“வாசிப்பின் நிமித்தங்கள்” – சில நினைவுக் குறிப்புகள் (1)

என்பால் “மரியாதை” வைத்திருக்கும் சில நண்பர்களுடன் அரிதாக தொலைபேசியிலோ ஸ்கைப்பிலோ பேச நேர்கையில், எனது வாசிப்பு குறித்த வியப்பை அவர்கள் வெளிப்படுத்துவதுண்டு [”எப்படிங்க இப்படி” 😉 ]. எனது வாசிப்பின் “ரிஷிமூலத்தை” அப்படியாகக் கிளறிய ஒரு நண்பருடன் சமீபமாகப் பகிர்ந்துகொண்டதை “மரியாதை நிமித்தம்” நிகழ்ந்த சில அற்பமான நிகழ்வுகள் குறித்த நினைவுகளும் சேர்த்து எழுதிவிட இன்று அதிகாலை கண்ட கனா ஒன்று உந்தித் தள்ளிவிட, ஒரு கோப்பை காஃபியும் ஒரு சிகரெட்டும் பருகிவிட்டு தொடங்குகிறேன். எல்லா ரிஷிமூலங்கள் நதிமூலங்கள் போல இதுவும் அற்பமானதுதான்.

மா-லெ குழுவில் இருந்து ‘ஓடி வந்து’ வீட்டிலே முடங்கிக் கிடந்த (அதற்கு முன்னால், வீட்டிலிருந்து ஓடிப் போய் குழுவில் சேர்ந்தது, அந்தக் குழுவும் இன்னொரு குழுவால் “ஓடுகாலிகள்” என பட்டம் சூட்டப்பட்டிருந்தது ஒரு தனி ட்ராக்) கடும் மன உளைச்சல் நிரம்பிய ஒரு மூன்று மாத காலம் கழித்து அது ஆரம்பமானது.

சென்னையின் புதிய குடிசைத் தொழிலாக ஸ்க்ரீன் ப்ரிண்டிங்க் உருவாகிக் கொண்டிருந்த 90-களின் துவக்கம். 92. 5000 ரூபாயும் மொட்டை மாடியிலே ஒரு கொட்டகையும் இருந்தால் தொழிலை ஆரம்பித்துவிடலாம். எனது வாசிப்பின் மூலதனமாக அமைந்தது இந்த யோசனைதான்.

‘தொழிலை’ செய்யும் முனைப்பு எதுவும் இருக்கவில்லை. துவங்கும் யோசனைகூட இருக்கவில்லை. தீவிரமாக வாசிக்க வேண்டும். புத்தகங்கள் வாங்க வேண்டும். பணம் வேண்டும். அதற்கான குறுக்கு வழியாகத் தான் இந்தச் சுய தொழில் முனைவோர் திட்டம்.

கட்சியிலே இருந்து ஓடி வந்து, வீட்டிலே முடங்கிக் கிடந்த மூன்று மாதங்களும் பெற்றோர் என்னை ”ஏன் என்ன” என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஏதும் கேட்டால் திரும்பவும் ஓடிப்போய்விடுவானோ என்ற பயம் அவர்களுக்கு. அந்த மூன்று மாதங்களும் கழிந்தவிதம் – அது ஒரு தனி ட்ராக்.

அந்த ட்ராக் முடிந்து, மெதுவாக பெற்றோரின் அழுத்தம் துவங்கியது. பாதியில் விட்ட படிப்பை தொடரச் சொல்லி. விட்ட இடத்தில் இருந்து துவங்க எனக்குச் சுத்தமாக விருப்பு இருக்கவில்லை. புதிதாக தொடங்க நான் விரும்பிய இடத்தில் அவர்களுக்கு விருப்பில்லை. அது இன்னொரு ட்ராக் – திருவனந்தபுரம் ட்ராக்.

ஆறு பத்திகளில் மூன்று ட்ராக்குகளை ஓட்டிவிட்டும் இன்னும் ’ஆரம்பப்’ புள்ளிக்கு வரமாட்டேங்குறானே என்ற சலிப்பு உருவாவதற்கு முன்பாக அதை எழுதிவிடுகிறேன். படிப்பு பற்றிய அழுத்தம் கொடுக்க ஆரம்பித்ததற்கு முன்போ இடையிலோ, வீட்டாரின் தரப்பில் இருந்து இன்னொரு அழுத்தம். “இப்படி வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், ஏதாச்சும் வேலைக்குப் போ”.

வேலையையும் அவர்களே ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள். ஒரு ஸ்க்ரீன் ப்ரிண்டிங்க் கம்பெனியில். எப்படி ஒப்புக் கொண்டேனென்று நினைவில் இல்லை. ஒரே வாரத்தில் அங்கிருந்தும் ஓடி வந்துவிட்டேன். போக முடியாது என்று வீட்டில் தீர்மானமாகச் சொல்லிவிட்டேன்.

அந்த ஒரு வாரகாலம் அந்தக் குடிசைத் தொழில் கம்பெனியில் எனக்கு இடப்பட்ட வேலை ஒன்றே ஒன்றுதான். விசிட்டிங்க் கார்டுகளை ஒருவர் ஸ்க்ரீனில் தேய்த்து அச்சாக்குவார். அதை எடுத்து வரிசையாக அடுக்க வேண்டும். எட்டு மணி நேரம் நின்றபடியே இதையே செய்து கொண்டிருக்க வேண்டும். பெண்டு கழன்றுவிட்டது.

அதுபோக, இந்தியப் புரட்சியை இன்னும் பத்தே வருடங்களில் நடத்திவிடலாம் என்ற பெரும் கனவைச் சுமந்து வீட்டை விட்டு ஓடிப் போகத் துணிந்த மனது, “நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?” என்று உறுத்த ஆரம்பித்துவிட்டது.

பாட்டாளி வர்க்க உணர்வில் புடம் போடப்பட வேண்டும். உடல் நோக உழைக்க வேண்டும். ஆனால், மார்க்சியத்தைக் கற்றுத் தேர வேண்டும் என்று உள்ளூர உந்தித் தள்ளிய உத்வேகம் வேறு இன்னொரு பக்கம். அந்த உள்ளூர உந்திய உத்வேகத்தில் ஒரு இரண்டு மணிநேரம் உழைத்து, நல்ல காசு சம்பாதித்து புத்தகங்கள் வாங்கி 10 – 12 மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்று ’திட்டம்’ போட்டு கொத்தவால் சாவடியில் மூட்டை தூக்கி கழுத்து சுளுக்கிக் கொண்ட ட்ராக் இன்னொரு தனி ட்ராக்.

அந்த காலப் பகுதியில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத சங்கம் ஒன்று இயங்கி வந்தது. அதாகப்பட்டது எதுவெனில் ”கட்சியில் இருந்து ஓடிப்போனோர் சங்கம்”. அமைப்பாக்கப்படாத அமைப்பு. உருப்படாமல் போனோர் அநேகரும், தொழில் முனைவோர் ஆனோர் சிலரும், இலக்கியவாதிகளாக உருப்பெற்ற பலரும் கூடிக் கூடி பேசிக் குமைந்து கொள்ளும் இயக்கமாக அது செயல்பட்டு வந்தது.

அந்தச் சங்கத்தின் வழியாக அறிமுகமான முன்னாள் காம்ரேடு ஒருவர் – முதல் வகையினத்தைச் சேர்ந்தவர் – “ஏன் தோழர்! எனக்கு ஸ்க்ரீன் ப்ரிண்டிங்க் தெரியும். உங்க வீட்டில் இருந்து ஒரு 5000 ரூபாய் வாங்குங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து தொழில் செய்யலாமே!” என்று ஒரு யோசனையை சொல்ல, கொத்தவால் சாவடிப் பரிசோதனையில் சோர்ந்திருந்த எனக்கு வாழ்க்கையிலே புது வெளிச்சம் கொழுந்துவிட்டு எரிந்தது.

திட்டத்தை வீட்டிலே சொன்னேன். எனக்கு வேறு திட்டம் இருந்தது. ஏதாச்சும் தொழிலைச் செய்தாவது பிழைக்கிறானா பார்ப்போம் என்று அவர்களும் ஐயாயிரத்தைக் கொடுத்துத் தொலைத்தார்கள்.

மறுநாள் மாலை ஐயாயிரத்தை எடுத்துக் கொண்டு நேராக என்.சி.பி.எச். Lenin Collected Works முழுமையும். 45 தொகுதிகள். Marx – Engels Collected Works 33 தொகுதிகளே இருந்தன. லெனின் தொகுப்பு ஒன்றின் விலை ஏழே ரூபாய். மார்க்ஸ் எங்கெல்ஸ் 30 ரூபாய். மன்னிக்க, மார்க்ஸ்- எங்கெல்ஸ் தொகுதி ஒன்று 30 ரூபாயாக இருந்தது. ரசியப் பதிப்பு அவ்வளவு மலிவு அப்போது. நாவல், சிறுகதைத் தொகுப்பு என்று கண்ணில்பட்ட இலக்கியம் சம்பந்தப்பட்டவை எல்லாம் ஆங்கிலத்தில் ஒரு பிரதியும் தமிழிலும்.

லெனின் தொகுப்புகளில் ஒன்று மிஸ் ஆக இருந்தது. கட்சியில் இருக்கையில் அறிந்திருந்த தோழர் ஒருவர் – ராயன் என்பதாகப் பெயர் என்று நினைவு; லெவி மட்டும் தருவார் – லெனின் பிற்காலத்தில் ஹெகலை வாசித்து எழுதிய குறிப்புகள் கொண்ட தொகுதியை வாங்க இருந்தார். மொத்த தொகுதியை வாங்கும் எனது முனைப்பைச் சொல்லி அவரிடமிருந்து அதைப் பறித்துக் கொண்டேன்.

கையில் மிச்சம் தேறியது ஒரு 400 ரூபாய் இருக்கும். புத்தகங்களைக் கட்டி வைத்தபின் ஒரு சிறிய தயக்கம். ”தோழர், இதை இப்படிக் கட்டி இங்கே வைத்துவிட்டுச் செல்கிறேன். ஒரு ஒரு வாரத்தில் வந்து எடுத்துக் கொள்கிறேனே” என்று கேட்டேன். தாராளமாக ஒப்புக் கொண்டார்கள்.

ஒரு வாரம் காத்திருக்க முடியவில்லை. வீட்டிலே வேறு எப்போது தொழிலைத் தொடங்கப் போகிறாய் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வாரச் சனிக்கிழமை கிளம்பி, ஒரு ஆட்டோவில் அத்தனை புத்தகங்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இறங்கிய புத்தகங்களைப் பார்த்தும் வீட்டிலே பெற்றோர் வாயைத் திறக்கவில்லை. ஏதாச்சும் கேட்டு திரும்பவும் ஓடிப் போய் விடுவானோ என்ற பயம் அவர்களுக்கு.

ஒரு தொழில் முனைவோன் உருவாகாமல் இந்த தேசம் தப்பித்த காதையும் இது.

(தொடரலாம் … )

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

ஒரு பதில் to ““வாசிப்பின் நிமித்தங்கள்” – சில நினைவுக் குறிப்புகள் (1)”

  1. nathnaveln Says:

    நல்ல பதிவு.
    புத்தகங்களை எல்லாம் படித்தீர்களா?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: