உன் பழுப்பு நிறத்திற்காக
உனது முலைகள் கருத்த வட்டமாக விழும் அழகிற்காக
நான் உன்னைக் காதலிக்கிறேன்
உடைந்த உன் குரலில் தொனிக்கும் சோகத்திற்காக
உனது சிறிய இமைகள் தங்குமிடத்தில் விழும் நிழல்
தரும் தன்மைக்காக
நான் உன்னைக் காதலிக்கிறேன்
உன் தளர்ந்த நடையில்
நினைவுகளில் மங்கிக் கரைந்துபோன
அந்தப் பழங்காலத்து அரசிகளை நினைவூட்டும்
ஏதோவொன்று தொக்கி விழுகிறது
உன் பேச்சின் அதிர்வுகளில்
தேய்ந்த விலங்குகள் பூட்டிய அடிமையின் தேம்பல்கள்
வடிகிறது
ஓ, சிறிய பழுப்புப் பெண்ணே
துன்பத்திற்குப் பிறந்தவளே
அரசிகளின் தளிர் அழகு, கம்பீரம் எதையும் இழந்துவிடாமல்
ஒரு காலத்தில் அடிமையாக இருந்தாய் என்பதை மறந்து
உன் தடித்த இதழ்களை விரித்து
விதியின் முகத்தில் ஒரு புன்னகையை உதிர்த்துவிடு
ஃஆர்லெம் எழுத்தாளர்களிலேயே மிக அதிகமான இன உணர்வு உடையவராக அறியப்பட்டவர். கவிதைகளுக்காகவே பெயர் பெற்றவர். இவருடைய கவிதைகள் உணர்ச்சிகளின் நுட்பங்களை வெளிக்கொண்டு வந்ததும் கருப்பு உடலைக் கொண்டாடியதும் அன்று எவரும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட்ட ஒன்று.
நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4 மே 1998
மறுமொழியொன்றை இடுங்கள்