வலைப் பதிவில் எனது பழைய ஆக்கங்களைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கி சில வாரங்களுக்குள் நான் முற்றிலும் எதிர்பார்த்திராத இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று மோசமானது. மற்றது இனியது. இனியதைப் பகிர்ந்து கொள்ளவே விருப்பம். திரு. டிஜே தமிழனின் அறிமுகம்.
இங்கே பதிவதற்கு முன்பாகவே எனது எழுத்துக்களை வாசித்திருப்பதாக மின்னஞ்சலில் தெரிவித்தார். சிறு பகிர்வுகளைத் தொடர்ந்து பின்நவீனத்துவம் குறித்த அவரது கட்டுரையை வாசித்தேன். மூலநூல்கள் எதையும் வாசிக்காமலேயே, தமிழில் வந்துள்ள அரைகுறை அறிமுகங்களை அவசரகதியில் விழுங்கி, கால்வாசி துப்பி, “பின்நவீனத்துவக் குஞ்சுகளாக” வலைப் பக்கங்களில் உலாவரும் சிலரது எழுத்துக்களை வாசித்து ரசித்துக் கொண்டிருந்த எனக்கு திரு. டிஜே தமிழன், தனது வாசிப்பின் எல்லைகளை ஒப்புக்கொண்டு தனது புரிதல்களையும் கரிசனங்களையும் கேள்விகளையும் வைத்திருந்த பாங்கு பிடித்திருந்தது. “கட்டவிழ்ப்பு” குறித்து அவர் தமது கட்டுரையில் எழுதியிருந்தவற்றுக்கு எனது சிறு விளக்கம் ஒன்றை அனுப்பினேன். தற்சமயம் விரிவாக எழுதமுடியாமல் இருக்கும் எனது சூழலையும் தெரிவித்தேன்.
என்றாலும் அவருடனான அச்சிறுபகிர்வுகள் தந்த உற்சாகம் இங்கு இக்குறிப்புகளை எழுதத்தூண்டியது. வாசித்த நூல்கள் பலவற்றையும் திரும்பவும் புரட்டிப் பார்த்து ஆதாரங்களோடும் மேற்கோள்களோடும் எழுத நேரம் இல்லை. என்றாலும், வாசித்தவற்றை நண்பர்களோடு திரும்பத் திரும்ப பகிர்ந்து கொண்டு, தமிழ்ச் சூழலில் புதிய சிந்தனைகள் குறித்த அறிமுகங்கள் எவ்வளவு அபத்தமாக செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று விரிவாக விளக்கி, தொடர்ந்து புலம்பிக் கொண்டிருக்கும் எனது வழக்கத்தை நம்பி இங்கு இக்குறிப்புகளை எழுதுகிறேன்.
எழுதுவதன் நோக்கம் விவாதங்களைக் கிளப்பிவிடுவதற்காக அன்று. விவாதம் ஒரு எல்லைக்குட்பட்ட விளையாட்டு. வெற்றி பெறவேண்டும் என்பதற்காக விளையாடப்படும் விளையாட்டு. அதிகாரத்தைக் கட்டமைக்கும் விளையாட்டு. தவிர்கக முடியாத சந்தர்ப்பங்கள் அல்லது மிக விரிவான ஒரு நன்மையைக் கருதி மட்டுமே கைக்கொள்ளப்பட வேண்டிய ஆயுதம் (சிறு அறிமுகத்திற்கு இங்குள்ள கண்ணன் என் காதலன் என்ற கட்டுரையைப் பார்க்க). இவை கருதி இங்கு இக்குறிப்புகளை வைக்கும் நோக்கம், இவற்றை வாசித்துவிட்டு, ஒரு சிலராவது மூலங்களைத் தேடிப்பிடித்து வாசிக்க விழைய மாட்டார்களா என்ற ஆதங்கத்தைத் தவிர வேறொன்றும் இல்லை.
சரி, விஷயத்ததிற்கு வருவோம்.
பின்நவீனத்துவம் என்று எதை வரையறுப்பது?
முதலில் சில தகவல்கள். பின்நவீனத்துவம் என்று சொல்லப்படும் போக்கு முதன்முதலாக சிற்பக் கலையில் தோன்றியது. பிறகு இலக்கியத்தில், குறிப்பாக நாவலில். அமெரிக்க எழுத்தாளர் ஜான் பார்தை ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கொள்ளலாம். இலக்கியத்தில் பின்நவீனத்துவம் என்பது தனியாக, விரிவாக, பேசப்பட வேண்டிய ஒரு விஷயம். அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்வோம்.
பின்நவீனத்துவ சமூகம்,அரசியல், சிந்தனை என்று இன்று பலராலும் பேசப்படுவது என்ன?
முகத்திலறையும் உண்மைகளைச் சொல்வதென்றால், பின்நவீனத்துவ சிந்தனை என்று எதுவும் கிடையாது (அதாவது தத்துவம் என்ற பொருளில்). பின்நவீனத்துவ அரசியல் என்று சுயபுரிதலுடன் வரையறுக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் தெளிவான அரசியலோ அரசியல் இயக்கமோ இதுவரையில் உலகில் எங்கும் கிடையாது.
எனின், இந்தப் பெயர்களால் பரவலாக அடையாளம் காணப்படும் போக்குகளைப் பற்றி என்ன சொல்வது?
பின்நவீனத்துவம் என்பது ஒரு சூழல். பின்நவீனத்துவ சமூகம் என்பது போன்று ஒரு சமூகச் சூழல் அன்று. சமூகச் சூழல் என்ற அர்த்தத்தில் இதை நோக்குவது தவறு. இது ஒரு மனிதாயச் சூழல். உலகம் முழுவதும் உள்ள அல்லது குறைந்தபட்சம் பெரும்பான்மையான மானுடர்கள் எதிர்நோக்கும் ஒரு இருத்தலியல் சூழல்.
இருத்தலியல் என்றவுடனேயே ‘இருத்தலியல்’ என்று ஒரு ‘தத்துவத்தை’ நினைவில் கொண்டுவிட வேண்டாம். அது சார்த்தர் குழப்பிய குட்டை. ஃஐடெக்கர் அதைக் கையாண்ட பொருளில், மானுட இருப்பு என்பது அவர்தம் ஆன்ம நிலையைக் குறிப்பது. ஆன்ம நிலை மதவாதிகள் சொல்வது போன்ற அரூபமான கடவுள் நிலையன்று. இவ்வுலகில், சமூகங்களில் வாழும் மானுடர்கள் அவர்களுக்குச் சாத்தியமான மிகவுயர்ந்த நிலைகளை எந்த அளவிற்கு அடைந்திருக்கிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது குறித்த கேள்வியே மானுட ஆன்ம நிலை குறித்த கேள்வி.
சமூகச் சூழலை உள்ளடக்கிய, நிலவும் சமூக வாழ்வு உருவாக்கியிருக்கும் வாழ்வுச்சூழல், மானுடர்கள் தமது உயர்ந்தபட்ச சாத்தியங்களை நோக்கி நகர்வதற்கு எவ்வளவு சாத்தியங்களைத் திறந்து வைத்திருக்கிறது என்ற இந்நோக்கிலேயே பின்நவீனத்துவ சூழல் என்பதை அணுகவேண்டும்.
அவ்வாறு நோக்கும்போது, பின்நவீனத்துவ சூழல் என்று பொதுவாக அழைக்கப்படும் சூழல் மானுடர்கள் தமது சாத்தியங்களை அடைவதற்கான தேடலில் திக்கற்ற திறந்தவொரு வெளியில் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பது.
முதலாளிய உருவாக்கத்துடன் எழுந்த நவீன சூழலில், இச்சாத்தியப்பாட்டிற்கான தேடலில் அவர்களுக்கு பல விடுதலை வழிகள் திறந்திருந்தன. மார்க்சியம், பெண்ணியம், உளவியல் போன்ற பல்வேறு பார்வைகள், ஒரு ஒருமுகப்பட்ட அல்லது ஒற்றை நோக்கில் நின்று, தாம் சுட்டும் வழியில் சென்றால் மட்டுமே விடுதலை சாத்தியம் என்று பறைசாற்றின. ஒரு ஒற்றை வழி விடுதலைப் பாதை இருப்பதாக முன்வைத்த அப்பார்வைகளை அவர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு அவ்வழி பயணித்தனர். அவற்றின் உச்சமாக, அவற்றில் பலவற்றையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவை அனைத்தின் தோல்வி அல்லது எல்லைகளைப் புரிந்துகொண்டு, இனியும் மாற்று சாத்தியங்கள் ஏதேனும் உள்ளனவா என்று தேடும்போது அப்படியேதும் இனிமேலும் இல்லை என்று உணரத்தலைப்படும் சூழலே பின்நவீனத்துவச் சூழல்.
இந்த ஒற்றை வழி விடுதலைப் பாதைகளின் அறியப்பட்ட தோல்விகளைத்தான் பெருங்கதையாடல்களின் தோல்வி என்று லியோற்றட் தெளிவுபடுத்தினார். அவற்றுக்கு மாற்றாகத்தான் சிறுகதையாடல்களை முன்மொழிந்தார். சிறுகதையாடல்கள் எவ்வாறாக அமையவேண்டும்?
எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களைத் தயாராக வைத்திருந்த பெருங்கதையாடல்களைப் போன்றல்லாமல் குறிப்பிட்ட சூழல்களுக்கு குறிப்பான பதில்களை மட்டுமே தேடும் கதையாடல்களாக அமைபவை சிறுகதையாடல்கள். ஆனால் அது மட்டுமேயன்று வித்தியாசம்.
பெருங்கதையாடல்கள் மிகவும் கராறான ஒரு தர்க்க வழிப்பட்ட சிந்தனை முறைமையைக் கைக்கொண்டவை. அத்தர்க்கச் சிந்தனை முறைமை நமது இரத்தில் ஊறிவிட்ட ஒன்று. விவாதத்தின் மூலமாக பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு விடமுடியும் என்ற ‘ஜனநாயகப் பூர்வமான’ நம்பிக்கையில் எதற்கெடுத்தாலும் விவாதம், அறிவு என்பது கேள்வி கேட்பதால் வளர்வது என்ற நம்பிக்கையில் எதற்கெடுத்தாலும் கேள்விகள் – விவாதம், என்று நமது கலாச்சாரத்தை வடிவமைக்கும் ஒன்று. அதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிடவும் முடியாது. முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றும் அன்று. அதன் எல்லைகளையும் பயன்களையும் ஒப்புக்கொண்டு தர்க்கத்திற்கு அகப்படாத சிந்தனை முறைமைகளில் பழக்கப்படுவது, அத்தகைய பண்பாட்டை வளர்ப்பது என்ற நோக்கில் உருவாக்கப்படும் கதையாடல்களே சிறுகதையாடல்கள்.
அதற்கு முதல் நிபந்தனை விவாதத்திலிருந்து கூடிய வரையில் விலகி நின்று உரையாடல் என்ற வடிவத்திற்குப் பழக்கப்படுவது. உரையாடல் முதலில் செவிசாய்ப்பது. அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எப்போதுமே, நாம் அனைவருமே (நானும் இதற்கு விதிவிலக்கல்ல) சந்தர்ப்பம் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே பேசத் தொடங்கி விடுகிறோம். நமக்கு முன்னால் நிற்கும் மற்றவர் கேட்கிறாரா இல்லையா என்ற கவனமின்றி பேசிக்கொண்டே இருக்கிறோம். இப்படிப் பழக்கப்பட்ட நமக்கு உரையாடல் என்பது செவிசாய்ப்பதைக் கோருவதோடு மட்டுமன்றி, நாம் பேசும்போதுகூட அடுத்தவர் செவிசாய்க்கிறாரா, அடுத்தவர் இப்போது பேச விரும்புகிறாரா என்பதையும் சேர்த்து கவனித்து பேச்சை நிறுத்தி அவரைப் பேச அழைக்கக் கோருவது என்றால், எளிதில் சாத்தியமானதா என்ன?
(தொடரலாம் … தொடராமலும் போகலாம்)
மறுமொழியொன்றை இடுங்கள்