ஆடு
சில நாட்களுக்கு முன்பாக நண்பர் சி. மோகனோடு அவரது பதிப்பகத்தில் அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டு புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட புத்தகம் “மொழிபெயர்ப்பியல்”. அன்னம் வெளியீடாக 1989 – லும் இரண்டாம் பதிப்பு 94 – லிலும் வந்திருக்கிறது. டாக்சர் சி. சிவசண்முகம், டாக்டர் வே. தயாளன் என்போர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்று ஊகிக்க முடிகிறது. எம். ஏ. தமிழ் பாடத்திட்டத்திலும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று பிற்பாடு ஒரு நண்பர் மூலமாக அறிந்து கொண்டேன்.
ஒரு ஆர்வத்தில் புத்தகத்தைப் புரட்டியபோது எடுத்தவுடன் என் கண்களுக்குச் சிக்கியது ஒரு பிழை (இந்த முறை அச்சுப் பிழையன்று; சொற்குற்றம். அது என்னமோ தெரியவில்லை, என் தலையெழுத்து இப்படியிருக்கிறது. பொருட்பிழையை நோக்கி நகரக்கூட முடியவில்லை.) மொழிபெயர்க்க எடுத்துக்கொள்ளும் பிரதியின் மொழியை source language என்றும் பிரதி மொழியாக்கத்திற்குள்ளாகும் மொழியை target language என்றும் மொழிபெயர்ப்பு தொடர்பான விவாதங்களில் குறிப்பிடப்படுவதுண்டு. நூலில் target language என்பதற்கு ஆசிரியர்கள் செய்திருக்கும் பெயர்ப்பு “குறிக்கோள் மொழி”!
இலக்கு மொழி என்று எழுதுவது சற்றுப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அல்லது தமிழ் இலக்கண நூல்களில் புணரியல் பற்றிய விதிகளின் தொகுப்பில் பயன்படுத்தப்படும் வருமொழி, நிலைமொழி என்ற பதங்களை முறையே source language – ற்கும் target language – ற்கும் ஆள்வதும்கூட நன்றாக இருக்கலாம். என்னத்த ‘தோனி’ என்னத்தப் பண்ண. புத்தகத்தை வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
(பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்குக் காரணம் உண்டு. Author’s spirit “மூல ஆசிரியரின் விறுவிறுப்பு (spirit!)” என்று பெயர்த்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். ‘Spirit’ டுகளின் பால், அதாகப்பட்டது ‘விறுவிறுப்பு’ – களின்பால் எனக்குள்ள பிடிப்பு, பற்றுதல், மோகம், உற்சாகம், ஆர்வம் இன்னும் இதுபோன்ற பற்பல சொற்களால் விளக்கம் பெறுகிற உணர்ச்சிகளை, எனது நண்பர், தமிழ் நாட்டின் ஆகச் சிறந்த இலக்கிய மானேசரின் முயற்சியால் தமிழ்ச் சிறுபத்திரிகை உலகம் நன்கு அறிந்திருக்கும் என்று நம்புகிறேன்.)
மாடு
மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற வேகத்தோடு ஒப்பிடும்போது “மொழிபெயர்ப்பின் அரசியல்” குறித்த பேச்சு தமிழில் குறைவு. அரசியல், கோட்பாடு – பொதுவில் ‘அறிவு’ என்றாலே அலறும் நமது சிறுபத்திரிகை இலக்கியவாதிகளுக்கு இது ஒருபோதும் உறுத்தலாகப் படப்போவதில்லை. நான்கு கவிதைத் தொகுதிகளைப் படித்துவிட்டால், ஒரு கவிதை, பத்து சிறுகதைத் தொகுதிகளைப் படித்துவிட்டால் ஒரு சிறுகதை எழுதத் தகுதி வந்துவிடுவதுபோல இவர்களுக்கு மொழிபெயர்ப்பும் பழகப் பழக் ‘மெருகு’ கூடிவிடக்கூடிய ஒன்று. கொஞ்சம் பழகிவிட்டால் அப்புறம் இருக்கவே இருக்கிறது ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பு.
இது தொடர்பாக, சில விஷயங்களை கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்ற விருப்பம் தட்டிக்கழிந்து கொண்டே போகிறது. குறிப்பாக, தோட்டியின் மகன் என்ற தகழி சிவசங்கரப் பிள்ளையின் நாவலை சுந்தர ராமசாமி ‘தமிழில்’ பெயர்த்து நூலாக வந்தபோதே இது குறித்து எழுதும் உத்தேசம் இருந்தது. தவறிவிட்டது. இப்போது, ஆஃப்ரோ – அமெரிக்க எழுத்தாளரான ஃப்ரெடெரிக் டக்ளஸின் Narrative of the Life of Frederick Douglass, an American Slave, Written by Himself என்ற அடிமைத் – தன் வரலாற்று நூலை சூத்ரதாரியின் ‘மொழியாக்கத்தில்’ தமிழினி பதிப்பகமும், இரா. நடராசனின் ‘மொழிபெயர்ப்பில்’ ஸ்நேகா பதிப்பகமும் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தை சாக்காக எடுத்துக் கொள்கிறேன்.
இரண்டு பதிப்புகளிலும் தரப்பட்டிருக்கும் பதிப்பு விவரங்களிலிருந்து தொடங்குவது சற்று சுவாரசியமாக இருக்கும் (முழு நீள நகைச்சுவைச் சித்திரம் என்று சொல்லலாம்.)
முதலில் தமிழினி:
நூலின் பெயர் – ஒரு அடிமையின் வரலாறு
ஆசிரியர் ஃப்ரெடெரிக் டக்ளஸ்
நூல்வகை – வரலாறு
மொழியாக்கம் – சூத்ரதாரி
முதல் பதிப்பு – டிசம்பர் 2001
ISBN – 81 – 87641 – 42 – 8
விலை – ரூ. 50.
முன் அட்டை ஓவியம், அதிலுள்ள உள்புகைப்படம், பின்னட்டைப் புகைப்படம், உரிமை குறித்த விபரங்கள் காணாமல் போன லிஸ்டில் இருப்பவை.
அடுத்து ஸ்நேகா:
ஆசிரியர் – பிரெடரிக் டக்ளஸ்
நூலின் பெயர் – அமெரிக்க கறுப்பின அடிமையின் சுயசரிதை
மொழிபெயர்ப்பாளர் – இரா. நடராசன்
உரிமை – மாலா நடராசன் (c)
முதல் பதிப்பு – டிசம்பர் 2001
பக்கங்கள் – 96
ரூபாய் – 40.00
ஸ்நேகா பதிப்பில் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள தவல்களின் விசேஷங்கள்:
Fredrick Douglass (கவனிக்க – spelling mistake)
Auto Biography
Cover – “Amistad” Film Directed by Steven Speilberg (American Photography Issue)
(எந்த வருட, மாத/வாரத்தைய இதழ்?)
காணாமல் போன ‘சில்லறை’ விபரங்களுக்குப் பிறகு வருகிறேன். நூல் வகை, பதிப்புரிமை குறித்த விபரங்கள் மொழிபெயர்ப்பு குறித்த பிரச்சினைகளோடு நேரடி தொடர்பு கொண்டிருப்பதால் முதலில் அவற்றை எடுத்துக் கொள்கிறேன்.
வரலாறு, auto – biography என்று இரு தரப்பாரும் வகைப்படுத்தியிருப்பது இருவருக்குமே பிரதி எந்த இலக்கிய வகையைச் (literary genre) சார்ந்தது என்பதுகூடத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. வரலாறு என்று தமிழினி வகைப்படுத்தியிருப்பது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. ஸ்நேகா குறிப்பிட்டிருப்பது போல டக்ளஸின் நூல் தன் வரலாற்று நூலும் அன்று.
ஆங்கிலத்தில் நூலின் தலைப்பைச் சற்றுக் கவனமாகப் பார்த்தாலே இது தெரியும்: Narrative of the Life of Frederick Douglass, an American Slave, Written by Himself. (அழுத்தம் எனது. இரு பதிப்புகளிலுமே நூலின் ஆங்கிலத் தலைப்பு குறிப்பிடப்படவில்லை. தமிழினி, நூலின் இறுதியில் References என்ற தலைப்பின்கீழ் இந்நூலை அரைகுறை விபரங்களோடு சேர்த்திருக்கிறது.)
இந்த அவரே எழுதியது என்ற உபதலைப்பின் முக்கியத்துவத்தை சற்று ஆராய்ந்திருந்தாலே நூல் என்ன வகைப்பட்டது என்பதை அறிந்திருக்கலாம். சூத்ரதாரி அந்த எட்டு பக்கக் குறிப்புகளை எழுதுவதற்குப் பதிலாக இதில் முனைந்திருக்கலாம். அல்லது, பின்னால் கொடுத்துள்ள பத்து நூல்களை ஒழுங்காகப் படித்திருந்தாலும் விஷயம் பிடிபட்டிருக்கும். ஆனால், அவர் இந்நூலைப் புனைவு எழுத்தாகக் கருதியிருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
ஒன்று, அவர் இதைத் தன் – வரலாற்று நூலாக எடுத்திருக்கலாம் (தன் வரலாறுகளில் ‘இலக்கிய நயம்’ இருக்கலாம்; ஆனால் அது தன்னளவில் இலக்கியமில்லை என்ற அளவுகோல்.) அல்லது திலீப்குமார் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல ‘அசலான ஆவணமாகக்’ கருதியிருக்கலாம். எட்டுப் பக்கங்களுக்கு அந்த வெட்டியான ‘வரலாற்றுக் குறிப்புகள்’ இந்தக் காரணங்களாலேயே வந்திருக்கின்றன என்று கருதவேண்டியிருக்கிறது.
ஃப்ரெடெரிக் டக்ளஸ் என்கிற அமெரிக்க அடிமையின் வாழ்க்கைக் கதை: அவரே எழுதியது 1845 – ல் வெளியானது (இந்த விபரம்கூட இரண்டு பதிப்புகளிலுமே காணவில்லை. தெரியவில்லை? தெரிந்துகொள்ள சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை?) டக்ளஸ், 1838, செப்டம்பர் 3 – ஆம் தேதி பால்டிமோரிலிருந்து புறப்பட்ட ஒரு ரயிலில் ஏறி மறுநாள் நியூயார்க் வந்து சேர்கிறார். அடிமைத் தளையிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்ட நாள் அது. மூன்று வருடங்கள் கழித்து அடிமை ஒழிப்பு இயக்கத்தில் முழுநேரப் பேச்சாளராக சேர்கிறார். அவருடைய கம்பீரமான தோற்றமும் பேச்சாற்றலும் சீக்கிரத்திலேயே பெரும்புகழைத் தேடித் தந்து விடுகின்றன. இவ்வளவு திறமைகள் உள்ள நபர் நிச்சயம் ஒரு அடிமையாக இருந்திருக்க முடியாது என்ற புரளி கிளம்பிவிடுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தன் வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் கொண்டுவர முடிவு செய்கிறார். இதன் பொருட்டே அவரே எழுதியது என்ற உபதலைப்பை வைக்கிறார்.
அடிமைத் தளையிலிருந்து தப்பி ஓடிவந்த ஆஃப்ரோ – அமெரிக்கர்கள் தாம் அடிமைத்தனத்தில் சிக்குண்டிருந்தபோது அனுபவித்த துன்பங்களை எழுத்தில் கொண்டு வந்தது ஒரு புதிய நிகழ்வாக இருக்கவில்லை. டக்ளசுடைய நூலுக்கு முன்பாக பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால், அவருடைய நூலே இந்த வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். டக்ளஸினுடைய நூலுக்குப் பிறகே Slave Narrative என்ற இலக்கிய வகை அமெரிக்க சமூகத்தில் மிகப் பரவலான வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது எனலாம். (1) அவருடைய நூலுக்குப் பின்வந்த அடிமைத் தன் வரலாறுகள் அனைத்திலும் அவரே எழுதியது என்ற அந்த உபதலைப்பு, எழுதியவரது அரசியல், இலக்கியத் தற்சார்பையும் தனித்துவத்தையும் சுட்டிக்காட்டும் குறிசொல்லாகியது.
ஒரு இலக்கிய வகை என்ற அளவில், ஆங்கிலப் புனித இலக்கியத் தொகுதிக்குள் அடங்கும் தன்வரலாறுகளுக்கும் அடிமைக் கதையாடல்களுக்குமான (slave narrative) உறவுகள் சிக்கலானவை. இந்த தனிச்சிறப்புமிக்க இலக்கியவகையை ஒரு எதிர் இலக்கியவகை என்று சொல்வதே சரியாக இருக்கும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எழுந்த sentimental novel மற்றும் picaresque(சாகச) எழுத்துக்களின் சில கூறுகளை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு எதிர்வினையாக உருவானவையே அடிமைக் கதையாடல்கள். சாகச் நாவல்கள் போலியான தன் வரலாறுகளாக (pseudo – autobiography) இருந்தனவென்றால் அடிமைக் கதையாடல்கள் அரைகுறையான தன் வரலாறுகளாக (quasi – autobiography) இருந்தன. இன்னும் இது போன்ற நுணுக்கமான வித்தியாசங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றையெல்லாம் டக்ளசின் புனைவை (அப்பாடா! இதைச் சொல்வதற்கு எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது!) எடுத்துக் கொண்டே நிறுவவும் முடியும்.
குறிப்புகள்:
(1) டக்ளசுக்கு முன்பாக வந்த அடிமைத் தன் வரலாற்று நூல்களுள் 1789 – ல் அவுலத் ஈக்வானா என்பாருடைய அவுலத் ஈக்வானா அல்லது கஸ்தாவஸ் வஸ்ஸா என்ற ஆப்ரிக்கனின் வாழ்க்கை பற்றிய சுவையான கதை, அவரே எழுதியது (The Interesting Narrative of the Life of Olaudah Equiano, or Gustavus Vassa, the African, Written by Himself) என்ற நூல் புகழ் பெற்றது. இதிலிருந்து ஒரு பகுதி நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 4 – ல் மொழியாக்கம் பெற்றிருக்கிறது.
(தொடரும் …)
புதிய கோடாங்கி ஜூலை 20002.
மறுமொழியொன்றை இடுங்கள்