ஆசிரியர்: ஜேம்ஸ் ஆலன் மெக்ஃபெர்சன் (1943 – ). 1960 களின் முக்கிய சிறுகதை எழுத்தாளராக வெளிப்பட்டவர். ஜார்ஜியாவில் சவானா பகுதியில் பிறந்த மெக்ஃபெர்சன் ஒரு சட்டப் பட்டதாரி. படித்துக் கொண்டிருக்கும்போதே பரிசுகளை வென்ற பல சிறுகதைகளை எழுதினார். பல்வேறு அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஆக்க இலக்கியப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார்.
தனி மனிதர்களுக்கிடையிலான கடக்க முடியாத வேறுபாடுகளை மையமாகக் கொண்ட அற்புதமான சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். அவரது பல கதைகள் ரயில்களைச் சுற்றியுள்ள பண்பாட்டு வாழ்வை விவரிப்பவை. புலிட்சர் பரிசு உட்பட பல பரிசுகளை வென்றவர்.
Elbow Room என்ற இச்சிறுகதையும் “நிறப்பிரிகை” கருப்பர் இலக்கியச் சிறப்பிதழுக்காக (மே 1998) மொழியாக்கம் செய்தது. ஆங்கிலப் பிரதி தற்போது கைவசம் இல்லை. எந்தத் தொகுப்பில் இருந்து எடுத்தது என்பது நினைவில் இல்லை. “நிறப்பிரிகை”யிலும் இத்தகவல் தவறிவிட்டிருக்கிறது. மன்னிக்க வேண்டுகிறேன்.
சற்றே நெடிய சிறுகதை என்பதால் 5 பகுதிகளாகப் பிரித்து இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றிகள்.
– வளர்மதி.
———————————-
இந்தக் கதை சொல்லி கட்டுக்களில்லாமல் திரிபவன். பிறழ்வு நிலையை தொட்டுக்கொண்டு வடிவம் என்பதையே சட்டை செய்யாத ஒரு மனநிலையைக் காட்டுகிறான். விடாமல் கேட்டதில் மரபுவழிப்பட்ட கதைசொல்லல் உத்திகளுக்கு தான் வெளிப்படையான எதிரி என்று அறிவித்துக்கொள்கிறான். என்ன காரணம் என்று அழுத்திக்கேட்டதில் “எல்லைகள்”, “கட்டமைப்புகள்”, “சட்டகங்கள்”, “ஒழுங்கு”, ஏன் “வடிவம்” என்று எல்லாவற்றையுமே தான் சந்தேகிப்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்ல ஆரம்பித்துவிட்டான். ஒழுங்கீனத்தை ஒரு ஒழுக்கமாகவே வலியுறுத்துகிறான். மரபு வழிப்பட்ட கதைசொல்லல் முறைகளில் வருகிற புதிரான புராதன ஒழுக்கங்கள், ஒருமுகத்தன்மைகள் மீது ஏறக்குறைய ஒரு காட்டுத்தனமான வெறுப்பை தம்பட்டமடித்துக் கொள்கிறான். அவன் தேர்வு செய்துகொண்டிருக்கிற இந்தத் துறையில் அவனுடைய இந்தக் குறை இங்கு எடுப்பாகவே படிந்திருக்கிறது. தணிக்கை செய்கிற எந்த எண்ணமும் இல்லாமல் இந்தக் கதையைக் காப்பாற்றும் நோக்கில் குறைந்தபட்சம் ஒரு ஒழுங்கு இருப்பது போன்ற தோற்றத்தையாவது தரும் பொருட்டு சில இடங்களில் சில விளக்கங்களைத் தரும் நிர்ப்பந்தம் தொகுப்பாளருக்கு நேர்ந்துவிட்டது. ஒரு தொழில்நுட்ப ரீதியிலான ஒழுக்கத்தைப் பேணும் முயற்சி இது. கட்டுக்குள் வராமல் மீறுகிற பிரதிக்கும் இறுதிப் படியை உருவாக்குவதில் இறுதி முக்கியத்துவம் வாய்ந்த – அந்த, எல்லாவற்றையும் கூர்ந்து நோக்குகிற பார்வைக்கும் இடையில் இருக்கவேண்டிய அவசியமான பொருத்தத்தை, ஒரு ஒழுக்கத்தின் ஒழுக்கத்தைப் பற்றியே தொகுப்பாளர் இங்கு குறிப்பிடுகிறார்.
அவன் சொன்னதின் சாரம் இதுதான்:
கான்சாஸின் அந்தச் சிறிய டவுன்களை விட்டு அந்தக் காலத்தில் பெயர்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களில் பால் ஃப்ராஸ்டும் ஒருவன். திரும்பிப் போகாத மிகச் சிலரில் அவனும் ஒருவன். அவன் வெளியேறிய காலத்தில் போருக்குச் செல்லாமல் தப்பித்துக்கொள்வது எளிதான காரியமாகவே இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அதில் சிரமம் கூடிக்கொண்டே போனது. சிகாகோவில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தான் பயணிக்க வேண்டிய பாதை எதுவென்று பால் தீர்மானித்துவிட்டிருந்தான். வருவது எதுவானாலும் எதிர்கொள்ளத் தயாராகவும் இருந்தான். ஒரு சிறிய விடுமுறையில் வீட்டிற்கு வந்தவன் குடும்பத்தவர்களையும் போருக்கு ஆட்களைத் தேர்வு செய்த கமிட்டியையும் எதிர்கொண்டான். அவனைக் குழந்தையாக இருந்தது முதல் பார்த்தவர்கள் அவர்கள். அவனுடைய மறுப்பு அவர்களைக் கடுங்கோபம் கொள்ள வைத்தது. அவர்களுடைய கோபத்தைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தவன் உள்ளுக்குள் அழுதான். சிகாகோவிற்குத் திரும்பி ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் மாற்றுச் சேவை செய்தான். ஆஸ்பத்திரியில் ஒரு குவேக்கர் வட்டத்தின் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தான். வரலாறு, இலக்கியம், ஒழுக்கவியல், தத்துவம் இவற்றில் ஆழமாக படிக்க ஆரம்பித்தான். வெகு சீக்கிரத்திலேயே அங்கு அடைக்கப்பட்டிருந்தவர்களில் நிறைய பேர் உண்மையில் பைத்தியங்கள் இல்லை என்பதைக் கண்டு கொண்டான். இதனால் அவன் கொண்ட அச்சம் மெல்ல மெல்ல அவன் பேச்சைக் குறைத்தது. அதிகம் கவனிக்க ஆரம்பித்தான். இந்த சமயத்தில் கார்ஃபீல்டு பார்க்குக்கு அருகில் ஒரு வாடகை அறையில் தங்கியிருந்தான். சாப்பாடு, வேலை, புத்தகங்கள் எடுத்துவர நூலகம் இவற்றுக்கு மட்டுமே வெளியே போய் வந்தான். பெண்களின் வாசனையே தெரியாமல் கிடந்தான். அவனுக்கு அதில் நாட்டமும் இருக்கவில்லை. அவனுக்குள்ளாகவே சுருங்கி வாழ்ந்து கொண்டிருந்ததால் சீக்கிரத்திலேயே சுற்றியிருந்தவர்கள் அவனை முட்டாள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய இந்த நினைப்பு அவனுக்கு ஒரு வகையில் வசதியாகிப் போனது. அவனுடைய இரகசியமான நானை தீனிபோட்டு வளர்த்தான். இரவுகளில் தனிமையில் அவன் அறையில் அதனுடன் உரையாடிக் கொண்டிருந்தான். பல மாதங்களுக்குப் பிறகு பொது இடத்தில் அவன் பேசியது ஆஸ்பத்திரியின் விளையாட்டு அறையில் ஒரு செஸ்போர்டுக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டு மூளைக் கோளாறுக்காக வந்திருந்த ஒருவனோடு நிகழ்ந்தது. “நீ பைத்தியமில்லை”, அவன் காதருகில் கிசுகிசுத்தான். “இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” அந்த நோயாளி பாலை கூர்ந்து நோக்கிவிட்டு மெலிதாகச் சிரித்தான். வாழ்க்கையை உதறிவிட்ட ஞானிகளுக்கே உரிய ஆழ்ந்த அர்த்தம் தொனிக்கிற முறுவல் அவன் உதடுகளில் படிந்திருந்தது. குனிந்து, பலகைக்குக் குறுக்காக சாய்ந்து பாலுடைய கரிய பழுப்புக் கண்களுக்குள் நேராகப் பார்த்தான். “நீ இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” இந்தக் கேள்வி பாலை நிலைகுலைய வைத்தது. அதை நினைக்க நினைக்க அவனை படபடப்பு துரத்தியது. ஓய்வு நேரங்களில் லாசேல் தெருவில் முற்றிலும் அறிமுகமில்லாத நபர்களிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டு உலா வர ஆரம்பித்தான். ஆனால், எல்லோரும் ஏதோ அவசரத்தில் இருப்பது போல பரபரத்துக் கொண்டிருந்தார்கள். மாற்றுச் சேவையின் இரண்டாவது வருடத்தில் கடற்கரையில் இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு மாற்றுதல் பெற்றுக்கொண்டான். அங்கு ஓக்லாந்தில், பைத்தியக்காரத்தனமான காரியங்களை செய்துகொண்டு சுற்றி வந்தான். ஆனால் நல்ல காலமாக தொடர்ந்து குவிந்திருந்த வேலைகள் அவன் பைத்தியமாகி கான்சாஸிற்குத் திரும்புவதைத் தடுத்து நிறுத்தியது. அவனுடைய கடைசி பைத்தியக்காரத்தனம் டென்னெஸெ – வில் இருந்த க்ளாக்ஸ்வில்லெ – வுக்கு வெளியே இருந்த வாரென் என்ற சிறிய டவுனிலிருந்து வந்திருந்த விர்ஜினியா வாலென்டைன் என்ற கருப்புப் பெண்ணை சான்ஃப்ரான்ஸிஸ்கோ – வில் வைத்து மணம் செய்துகொண்டது.
விர்ஜினியா வாலென்டைன் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பாக தெற்கில் விவசாயிகள் அலை அலையாக ஜெயில்களை உடைத்துக் கொண்டு வெளியேறிய அந்தப் பெரும் அலையில் வாரனை விட்டு வெளியேறியவள். தலைமுறை தலைமுறையாக அடிமைகளாகக் கிடந்த அவளைப் போன்றவர்களுக்கு வெளியே விரிந்திருந்த இந்தப் பரந்த உலகம் இனிமையான வாய்ப்புகளை அள்ளித் தயாராக வைத்திருந்தது போன்ற தெளிவான ஒரு கோட்டோவியம் போலத் தெரிந்தது. ஆனால் எல்லோருக்குமே இந்தச் சுதந்திரம் இஷ்டம் போலத் திரியப் பயன்படவில்லை. நீண்ட சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த செல்லப் பிராணிகள் எந்த நேரமும் சங்கிலியின் முனையில் இழுத்துப் பிடிக்கப்படுவதை உணர்ந்திருப்பது போல ஒரு எல்லை அவர்களைச் சுற்றி எப்போதும் வரையறுக்கப்பட்டிருந்தது. என்றாலும், விர்ஜினியாவைப் போன்ற மிகச் சிலர் கர்வம் மிக்க பருந்துகள் ஆளில்லாத சிகரங்களின் மேலாக உயர உயரப் பறந்து தங்கள் கூடுகளைக் கட்ட விழைவது போல எழுந்து, பரந்து விரிந்து கிடந்த உலகின் மேலாகப் பறந்தார்கள்.
விர்ஜினியாவின் கனவு ஒரு இலட்சியக் காவியமாக இருந்தது. பத்தொன்பது வயதில் சால்வேஷன் ஆர்மியில் சேர்ந்தவள் ஏழைகளுக்கே உரித்தான உலகப் பயணத்தை மேற்கொண்டாள். நாட்டுப்புற மக்களுக்கே உரிய ஒரு முரட்டுத்தனமான காட்டு வாழ்வின் இயல்பைப் பெற்றவள் அவள். மனிதர்களிடம் புதைந்து கிடந்த மனிதத்தன்மையை சட்டென்று கண்டுகொள்ளும் திறன் அவளுக்கு இருந்தது. நல்ல நகைச்சுவை உணர்வும் வாய்க்கப் பெற்றிருந்தாள். இருபது வயதில் இலங்கையில் குழந்தைகளுக்கு செவிலித் தாயாக வேலை செய்து கொண்டிருந்தாள். இருபத்தொன்றில், இந்தியாவில், ஜாம்ஷெட்பூரில் ஒரு சந்தையில் நின்றுகொண்டு போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு சாதிகளை எண்ணப் பழகிக் கொண்டிருந்தாள். தனது சொந்த மக்களைவிட இந்துக்கள் “கருப்பாக” இருக்கிறார்கள் என்று முடிவு செய்தவள் ஒரு முரண்நகை தொனியில் சற்றுப் பெருமையாகவே தன்னை “கருப்பி” என்று அழைத்துக்கொள்ள ஆரம்பித்தாள். நுட்பமான ஒரு நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டாள். செனீகலில் மீனவர்களோடு சேர்ந்து வெறுங்கையால் உண்ணப் பழகிக்கொண்டாள். கென்யாவில் ஒரு விடுமுறை நாளில் கிளிமஞ்சாரோவின் சிகரத்தில், கிராமத்தவளைப் போல இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு இன்னும் கால் பதிக்க வேண்டிய சிகரங்களைத் தேடி பார்வையை வீசினாள். கெய்ரோ, செய்த் துறைமுகம், டமாஸ்கஸ் நகரங்களின், நறுமணப் பொருட்களின் வாசம் மூக்கைத் துளைத்து வியர்க்க வைக்கிற சந்தைகளில், சாராயம் குடித்துவிட்டு களித்திருந்த வியாபாரிகளோடு பேரம் பேசி பொருட்களை வாங்குவதில் தேறினாள். பெண்களும் அடிமைகளும் இன்னும் சந்தைகளில் விலைபேசப்படுவதைக் கண்டு அராபியர்களை வசைபாடும் நல்ல பழக்கத்தையும் வளர்த்துக்கொண்டாள். லீக்கி என்ற ஒரு வயதான கிழவனைப் பற்றி நிறைய கதைகளை வைத்திருந்தாள். வடக்கு டான்சானியாவில் ஒரு மாட்டுப் பண்ணையில் அவனோடு சேர்ந்து குடித்துவிட்டு இரவு முழுக்க கதைகள் பேசி உட்கார்ந்திருந்ததைப் பற்றியும், பசுவின் பாலை அப்படியே மடியில் வாய் வைத்தும் பசுவின் இரத்தத்தையும் குடிக்கப் பழகியதைப் பற்றியும் நிறைய பேசினாள். கிழவன் எப்போதும் சிடுசிடுத்தாலும் தன் திறமையைக் காட்டும் வாய்ப்பு வரும்போது எவ்வளவு துடிப்பாக இருந்தான் என்பதைச் சொல்வாள். பால் மோசமில்லை என்றாள். பசுவும் உதைக்கவில்லை என்று சொன்னாள். அராபியர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், இந்தியர்களுடைய மரியாதை நிமித்தமான பணிவான புன்னகைகளுக்குப் பின்னால் இருந்த அவர்களுடைய உண்மையான உலகில் பிரவேசித்து வந்தாள். அவர்கள் சொன்ன கதைகளில் வாழ்க்கையைப் பற்றிய மாறுபட்ட பல பார்வைகள் பல விதங்களில் படிந்திருப்பதைக் கண்டுகொண்டாள்.
இருபத்தியிரண்டு வயதில் சொந்த ஊருக்குத் திரும்பியபோது ஏராளமான கதைகளைச் சொல்ல வைத்திருந்தாள். அவளைப் போலவே அப்போது நிறையபேர் இருந்தார்கள். பாஸ்டன், நியூயார்க், ஃபிலடெல்ஃபியா, சிகாகோ என்று கலிஃபோர்னியாவின் எல்லாப் பகுதிகளிலும் மக்கள் கூடிக்கூடி இது போன்ற ஏராளமான கதைகளைப் பேசினார்கள். அவர்களுக்கே புரியாத ஒரு மொழியில் இனிக்க இனிக்க பேசினார்கள். அவர்களுடைய பேச்சுக்களில் உலகின் நான்கு மூலைகளிலும் ஒன்றே போல இருந்த அரிய விஷயங்களைப் பற்றி நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டார்கள். மேட்டுக்குடியினருக்கேயுரிய மட்டமான செயற்கைப் பாசாங்கைத் தொற்றிக் கொள்ளவிடாத அந்த விவசாய மக்கள் உண்மையிலேயே மேன்மைமிக்க மனிதர்கள். வாழ்க்கையின் சாரத்தை சாதாரணமாக புரிந்துகொள்கிற கலை அவர்களுக்குக் கைவந்திருந்தது. அவர்கள் ஒரு புது இனமாக உருவாகியிருந்தார்கள்; தங்களை அப்படி கருதிக்கொண்டார்கள்.
ஆனால், மெதுவாக – மிக மெதுவாக, அவர்களுடைய எண்ண ஓட்டங்கள மாற ஆரம்பித்தன. ஆரம்பத்தில் இது மிகவும் நுட்பமாகவே இருந்தது. உரையாடலின்போது ஒருவர் சாதாரணமாகக் கேட்பார், “என்ன புரிந்துவிட்டதா?” சற்று தயக்கத்திற்குப் பிறகு மறுப்பு மெதுவாக வரும். இந்தக் காலத்தில் விழுந்த நீண்ட மௌனங்களைப் பற்றிய வேதனை ததும்பும் கதைகளை வாலென்டைன் நிறைய வைத்திருக்கிறாள். மக்கள் குற்ற உணர்ச்சியோடும் தங்களைப் பற்றிய கூருணர்வோடும் தவித்தார்கள். கொஞ்சம் நிர்ப்பந்தித்தால், அவளுடைய குழுவில் நடந்த தற்கொலையைப் பற்றி சொல்லிவிடுவாள். மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வது மெல்ல மெல்லக் குறைந்தது. சீக்கிரத்திலேயே அவர்கள் தமக்குள்ளாகவே பேசிக்கொண்டும் தெருக்களில் நடக்கும்போது தலையை ஆட்டிக்கொண்டும் நடந்தார்கள். வேறுவழியில்லாமல் உரையாடல்களின்போது இப்போது பலரும் “இல்லை, எனக்குப் புரியவில்லை!” என்று ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்கள். முதலில் இதில் ஒரு தயக்கம், சந்தேகத்தின் சாயல் இருந்தது. ஆனால், போகப்போக மறுக்க முடியாத, ஆணித்தரமான தொனியில் பதில் வந்தது. வெறுப்பும் பகையுணர்ச்சியும் வெளிப்படையாகத் தெரிய சில மாதங்கள் எடுத்துக்கொண்டது. சண்டையில் இறங்க முயற்சித்தவர்கள் குழம்பி எல்லாவற்றையும் வெறுத்தார்கள். இதனால்தான் மற்ற எல்லா உறுதிமிக்கவர்களையும் போல விர்ஜினியாவும் கிழக்கை விட்டு வெளியேறினாள். அடிபட்ட பறவை இறக்கைகளை விரித்துக் கொண்டே தரையிறங்க பயப்படுவதுபோல, காயம்பட்ட தன் மனதுக்கு இதம் தரக்கூடிய ஒரு மென்மையான வெளியை, தனிமையைத் தேடி ஓடிப்போனாள்.
புதிய கதைகளைத் தேடி அந்தப் பிரதேசத்திற்கு நான் போயிருந்தேன். கிழக்கை விட்டு நான் கிளம்பிய அந்தக் காலத்தில் அங்கு புதிய கதைகள் எதுவும் இருக்கவில்லை. கருத்துக்களும் வழக்குகளும் கலந்து கரடுதட்டிப்போன மரபுகளாகிவிட்டிருந்தன. பழைய கதைகளே திரும்பத் திரும்ப பேசப்பட்டன. சொன்னவர்களுக்கே அவற்றில் நம்பிக்கை போய்விட்டிருந்தது தெரிந்தது. வார்த்தைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையிலான பிணைப்பு அறுந்து காதலுணர்ச்சியின் வேகத்தோடு பாய்வது நின்று போயிருந்தது. பழமையான நல்ல புராணங்களும்கூட அவற்றுக்கேயுரிய சடங்குகள் கொண்டாட்டங்களிலிருந்து விலகி தனித்து மிதந்தன. கலைகளை உள்ளூர வெறுத்த வியாபாரிகள் அவற்றை நாட்டுப்புறக் கதைகள் என்று சொல்லி விற்றார்கள். உற்சாகமான சிரிப்பு என்பதே இல்லாமல் போனது. அப்புறம், செல்வச் செழிப்பான புரவலர்களைத் திருப்தி செய்ய மொழியை, தாய்மொழியை அதன் சிறந்த மகன்களே போட்டி போட்டுக்கொண்டு புணர்ந்தார்கள். புதிய கதைகள் ஒன்றுகூட இருக்கவில்லை. புணர்ச்சியின் தொழில்நுட்பத்தை விளக்கப் பெரும் உழைப்பு விரயமாக்கப்பட்டது. காலத்தால் மாற்ற முடியாத, விதிக்கப்பட்டுவிட்ட பாத்திரங்களை திரும்பவும் ஏற்றுக்கொண்டு கருப்பு மக்கள் மற்றவர்களை மகிழ்வித்தார்கள். மாப்பஸானின் தேவடியாக்கள் தொழிற்சங்கத் தலைவர்களின் இரும்புக் கரங்களில் மயிர்சிலிர்த்தார்கள். செக்கோவ், கொகலுடைய உயிர்ப்புமிக்க விவசாயிகள் எல்லோரும் சோர்ந்து, ஆர்வமிழந்து, தம் இரத்ததின் தாளங்களைப் புறந்தள்ளிவிட்டு திண்ணைகளில் உட்கார்ந்து கிடந்தார்கள். புஷ்கினுடைய பெருமைமிக்க கொள்ளைக்காரர்களும் கலகக்காரர்களும், ஒளிமங்கிய கண்களோடு சோர்ந்து வீழ்ந்து கிடப்பதை விரும்பியது போலத் தெரிந்தது. அவர்கள் தமக்குள்ளாகவே ஒருவரையொருவர் கொலை செய்துகொண்டு, வயதான பெண்களை உறிஞ்சிக்கொண்டு, வட்டிக் கடைக்காரர்களிடமிருந்து சில்லறைகளைத் திருடிக்கொண்டு, வெட்டி வீறாப்புப் பேச்சில் மயங்கி அடிமையாகிக் கிடந்தார்கள். பெரிய மனிதர்கள் தொலைபேசியிலும் தனிப்பேச்சுகளிலும் வெற்று வார்த்தைகளை, ஏதோ அவை தமக்காகவே காத்திருக்கிற டேப் ரிக்கார்டருக்குள் பத்திரமாக போய்ச் சேர்ந்துவிடும் என்பது போல கேட்பவர்கள் காதுகளில் திணித்துக் கொண்டிருந்தார்கள். எங்கும் எதிலும் நிஜமான கண்ணீர் இல்லாமல் இந்த அகோரமான சோகம் படிந்திருந்தது.
கருப்பர்கள் எல்லோரும் மறுபடியும் தனியே பிரித்து வைக்கப்பட்டு நிற வெறியின் திரைகள் இழுத்து விடப்பட்டன. உணவகங்களில், விமானங்களில், சாதாரணமாக நாகரீகமாக நடந்துகொண்டவர்களின் வீடுகளிலும்கூட அச்சமும் பதுங்கிக்கொள்வதும், பாராமுகமாக திரும்பிக் கொள்வதும் மீண்டும் தலையெடுத்தன. அச்சத்தைப் பற்றிய ஒப்புதல்கள், பிரார்த்தனைகளாக வெளிப்பட்ட வெறுப்பின் கூச்சல்கள், மலரவேண்டிய காதல்கள், நம்பிக்கைகள், தேவைகள், கொலைகள், வஞ்சகங்கள், பரிகாரங்கள், ஒளிக்காமல் வெளிப்படுத்திய கோபங்கள் இப்படி எண்ணற்ற விஷயங்களைப் பற்றிய கதைகள், கோடிக்கணக்கான கதைகள் அந்தக் காலத்தில் கிழக்கில் மடிந்துபோயின. அறிமுகமில்லாத ஒரு நபரை அணுகி, “நண்பரே, எனது நானை நிறைவு செய்துகொள்ள உங்களுடைய கதையும் கொஞ்சம் தேவை”, என்று கேட்டிருந்தால் அவரை அலறவிட்டு என்னைக் கொலைகாரன் என்று பழிக்க வைத்த பரிதாபத்திற்குத் தள்ளிவிட்டவனாகியிருப்பேன். ஆனால், இதைச் செய்யாமலிருப்பதும் எனக்குச் சிரமமாக இருந்தது. கதைசொல்லி என்ற கடமையில் இருந்து தவறுவது பெரிய கொடுமை. புதிய பார்வைகள், பரிமாணங்கள் தேவைப்படுகிற காலங்களில் சுற்றிலும் கூர்ந்து கவனிப்பதோடு நின்றுவிடாமல் பேசப்பட வேண்டிய கதைகளையும் கட்டாயம் சொல்லிவிட வேண்டும். ஆனால், அந்தக் காலத்தில், கிழக்கில், இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் யாருக்கும் இருக்கவில்லை. புதிய பார்வைகள், வடிவங்கள், புத்துயிர்ப்பு தேவையாயிருந்தது. அவற்றைத் தேடி கிழக்கை விட்டு வெளியேறினேன்.
ஒரு சிறிய விளக்கம். நிறவெறிக் கட்டுப்பாடுகளுக்கும் வடிவத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
எல்லாவிதமான தொடர்புகளும் இருகிறது.
வெள்ளையனாக மாறிவிட விரும்புகிறாயா?
ஒரு கதைசொல்லிக்கு அவன் பேசுகிற உலகத்தைப் பற்றிய புனைவுகளுக்கு மட்டுமல்ல, அந்த உலகத்திற்குமே வாய்ப்புகள் வேண்டும்.
அப்படியென்றால், கருப்பனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறாயா?
மற்றவர்கள் கிழித்து வைத்திருக்கிற எல்லைகளை மீறுவதில் என்னிடம் கூடுதல் வேகம் இல்லை என்பது குறித்தே வெட்கப்படுகிறேன்.
ஒருங்கிணைப்பின் மீது உனக்குக் காதல் இருக்கிறது. அப்படித்தானே?
ஆரோக்கியமான கற்பனையால் சபிக்கப்பட்டவன்.
கற்பனைக்கும் நிற வரையறுப்புகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
எல்லாவிதமான தொடர்புகளும்.
இன்னும் ஒரு சிறிய விளக்கம். தனி மனித சுதந்திரம் பற்றிய உனது அபிப்பிராயம் என்ன?
புதிய கதைகளைக் கட்டுவதற்கு, தேடுவதற்கு எந்தத் தடைகளும் இருக்கக்கூடாது.
இந்தக் கதைக்கு நீ போதிய கவனம், உழைப்பு செலுத்தினாயா?
முன்னொரு காலத்தில் சான்ஃப்ரான்சிஸ்கோ – வில் ஒரு திருமணம் நடந்தேறியது.
(தொடரும் … )
மறுமொழியொன்றை இடுங்கள்