மராட்டியத்தில், சிவாஜியின் ஆட்சியைத் தொடர்ந்து எழுந்த பார்ப்பன பேஷ்வா மன்னர்களின் காலத்தில் caritra – bakhars (historical biographies – வம்சாவளி வரலாறுகள்) என்று அழைக்கப்பட்ட வரலாற்று நூல்கள் எழுதப்பட்டன. இவற்றின் நோக்கம் மராட்டிய பேஷ்வா ஆட்சிக்கு வரலாற்று நியாயப்பாட்டைத் தருவது: இந்திய நிலப்பகுதியை ஆண்ட தெய்வீக அருள் பெற்ற அரச வம்சாவளிகளின் தொடர்ச்சி என்று சொல்வது. குறிப்பாக, முகலாய ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து எழுந்த மராட்டிய ஆட்சியை இந்த வழியில் வைப்பது.
பொதுவாக, இவை கிருத யுகத்தில் தொடங்கி, கலியுகத்தின் ‘இந்து’ மன்னர்களின் வம்சாவளிகளைப் பற்றிய பட்டியலாக நீள்பவை. அதுவரையில் பிரச்சினை இல்லை. ‘இந்து’ வம்சாவளிகள் முடிந்து, அவர்கள் வழியில், முகலாயர்களின் ஆட்சியை எப்படி விளக்குவது?
1795 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டதாகக் கணிக்கப்படும் (ஆசிரியர் பெயர் குறிக்கப்பெறாத) நால்யுக சரித்திரம் (Caryugaci bakhar) இந்தப் பிரச்சினையைக் கையாளும் விதம் சுவாரசியமானது. முகலாயர்களின் ஆட்சியை நியாயப்படுத்த, யவனர்களின் (கவனிக்க, முஸ்லீம்கள் அல்ல, யவனர்கள்) வருகையை விளக்க இந்த நூல் ரமலா சாத்திரம் (குர் – ஆர்!) என்பதை ஆதாரமாகக் கொள்கிறது.
இந்நூலின்படி, ரமலா சாத்திரம் ‘இந்துக்’ கடவுள் சிவபெருமானால் அருளப்பட்டது. சிவன் ரமலா சாத்திரத்தை பார்வதிக்குச் சொல்கிறான். பார்வதி அதை ஸ்கந்தனுக்குச் சொல்ல, ஸ்கந்தன் அதை நாரத முனிக்குச் சொல்கிறான். நாரதன் தன் பங்குக்கு பிருகு முனிவரிடம் சொல்ல, அவர் அதைத் தமது மகனான சுக்கிராச்சாரியனுக்குச் சொல்கிறார். சுக்கிராச்சாரியார் அதை யவனர்களுக்குச் சொல்கிறார். இப்படியாக நீள்கிறது வரலாறு (his – story).
தொடர்ந்து, யவனர்களின் தோற்றமும் அவர்களுக்கு தில்லி அரியணை கிட்டியதும் விளக்கப்படுகிறது. முகமது நபி பைகம்ப முனியாக ‘அவதரிக்கிறார்’. ஒருமுறை பார்வதியும் கணேசனும் அருகில் இல்லாது சோர்ந்து, கயிலாய மலையில் தனியாக அமர்ந்திருக்கிறார் சிவன். அப்போது பைகம்ப முனி அவர்முன் தோன்றுகிறார். சிவன், என் மனைவியையும் பிள்ளையையும் தேடிக் கண்டுபிடிக்கவே உன்னைத் தருவித்தேன் என்கிறார். பைகம்பர் ஒரு நொடியில் அவர்களிருவரையும் கொண்டுவந்து சேர்க்கிறார். பரவசப்பட்டுப்போன சிவன், “மனித வடிவில் பூமியில் தோன்றுவாயாக” என்று அருளுகிறார். சிவனது அருளால் ஆதாம் தொடங்கி ஏழு பைகம்பர்கள் பூமியில் கலியுகத்தில் தோன்றுகிறார்கள். யவன சகாப்தம் அவர்களால் உருவாகிறது. ஹஸ்தினாபுரம் தில்லியாக பெயர் மாற்றம் பெற்று, யவனப் பேரரசின் ஆட்சி தொடங்குகிறது.
நால்யுக சரித்திரம் விதிவிலக்கான நூலும் அன்று. 1773 இல் எழுதப்பட்ட பரசுராம சரித்திரம், ஸப்த ப்ராகர்நாத்மக சரித்திரம் இன்னும் பல வம்சாவளி வரலாறுகளும் இதுபோன்ற புராணக் கதைகள் வழியாக ‘இந்து’ மரபிற்குள் வைத்து இஸ்லாமிய (யவன) வருகையை விளக்கத் தலைப்படுகின்றன. இவற்றின் நோக்கில், இஸ்லாமிய ஆட்சி ‘இந்து தர்மத்தை’ ஒழுகி நடந்துகொள்ளும் வரையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கு பரசுராம சரித்திரம் இஸ்லாமிய வம்சாவளியைப் பட்டியலிடும் போக்கில் குறிப்பிட்டுச் சொல்வது நல்லதொரு எடுத்துக்காட்டு:
“யவணர்களின் அரசர் பூலோகத்தை நீதியுடன் பரிபாலணம் செய்தார். பாண்டவர்களை அரசர்களாக ஏற்றுக்கொண்ட நான்கு வர்ணங்களும் இவர்களையும் ஏற்றுக் கொண்டன. யவனர்கள் இந்தக் கௌரவத்தை ஏற்றுக் கொண்டு அதற்குப் பிரதியுபகாரமாக, தமக்குக் கப்பம் கட்டிய சிற்றரசர்களைப் பாதுகாத்து அருளினர். பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் அனைவரையும் அவரவர் தகுதிக்குரிய வகையில் நடத்தினர். அவர்களுடைய க்ஷேத்திரங்களுக்கும் புண்ணிய தீர்த்தங்களுக்கும் நாசம் விளைவிக்காமல், அவற்றைப் பாதுகாத்து பராமரிப்பதில் மிகுந்த அக்கறையும் எடுத்துக் கொண்டனர். மகாபாரதக் கதைகளையும் சாத்திர விவாதங்களையும் மிகுந்த மரியாதையோடு செவிமடுத்தனர். ஆனால், சில முஸ்லீம்கள், இப்படியெல்லாம் நடந்துகொள்வது சரியில்லை என்றும், தமது மார்க்கத்திற்கு எதிரானது என்றும் கருதினர். இந்த ஒற்றுமையைக் குலைக்க சதியாலோசனை செய்தனர்.”
18 ஆம் நூற்றாண்டு மராட்டியத்தில், இஸ்லாமியர்கள் கையிலிருந்து ஆட்சி நழுவிப் போனதொரு சூழலில் ‘இந்து’ வரலாற்றாசிரியர்களேகூட இஸ்லாமியர்களை மராட்டியத்தின் முற்றிலும் ’மரபு சார்ந்த, மண் சார்ந்த’ ஆட்சியாளர்களுள் ஒருவராகவே பார்த்திருக்கிறார்கள். புராண வகைப்பட்ட வரலாறுகளைப் புனைந்து ‘ரமலா சாத்திரத்தின்’ தோற்றத்தை விளக்கவும் தலைப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய ஆசிரியர்களும்கூட இவற்றையொத்த முயற்சிகளை செய்திருக்கிறார்கள். இவர்களது எழுத்துக்களை, மராட்டிய பார்ப்பன பேஷ்வா ஆட்சி வலுப்பெற்ற காலத்தில் எழுதப்பட்டவை, அதற்கு முன்பாக முஸ்லீம் அரசர்களின் காலத்தில் எழுதப்பட்டவை என்று பிரித்து அணுகலாம்.
16 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலும், 17 ஆம் நூற்றாண்டின் முதற்பாதியிலுமாக, இஸ்லாமிய அரசு செல்வாக்குக்கு உட்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்தவரான சூஃபி ஞானி ஷேக் முகமதுவின் எழுத்தோடு, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பார்ப்பன பேஷ்வா ஆட்சி வலுவாக நிலைகொண்டுவிட்டிருந்த காலத்தில் வாழ்ந்தவரான ஷா – முனி என்பார் எழுதியதோடு ஒப்பிட்டுப் பார்ப்பது இதற்கு உதவியாக இருக்கும்.
ஷேக் முகம்மது Yogasamgrama என்ற தத்துவ நூலுக்காகவே பெரிதும் அறியப்படுபவர். இஸ்லாமிய எதிர்ப்பாளராக அறியப்படும் ராமதாசராலேயே மாபெரும் ஞானி எனப் புகழப்பட்டவர். மராத்திய பக்தி இலக்கியத்தை ஆய்ந்தவர்கள் பலரும் ஷேக் முகம்மதுவின் குரு சாந்த போகலே என்ற பார்ப்பனர் என்று ஊகம் செய்கின்றனர். சாந்த போகலேவோ ஷேக் முகம்மதுவின் தந்தையாரான ராஜே முகம்மதுவின் சீடராக இருந்தவர்.
ஆக, 16 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிலேயே, மதமாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் ஏதும் இல்லாமலேயே ஒரு பார்ப்பனர் இஸ்லாமிய ஞானி ஒருவரிடம் சீடராகச் சேர்வதும், இஸ்லாமியர் ஒருவர் பார்ப்பனரிடம் சீடராகச் சேர்வதும் நிகழ்வது சாத்தியமாகியிருக்கிறது. சாதுக்கள், சந்நியாசிகளின் உலகில் இது சாதாரணமாகவும் இருக்கலாம்.
Yogasamgrama வில் ஷேக் முகம்மது ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு போன்ற ‘இந்துக்’ கடவுளர்களை தாராளமாகவே ஏற்றுக்கொள்கிறார். அந்நூலின் பதினெட்டு அத்தியாயங்களையும் கணேசனுக்கான துதியைச் சொல்லியே ஆரம்பிக்கவும் செய்கிறார். என்றாலும்கூட அவர் ஏக இறை என்ற பார்வையையே வழிமொழிவது அவரது எழுத்தில் தொடர்ந்து வெளிப்படுகிறது. இறைவனை உருவமற்றவனாக, குணங்களற்றவனாக, கண்களுக்குப் புலப்படாதவனாகவே விவரிக்கிறார். ஹரி, அல்லா இரு கடவுளர்கள் இருந்தால், அவர்கள் தமக்குள் சண்டையிட்டே அழிந்திருப்பார்கள் என்று கேலி பேசவும் செய்கிறார்.
சூஃபி ஞானிகளுக்கே உரிய முறையில் இணைவையும் முன்மொழிகிறார்; “மராட்டியர்கள் (கவனிக்க, ஹிந்துக்கள் அல்ல மராட்டியர்கள்) அவனை சத்குரு என்கிறார்கள் முஸ்லீம்களோ சக்கா பீர் (sacca pir) என்கிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் கிடையாது. சகோதர்களே கண்களைத் திறவுங்கள்.”
Yogasamgrama வழமை மீறிய அளவிற்கு பார்ப்பன வைதிக மதம், சாத்திரங்கள் மீதான வெளிப்படையான விமர்சனங்களடங்கிய நூலும்கூட. அதேபோது, நாட்டுப்புற தெய்வங்கள் சார்ந்த நம்பிக்கைகள், சடங்குகளையும் அது கடுமையாக விமர்சனம் செய்கிறது. புகைப்பது, பாலியல் தொழில், நாட்டுப்புற தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலியிடுதல், அலகு குத்துதல் போன்ற சடங்கு, செய்முறைகளை அது சிறிதும் சமரசமற்ற தொனியில் விமர்சனமும் செய்கிறது. எடுத்துக்காட்டாக, பாதையோரங்களிலும், வயல்வெளிகளின் மூலை முடுக்குகளிலும் கண்ட கண்ட இடங்களில் நட்டுக்கிடக்கும் சிறு தெய்வங்களைப் பற்றிச் சொல்ல வரும்போது: “இந்தக் கடவுளர்கள் எல்லாம் அவ்வளவு சக்தி வாய்ந்தவையாக இருந்தால், நாய்கள் அவற்றின் மேல் சிறுநீர் கழிப்பது எப்படி?” என்கிறார் ஷேக் முகம்மது.
இந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, முஸ்லீம், சுஃபி ஞானிகள், இந்துப் பார்ப்பன வேத விற்பன்னர்களிடையே குரு – சிஷ்யப் பாரம்பரியம் அளவிற்கு உறவுகள் நிலவியது. என்றாலும், அது இரு சமூகங்களுக்கிடையிலான பொதுவான விதியாகவும் இருக்கவில்லை. உரசல்கள் கடுமையாக இருந்திருப்பதும் தெரிகிறது.
அவற்றைத் தணிக்கும் முகமாகவோ என்னவோ ஷேக் முகம்மது இப்படியும் எழுத நேர்ந்திருக்கிறது: “மக்கள் என்னை மிலேச்ச சாதியைச் (மீண்டும் கவனிக்க, முஸ்லீம் அல்ல மிலேச்ச சாதி) சேர்ந்தவன் என்கிறார்கள். அதனால்தான் அவன் நமது கடவுளரைப் பழிக்கிறான். அவனை நம்ப முடியாது. முஸல்மான்கள் நமது கோவில்களையும் விக்கிரகங்களையும் இடித்துத் தள்ளுவதைப் பார்க்கிறோம். அவனும் அவர்களில் ஒருவனே. விக்கிரகங்கள் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுவிட்டன. இனி வழிபடுவதற்கு என்ன இருக்கிறது. நமது கடவுளர்களை அழிப்பது யவனர்களின் பரம்பரைப் பழக்கம். அவன் அவர்கள் வழி வந்தவன். அதனால் அவன் சொல்வதையெல்லாம் செவிமடுக்கக் கூடாது. ஷேக் முகம்மது சொல்கிறேன், முஸல்மான்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே. முஸல்மானாகப் பிறந்தும் அவன் குர் – ஆன், புராணம் இரண்டிலும் தேர்ந்தவன். தன் சொந்த நன்மையின் பொருட்டே அவன் மழுவற்ற புனித நூல்களை செவிமடுக்கிறான். இறைவனைப் போற்றும் ஒருவனின் குலத்தோற்றத்தை ஒருவர் ஆராயக்கூடாது.”
(தொடரும் … )
கவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004.
மறுமொழியொன்றை இடுங்கள்