேர்ந்து மதுவருந்தத் தொடங்கினோம்.

பேச்சு சுவாரசியத்தில், ஒரு சந்தர்ப்பத்தில் அவரது தொடையைத் தட்டிப் பேசிவிட்டேன்.

அவ்வளவுதான். “நீ என்ன, எனக்கு மாமனா, மச்சானாடா! என் தொடையைத் தட்டுகிறாய்!” என்று என் கண்ணத்திலே அறைந்தார்.

எனக்குப் புரியவில்லை. என் உயரத்திற்கு யூமா வாசுகி பூச்சி. அதைச் சொன்னேன். அடித்தால் தாங்க மாட்டாய் என எச்சரித்துவிட்டு நாங்கள் நகர்ந்துவிட்டோம்.

சரி. இது அற்பக் குடித்தகராறு!

கடைசியாக நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன்!

இது நடந்தது திருத்துறைப்பூண்டியில். 2003 என்று நினைவு.

(ஆவணப்படுத்தி வைத்திருக்கும் அழைப்பிதழ்களில் எஞ்சியிருந்தால் (பழையவற்றை நினைவில் வைத்திருக்கக்கூடாது என்று தீர்மானம் செய்து [நீட்ஷே வை வாசித்த உத்வேகத்தில் - ஆனால், என்ன செய்ய! நினைவுக் குப்பைகளைச் சில கழிசடைகள் கிளறி விட்டு விடுகின்றனவே! :-(  அனைத்து கடிதப் போக்குவரத்துகளையும் எரித்திருக்கிறேன்] அதிலே, ஆரம்ப காலகட்டத்தில் எழுதிய துண்டுப் பிரசுரங்கள் சிலவும் அடங்கும். [இக்குறிப்பு “அறிக்கை திருட்டுக் கையெழுத்து ஸ்பெஷெலிஸ்ட்டின் கவனித்திற்காக] பார்த்து உறுதி செய்கிறேன்.)

ஒரு இலக்கிய விமர்சனக் கூட்டம். பல நூல்களுக்கு. ஏற்பாடு செய்தவர்கள் பரமார்த்த குருவின் அடிவருடிகளில் ஒருவரான சிவகுருநாதன் மற்றும் “கிழக்கு” என்ற பெயரில் வந்த சிற்றிதழின் ஆசிரியர் குழுமத்தின் ஆசிரியர் – அப்துல் காதர் என்று அறியப்பட்டவர்.

எனது நண்பன் தய். கந்தசாமியின் வற்புறுத்தலின் பேரிலேயே கலந்துகொள்ளச் சம்மதித்தேன். அவனது சொந்த ஊருக்குச் செல்லும் ஆர்வம் ஒரு காரணம்.

காலை தொடங்கி கூட்டம். எனது அமர்வு மதிய இடைவேளை முடிந்து எனச் சொல்லப்பட்டது.

காலை பாதி அமர்வின்போதே, யூமா வாசுகி வந்து சேர்ந்தார். அவருக்கு பட்டுக்கோட்டை. திருத்துறைப்பூண்டிக்கு மிக அருகில். எனது அருகிலேயே வந்து அமர்ந்தார். மேலே சொன்ன இரு சம்பவங்களுக்குப் பிறகும் அவரோடு எனக்கு எந்த மனத்தாங்கலும் இருக்கவில்லை.

பாதிக்கூட்டத்திலேயே “போரடிக்கிறது. குடிக்கப் போகலாமா?” எனக் கேட்டார்.

சரியென்று கிளம்பினோம். அருகிலேயே கடை. முடித்துவிட்டு உணவருந்திவிட்டு மதிய அமர்வுக்கு இருக்கைகளில் அருகருகே அமர்ந்தோம்.

நான் பேச இருந்த அமர்வு வந்தது. ஆனால், அழைக்கப்படவில்லை.

சம்பந்தமேயில்லாமல், கூட்ட அமைப்பாளர்களில் ஒருவரான, மேலே குறிப்பிட்ட சிவகுருநாதன் தனது கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தார். ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் கழிந்த பின்னர் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

காரணம், கூட்ட அழைப்பிதழிலே அவர் கட்டுரை வாசிக்கப் போவதாக எந்தக் குறிப்பும் இருக்கவில்லை.

தாள மாட்டாமல், எழுந்து இடை மறித்தேன். “கட்டுரை வாசிப்பதாக இருந்தால், கூட்ட அமைப்பாளர்களில் ஒருவராகிய நீங்கள் உங்களது தலைப்பை அழைப்பிதழிலேயே அறிவித்திருக்க அனைத்து முன் உரிமைகளும் உண்டு. அதைச் செய்யாமல், இப்படி எந்த அறிவிப்பும் இல்லாமலேயே, நிகழ்ச்சி நிரலில் இல்லாமல், இங்கே கட்டுரை வாசிப்பது அதிகார துஷ்பிரயோகம்” என்று அவரது பேச்சிலே இடமறித்தேன்.

பக்கத்திலே இருந்து விழுந்தது என் கன்னத்திலே ஒரு அறை. திரும்பவும் யூமா வாசுகி.

பேசிக் கொண்டிருந்த தருணத்திலே எதிர்பாராது விழுந்த அந்த அடியைத் திரும்பிப் பார்த்தால் திரும்பவும் அந்தப் பூச்சி யூமா வாசுகி. என்ன செய்வதென்று புரியாது விழித்துக் கொண்டிருக்கையில், கூட்டத்திலே சலசலப்பு. ”சிவகுருவைப் பேசவிடுங்கள். அவனை வெளியேற்றுங்கள்” என்று என்னை.

எனக்குச் சுத்தமாகக் குழம்பிப் போய்விட்டது. கூட்டத்திலே பேசுவதாக அறிவிக்கப்படாத கூட்ட அமைப்பாளர் தொடர்பில்லாமல் எழுந்து ஒரு நீண்ட “எலக்கிய விமர்சனக் கட்டுரை” வாசிக்கிறார். அதன் ஜனநாயகத் தன்மை குறித்து கேள்வி கேட்ட, கூட்டத்திலே பேச சென்னையில் இருந்து அழைக்கப்பட்ட பேச்சாளர்களில் ஒருவரான என்னை வெளியேறச் சொல்கிறார்கள்!

அக்கணம், மேடையிலே அமர்ந்திருந்தவர்களிலே ஒருவரான, மனித உரிமைப் போராளியான பரமார்த்த குரு வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

அழுதுகொண்டே வெளியேறிய என்னோடு வந்தவன் தய். கந்தசாமி மட்டுமே. அவனே என்னைப் பத்திரமாக சென்னை திருப்பி அனுப்பியும் வைத்தான்.

தான் காதலிக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான யூமா வாசுகி பதட்டப்பட்டு சமீபத்திய என்கவுண்டர் கொலைகள் குறித்து பேசியதும் தான் நெஞ்சுருகிப் போய் நெக்குருகி எழுதுவதாக பாசாங்கு காட்டியது இந்தப் பழைய குப்பை அனைத்தும் கிளறவிட்டன!

என்ன செய்வது! அத்தனையும் பாசாங்கு! அத்தனை பொய்! அத்துனை அதிகார துஷ்பிரயோகம். அத்துனை வன்முறை! அத்துனை நேர்மை!

சரி! கிடக்கட்டும். இவையெல்லாம், இலக்கிய வாழ்வுக் குப்பையிலே நிகழ்ந்துவிட்ட துரதிர்ஷ்ட வசமான சம்பவங்கள் என்றுகூட இந்த யோக்கிய சிகாமணி – நான் அறை வாங்கியதையும், கூட்டத்திலே பேச அழைக்கப்பட்ட என்னை, என் சந்தர்ப்பம் வரும் முன்னாலேயே அறிவிப்பின்றி இடையீடு செய்ததைக் கேள்வி கேட்டதற்காக, கூட்டத்தை விட்டே வெளியேற்றிய யோக்கியத்தனத்தையும் அமைதியாக மேடையிலே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜனநாயகப் பண்பாளரான பரமார்த்த குரு கூறக்கூடும்.

ஆனால், பூச்சியைப் போல இருந்து கொண்டு, தனது சொந்த வாழ்வில் மிக வன்முறையாளனாக இருந்து கொண்டு, அந்த வன்முறையை நாவலாக எழுதியே சுயபச்சாதமும் தேடிக் கொண்ட ஒரு அற்பப் பூச்சிதான் இவரது காதலுக்குரிய எழுத்தாளர்களில் ஒருவராக இருப்பது ஆச்சரியத்திற்கு உரிய ஒன்றா என்ன!

இல்லவே இல்லை!

பரமார்த்த குரு நேசிக்கும் இன்னொரு வன்மம் மிகுந்த எளுத்தாளப் புடுங்கி யாரென்று கேட்டால் அது லஷ்மி மணிவண்ணன். அவர் நாடார் என்பது இன்னொரு சிறப்பு. அந்தப் பாசம் எங்கோ ஒளிந்திருக்கிறதோ என்று எனக்கு ஒரு சந்தேகமும் உண்டு.

இதே பாங்கு, மரண தண்டனை குறித்து ராஜன் குறை – ஷோபா சக்தி இருவருக்கிடையே நிகழ்ந்த பரிமாற்றத்தில் இடையீடு செய்து, ஷோபா சக்தியின் “வன்மையான” வார்த்தைப் பிரயோகங்களை நியாயப்படுத்தி பரமார்த்த குரு எழுதியதிலும் கவனிக்கலாம்.

ஆனால், இந்த வன்மையின் நியதி வளர்மதிக்கு மட்டும் மறுக்கபடுவதின் மர்மம் என்ன!

மேலே குறிப்பிட்ட மூவரும். பரமார்த்த குருவுக்கு ஜல்லியடிப்பவர்கள், வளர்மதி அப்படியல்லன் என்பதுதானா?

மேலே விவரித்த சம்பவங்கள் எவையும் தனிப்பட்ட வாழ்விற்கு உரியவை அன்று! பொது வாழ்விலே புழங்கும் புளுத்தவை! :-(

அந்தப் பொது வாழ்வுக்குரிய அரசியல் புலத்திற்கே வருகிறேன்.

யூமா வாசுகி குறித்த “பாசம் ததும்பும்” குறிப்புகளில் இருந்து தொடங்கி, என்கவுண்டர் நிகழ்வுக்கு நகரும் பரமார்த்த குரு “சந்திலே சொருகிச் செல்லும்” அற்பத்தனமான குசும்பு குறித்ததே அது!

//இல்லைததமிழர்களில்லை, இவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன எனத் திருப்தி கொள்ளப் போகிறோமா?//

என்ன மண்ணாங்கட்டிக்கு இந்தக் குறிப்பு இடை நுழைகிறது?

நடக்கும் பிரச்சினையின் மையம் தமிழர்களுக்கும் தமிழர்கள் அல்லாதோருக்கும் இடையிலானது என்று முன்வைக்கப்பட்டதா? இனவிரோதம் கட்டமைக்கப்பட்டதா?

அரசு தரப்பு மறைமுகமாக எழுப்பும் பிரச்சினை “பிற பிறதேசங்களுக்குக் குடியேறும் தொழிலாளர்” குறித்த பிரச்சினை (immigrant labor). அவ்வாறு பிழைப்பு தேடி, அடிமட்ட கூலி வேலைக்காக, ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கத் துணியும் பிற மொழி பேசும் பிற தேசிய இனத்தவரை பலிகடா ஆக்குகிறது தமிழக அரசுத் தரப்பு.

அவர்களது “குறைந்த கூலித் தகுதி (cheap labor) காரணமாகவே, தமிழகத்தில் இயங்கும் இந்தியத் தேசிய அளவிலான (pan – indian) நிறுவனங்களும், அவர்களைச் சார்ந்து இயங்கும் சிறு தொழில் முனைவோரும் அத்தகைய வட – இந்தியக் கூலித் தொழிலாளர்களை கடந்த இரண்டு – மூன்று ஆண்டுகளில் மிக அதிகமாக வேலையில் அமர்த்துகின்றனர் என்பதுவும் சமூக நிகழ்வுகளை மிக மேலோட்டமாக அவதானித்து வருகிற, ஆர்வம்மிக்க எந்த சமூக அறிவு’சீவி’க்கும் புலம்பும்.

ஆனால், பரமார்த்த குருவுக்கு மட்டும் அந்த அடிப்படை அறிவுகூட புலப்படாது!

சம்பவங்களை முன்னிட்டு அவர் கேள்விகளை எழுப்புவார்.

இடதுசாரி இயக்கங்கள் என்ன சொல்கின்றன? என்று.

ஆனால், தமிழ் தேசிய இயக்கங்கள் மீது கூசாமல் குற்றம் சாட்டத் துணிவார்.

“ தமிழ் தேச அமைப்புகள் கண்டிக்காததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்று.

என்ன மண்ணைப் புரிந்து கொண்டார் இந்த மக்கு மட மண்ணு!

இந்தக் கேள்வியை சிபிஎம் பருப்புகளை நோக்கி மட்டும் இவர் எழுப்பாததன் மர்மம் அல்லது மடத்தனம் அல்லது யோக்கியத்தனம் என்ன?

ஏய்யா! எதுக்கெடுத்தாலும், தமிழ் தேசிய இயக்கங்கள் இதற்கு என்ன சொல்கின்றன என்று கேட்கும் ஆளான நீவீர், இந்தப் பிரச்சினைக்கு இஸ்லாமிய இயக்கங்கள் என்ன சொல்கின்றன என்று கேட்கக் கூடாதா?

இஸ்லாமியப் பாதுகாவலர் பதில் சொல்வாரா?

இஸ்லாமியராவது ஒடுக்கப்படுவோர்!

”ஆண்ட பரம்பரை” யினரான சி பி எம் பார்ப்பனர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்ற கேள்வியை ஏன் பரமார்த்த குரு எழுப்பவே இல்லை?

அரசியல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »
Follow

Get every new post delivered to your Inbox.

Join 90 other followers