கலை கலைஞனுடைய வினைப்பாட்டிலிருந்து பிறக்கிறது. ஆனால், ஒரு கலைப்பொருளை நிகழ்த்திக் காட்டுவதாலேயே கலைஞன் கலைஞனாக அங்கீகரிக்கப்படுகிறான். அதாவது, கலைப்பொருளே கலைஞனை அடையாளம் காட்டுகிறது.
கலை கலைஞனின் ஊடாகப் பிறக்கிறது. கலைஞன் கலையிலிருந்து பிறக்கிறான். கலை கலைப்பொருளில் உறைந்திருக்கிறது. ஆகையால், அதிலிருந்து தொடங்கிப் பார்க்கலாம்.
நேரடி பிரதிநிதித்துவம் செய்யாத கலைவடிவம் ஒன்றை உதாரணமாகக் கொண்டு பார்ப்போம்.
அகன்று, விரிந்து, அமைதியாக ஓடும் நதியின் கரையில் அமைந்த பெளத்த விகாரை ஒன்றை எடுத்துக்கொள்வோம். விகாரையின் உள், புத்தரின் பாதக்குறடுகள். நந்தவனமாகப் படந்த வளாகம். அதில் கமழும் நிச்சலனம். இடமும் சூழலும் ஒரு தெய்வீக அமைதியில் கரைந்திருக்கின்றன. ஏதேதோ பிரதேசங்களிலிருந்தும் வந்து போகும் பிக்குகளை அரவணைக்கும் – வாழ்வும் மரணமும், இன்பமும் துன்பமும், நிற்றலும் அழிந்துபடுதலும், பதைகளைச் சங்கமிக்கும், மானுட வாழ்விற்கு அர்த்தம் தந்து நிம்மதியைத் தரும் வெளியாக அமைந்து இருக்கிறது விகாரை.
நொய்ந்த ஆற்று மணலில், அமைதி கமழ அந்த விகாரை அமர்ந்திருக்கிறது. இந்த அமர்தல், அதுவரை கண்ணில் படாமலிருந்த ஆற்று மணலின் மென்மையை உணர்த்துகிறது. மெல்ல வருடிச் செல்லும் தென்றலை சுவாசத்தில் முதன்முதலாக கலக்கச் செய்கிறது. மஞ்சளாக ஜொலிக்கும் மாலைச் சூரியனின் கனிவை வடித்துக் கொடுக்கிறது. தொடுவானத்தின் பரப்பை விரித்துக் காட்டுகிறது. பெளர்ணமி நிலவின், விண்மீன்களின், இரவின் குளுமையை, மெளனத்தைப் பேசுகிறது. நந்தவனமாக விரிந்து, அருகமைந்த வனங்களில் கரைந்து, அவற்றுள் உறையும் சகல உயிர்களுக்கும் உருவறை தருகிறது.
விகாரையின் அமர்தல்/எழுப்புதல் சுற்றியிருக்கும் அனைத்தின் மீதும் அருள் பொழிகிறது. மனிதர்களும் மிருகங்களும் சகலமும் அதன் ஒளியில் அர்த்தம் கொள்கின்றன. வாழ்வில் வெளிச்சம் பெறுகின்றன. தன்னிலிருந்து வீசும் உயிச்சுடரில் விகாரை உருவாக்கித்தரும் உலகு (World) இது.
விகாரையின் அமர்தல், முதல் முறையாக அதைச் சுற்றியிருக்கும் அனைத்திற்கும், தம்மைப் பற்றிய பார்வையைத் தருகிறது. புத்தரின் பாதக்குறடுகளை வெறுமனே காட்சிக்கு வைத்திருக்கும் இடமாக அது இல்லை. அதனில் புத்தர் வியாபித்திருக்கிறார். புத்தரின் பெயரும், அவரின் அருள்வழியும் அந்த மண்ணில் இருக்கும் வரையில், அது ஒரு படைப்பாக அங்கு ஒளிவிடும். புத்தரும் அதிலிருப்பார். (புத்தரின் அருள்வழி அழிந்ததும், அது வெறும் வரலாற்று நினைவுச் சின்னம்).
விகாரையின் அமர்தல், ஒரு ‘புனித வெளியைத்’ திறந்துவிடுகிறது. புத்தரின் நினைவை, வழியைப் போற்றி, சமர்ப்பணமாக எழுந்தது விகாரை. அவரின் ‘தெய்வீகத் தன்மைக்கும்’ புகழுக்கும் மரியாதை செய்வது போற்றுதல். விகாரையைக் கட்டி எழுப்புதல் ஒரு புனித வெளியைத் திறப்பதால் சமர்ப்பணம் படையலாகிறது.
இந்தப் புகழும், பெருமையும் திக்கெட்டும் ஒளி வீசி நிற்கிறது. அந்த ஒளியில் பிரசன்னமாவது, வழிகாட்டியாக இருப்பதுதான் உலகு.
ஒரு கலைப் பொருளாக இருப்பது என்பது, இதுபோன்று ஒரு உலகைக் கட்டியெழுப்புவது.
இன்னும் ஒரு அம்சமும் இருக்கிறது.
ஒரு படைப்புருவாக்க நடவடிக்கையில் கல்லோ, மரமோ, உலோகமோ, வண்ணமோ, மொழியோ, ஒலியோ, எடுத்து செய்யப்படுகிறது. படைப்பு முதலில், செய்யப்படுவது.
கருவிகளின் உருவாக்கத்தில், அதைச் செய்ய எடுத்துக் கொள்ளப்படும் பருப்பொருள், எந்த அளவிற்கு கருவியின் கருவித்தன்மைக்குள் கரைந்து, மறைந்துவிடும் பண்புடையதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அது அக்கருவிக்குப் பொருத்தமுடையதாக இருக்கிறது.
இதற்கு மாறாக, நாம் பார்த்த பெளத்த விகாரை, அதைச் செய்ய எடுத்த பருப்பொருட்களை மறையச் செய்துவிடுவதில்லை. அது திறந்துவிடும் வெளியில் – உலகில், முதன் முதலாக, முன்வந்து நிற்கச் செய்கிறது.
நொய்ந்த மணல் அப்போதுதான் அதன் அழகில், மென்மையில் தெரியத் தொடங்குகிறது. தேக்கின் உறுதி விடைத்துத் தெரிகிறது. வண்ணங்கள் ஒளிவீசுகின்றன. வார்த்தை பேச ஆரம்பிக்கிறது. விகாரை, மணலின் மென்மையின் மீது மிதக்கத் தொடங்கும்போது, தேக்கின் உறுதியில் உள்ளுறையும்போது, வண்ணங்களின் சாயலில் காயும்போது, மொழியுள் உறையும்போது இவற்றின் தன்மைகள் முன் வந்து நிற்கின்றன.
கலைப் படைப்பு எதை முன்னிறுத்தி, தான் பின்நின்று அதற்குள் உறைகிறதோ, அது மண் (Earth). மண் முன் வந்து நிழல் தருவது. சோர்வின்றி, முயற்சியேதுமின்றி, இயல்பாக, தானாக, முன்வந்து நிற்பதுவே மண்.
காலடியில் அமைதியாக, எந்நேரமும் உயிரின்/ஆற்றலின் அதிர்வை உணர்த்திக் கொண்டிருப்பது. இந்த மண் மீதுதான், அதனுள்தான் வரலாற்று மனிதன் தனது உலகை உருவாக்கி புழங்கத் தொடங்குகிறான்.
மண் ஏன் படைப்பைப் பின் தள்ளி தான் முன்வந்து நிற்பதாக இருக்கிறது?
மணலின் மென்மையை ‘அறிந்து’ கொள்ள, அதைக் கைகளில் எடுத்து உரசிப்பார்ப்பதோ, எடை நிறுத்திப் பார்ப்பதோ உதவாது. அதை, அதன் இடத்தில், இருக்கவிட்டு, அதன்மீது நடக்கும்போதுதான் அதன் மென்மையை உணரமுடியும். அதை விளக்கமுற்படாமல், அதாகவே இருக்கவிடும் போதுதான் அது தன் மென்மையை நமக்கு உணர்த்த முன்வரும்.
மண், விளக்கத்திற்கு அப்பாற்பட்டதாக, தன்னைத்தானே மூடி மறைத்துக் கொள்ளும்போது மட்டுமே, உணர்தலுக்கு உட்பட்டு வந்து நிற்பதாக இருக்கிறது. மண்ணின் முன்னிற்றல் மறைத்தலின்போதே சாத்தியமாகிறது.
இந்த மறைத்தல், ஒருபடித்தானதாக, எப்போதும் மறைத்து கொள்வதாகவும் இருப்பதில்லை. மிகவும் நுட்பமான, எளிமையான வழிகளில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவும் செய்கிறது. என்றாலும், அது துருத்தி நிற்பதும் இல்லை. எடுத்துக் காட்டாக, கவிதையில்தான் சொற்கள் தம் வீச்சில் நிற்கும். அதே நேரத்தில், அங்கு துருத்தி நிற்பதும் இல்லை.
ஒரு உலகைக் கட்டியெழுப்பி, மண்ணை முன்னிறுத்துவதில்தான் ஒரு கலைப்பொருளின் உள்ளார்ந்த தன்மை, அதன் படைப்புத்தன்மை இருக்கிறது. இரண்டும் படைப்பில் ஒருமித்தே இருக்கின்றன. ஒரு படைப்பை ஆழ்ந்து நோக்கும்போது, அது தன்னளவில், தனித்து நிற்கக் காரணமான இந்த ஒழுங்கமைதியைத்தான் நாம் உணரத் தலைப்படுகிறோம்.
(தொடரும் … )
பன்முகம் ஜூலை – செப்டெம்பர் 2003.
மறுமொழியொன்றை இடுங்கள்