முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தது போன்று, 2004 ஆம் ஆண்டளவில், கோவை நண்பர்களின் பொருட்டு PUHR க்காக உருவாக்கிய அமைப்பு விதிகளை பதிவில் ஏற்றுகிறேன்.
உறுப்பினர்:
- எந்தவிதமான ஆதிக்க சாதி அமைப்பிலோ, பெரும்பான்மைவாத அமைப்பிலோ உறுப்பினராக இல்லாதவர், சமூக விரோத செயல்பாடுகளிலோ பால் வன்முறைகளினோடோ தொடர்பில்லாதவர் உறுப்பினர் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
- மேற்கண்ட வகைகளில் தொடர்புடையவராகத் தெரியவருபவர் உறுப்பினர் தகுதிலியிருந்து உடனடியாக நீக்கப்படுவார்.
- இவ்வகையில், குறைந்தது ஐந்து வருட காலம் முற்றிலுமாக துண்டித்துக் கொண்டவர் என்று உறுதியாக தெரியும்பட்சத்தில் உறுப்பினராக இணைத்துக் கொள்வது பரிசீலிக்கப்படும்.
- உறுப்பினர்கள் தம்மால் இயன்ற அளவிலான ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர நன்கொடையாகத் தரவேண்டும். ஒரு வருட காலம் தாம் ஒப்புக்கொண்ட நன்கொடையைத் தராமல் இருப்பவர், உறுப்பினராக இருக்க விருப்பமில்லாதவராகக் கருதப்பட்டு நீக்கப்படுவார்.
- உறுப்பினர் அட்டை பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் அதற்குரிய கட்டணத் தொகையையும் செலவினத் தொகையையும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எவருக்கு உறுப்பினர் அட்டை வழங்குவது என்பதை செயற்குழு முடிவு செய்யும். உறுப்பினர் அட்டையைப் பெறுபவர் எந்த வகையிலும் அதைத் தவறான வழிகளில் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தியதாக அறியப்பட்டால் உடனடியாக அட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.
- உறுப்பினர் எவரும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். கருத்துக்களையும் விமர்சனங்களையும் சுதந்திரமாக பகிர்ந்துகொள்ளலாம். என்றாலும், வாக்களிக்கும் உரிமை, தொடர்ந்து மூன்று முறை பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே உண்டு.
- உறுப்பினர் எவரும், பொறுப்புகளில் உள்ள எவரும், தமது தனிப்பட்ட நலன்களுக்காக (பணம், புகழ்) உறுப்பினர் தகுதியையோ பொறுப்பையோ வளைக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அங்ஙனம் ஈடுபடுவாராயின் உடனடியாக பொறுப்பில் இருந்தும் உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்படுவர்.
- அமைப்பின் செயபாடுகள் எதிலும் தம்மால் இயன்ற அளவு பங்குகொள்ள விரும்பும் உறுப்பினர் எவரும் வரவேற்கப்படுவர்.
- அமைப்பின் ஆவணங்கள், செயல்பாடுகள் அனைத்தும் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, பொதுமக்கள் எவருக்கும், எப்போதும் பார்வைக்கும் பரிசிலனைக்கும் உரியவை.
பொதுக்குழு:
- மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவசியம் கூடவேண்டும்.
- தொடர்ந்து மூன்று பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்பவர் பொதுக்குழு உறுப்பினராக கொள்ளப்படுவர்.
- அமைப்பின் பொதுவான திசைப்போக்கை முடிவு செய்யும் குழுவாக செயல்படும்.
- அமைப்பின் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்குகொள்ளும் பொதுக்குழு உறுப்பினர்கள், சூழல் – தேவைகளையொட்டி, செயற்குழுவிற்கோ அல்லது அது அமைக்கும் தற்காலிக/குறிப்பான அமைப்புகளுக்கோ தேர்வு செய்யப்படலாம்.
- பொதுக்குழுவே செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யவும் நீக்கவும் அதிகாரம் கொண்டது. அசாதாரணச் சூழல்களில் செயற்குழுவே தன் உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்யலாம். ஆனால், அதற்கும் மூன்றில் இருபங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்படவேண்டும். நீக்கத்தை உறுதி செய்யும் இறுதி முடிவு பொதுக்குழுவிலேயே எடுக்கப்பட வேண்டும்.
- அமைப்பு விதிகள், பொதுவான செயல்போக்கு குறித்த முடிவுகள் பொதுக்குழுவிலேயே எடுக்கப்பட வேண்டும். சூழல்களையொட்டி செயற்குழு இவற்றில் கொண்டுவரும் மாற்றங்கள் பொதுக்குழுவின் பரிச்சிலனைக்குரியவை; தற்காலிகமானவையாகவே கருதப்படும்.
- பொதுக்குழு உறுப்பினர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் விமர்சனங்களை வைக்கவும் எப்போதும் முழுச்சுதந்திரம் உண்டு.
செயற்குழு:
- உறுப்பினர் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சமாக ஐவரும் அதிகபட்சமாக பதின்மூவரும் இருக்கலாம்.
- செயலாளர், இணைச் செயலாளர், பிற பொறுப்புகள் அனைத்தும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களிற்கொருமுறை சுழற்சி முறையில் கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.
- குறைந்தது மாதம் ஒருமுறை அவசியம் கூடவேண்டும்
- குறைந்தது மூன்றில் இருபங்கு எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கூடினாலே செயற்குழு கூடியதாகக் கொள்ளப்படும்.
- தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்குபெற முடியாமல்/இயலாமல் போன உறுப்பினர்கள் செயற்குழுவிலிருந்து விலகியதாகக் கொள்ளப்படுவர்.
- செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள், குறைந்தபட்ச பெரும்பான்மை ஒப்புதல் பெற்றவையாக இருக்க வேண்டும். முடிவுகளில் ஒப்புதல் இல்லாத மற்ற உறுப்பினர்கள் அவற்றை நடைமுறையாக்குவதில் கட்டாயம் ஈடுபட்டேயாக வேண்டும் என்ற அவசியமில்லை. குறைந்தது அவற்றுக்கெதிராக செயல்படாமல் பொறுத்துப் பார்த்தல் அவசியம்.
விளக்கக் குறிப்புகள்:
அச்சமயம், சமூக – அரசியல் வெளியில் செயல்படுவதைத் தமது குறுகிய சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதீதமாகப் பெருகியிருந்தது என்ற அவதானத்தையொட்டி, அதைத் தவிர்க்கும் நோக்கில் சில விதிகளை வடித்திருந்தேன். எனது செயல் அனுபவங்களும் இயக்க வடிவங்கள் குறித்தான எனது கோட்பாட்டுப் புரிதல்களும் சில விதிகளை வைக்க உதவின. அவை பின்வருமாறு:
உறுப்பினர் விதிகள் 1 – 3: மதவாத அமைப்புகளின் ஊடுருவல் அதிகமாகிவிட்டிருந்த நிலையில், மிகச்சாதாரண மக்களும் ஏதோவொரு கட்டத்தில் ஏதாவதொரு மதவாத அமைப்பில் குறைந்த அளவில் செயல்பட்டிருந்த நிலைமையைக் கணக்கில் கொண்டு உருவாக்கியது.
உறுப்பினர் விதி 5,7: சமூக – அரசியல் வெளிகளில் சுயநலமிகளின் பெருக்கத்தைக் கண்டு அவர்களது ஊடுருவலைத் தடுக்கும் நோக்கிலானது.
பொதுக்குழு விதிகள் 3,5,6: செயற்குழுவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கிலானவை.
செயற்குழு விதி 2: தலைமைப் பண்பு ஒருவரிடத்தில் மட்டுமே முடங்கியிருப்பது இயக்கங்களின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. அத்தகைய முடக்கத்தில் இருந்து விடுபட, பலருக்கும் தலைமைப் பண்பை வளர்க்கும் நோக்கிலானது. மேலும், ஒரு நபர் தலைமை – சுயபிம்ப உருவாக்கத்தைத் தவிர்க்கும் நோக்கிலானதும் கூட.
செயற்குழு விதி 6: அமைப்புகள் குறித்த கோட்பாட்டுருவாக்கத்தில் Democratic Centralization என்பது பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுவது என்ற நோக்கு வலியுறுத்தப்படுவது. அதன் மோசமான விளைவுகளை பொதுவுடைமை இயக்க வரலாறுகள் காட்டும். அதன் இறுக்கத்தைத் தளர்த்தும் நோக்கிலானது இவ்விதி.
மற்றது, சில சிறு திருத்தங்கள் செய்திருக்கிறேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்