புரட்சியாளர் பெருந்தொல்லை!

ஒற்றைத் துருவ உலகம் – அமெரிக்காவின் தனிப்பெரும் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. 2030 ஆம் ஆண்டில் சீனா உலகப் பொருளாதார வல்லரசு என்ற நிலையை எய்திவிடும். இராணுவ வல்லரசு என்ற நிலையை மட்டும் அமெரிக்கா தக்க வைத்துக் கொள்ளும்.

20 வருடங்களுக்கு முன்பாகவே World Systems Theory ஆய்வுகளின் முன்னோடிகள் இதை மிகத்துல்லியமாகக் கணித்து எழுதினார்கள். இப்போது அமெரிக்க அரசாங்கமே அதை உணர்ந்து கொண்டுள்ளது. 2030 ஆம் வருடத்திற்குள் நிகழ இருக்கும் 10 பெரும் மாற்றங்கள் குறித்த ஆய்வுக் கணிப்புகளை அமெரிக்க அரசு வழிநடத்தும் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை அமெரிக்கா எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவர்களது அச்சமாகவும் கரிசணையாகவும் உருவெடுத்துள்ளது.

எதிர்வரும் இரண்டு தசாப்தங்களில் தேசப் பிரிவினைக் கோரிக்கைகள் உலகெங்கும் எழப் போகின்றன என்பதையும் அவ்வறிக்கை கணிக்கிறது. புதிய உலக ஒழுங்கின் உருவாக்கத்தில் மிக முக்கியப் பிரச்சினையாக – பெரும் “தலைவலியாக” தேசிய இன விடுதலைக் கோரிக்கைகள் இருக்கும் என்று அது முன் அனுமானித்திருக்கிறது.

புதிய வடிவிலான Non State actors உருவெடுப்பார்கள் என்றும், உலக அரசியல் அரங்கில் தீர்மானகரமான பாத்திரம் ஆற்றுவார்கள் என்றும் அவ்வாய்வறிக்கை கணிக்கிறது.

இதனடியாக, Conflict Resolution Studies என்ற ஒரு துறையையே உருவாக்கி வருகிறார்கள். தொடக்க நிலையில் இருக்கும் இவ்வாய்வுகளில் முக்கியமான ஒரு புள்ளியாக Spoiler Theory என்பது உருவாக்க நிலையில் இருக்கிறது. வரும் காலங்களில் உலக அரங்கில் எழ இருக்கும் பிரிவினைக் கோரிக்கைகள், போராட்டங்கள், உள்நாட்டுப் போர்களை ஒட்டி, கூர்மையான விவாதங்கள் இத்துறையில் நிகழ இருக்கின்றன.

சிறிய நாடுகள் பெரிய வல்லாதிக்க நாடுகளை எளிதில் சமாளிக்கும் கூட்டணிகளையும் அணிசேர்க்கைகளையும் உருவாக்கித் தமது நலன்களைக் காத்துக் கொள்ளும் வாய்ப்புகளை இச்சூழல் உருவாக்கியிருக்கிறது.

அதன் ஒரு சிறு நுனியைத்தான் இலங்கை அரசாங்கத்தின் விஷயத்தில் நாம் கண்ணுற்றது. பெலோ – ரஷ்யா என்ற சிறிய தேசம் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் திறம்பட முறியடித்தது அதிகம் அறியப்படாத மற்றுமொரு உதாரணம்.

“தேற்காசியாவின் பேட்டை ரவுடி” என்ற நிலையை இந்தியா இழந்துவிட்டிருக்கிறது. எல்லை நாடுகளுடனான (பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம்) அதன் அனைத்து வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவிவிட்டன என்பது நிரூபணமாகியிருக்கிறது. இந்தியாவும் தனது கவனங்களை ஆஃப்கானிஸ்தான், தூரக் கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளை நோக்கிக் குவிக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தின் நிலையும் ஈழத்தின் நிலையுமோ முற்றுகையிடப்பட்ட நிலையாக இருக்கிறது. இயற்கை வளங்களைக் காத்துக் கொள்வதற்கும், அடிப்படை விவசாய நலன்களைக் காத்துக் கொள்வதற்குமே தமிழக மக்கள் அண்டை மாநிலங்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க வேண்டிய நிலை. ஈழமோ கேட்பாரற்ற சூரையாடலில்.

தமிழக மக்களுக்கும், ஈழ மக்களுக்கும் தமது அடிப்படை வாழ்வாதாரங்களையும் வாழ்வுரிமைகளையும் காத்துக் கொள்வதே பெரும் போராட்டமாக வரும் ஆண்டுகளில் இருக்கப் போகிறது.

தமிழகத்தின் அறிவுத்துறையினரும், செயல்பாட்டாளர்களும் கவனம் குவிக்க வேண்டிய விடயங்கள் இவை. புதிய செயல் வழிகளையும்  வியூகங்களையும் வகுத்துத்தரவேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது.

ஆனால், நிலை என்ன?

இப்பரிமாணங்கள் பற்றிய சிறு உணர்தலும் அற்றவர்களாக இருக்கிறோம் என்பதே பரிதாபகரமான யதார்த்தம்.

மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கும் உலகச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்ற கரிசணையும் கவலையும் வல்லாதிக அரசுகளைக் கவ்விக் கொண்டிருக்கிறது. அதற்கான தொலைநோக்குப் பாதைகளை இப்போதிருந்தே திட்டமிடும் வேலைகளில் அவர்கள் இறங்கிவிட்டிருக்கிறார்கள்.

இதில், மக்களின் நலன்களை முன்னிறுத்திய மாற்றங்களைச் சிந்திக்க வேண்டியவர்களுக்கு, மாறிக் கொண்டிருக்கும் சூழலைப் புரிந்து கொள்ளவும், செயல் வியூகங்களை வகுக்கவும் வேண்டியவர்களுக்கு பெரும் தொல்லையாகவும் தடையாகவும் இருப்பதுவற்றில் முக்கியமான ஒரு போக்கு இருக்கிறது.

தேசிய சுயநிர்ணய உரிமை குறித்த லெனின் கருத்துக்களின் உண்மையான பொருள் என்ன என்பது பற்றி வெட்டி முறித்து விவாதிக்க கழுத்தைப் பிடித்து நெருக்கும் ஒரு தரப்பு இருக்கிறதே அதுதான் அந்தத் தடை.

புரட்சியாளர்களிடம் இருந்து புரட்சியை விடுதலை செய்வது ஒரு பெரும் பிரயத்தனம். அவர்களுடன் மல்லுக்கட்டுவதற்குப் பதிலாக தப்பித்து தலைதெறிக்க ஓடுவதும், மேலே குறித்த அவசியப் பிரச்சினைகளில் கவனத்தைக் குவிப்பதும் நலம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: