நினைக்கத் தெரிந்த மனமே … 7

இத்துறையின் வரலாற்று ரீதியான வளர்ச்சியில் அதன் இயங்குவிதியாக இருந்தது தெளிவான தேர்வுகளல்ல; தொடர்ந்து பெருகிய விரிவு. ஆசிய நிலப்பகுதி சார்ந்த எந்த ஒன்றின் மீதான – ஆசிய நிலப் பகுதி சார்ந்தவை என்றாலே புதிய, புதிரான, ஆழமான, மானுட குலத்தின் ஆதி நிலையிலுள்ள, அதனால் வளர்ச்சியடையாத நிலையில் உள்ள ஒன்று – கல்வித்துறை சார்ந்த, தொழில்முறையான ஆர்வமே அந்த ஒன்றை கீழைத்தேயத்திற்குரியதாக அடையாளப்படுத்தி விடுவதாக இருந்தது. புதியன புதிது புதிதாக தெரியவரவர இந்த விரிவு கூடிக்கொண்டே போனது. புரியாத புதிரான கீழைத்தேயங்களுக்குரிய ஒவ்வொரு புதிய பொருளும் வகைப்படுத்தப்பட்டு, விளக்கப்படுத்தப்பட்டு, குறிக்கப்பட்டு (codified) அவற்றுக்குரிய இடத்தில் கைக்(அறிவுக்)கடக்கமாக வைக்கப்பட்டன. அந்த வகையில், கீழைத்தேயவாதம் என்ற அறிவுப்புலமே புவியியற்பரப்பை வெற்றி கொள்வதற்கு இணையான, சொல்லப்போனால், காலனியாதிக்கத்திற்கான தயாரிப்பாக உருவான அறிவுக் காலனியமாக நிலைபெற்ற ஒன்று.

கீழைத்தேயவாதம் என்ற கல்விப்புலம் “கீழைத் தேயங்கள்” என்ற கருத்தாக்கத்தை, முழுக்க முழுக்க பிரதிகளின் தொகுப்பாலான ஒரு பிரபஞ்சமாகக் கட்டமைத்தது. பிரதிகளாலான இந்தப் பிரபஞ்சத்தில் உருவான கருதுகோள்கள் எந்தவிதமான நேரடியான அனுபவங்களாலும் அசைத்துவிட முடியாதவையாக இருந்தன. கருதுகோள்களிலிருந்து விலகிய நிலைமைகளை, ஆசியப் பகுதிகளுக்கு செல்ல நேரும் ஒரு கீழைத்தேயவாதி எதிர்கொள்ள நேர்ந்தால், அது கீழைத்தேய மக்களுக்கேயுரிய ‘தேங்கிய’ தன்மையாக, ‘திரிந்த’ நிலையாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மிக ஆரம்பகாலந்தொட்டே, ஐரோப்பாவில், ‘கீழை உலகு’ அனுபவம் சார்ந்த நேரடியான அறிதலுக்கும் விசாரணைக்கும் அவசியமற்ற ஒரு புலமாகவே கொள்ளப்பட்டு வந்தது. கிரேக்கத் துன்பியல் நாடகங்களில் ஆசியா குறித்து ஆங்காங்கே வரும் விவரணைகள் பலவும், ஒரு காலத்தில் ஐரோப்பாவையே வெற்றிகொண்ட (டாரியஸ்) வெல்ல முடியாத பலம் பொருந்திய அதிசயமாகவும், தற்(அக்)காலத்தில், தோல்வியைத் தழுவி (க்ஸெர்க்ஸெஸ்), கேடு சூழ்ந்து, சூன்யம் கவிந்த, கிரேக்கம் வெற்றிகொண்ட பரப்பாகவுமே ஐரோப்பியக் கற்பனைப் பரப்பில் மிதந்தது. டையோனிச மறை வழிபாட்டையும் ஐசிஸ் போன்ற கொடூரப் பெண் தெய்வங்களையும் ஏவி, ஐரோப்பாவை ஆட்கொள்ளச் சதி செய்யும், கொடூரங்கள் நிரம்பிய புதிர்ப் பிரதேசம் என்ற இன்னொரு கருத்துச் சாய்வும் நிலவி வந்திருக்கிறது.  வலுவான ஐரோப்பாவால் வெற்றிகொள்ளப்பட்ட, பலவீனமான தொலைப் பிரதேசம் என்று ஒரு முனை. ஐரோப்பியப் பகுத்தறிவை உடல் சார்ந்த மிகைகளால் சதி செய்து வீழ்த்தக் காத்திருக்கும் மறை பண்பாடுகள் நிரம்பிய புதிர்ப் பிரதேசம் என்று இன்னொரு முனை.

மேற்குலகு, கீழை உலகு என்ற இந்த அடிப்படையான பகுப்பிலிருந்து பயணங்கள், ஆக்கிரமிப்புகள் போன்ற புதிய அனுபவங்களிலிருந்து இன்னும் பல சிறிய பகுப்புகள். முதலாவதற்கு, இன்றைய நவீன மேற்கத்திய வரலாற்றெழுதியலின் முன்னோடி ஹெரோடட்டசும் அலெக்சாண்டரும் பயணித்து, ஆக்கிரமித்து, பார்த்து அறிந்து வந்த பிரதேசங்கள். அவர்கள் சென்றிராத, வென்றிராத, இன்னும் அறியப்பட வேண்டிய பல பகுதிகள், பிரதேசங்கள் என்று இன்னுமொரு பகுப்பு. நன்கு அறியப்பட்ட அண்மைக் கிழக்கு, முற்றிலும் புதிய தூரக் கிழக்கு. அறியப்பட்ட அண்மைக் கிழக்கு அதற்கு எப்போதும் ஏதேன் தோட்டம் அமைந்திருந்த பிரதேசம். (24) ‘இஸ்லாமியக் காட்டுமிராண்டிகளின்’ வசப்பட்டுவிட்ட அதை மீட்டு, அந்த ஆதித் தோட்டத்தை அல்லது குறைந்தது அதன் புதியதொரு வடிவத்தை உருவாக்கிவிட வேண்டும் (இன்றைய இஸ்ரேல்!).

இதோடு கிறித்தவக் கற்பனையில், பாபேல் கோபுரமும் (25) அண்மைக் கிழக்கின் எல்லையில் எழுப்பப்பட்டது. குறிப்பாக, பாபிலோனில் – பெர்ஷியாவில் – இன்றைய ஈரானில். (26) கர்த்தர், பாபேல் கோபுரத்தை அழித்து, “ஜனங்கள் ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கி, பூமியெங்கும் சிதறப் பண்ணினார்” அல்லவா. கர்த்தரின் கோபத்திற்கு ஆளாகி, அங்ஙனம் சிதறிப்போனவர்களை, ‘வழி தவறிய கறுப்பு ஆடுகளை’, தூரக்கிழக்கெங்கும் அது (கீழைத்தேயவாதம்) அடையாளம் காணத் தலைப்பட்டது. (27) கர்த்தர் “அவர்களது பாஷையைத் தாறுமாறாக்குவதற்கு” முன்னால், அவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு – ஒரேயொரு பாஷையைப் பேசிக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஆகையால், கீழைத்தேயவாதிகளின் கவனம் எப்போதும் அவர்கள் ‘கண்டுபிடிக்க’ நேர்ந்த புதிய மக்களினங்கள், நாகரிகங்களின் மொழிகள், அவற்றின் செழுமை, தோற்றம் பற்றியதாக அமைந்தது. கீழைத்தேயவாதிகளில் பெரும்பாலானோர் மொழியியல் ஆய்வாளர்களாகவும் இருந்தனர்.

இதற்கு இன்னொரு பரிமாணமும் இருந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் கிறித்தவம் எதிர்கொண்ட இன்னொரு ‘தலைவலி’ பல்வேறு ‘வட்டார’ (பின்வந்த நூற்றாண்டுகளில் தேசிய) மொழிகளின் பெருக்கம். இலத்தீனின் செல்வாக்கு மெல்லச் சரிந்துகொண்டிருந்தது. இதற்கான எதிர்வினையாகவும் இந்த ஆதி மொழியை மீட்டெடுக்கும் முயற்சிகளைப் பார்க்கலாம். (28)

இதில் முதல் முக்கியப் பங்களிப்பைச் செய்தவர் தாந்தே. பைபிளின் பழைய ஏற்பாடு, எபிரேயுவில் எழுதப்பட்டது. ஆனால், இந்த எபிரேயு பாபேல் கோபுரம் அழிக்கப்படுவதற்கு முன்பாக, “ஏதேன் தோட்டத்தில் ஆதாம் பேசிய எபிரேயுவாக” இருக்க முடியாது. கோபுரத்தை தரைமட்டமாக்குவதற்கு முன்பாக, கர்த்தர் ‘அந்த’ எபிரேயுவைத் தாறுமாறாக்கி விட்டபடியால், ‘இந்த’ எபிரேயு, அதன் திரிந்த வடிவமாகவே இருக்க முடியும். என்றாலும், ஏதோவொரு எபிரேயுவே முதல் மொழியாக இருந்ததால், இருப்பதிலிருந்து, அதை அதன் தூய வடிவில் மீளுருவாக்கம் செய்யவேண்டும் என்பது அவரது முன்மொழிபு. இதைத் தொடர்ந்து, ஆரம்பகால கீழைத்தேயவாதிகளின் கவனங்கள், பைபிள் வாசிப்புகளில், செமிட்டிக் மொழிகளின் மீது, குறிப்பாக, எபிரேயுவின் மீது குவிந்தது.

மத்தியகால ஐரோப்பாவில் பைபிள் பெரும்பாலும் லத்தீன் மொழியிலேயே புழங்கி வந்தது (‘வட்டார’ மொழிகளில் புழக்கத்திற்கு வருவதற்கு அது பெரும்பாடு படவேண்டியிருந்தது). பழைய ஏற்பாடு எபிரேயுவில் எழுதப்பட்டது என்பதோ, புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதி கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்பதோ அரிய தகவலாகவே அறியப்பட்டிருந்தது. ஆதாம் பேசிய மொழி எபிரேயுதான் என்ற கருத்து முன்மொழியப்பட்டவுடன், அதன் கீழைத்தன்மை – புதிரான மறைபொருளான கீழைத்தன்மை – கீழைத்தேயவாதிகளை உடனடியாக ஈர்ப்பதாக இருந்தது. என்றாலும், சற்று முன்னர் குறிப்பிட்டது போல, ஐரோப்பிய சமூகத்தில் வேரூன்றியிருந்த செமிட்டிக் இன – யூத இன எதிர்ப்புணர்வு எபிரேயுவை நோக்கிய இந்த திரும்புதலை வெகுகாலம் சகித்துக் கொள்வதாக இருக்கவில்லை. பதினேழாம் நூற்றாண்டளவில், எபிரேயுவின் இந்த ‘அந்தஸ்தைக்’ கேள்விக்குள்ளாக்குவது தொடங்கியது. ஆதியாகமத்தின் பத்தாவது அதிகாரத்தின் மீது கவனம் குவிந்தது. (29) மக்களினங்கள் பல்வேறு சந்ததியினராய்ப் பிரிந்து சென்று தனித்து வாழ்ந்ததும் சிலர் தமக்குள் கலந்ததுமே பல்வேறு மொழிகள் உருவானதற்குக் காரணம் என்ற விளக்கங்கள் தரப்படத் தொடங்கின.

மானுட குலம் இப்படிப் பல்வேறு மொழிகள் பேசும் கூட்டத்தினராய் சிதறியது பாபேலின் அழிவோடு தொடங்கியது அல்ல, அதற்கு முன்பே, நோவாவின் காலத்திலேயே நிகழ ஆரம்பித்துவிட்டது என்றும் மொழிதல்கள் கிளம்பின. எடுத்துக் காட்டாக, 1699இல் ஜான் வெப் என்பவர், ஊழிப் பெருவெள்ளத்திற்குப் பிறகு நோவா நேராக சீனாவுக்குச் சென்று சில காலம் வாழ்ந்தார் என்றும், அதனால் சீன மொழியே மிகப்பழமை வாய்ந்தது என்றும், மேலும் சீனர்கள் பாபேல் கோபுரத்தைக் கட்டும் பணியில் ஈடுபடாததால், அவர்களுடைய மொழி கர்த்தரால் ‘தாறுமாறாக்கப்படாமல்’ அருளப்பட்டு அதன் தூய தன்மையிலேயே இருக்கிறது என்றும் வாதிட்டார். (30)

(தொடரும் … )

கவிதாசரண் மார்ச் – ஏப்ரல் 2004.

அடிக்குறிப்புகள்:

(24) “தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் தோட்டத்தை உண்டாக்கி … (ஆதியாகமம், 2: 8).

(25) பார்க்க: ஆதியாகமம் (11: 1-9)

(26) மானுடர்களின் அறிவுக்கடங்காத, விளக்கங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறைமையின் குறியீடான ஏதேனும் – இஸ்ரவேலும் கிழக்கில். கிரேக்க காலம் தொட்டே ஐரோப்பாவை அச்சுறுத்தி வந்த, கடவுளர்களைக் கட்டுக்குள் கொண்டு வரும், ஏவி விடும் மறைவழிபாடுகள் நிரம்பிய, “வானத்தை அளாவும் சிகரமுள்ள கோபுரத்தைக்” கட்டி, “தமக்குப் பேர்” உண்டாக்க, இறைமையை எட்டிப் பிடிக்கத் துணிந்தவர்களின் பாபேலும் கிழக்கில் – பாபிலோனி, பெர்ஷியாவில், ஈரானில்.

(27) எத்வர்த் சேத் இப்படியான கருத்தை வைக்கவில்லை. அவருடைய கீழைத்தேயவாதம் குறித்த ஆய்வு முடிவுகளோடு, உம்பர்டோ ஈக்கோவின் மொழியியல் ஆய்வுகளை இணைத்துப் பார்க்கும் முயற்சியில் எழுந்த, எனது சற்றே “துணிச்சலான ஊகம்” (wild guess அல்ல bold inference) இது. குறித்த நூல் – Umberto Eco, The Search for the Perfect Language. Trans. by James Fentres (Fontana, 1997).

(28) எடுத்துக்காட்டாக, பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த Guillaume Postel என்பார், எபிரேயு நோவாவின் மக்கள் வழியாக நேராக வந்தது என்றும், அதிலிருந்தே அரபி, சால்டியன், ஹிந்தி (!) கிரேக்கம் முதலிய கிளைத்தன என்றும் வாதிட்டார். தொடர்ந்து, அந்தப் பழைய எபிரேயுவை மீட்டெடுப்பதன் மூலம், பல்வேறு மொழிகளைப் பேசிய பல்வேறு இனமக்களையும் ஒருங்கிணைக்கவும் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். போஸ்டெல் அக்காலப் பகுதியில் நன்கு அறியப்பட்டிருந்த இறைப்பணியாளர். திருச்சபைக்கு முரணான கருத்துக்களை முன்வைத்ததற்காக தண்டனைக்குள்ளானவரும்கூட. அவருடைய பங்களிப்புகள் கருதி ‘குற்றமற்றவர் ஆனால் பைத்தியம்’ என்று தீர்ப்பு கிடைத்து உயிர்பிழைத்தவர். மேற்குறித்த அவரது திட்டம், வாடிகனாலும் பல புரவலர்கள், அரசர்களாலும் நிராகரிக்கப்பட்டது. எபிரேயுவை ஆதிமொழியாக ஏற்றுக்கொள்வது கிறித்தவ உலகில் ஊறியிருந்த யூத இன எதிர்ப்புணர்வுக்கு கடைசிவரை இயலாததாகவே இருந்தது. அதோடுகூட ‘கர்த்தர் கைவிட்ட’ மக்களினங்களின் மொழிகளையும் இணைக்கச் சொன்னால் என்னாவது! (Umberto Eco வின் மேற்குறித்த நூல், பக்: 78)

(29) “இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறு வேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன” (10: 5) இது ஊழிப் பெருவெள்ளத்திற்குப் பிறகு நோவாவின் வம்சவரலாறாக சொல்லப்படுவது. ஆனால், பதினோறாவது அத்தியாயத்தின் தொடக்கமே, “பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது” என்கிறது. பிறகு பாபேல் கோபுரம் அழிக்கப்பட்டு “ஜனங்கள் சிதறிப்போகிறார்கள்”. பைபிளில் உள்ள இது போன்ற பல முரண்களிலிருந்து ஒரு பெரும் இறையியல் உரைத்தொகுப்பு உருவானது. இன்னமும் இது விடுதலை இறையியல், எதிர்மறை இறையியல் (Negative Theology) என்பன போன்ற வடிவங்களில் சற்றே ஆரோக்கியமான திசைகளிலும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

(30) Umberto Eco (1997) பக்: 91.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: