பரமார்த்த குருவும் பரம சீடர்களும் அல்லது கள்ளத் தீர்க்கதரிசியும் பரிசுத்த ஆவிகளும் (அ, மா & Co)

அறிமுகமாக:

இக்கட்டுரையை எழுதி ஏழு வருடங்கள் முடியப் போகிறது. கணையாழி அக்டோபர் 2002 இதழில் அ. மார்க்ஸ் கடமை அறியோம் தொழில் அறியோம் என்று தலைப்பிட்டு (இதே தலைப்பில் வந்துள்ள அவரது தொகுப்பு நூல் ஒன்றில் முதல் கட்டுரையாகவும் வந்திருக்கிறது) கட்டுரையொன்று எழுதினார். அடுத்து நவம்பர் இதழிலும் சில நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளிப்பதாகச் சொல்லி சில குறிப்புகளையும் எழுதினார். இந்த இரண்டிற்கும் மறுப்பாகவே இதை எழுத நேர்ந்தது.

கட்டுரையை வாசித்த கணையாழி ஆசிரியர் ம. ராசேந்திரன், அ. மார்க்சை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை; அதனால் வெளியிட இயலவில்லை என்று நண்பர் யுகபாரதி மூலம் தகவல் தெரிவித்தார். சரியென்று கவிதாசரண் இதழுக்குக் கொடுத்தேன். அவரும் இப்போது அ. மார்க்சை விமர்சிக்க இயலாது என்று சங்கடத்துடன் வெளியிட மறுத்துவிட்டார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து, புது எழுத்து இதழின் ஆசிரியர் ஏதாவது கட்டுரையைக் கொடுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தபோது இதை அனுப்பி வைத்தேன். பதில் பேச்சே இல்லாமல் ஆள் மறைந்துவிட்டார்.

அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசுவோம் என்று வீரமுழக்கம் செய்துகொண்டிருந்தவரிடம் குவிந்திருந்த அதிகாரம் இப்படியாக இருந்தது. சலித்து கோப்பில் புதைத்து வைத்துவிட்டேன். தற்சமயம் இங்கு நடந்து கொண்டிருக்கும் யார் பொய்யன்? என்ற தர்ம யுத்தத்தில் அ. மாவின் சிஷ்ய கோடிகள் அ. மாவுக்காக வாங்கும் வக்காலத்து இதை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரவே தூசி தட்டி எடுத்து அனுப்பி வைக்கிறேன்.

அ. மார்க்சின் கட்டுரையில் கண்ட கடுமையான பிழைகள் இதை எழுதத் தூண்டியது ஒரு காரணம். மற்றொரு முக்கிய காரணத்தையும் சொல்ல வேண்டும்.

அச்சமயம் அடையாளம் பதிப்பகத்தின் சாதிக்குடன் இங்கு பேசப்பட்டிருக்கும் பால் லஃபார்க் – பாப் ப்ளாக் இருவரது கட்டுரைகளையும் மொழிபெயர்த்து நூலாக வெளியிட ஒப்பந்தமாகியிருந்தது (உழைப்பை ஒழிப்போம் என்ற தலைப்பில் வெளிவந்தும் இருக்கிறது). அது எனது முதல் நூலாக்க முயற்சி. இந்த இரண்டு கட்டுரைகளையும் அதற்கு ஓராண்டிற்கு முன்பே இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன். ப்ரிண்ட் அவுட் கூட எடுக்க முடியாதிருந்த நிலையில் பாப் ப்ளாக்கின் கட்டுரையை அப்படியே கணிணியில் பார்த்து எழுதி வைத்திருந்தேன். லஃபார்க்கின் கட்டுரையை ஒப்பந்தமான கையோடு சாதிக் ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்தார்.

அ. மார்க்சுடனான பல அனுபவங்களுக்குப் பிறகு (அவருடன் தொடர்பை முறித்துக் கொண்டிருந்த நிலையில்) மொழியாக்கம் செய்து முடிக்கும் வரையில் இது குறித்து அவரிடம் தெரிவிக்கக் கூடாது என்று சாதிக்கிடம் கேட்டுக் கொண்டும் இருந்தேன்.
ஆனால், சாதிக் அதை மீறி நேராக இரண்டு கட்டுரைகளையும் அவரிடம் கொண்டு சேர்ப்பித்தார். இரண்டையும் படித்துவிட்டு அடுத்த மாதமே அ. மார்க்சின் அறிமுகக் கட்டுரை. இது மொழியாக்கமாக வர இருப்பது பற்றியோ எவர் மூலம் அவர் கைக்கு வந்து சேர்ந்தது என்பது பற்றியோ ஒரு குறிப்பும் கிடையாது.

இதில் அடுத்த கட்ட மோசடி என்னவென்றால் நூலாக வந்தபோது இக்கட்டுரை இணையத்தில் எங்கெல்லாம் கிடைக்கும் என்பது பற்றிய தகவல்களையும் தந்திரமாக சேர்த்துவிட்டிருந்தார் (கணையாழி கட்டுரையில் அந்தக் குறிப்புகள் கிடையாது. சரிபார்க்க விரும்புவோர் பார்த்துக் கொள்ளலாம்). ஏதோ அறிவுத் தாகத்தில் தானே தேடி எடுத்து வாசித்து எழுதியது போலத் தோற்றம் தருவதற்காக.

தமிழுக்கு ஒரு புதிய சிந்தனையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் என்று பட்டப் பெயர் வாங்கும் முனைப்பு இருந்தவருக்கு அவ்விரு கட்டுரைகளின் கருத்துக்களை பிழையின்றி சொல்லும் முனைப்பு கூட இருக்கவில்லை. பிற சிந்தனைகளின் வெளிச்சத்தில் அவற்றைப் புரிந்துகொள்ளும் ஆர்வம் – தேடல் இல்லை. இன்னொரு நபர் இது தொடர்பாக வேலை செய்துகொண்டிருப்பது குறித்தோ, அது அவர் வழியாக வந்ததை acknowledge செய்ய வேண்டும் என்ற குறைந்தபட்ச நேர்மையோ கூட இல்லாது சுயமோகத்தில் அவர் கீழே இறங்கிக் கொண்டிருந்த நேரம் அது.

இன்று அந்தச் சுயமோகம் எஸ் எம் எஸ் படித்து கட்டுரை எழுதும் அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. தொலைபேசியில் நண்பர் ஒருவர் சொன்ன தகவலைக் கேட்டு ஒரு மோசமான கட்டுரை வந்ததாக அறிந்தேன் என்று குறிப்பிட்டுவிட்டு அதை வாசிக்க சிறு முயற்சியும் எடுக்காமல், புறங்கையால் அதைச் சாடிவிட்டுச் செல்லும் அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியைப் பாராட்டும் விதமாக இக்கட்டுரையின் தலைப்பை கழுதை தேய்ந்து கட்டெறும்பான காதை என்று மாற்றும் யோசனையும் வந்தது. கடைசி நேரத்தில் அந்த ஆவலை அடக்கிக் கொண்டேன். இதை எழுதிய சந்தர்ப்பத்தில் வைத்த தலைப்பு Dyslexia. சிலபகுதிகளை மேலும் தெளிவுபடுத்தியும் விரிவாக்கியும் எழுதியிருக்கிறேன்.

நன்றிகள்.

****************************************

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்: உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

பரிசுத்த வேதாகமம், மத்தேயு 7: 13, 14, 15.


   கணையாழி அக்டோபர் 2002 இதழில் கடமை அறியோம் தொழில் அறியோம், என்ற அ. மார்க்சின் கட்டுரையைத் தங்கள் உதவி ஆசிரியர் யுகபாரதியின் அறையில் வைத்தே வாசிக்க நேர்ந்தது. அன்றைக்கு முந்தைய இரவு ஏகத்தண்ணி. நல்ல மழை. காலை எழுந்ததிலிருந்தே லேசாகத் தலைவலி இருந்தது. தலையைப் பிடித்துக்கொண்டே கட்டுரையை சிரமப்பட்டு படித்து முடித்தேன். யுகபாரதியின் அறைக்கு என்னை அழைத்துச் சென்ற நண்பன் தய். கந்தசாமி, அந்தக் கட்டுரையைப் படித்ததால்தான் எனக்குத் தலைவலி என்று கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டான். நான் ஒரு பதிலும் சொல்லவில்லை.

பிற்பாடு, நவம்பர் 2002 இதழிலும் அக்கட்டுரை குறித்து எழுந்த கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் முகமாக அ. மார்க்ஸ் எழுதியிருந்த குறிப்பை வாசிக்க நேர்ந்தது. அன்றைக்கு முந்தைய இரவு மழையும் இல்லை, தண்ணியும் இல்லை. ஆனால், திடீரென்று லேசான தலைவலி பிடித்துக் கொண்டுவிட்டது. தய். கந்தசாமியின் கூற்று உண்மைதானோ என்ற சந்தேகமும் தொற்றிக்கொண்டு விட்டது.

இதுபோன்ற கஷ்டகாலங்களில் மேம்போக்காக புரட்டுவதற்காகவே வைத்திருக்கிற பரிசுத்த வேதாகமத்தை எடுத்துப் புரட்டினால் சில பக்கங்களுக்குள்ளாகவே உன் சிரசின்பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே, (மத்தேயு 5:36) என்ற வசனம்தானா அகப்படவேண்டும்! மூடிவிட்டு சிரசை தரையில் கிடத்திவிட்டேன்.

இது சாதாரண தலைவலியல்ல. அசாதாரண நபரின் பேரால் விளைந்தது. அதற்குரிய முறையில் மருந்து அவசியம் என்பதாலேயே இந்த ‘சுய வைத்தியம்’.
சாதாரண மார்க்சியர்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு அசாதாரணமான மார்க்ஸ் எழுதிய கட்டுரையையும் குறிப்பையும் வாசித்தபோது, முதலில் என் கண்களுக்கு அகப்பட்டது வழக்கம்போல பிழைகள் (அந்த ஏழரைநாட்டு சனியன் இன்னமும் என்னை விட்டுத் தொலைத்தபாடில்லை). முக்கியமான பிழைகள் சிலவற்றை, முதலில் காட்டிவிடுகிறேன்.

1) 1) அமார்க்ஸ் மேற்கோள் காட்டியிருக்கும் பைபிள் வசனங்கள் (வானத்துப் பறவைகளைப் பாருங்கள் …) மத்தேயு, அதிகாரம் 7, வசனங்கள் 27, 29 என்று குறித்திருக்கிறார். தவறு. அவை மத்தேயு, அதிகாரம் 6 – ல் 26, 28, 29 – ல் வருபவை.*1

கேள்விகள்: அசாதாரணமான மார்க்சிஸ்ட் மேற்கோள் காட்டினால், பைபிள் வசனங்கள் வரிசை மாறிவிடுமா? என்னதான் எல்லாவற்றையும் போட்டு உடைத்தாலும் இப்படியா உடைப்பது? எதை உடைத்தாலும் அசட்டையாக உடைக்கலாகுமா? அய்யா, என்னதான் அர்த்தங்கள் தமது ஆதார மூலங்களிலிருந்து அறுந்து, அந்தரத்திலே மிதந்து கொண்டிருக்கிற பின் நவீனத்துவ யுகத்திலே பிரவேசித்துவிட்டதாகப் புளகாங்கிதப் பட்டுக்கொண்டாலும் இப்படி நம்பர்களைத் தப்புத் தப்பாக சொல்வது விளங்குமா?

2) 2) நவம்பர் 2002 இதழில் எழுதியிருந்த குறிப்பில், “Abolition of Work” என்பதே ஒழுங்கவிழ்ப்புச் (anarchist) சிந்தனை என்று குறிப்பிட்டிருக்கிறார். பாப் ப்ளாக் தமது The Abolition of Work (அ. மா – வின் குறிப்பில் ‘The’ மிஸ் ஆகிவிட்டிருக்கிறது)*2 என்ற கட்டுரையின் முதல் பக்கத்திலேயே, உழைப்பைப் போற்றும் காரணத்தாலேயே எல்லா பழைய கருத்தியல்களையும் போலவே ஒழுங்கவிழ்ப்புச் சிந்தனையின் பெரும்பாலான போக்குகளும் பிற்போக்கானவை என்று தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். பழைய ஒழுங்கவிழ்ப்புச் சிந்தனைப் போக்குகளோடு அவர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவை ரொம்பவும் சீரியஸானவை என்று பல கட்டுரைகளில் குறிப்பிட்டும் இருக்கிறார். அ. மா – வின் குறிப்பில் இந்த வித்தியாசங்கள் அழிந்துபட்டிருக்கின்றன. ப்ச்செ …

3) சாதாரணமாக … சாரி, வழக்கமாக, மரபு மார்க்சியர்கள் அதாவது orthodox marxists என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். சாதாரண மார்க்சியர்கள்*3 அதாவது ordinary marxists என்ற பதத்தையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தமிழுக்கு ஒரு புது கலைச்சொல்லை வழங்கியமைக்காக அவருக்கு, அசாதாரணமான மார்க்ஸ் அவர்களுக்கு தமிழ் அறிவுலகம் கடமைப்பட்டிருக்கிறது.

4) பால் லஃபார்க்கின் பிரசுரத்தின் தலைப்பு The Right to be Lazy. இதை தமிழில் literal – ஆக எழுதினால், சோம்பேறித்தனமாக இருப்பதற்கான உரிமை என்று வரும். அப்படி எழுதுவதில் ஏதோ ஒரு நெருடல் இருப்பதால் சோம்பேறிகளாயிருப்பதற்கான உரிமை என்று எழுதலாம். சோம்பேறியாக என்று ஒருமையில் எழுதுவது (அ. மா அப்படியாக எழுதியிருக்கிறார்) மொழியாக்கத்தில் அடிப்படைத் தவறு – கச்சாவாக எழுதினாலும்கூட.
நிற்க. Attention! கொஞ்சம் சீரியஸாவோம்.

சமீபகாலமாக, அசாதாரண மார்க்ஸ் … மீண்டும் மன்னிக்க, அ. மார்க்ஸ் உதிர்த்து வரும் பெயர்களில் ஒன்று நீட்ஷே. (இது 2004 வாக்கில். தற்சமயம் அவரது சொற்பட்டியலில் இருந்து நீட்ஷே மறைந்துவிட்டார். கடவுளின் மரணத்தை அறிவித்தவனுக்கே இந்தக் கதி!) நீட்ஷே master morality, slave morality என்று குறிப்பிட்டு எழுதியவற்றை ஆண்டான் அறம், அடிமை அறம் என்றும், இதில் ஆண்டான் அறம் என்பது ஆண்டைகளின் அறம் என்றும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, கணையாழி கட்டுரையில் அவர் எழுதியிருப்பவை:
அடிமைகளுக்கான அறங்களை வகுத்தளிக்கும் பொறுப்பை ஆண்டான்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

உழைப்பு, கடமை, ஒழுங்கு, அச்சம், இச்சை மறுப்பு, திருப்தி, பொறுமை, சிக்கனம், பணிவு, அடக்கம் … முதலியன பேரற மதிப்பீடுகளாக உருவாகின்றன. இவை பொது அறங்களல்ல, அடிமை அறங்கள்.

ஆண்டான்களின் அறங்கள் இதற்கு நேரெதிரானவை.

அவை என்னவென்று அவர் விளக்காமல், ஆண்டான்கள் ஓய்வையும், கேளிக்கைகளையும் ஒதுக்குவதில்லை; அதேசமயம் அவற்றுக்கு எதிராக உபதேசம் புரியாமலும் இருந்ததில்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார் அ. மார்க்ஸ். தொடர்ந்து, இந்த உபதேசங்களின் குள்ளநரித்தனம் தெரியாமல், இதிலுள்ள வில்லங்கங்கள் புரியாமல் அடிமைகளும் இந்த அறங்களை தமக்கானவையாக ஏற்றுக் கொண்டது அல்லது ஏற்றுக்கொள்ள வைத்தது என்பதுதான் ஆண்டைகளின் வெற்றி, என்று ஒரு சபாஷும் போட்டு விடுகிறார்.

ஆக, மேற்சொன்ன மதிப்பீடுகள் (உழைப்பு, கடமை, இத்யாதி) ஆண்டைகளால் உருவாக்கப்பட்டு, அடிமைகள் மீது திணிக்கப்பட்டுள்ளதால், இனி அடிமைகள் அவற்றைத் தூக்கி எறிந்துவிடவேண்டும். Problem solved! புரட்சி ஓங்குக!

அ. மார்க்ஸ் நீட்ஷேவின் செறிவை மட்டுமல்ல, பிரச்சினைகளின் சிக்கலான தன்மையையும் ஒரு இம்மியளவுகூட புரிந்துகொள்ளவில்லை என்பதற்கு மேற்காட்டிய அவரது புரிதல்கள் சான்று.

முதலாவதாக, ஆண்டான் அறம் என்று நீட்ஷே சொல்வது வீரம், நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, வெளிப்படைத் தன்மை, கொடை, நட்பு, தற்பெருமை பேசாமை (தன்னடக்கம் வேறு) போன்ற பண்புகள். இவை ஆண்டான் அறத்தில் நல்லவை – உயர்ந்த பண்புகள்.

வீண்பெருமை பேசுவது, இச்சகம் பேசுவது, பயன் கருதி மட்டுமே எந்தச் செயலிலும் இறங்குவது, பொய் பேசுவது, அலைபாயும் (திருட்டுப்) பார்வை, கோழைத்தனம் போன்ற பண்புகள் ஆண்டான் அறத்தில் அடிமைகளுடைய பண்புகள் – இவை இழிவானவை.
ஆண்டான் அறத்தில் நல்லவை X கெட்டவை அல்லது உயர்ந்தவை X இழிவானவை, good X bad என்ற கருத்தாக்கமே உண்டு. தீமை – evil என்ற கருத்தாக்கம் கிடையாது.

ஆண்டான் அறத்தில் ஆண்டான்கள் முதலில் நல்லதை – உயர்வானதை வரையறுக்கின்றனர். தாம் மேலோர், உயர்குடியில் பிறந்தோர் என்பதாலேயே தமது செயல்களும் பண்புகளும் மேலானவை என்பது அவர்கள் நோக்கு. அதாவது, தமது செயல்கள் நல்லவை என்பதால் தாம் நல்லவர் என்று அவர்கள் கருதுவதில்லை. வேறுவகையில் சொல்வதென்றால், ஆண்டான் அறம் உள்முகமாக நோக்குவதிலிருந்து தொடங்குகிறது. அதன் பிறகே வெளியே நோக்குகிறது – கீழோர் என்போரை வரையறுக்கிறது.

ஆண்டான் அறத்தைப் பொருத்தவரையில், கீழோர் என்போர் இழிசனர், நலிந்தோர், உயர்குடியில் பிறக்கும் பேறுபெறாத நற்பேறற்றோர். பொய் பேசுபவர்கள் என்பதால் பொருட்படுத்தக்கூட தகுதியற்றவர்கள்; வெறுக்கத்தக்கவர்கள். அவர்களை ஒடுக்குவதில் பெரிய இன்பங்கள் இல்லை. இரக்கம் (இது அடிமைகளின் பண்பு) காட்டுவதும் இல்லை. மாறாக, பரிவு மட்டுமே கொள்கிறது. தன்னிடம் குவிந்துள்ள அபரிதமான ஆற்றலைப் பகிர்ந்து கொள்கிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டால், master morality என்பதை ஆண்டான் அறம் என்பதைவிட மேலோர் அறம் என்று விளக்குவதே சரியாக இருக்கும். ஆண்டான்கள் = ஆண்டைகள், அதனால் ஆண்டான் அறம் என்பது ஆண்டைகள் அறம் என்று விளக்குவது அடிப்படையிலேயே மிகவும் மோசமான பிழை (சொற்குற்றமல்ல பொருட்குற்றம்).

நீட்ஷே குறிப்பிடும் ஆண்டான்கள் ஆண்டைகள் அல்லர். ஆண்டைகள், தமிழ்ச் சமூகச் சூழலில், ஆதிக்க சாதி நிலவுடைமையாளர்களைக் குறிக்கும். நீட்ஷேவின் ஆண்டான்கள் பண்டைய கிரேக்கச் சூழலில், (எதீனிய ஜனநாயக நகரக் குடியரசுகளுக்கும் முற்பட்ட காலத்திய) ஆதிக்கத்தில் இருந்த பிரிவினரைக் குறிப்பது. அதற்கும், பிற்காலத்திய ஐரோப்பிய நிலவுடைமைச் சமூகத்தில் உருவான நிலச்சுவாந்தார்களுக்கும்கூட சம்பந்தம் இல்லை. (சாதாரண மார்க்சியர்களுக்கும் இந்த விஷயம் பாலபாடம். நமது அசாதாரண மார்க்சிற்கு இது பிடிபடாமல் போனது ஏன்?) நீட்ஷேவின் பார்வையில், பண்டைய கிரேக்கப் பண்பாட்டின் வீழ்ச்சிக்குப் பிறகு, இத்தகைய மேலோர் அறம் வீழ்ந்து அடிமை அறம் தலைதூக்கியது. (இந்நோக்கை ஹெகலின் dialectics of master and slave குறித்த கருத்தமைவோடு ஒப்பிட்டு நோக்கியும், அந்நோக்கிலிருந்து ஹெகல் மேற்கத்திய வரலாற்று வளர்ச்சியை விளக்கிச் செல்வதையும் விளங்கிக்கொள்வது மேலும் செறிவான புரிதல்களுக்கு உதவும்).

அடிமை அறமோ தீமையை வரையறுப்பதிலிருந்து தொடங்குகிறது. அதாவது, தன்னிலிருந்து தொடங்காமல், தனது பார்வையை வெளியே இருப்பதன்மீது செலுத்தி, தீயதை முதலில் வரையறுக்கிறது. ஆற்றல் உள்ளது அத்தனையும், வலுவானது அத்தனையும், இதன் தொடர்ச்சியாக அதிகாரம் அத்தனையும் அதற்குத் தீமையானது. 

அடக்கி ஒடுக்கப்பட்டு ஒடுங்கிய வாழ்நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு குழு, தனது உயிர் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தனது பாதுகாப்பிற்காக, அண்டை வீட்டுக்காரனை நேசிப்பது, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டுவது, அன்பு, பொறுமை, கடும் உழைப்பு, தன்னடக்கம், ரகசியம் காப்பது போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்கிறது. விடுதலைக்காக ஏங்குகிறது. இவ்வுலக வாழ்க்கையில் அது கைக்கெட்டாத தொலைவில் இருப்பதால், மறுமையில் சொர்க்கத்தைத் தேடுகிறது. கொள்கையை – கோட்பாட்டை உருவாக்குகிறது. தனது இயலாமையை உள்முகமாக செலுத்திச் செலுத்தி வன்மத்தை (resentment) வளர்த்துக் கொள்கிறது. குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுகிறது. நீதியைத் தேடுகிறது. பழிவாங்கத் துடிக்கிறது. (அடிமை அறத்தில் நீதி என்பது பழிவாங்குதல் – justice as revenge; மேலோர் அறத்தில் நீதி என்பது நியாயமாக நடந்துகொள்ளல் – justice as fairness). தண்டனையைக் கண்டுபிடிக்கிறது. வன்மம் இதன் அடிப்படையான பண்பு.

அதன் பிறகு நல்லவர்களைத் தேடுகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அடிமை அறத்தில் நல்லவர்கள் என்போர் எளிதில் ஏமாறக் கூடியவர்கள் – அசடுகள். எங்கெல்லாம் அடிமை அறவியல் தலைதூக்குகிறதோ, அங்கெல்லாம், அந்த மொழிகளிலெல்லாம், பண்பாடுகளி எல்லாம், நல்லவர்கள் என்பதற்கு ஏமாளிகள் என்ற பொருளும் சேர்ந்து கொண்டுவிடுகிறது. அடிமை அறத்திலேயே முதன்முதலாக நன்மை X தீமை good X evil என்ற கருத்தாக்கம் உருவாகிறது. 

அ. மார்க்ஸ் எழுதுவதுபோல, அடிமைகளின் அறத்தை ஆண்டான்கள் உருவாக்கித் தருவதில்லை. அப்படி உருவாக்கவும் இயலாது. அடிமைகளே ஆண்டான்களின் அறத்தைத் தழுவிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் நீட்ஷே முழங்கவுமில்லை. அடிமை அறம் அவர்களிடத்திருந்தே எழுவது. அடிமை அறத்தை ஆண்டான்கள் உருவாக்கித் தந்தார்கள் என்று சொல்வது, அப்போது அடிமைகள் வெண்ணெய் வெட்டிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வதற்கு ஒப்பானது. இதில் அடிமைகளின் historical agency காலியாகிவிடுகிறது.

தமிழில் விளிம்புநிலை ஆய்வுகளை அறிமுகம் செய்வதில் முன்நின்றவர்களில் ஒருவரான அ. மார்க்ஸ் இவ்விடத்தில் அதைக் கோட்டைவிடுவது இங்கு கவனத்திற்குரியது. அவரது வாசிப்பில் எந்தத் தொடர்ச்சியும், ஒவ்வொரு வாசிப்பிலும் தமது முந்தைய வாசிப்புகளை பரிசீலனை செய்துகொள்ளும் வழக்கமோ, தமது சுயத்தையோ வாழ்வையோ கேள்விக்குட்படுத்திக் கொள்ளும் மனநிலையோ அவரிடத்தில் இல்லை என்பதற்கான சான்றும். அதற்கு மீண்டும் இறுதியில் வருவோம். நீட்ஷேவின் கருத்தமைவுகளுக்குத் திரும்புவோம். 

மூன்றாவதாக ஒரு அறத்தையும் விளக்குவார் நீட்ஷே – அது மதகுருமார் அறம் (priest morality). மேலோர் – போர்க்குணம் வாய்ந்த உயர்குடி மரபினரில் இருந்து பிரிந்த மதகுருமார், அவர்களுடன் முரண்பட்டு, எதிராகத் திரும்பி, ஒரு அறத்தை உருவாக்குகின்றனர். ஒரு கட்டத்தில் மெல்லச் சரிந்து வீழ்ந்துபட்ட மேலோர் அறத்திற்கு மாற்றாக (மேலோர் அறவியலின் பண்புகளைக் கணக்கில் கொண்டால் அவர்கள் வீழ்ந்தே ஆகவேண்டும்; வரலாறு நெடுக இதுவே நிகழ்ந்திருக்கிறது) அடிமைகளை அரவணைத்துக் கொண்டு, அவர்களது அறங்கள், பண்புகள் மேலோங்கிய ஒரு அறவியலை, சாராம்சத்தில் அடிமை அறவியலை ஆதிக்கத்தில் வைக்கின்றனர். (நீட்ஷே உதாரணமாகக் காட்டுவது பண்டைய யூதப் பண்பாட்டை. பண்டைய கிரேக்கப் பண்பாடு அங்ஙனம் சிதைவுக்குள்ளானதையும், ரோமப் பண்பாடு கிறித்தவ அடிமை அறவியலால் வீழ்த்தப்பட்டதையும் வரலாற்று ரீதியாக விளங்கிக் கொள்ள ஹெகலின் முன்குறிப்பிட்ட நோக்கு உதவியாக இருக்கும்).*4

பண்டைய கிரேக்க நாகரீகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து எழுந்த கிறித்தவத்தின் எழுச்சியும் பரவலும், உலகெங்கும் அடிமை அறவியல் மேலோங்குவதற்கு வழிவகுத்துவிட்டது என்றும், மேலோர் அறவியல் ஆங்காங்கே சில பண்பாடுகளில் துளிர்விட்டதையும், இன்றைய உலகில், மேலோர் அறம் – அடிமை அறம் இரண்டும் கலந்த நிலைகளிலேயே தனிமனிதர்களும் குழுமப் பண்பாடுகளும் உருவாக முடியும் என்றும் நீட்ஷே தரும் விளக்கங்கள் செறிவானவை. இங்கு, நமது அசாதாரணமான மார்க்ஸ் இந்தச் சிக்கல்கள் செறிவுகள் குறித்த எந்த அக்கறையும் இன்றி நீட்ஷேவின் சிந்தனைகளை எந்த அளவுக்கு மலினப்படுத்தியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவும் அளவில், அக்கருத்தமைவுகளை சாத்தியமான எல்லைக்குட்பட்டு, செறிவு குறைந்துவிடாமல், எளிமையாக விளக்க முயற்சித்திருக்கிறேன். 

அங்ஙனமின்றி அசாதாரணமான மார்க்ஸ் செய்திருப்பது போன்று ஒரு குத்துமதிப்பாக குத்திவிட்டுச் சென்று விடுவதில் என்ன பெரியகுடிமுழுகிவிடப் போகிறது என்ற கேள்வியும் இருக்கிறது. 

அடிமை அறவியல் குறித்த தெளிவான புரிதலின்றி அந்நோக்கிலிருந்து தலித் அரசியல் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினரின் விடுதலைக்கான கருத்தமைவுகளையும் அரசியல் வழிமுறைகளையும் நடைமுறைகளையும் வளர்த்தெடுக்க முனைந்தோமானால், அந்நோக்கு வன்மம், நீதியைப் பழிவாங்கலாக வரித்துக் கொள்ளல் என்ற திசையில் பயணிக்க வேண்டியிருக்கும். இதுவரையிலான விடுதலை அரசியல் முயற்சிகளின் நகர்வுகள் அங்ஙனமே நிகழ்ந்திருக்கின்றன. மார்க்சியம் உட்பட.

அடிமை அறவியல் நோக்கில் விடுதலை அரசியல் முயற்சிகள் சிக்கியிருப்பது ஒரு விஷச் சுழல் போன்றது. ஒடுக்கப்பட்ட மக்கட் பிரிவினர், நீதி மறுக்கப்பட்டோர், ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடுவதும், அதிகாரத்தைக் கைப்பற்றியதும் நீதியைப் பழிவாங்கலாகக் கைக்கொள்வது மற்ற பிரிவினரை ஒடுக்கத் தொடங்குவது என்பதாக இந்த விஷச் சுழல் தொடர்ந்து கொண்டிருக்கும். கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளின் வரலாற்று நிகழ்வுகளை ஆழக் கற்றோர் இதை விளங்கிக் கொள்ள முடியும். இதன் பொருட்டே அடிமை அறவியல், அதன் வெளிப்பாடுகள் குறித்த கூர்ந்த புரிதல்கள், இந்த விஷச் சுழலில் இருந்து விடுவித்துக் கொள்ளவும், தற்காலச் சூழல் குறித்த தெளிவுகளுடன் புதிய நோக்குகளில் முன்னகரவும் மிகுந்த அவசியம். 

ஆனால், எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்தடுத்து நகர்ந்துவிடும் அசாதாரணர்களுக்கு இவை எல்லாம் ‘பிசாத்து’ என்ற அளவில்தானே இருக்க முடியும்! சரி சற்று இலகுவாவோம். Stand – at – ease! 

அசாதாரணரின் கட்டுரையிலும் அதற்கு அவரே கொடுத்துக் கொண்ட விளக்கக் குறிப்பிலும் தென்பட்ட பிற வேடிக்கைகள். 

இரும்புப் பொறிகளின் இடத்தில் சிலிக்கான் சில்லுகள் என்று சர்வசாதாரணமாக சொல்லிச் சென்றுவிடுகிறார். மன்னிக்க. கார்பனை அடிப்படையாகக் கொண்ட ஆற்றல் – உற்பத்தி – அதிகாரம் இவற்றிற்கு மாற்றாக/இணையாக உருவெடுத்திருப்பவையே சிலிக்கான் சில்லுகள். 

வேலையை ஒழிப்பது என்பதன் பொருள், வேலையின் கட்டாயத் தன்மையிலிருந்து விடுபடுவது. Creation – Re – creation ஆக்குவது, என்கிறார் சாதாரணமாக.
பிரச்சினையின் மையமே உழைப்பு நடவடிக்கை ஒரு creative act – ஆக இருக்கவில்லை என்பதே. பண்டைய கிரேக்கத்திலேயே புரிந்துகொள்ளப்பட்ட பிரச்சினை இது. கிரேக்கத் தத்துவவாதிகள் doing, making என்று இரு வேறு விதமான நடவடிக்கைகள் குறித்துப் பேசுவார்கள். Making என்பது ஒரு விளைபொருளை இலக்காகக் கொண்டு ஒரு செயலை ஆற்றுவது. உழைப்பு அத்தகையது என்பதாலேயே கிரேக்கர்கள் அதை வெறுக்கவும் செய்தார்கள். 

Doing என்பது ஒரு செயலைச் செய்வதில் கிட்டும் இன்பத்திற்காகவே செய்வது. ஒரு புல்லாங்குழலை வாசிக்கும்போது கிட்டும் இன்பத்திற்காகவே அது நிகழ்த்தப்படுகிறது. வாசித்து முடித்ததும் கிட்டும் ஏதோ ஒரு பொருளுக்காக அல்ல (வாசித்து முடித்ததும் ஏதும் இருப்பதில்லை). கிரேக்கத் தத்துவவாதிகளின் நோக்கில் அரசியல் நடவடிக்கை என்பதே அத்தகையதே.*5 

பால் லஃபார்க் பாப் ப்ளாக் இருவரது கருத்தமைவுகளை நீட்ஷே -கிரேக்கத் தத்துவவாதிகளின் சிந்தனைகளின் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்ள முயற்சிப்பது உழைப்பை – அரசியலை, ஒரு கலை நடவடிக்கை போன்று – ஒரு புல்லாங்குழலை வாசிப்பதைக் போன்ற இனிய அனுபவமாக மாற்றுவதற்கான வழிகளை கற்பனை செய்யவும் அதற்குரிய நடைமுறைத் திசைகளைக் காட்டவும் உதவியாக இருக்கும். ஆனால், அசாதாரண மார்க்சிற்கு இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள எங்கே நேரம் இருக்கிறது. அவருக்கு அரசியல் என்பது வேலைக்குப் போவது போல – மாடு மாதிரி உழைப்பது போல. (அனைத்தும் தழுவிய கறாரான ஒரு தத்துவ அமைப்பு தனது என்று ஹெகல் சொல்லிக் கொண்டதையும், அதற்காக அவர் மாடு போல உழைத்ததையும் வைத்து நீட்ஷே அவரை “philosophical laborer” என்று கேலி செய்வான்). 

பாப் ப்ளாக் இத்தனை செறிவுகளோடு உழைப்பை ஒழிப்போம் என்ற கருதுகோளை முன்மொழியவில்லை என்ற போதிலும், உழைப்பை விளையாட்டாக மாற்ற வேண்டும், வாழ்வையே கலைமயமாக்க வேண்டும் என்றெல்லாம் முன்மொழியும்போது இந்த அர்த்தங்களுக்கு நெருங்கியே வருகிறார். அதேபோன்று, விளையாட்டு குறித்த அவருடைய விளக்கங்களிலும் சில பிரச்சினைகள் உண்டு. ஆனால், நமது அசாதாரணருக்கு இவை குறித்தெல்லாம் எந்தக் கேள்விகளும் இல்லை. பாப் ப்ளாக்கின் ஒரு கட்டுரையைப் படித்தோமா, தமிழில் ஒரு அறிமுகக் கட்டுரை எழுதினோமா அடுத்த வேலையைப் பார்க்கப் போவோமா என்பதே அவரது மும்முரம். உழைப்பை ஒழிப்பது குறித்து தமிழில் முதன் முதல் எழுதிய அசாதாரணர் (முதல் முதல் தமிழவன் அன்று அவரே ஒரு சந்தர்ப்பத்தில் கேலி செய்தது நினைவுக்கு வருகிறது) என்று வரலாறு நாளை நினைவு கூறுமல்லவா! 

லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர் என்ற நூலில் காரல் மார்க்ஸ் எழுதிய புகழ்பெற்ற குறிப்பு நினைவுக்கு வருகிறது: Hegel remarks somewhere that all great world – historic facts and personages appear, so to speak, twice. He forgot to add: the first time as tragedy, the second time as farce. வரலாற்றில் தன் பெயரைப் பொன் எழுத்துக்களால் பொறிக்கும் பித்துப் பிடித்துவிட்ட நமது அசாதாரணருக்கு இது இச்சந்தர்ப்பத்தில் சாலப் பொருந்தும். ஆனால், அதற்கும் அவர் புளகாங்கிதம் அடைவார். என்ன இருந்தாலும் என்னை காரல் மார்க்சோடு ஒப்பிட்டுதானே பேசுகிறார்கள் என்று! 

இதுபோல, கருத்துக்களின் செறிவை, உயிர்ச் சக்தியை உறிஞ்சிவிட்டு, மேலோட்டமாக நமது அசாதாரண மார்க்ஸ் எழுதிக் குவித்திருப்பதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். அவரது எழுத்துக்கள் பெரும்பாலானவற்றில் இத்தன்மை இருப்பதைக் காட்ட முடியும். காரணங்கள் என்னவாக இருக்கலாம்? 

இதயத்திலிருந்து, உயிரிலிருந்து, இரத்தத்திலிருந்து அவரது எழுத்துக்கள் வருவதில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் வாசித்ததை மேலோட்டமாக அப்படியே தொகுத்து வைத்துவிட்டு, மீண்டும் வேறொரு சந்தர்ப்பத்தில் வாசித்ததை வேறொரு இடத்தில் தொகுத்து வைத்துச் சென்றுவிடும் நடைமுறையையே அவரது எழுத்துக்கள் காட்டுகின்றன. தமது சொந்த உடலை, உயிரை, ஆற்றலைப் பற்றிய கேள்விகளில் இருந்து – அவற்றுக்கும் புறத்தே நிலவும் பிரச்சினைகளுக்கும் இடையிலான உறவு என்ன என்ற கேள்வியில் இருந்து பிரச்சினைப்பாடுகளின் மீது கவனத்தைக் குவித்து எழும் வாசிப்பு, தேடல், முந்தைய வாசிப்புகளை எப்போதும் கேள்விக்குட்படுத்தும் … மீண்டும் வாசிக்கத் தூண்டும். 

ஆனால், நமது அசாதாரணமான மார்க்சிடம் வெளிப்படுவது? பிரச்சினைகளின் மீது அக்கறை கொண்டிருப்பது போன்ற பாவனை தொனித்தாலும் அவை அத்தகையவையன்று என்பதற்கு இதுவரை தந்த விளக்கங்கள் போதுமானவைதாமா? 

ஏதோ, என்னவோ! இதற்கெல்லாம் சம்பந்தமில்லாத ஒரு குறிப்பைச் சேர்த்துவிட்டு இதை முடித்துக் கொள்ளத் தோன்றுகிறது. 

அச்சு எந்திரம் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டு, புத்தகங்கள் பரவலான புழக்கத்திற்கு வருவதற்கு முன்பாக, வாசிக்கும் பழக்கம் மிகவும் அரிதானதாகவே இருந்தது என்பதைப் பலரும் அறிந்திருக்கக்கூடும். அக்காலங்களில் வாசிப்பு என்பதே வாய் விட்டு உரக்க வாசிப்பதாக இருந்ததையும் பலரும் ஊகித்திருக்கலாம். அக்காலங்களில், உதடுகள் அசையாமல், தனிமையில், மௌன வாசிப்பு செய்வது என்பதே மிகவும் அரிதான, விதிவிலக்கான செயல்பாடாக இருந்திருக்கிறது. *6 

மௌன வாசிப்பு என்பதே கடந்த இருநூறு முந்நூறு ஆண்டுகளில் தோன்றி வளர்ந்த ஒரு வழக்கம். மரபணு ஆராய்ச்சியாளர்களில் ஒரு தரப்பினர், இப்பண்பாட்டு பரவலின் விளைவாக நமது மரபணுக்கூறில் ஒரு சிறு மாறுதல் நிகழ்ந்திருக்கிறது என்றுகூட முன்மொழிந்திருக்கிறார்கள். அக்கூற்று எந்த அளவிற்கு சரியானது என்பது உறுதி செய்யப்படவில்லை. என்றாலும், dyslexia – அதாவது, வாசிப்பது, எழுதுவது, பேசுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு மரபணுக்கூறில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பது மட்டும் உறுதியான ஒரு ஆய்வு முடிவு. 

ஆக, வாசிக்கும் பழக்கம் என்பதே மனிதகுலம் அடைந்திருக்கும் ஆக்கப்பூர்வமான உச்சத்தைக் காட்டும் ஒரு செயல்பாடு. அதை, அதன் சாத்தியமான அதிகபட்ச வீச்சில் பிரயோகிப்பது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதாகவே எடுத்துக் கொண்டாலும், ‘அறிவு ஜீவிகளாக’ தம்மை முன்னிறுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டுபவர்களுக்காவது அது அவசியமான கடமை அல்லவா?
நன்றி: கீற்று
குறிப்புகள்: 

*1 மத்தேயு, அதிகாரம் 7, வசனங்கள் 27, 29 என்று கணையாழி இதழில் வந்தது அச்சுப் பிழை என்று குறிப்பிட்டிருந்தார் அ. மார்க்ஸ். அதை அப்படியாகவே எடுத்துக் கொள்ள விரும்பினாலும், நூலாக வந்தபின்னும் பிழை தொடர்ந்திருப்பதை என்னவாகப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. 

தமது நூலில் அ. மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கும் வசனங்கள் பின்வருமாறு:

வானத்துப் பறவைகளைப் பாருங்கள்
அவை விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை,
களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை …
காட்டு மலர்ச் செடிகள் எப்படி
வளர்கின்றன எனக் கவனியுங்கள்.
அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.
ஆனால் சாலமோன் தனது
மேன்மையான நாட்களில்கூட அவற்றைப்
போல (உடை)
அணிந்திருந்த்தில்லை
என்பன ஏசுவின் சொற்கள் (மத். 6 – 26 -29). 

இது அ. மார்க்சின் நூலில் பக்கங்கள் 11 -12 – இருப்பது. பைபிளின் புதிய பதிப்பிலிருந்து மேற்கோள்காட்டியிருக்கிறார் என்று தெரிகிறது. 

என்னிடம் இருப்பது பழம் பதிப்பு. பழைய பதிப்போ புதியதோ பைபிள் வசனங்கள் வரிசை மாற முடியாது. ஆகையால், பழைய பதிப்பில் இருந்து அதே பகுதி (மத்தேயு 6: 26, 27, 28, 29): 

ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (26)

கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? (27) 

உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; (28)

என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்த்தில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். (29) 

அ. மார்க்ஸ் எடுத்தாண்டிருப்பதில் 27 – ஆவது வசனம் இல்லை. ஆனால், 26 – 29 வசனங்கள் என்று குறிப்பிட மட்டும் செய்வார். யார் இதையெல்லாம் புரட்டிப் பார்த்து வாசிக்கப் போகிறார்கள் என்ற அசட்டைத்தனம். சிஷ்யப்பிள்ளைகளுக்கு இப்படி உளறுவது அசாதாரண பைபிள் ஆகிவிடும். நாலு இடத்தில் இதை மேற்கோள் காட்டி வாயடிக்க அது போதுமே. 

*2 நூலிலும் ‘The’ மிஸ்ஸிங். மீண்டும் அச்சுப் பிழைதானோ? அல்லது கட்டுரையை அந்த லட்சணத்தில் படித்திருப்பாரோ? இவர்தான் ஒரு தகவல் பிழையை வைத்துக் கொண்டு (அதுவும் நான் அதை ஒப்புக்கொண்ட பின்னும், மேற்கொண்டு சரியான தகவலைப் பெற்றுக் கொடுத்த பின்னும்) அக்கட்டுரையை வாசிக்காமலேயே மோசமான கட்டுரை என்று சொல்பவர்! 

*3 சனாதன மார்க்சியர்கள் என்று தான் எழுதியது இப்படி அச்சுப் பிழையாகிவிட்டது என்று நேரில் சந்திக்க நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில் அ. மார்க்ஸ் குறிப்பிட்டார். என்றாலும், வார்த்தையின் சுவை கருதி தொடர்ந்திருக்கிறேன். 

*4 இந்தியச் சூழலுக்கும் இது பொருந்தி வருவதை உணரலாம். டாக்டர். அம்பேத்கர் தமது “Who were the Shudras?” (இங்கு வாசிக்கலாம்) என்ற நூலில் பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கும் நிகழ்ந்த போராட்டத்தில், பார்ப்பனர்களால் வெற்றி கொள்ளப்பட்ட ஒரு பிரிவு சத்திரியர்களே சூத்திரர்களாக்கப்பட்டனர் என்று விவரித்துச் செல்வார். வலுவான வரலாற்று ஆதாரங்களுடன் இக்கருத்தை இதுவரையிலும் நிரூபிக்க இயலவில்லையெனினும், மிகுந்த ஏற்புடைய கருத்தாக்கமே. கட்டுரைக்கு பொருத்தமுள்ள புள்ளியாக வடஇந்தியச் சூழலில் நீட்ஷே குறிப்பிடும் மதகுருமார் X போர்க்குணம் மிக்க உயர்குடியினர் இருதரப்புக்கிடையில் நிகழ்ந்த மோதலின் உதாரணமாக இதைக் காணலாம். தமிழகச் சூழலில் சங்ககாலப் பண்பாட்டில் – குறிப்பாக, கடையெழு வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் மேலோர் அறத்தின் வெளிப்பாடுகளை உணர்த்துவதாகக் கொள்ளமுடியும். 

*5 சற்றே விரிவான விளக்கங்களுக்கு வாசிக்க தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் 

*6 இது தொடர்பாக வாசிக்க வேண்டிய அருமையான நூல், Alberto Manguel என்பார் எழுதிய A History of Reading. British Council Library மற்றும் MIDS நூலகம் இரண்டிலும் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பாக வாசித்தது. நூலாசிரியர் கண்பார்வை இழந்திருந்த போர்ஹே – வுக்கு தமது இளவயதில் புத்தகங்களை வாசித்துக் காட்டியவர் என்பது இதில் மற்றொரு சுவாரசியம்.

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: